டாட்டூஸ் போட முறையான பயிற்சி அவசியம்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 34 Second

பச்சை குத்துதல், ஆதி காலத்திலிருந்தே கடைப்பிடிக்கும் ஒரு பழக்க வழக்கமாதான் நாம் கருதுகின்றோம். ஆனால் நம் மூதாதையர்கள் உடலில் எந்தப் பகுதியில் பச்சை குத்திக் கொண்டால் என்னென்ன பயன் என்று அறிந்துதான் பச்சை குத்திக்கொண்டார்கள். அதிலும் குறிப்பா நம்ம பாட்டி, அம்மா, அவர்களோட பாட்டி இவங்க எல்லாரும், அவர்களின் காதலை எடுத்துக்கூறும் வகையில் தங்களோட கணவன் பெயரையோ, கணவன்மார்கள் தங்களின் மனைவியின் பெயரையோ, இல்லை வேறு ஏதேனும் டிசைனையோ தங்களின் கைகளில் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் போட்டுக் கொண்டனர். ஆனால் பச்சை குத்தும் பழக்கம் நாளடைவில் மறந்து போனது. ஒரு சிலர் மட்டுமே தங்களின் மனைவி, கணவர்களின் பெயரை பச்சை குத்திக் கொண்டனர்.

இந்த பச்சை குத்துதல் தற்போது உள்ள காலத்திற்கு ஏற்ப மாறிவிட்டது. மாடர்ன் காலத்தில் இதனை டாட்டூ என்று குறிப்பிடுகிறார்கள். இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப தாயின் பெயரையோ, தங்களின் செல்லப் பிராணிகளின் உருவத்தையோ, அவர்களின் இஷ்ட தெய்வத்தையோ விரும்பும் வண்ணத்தில், விரும்பும் இடத்தில் சாயங்கள் உபயோகப்படுத்தி வரைந்து கொள்கின்றனர். இதனால் எந்த அளவிற்கு நன்மைகள் உண்டாகுமோ அதே அளவிற்கு தீமைகளும் ஏற்படும். இன்னும் தெளிவா சொல்லணும்னா, பச்சை குத்திக் கொள்வது குறித்த புரிதல் இன்றும் பெரும்பாலான மக்களிடம் இல்லை. அதைப் பற்றி விளக்கம் அளிக்கிறார் டாட்டூ ஆர்டிஸ்ட் ஷெர்லி.

‘‘நான் இந்த துறையில் ஐந்து வருஷமா செயல்பட்டு வருகிறேன். நான் பச்சை குத்துவதை என்னுடைய தொழிலாக மாற்றப் போகிறேன்னு சொன்ன போது, வீட்டில் யாரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனலும் என்னோட ஆசைக்காக மூன்று மாதம் இதற்கான பயிற்சியினை முழுமையாக எடுத்தேன். இப்போது நான் ஒரு டாட்டூ ஆர்டிஸ்டாக வேலை பார்த்து வருகிறேன். இயக்குனர் பாலாவின் படத்தில் டாட்டூ போடும் பார்லர் பெண்ணாக நான் ஒரு கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன்.

படத்தில் வரும் இந்த மாதிரியான கதாபாத்திரத்துக்கு பொதுவா எங்களோட குழுவில் உள்ளவர்கள் தான் நடிப்பாங்க. நடிகர் சூர்யா படத்தில் நடிக்கும் போது அவர் உடலில் போடப்படும் டாட்டூஸ் எல்லாமே நாங்க தான் செய்திருக்கோம்’’ என்ற ஷெர்லி, தான் இந்த துறையை தேர்ந்தெடுத்தது மற்றும் இதை கடந்து வந்த பாதைப் பற்றி விவரித்தார்.

‘‘நான் பத்தாம் வகுப்பு படித்து முடித்து, அழகுசாதனவியல் (Cosmetology) துறையில் டிப்ளமா படிச்சேன். அப்போது தான் டாட்டூ போடுவதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதை எவ்வாறு போட வேண்டும் என்பது குறித்து முழுமையாக கற்றுக் கொண்டேன். அதன் பிறகு தனிப்பட்ட முறையில் செயல்பட ஆரம்பிச்சேன். நான் தனியாக எந்த ஒரு டாட்டூ பார்லரிலும் வேலை பார்க்கவில்லை. ப்ரீலான்சராக வேலை பார்த்து வருகிறேன். நான் சில மேக்கப் ஸ்டுடியோவுடன் இணைந்து செயல்படுகிறேன். அவர்கள் மூலமாக எங்களுக்கு ஆர்டர்கள் வரும். நாங்க டாட்டூ ஆர்டிஸ்டுகள் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். இதுவரை நான் மட்டுமே 2000க்கும் மேற்பட்ட டாட்டூஸ்களை வாடிக்கையாளர்களுக்கு போட்டிருக்கிறேன்’’ என்றவர் தன் உடலில் மட்டுமே 34 டாட்டூக்களை வரைந்துள்ளார்.

‘‘டாட்டூ போடுவதற்கென சில வழிமுறைகள் இருக்கு. உடலில் எந்த இடத்தில் டாட்டூ போடுறாங்க, அதன் அளவு என்ன மற்றும் அதன் கலர் இது எல்லாம் சேர்த்து தான் நாங்க முடிவு செய்வோம். ஒவ்வொருத்தரோட நிறத்துக்கு ஏத்த மாதிரி தான் கலர்ஸ் தேர்ந்தெடுப்போம். சிலர் மாநிறமாவே இருப்பார்கள். ஒரு சிலர் மாநிறம் மற்றும் கருப்பு நிறத்திற்கு இடைப்பட்டு இருப்பார்கள். அவர்களுக்கு சிகப்பு நிறம் பரிந்துரை செய்வோம். மற்றவங்களுக்கு அவங்க கேட்கும் கலரிலே டாட்டூ போட்டு விடுவோம். டாட்டூ அளவிற்கு ஏற்ப அதன் விலை மாறுபடும். ஆனால் ஆரம்ப விலை ரூ.1000. பொதுவாக ஒரு பெயரை டாட்டூ போட 40லிருந்து 50 நிமிடங்கள் ஆகும். அதுவே ஒரு ெபரிய டிசைன் என்றால் 1.30லிருந்து 2 மணி நேரம் வரை ஆகும்.

இதில் பல வகைகள் இருக்கு. வெறும் கலர் இங்க் மட்டும் பயன்படுத்தி நிரந்தரமா நம்ம உடம்பில் இருக்குற மாதிரியான டாட்டூஸ் இருக்கு. குறிப்பிட்ட காலம் வரை இருக்கக்கூடிய டாட்டூசும் உண்டு. அதாவது 3 அல்லது 6 மாதம் வரை தான் அது உடலில் இருக்கும். பிறகு மறைந்திடும். டாட்டூக்களை யூடியூப் எல்லாம் பார்த்து போட முடியாது. இதை முறையா கற்றுக் கொண்டு, சரியான பயிற்சி எடுத்து பழகிய பிறகு தான் போட முடியும். ஆனால் சிலர் இதை கற்றுக் கொள்ள அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதனை செய்கிறார்கள். அதே சமயம் வாடிக்கையாளர்களும் முறையாக டாட்டூ போட்டு பயிற்சி பெற்றவர்களிடம் டாட்டூஸ் போட்டுக் கொள்வது அவசியம்.

டாட்டூஸ்னு வரும்போது கார்ட்டூன்ஸ், ட்ரைபல், பிடித்தவர்களின் முகங்கள் இது போல நிறைய இருக்கு. முதலில் நம்முடைய வாடிக்கையாளர்களிடம் அவங்களுக்கு பிடிச்ச டிசைனை உடம்பில் போடும் இடத்தில் வரைந்தோ அல்லது ஸ்டென்சில் எடுத்த பிறகு அதன் மேல் தான் டாட்டூக்களை போட வேண்டும். ஒரு சிலர் அவர்கள் மிகவும் விரும்பிய நபர்களின் பிரிவினை ஏற்றுக்ெகாள்ள முடியாமல், அவர்களின் ரத்தம் அல்லது இறந்தவர்களின்அஸ்தியினை டாட்டூ இங்கில் கலந்து போட சொல்கிறார்கள்.

அவ்வாறு போட வேண்டும் என்று கேட்பவர்களுக்கு டாட்டூஸ்கள் போடும் முறை அதுவல்ல என்று நிராகரித்திட வேண்டும். இதனால் சருமத்தில் அரிப்பு, அலர்ஜி போன்ற பிரச்னைகள் ஏற்படும். சில நேரங்களில் நாம் எதிர்பார்க்க முடியாத பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. டாட்டூ போடுவதற்கு ஒரு வாரம் முன்பு அதற்கான பாதுகாப்பு வரைமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், சரியான உணவினை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல தூக்கம் ரொம்ப முக்கியம். சரியான தூக்கம் இல்லாத போது அது அவர்களின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். டாட்டூ போட்ட பிறகு அந்த பகுதியில் சூரிய கதிர்கள் அதிகம் படாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். கடற்கரை தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுத்தமான தண்ணீரில் சுத்தப்படுத்தினாலே போதும். டாட்டூ நிபுணர்களின் ஆலோசனைப்படி டாட்டூ போட்ட இடத்தில் அவர்கள் பரிந்துரைக்கும் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். சருமத்தில் சிறு மாறுதல்கள் ஏற்பட்டாலும் உடனே சரும நிபுணரை அணுக வேண்டும்’’ என்றவர் டாட்டூ போடும் முன் பல முறை சிந்தித்து அது அவசியமா என்று யோசித்த பிறகு போட்டுக் கொள்ள வேண்டும்.

‘‘பெரும்பாலானவர்கள் தங்களின் மனசுக்கு நெருக்கமானவர்களின் பெயரையோ அல்லது அவர்களின் பெயர் கொண்ட எழுத்துக்களையோ தான் டாட்டூவாக குத்திக் கொள்கிறார்கள். ஆனால் சில காரணங்களுக்காக அவர்களை பிரிய நேரிடும் போது அந்த டாட்டூவினை அகற்ற வேண்டும்னு வருவாங்க. அது மிகவும் கஷ்டம். டாட்டூஸ் போட ஊசியினை பயன்படுத்துவது போல் அதை அகற்ற ஒரு மின்சாதனம் ஒன்றை பயன்படுத்துவோம். அதைக் கொண்டு முழுமையாக நீக்க மூன்று மாசமாகும். சிலருக்கு அகற்றும் போது சருமத்தில் மாற்றம் ஏற்படும்.

அதனால் டாட்டூஸ் பொறுத்தவரை அதை போடும் போது பல முறை யோசித்து போட்டுக் கொள்ள வேண்டும். டாட்டூக்கள் மட்டுமில்லாமல் உடலில் ஸ்டைலுக்காகவும், கவர்ச்சிக்காகவும் தோடுகள் அணிய விரும்புவார்கள். அவர்கள் விரும்பும் இடத்தில் தோடுகளை குத்தி விடுகிறேன். தற்போது பல டாட்டூ கலைஞர்கள் அதிகரித்துவிட்டனர். அதனால் முறையாக பயிற்சி எடுத்தவர்களை தேர்வு செய்து டாட்டூ குத்திக் கொள்வது அவசியம்’’ என்றார் ஷெர்லி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உண்மையான நட்பை புரிந்து கொள்ள 27 வருஷமானது!! (மகளிர் பக்கம்)
Next post கேன் வாட்டர் குடிக்கலாமா…!! (மருத்துவம்)