இளம் தலைமுறையினரின் லேட்டஸ்ட் டிரெண்ட் இக்காட் பேக்ஸ்!! (மகளிர் பக்கம்)
பெண்களுக்கான ஆபரணங்கள் போன்று அவர்களின் ஆடைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்படுவதில் அவர்களின் கைப்பைகளும் ஒன்று. நமக்கு வேண்டிய வண்ணங்களில் பல வகையான டிசைன்களில், பல தரப்பட்ட துணி மற்றும் நூல்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது பெண்கள் அதிகம் விரும்பும் கைப்பைகள். தற்போது நாம் உடுத்தும் உடைகளுக்கு ஏற்றார் போல புடவைகள் முதல் மாடர்ன் உடைகள் வரை அனைத்திற்கும் ஏற்ற வகையில் இந்த கைப்பைகள் கடைகளில் விற்கப்படுகிறது.
பெண்களின் ேதவையை அறிந்த சென்னையை சேர்ந்த ப்ரீத்தி, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக கைப்பைகளைப் பெற்று அதனை விற்பனை செய்து வருகிறார். பார்ப்பதற்கு மேல்நாட்டு கலாச்சாரம் போல இருந்தாலும், தற்போது நம் நாட்டின் உள்ள அனைத்து வயது பெண்களும் பயன்படுத்தும் வகையில் உள்ளது இந்த இக்காட் பேக்ஸ் என பேச ஆரம்பித்தார் ப்ரீத்தி.
‘நான் இந்த தொழில் துவங்கி கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிறது. அதற்கு முன் ஒரு தனியார் புத்தக நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என் கணவருக்கு வங்கியில் வேலை. அவர் வேலை காரணமாக இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை ஊரை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். என்னாலும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று வேலை தேட முடியவில்லை. அப்படியே வேலை கிடைத்தாலும், அதில் நான் செட்டிலாவதற்குள் வேறு ஊருக்கு மாற்றலாகிடும். அதனால் வேலைக்கு போவதை நிறுத்திக் கொண்டு வீட்டில் இருந்தபடியே சிறிய அளவில் பேப்பர் குயிலிங்க் நகைகளை செய்ய ஆரம்பிச்சேன். அந்த நகைகளை தெரிந்தவர்கள், நண்பர்கள் என இரண்டு வருஷம் நேரடியாகவும் ஆன்லைன் முறையிலும் விற்பனை செய்து வந்தேன்.
பல வெளிநாட்டினர் என் குயிலிங் நகைகளை அதிகம் விரும்பி வாங்கினார்கள். இதனைத் தொடர்ந்து சில்க் த்ரெட் மற்றும் டெரக்கோட்டா நகைகளும் முறையாக பயிற்சி எடுத்து கற்றுக் கொண்டேன். தற்போது நான்கு வருஷமா இதனையும் செய்து வருகிறேன். அந்த சமயத்தில் ஹைதராபாத்தில் சில்பாராமம் என்ற பகுதியில் ஒரு கண்காட்சிக்கு சென்றேன். அங்கு தான் பலதரப்பட்ட கைப்பைகள் கலெக்ஷனைப் பார்த்தேன். எனக்கு ரொம்பவே பிடிச்சு போனது. அதனால் அங்கிருந்து பேக்குகளை என்னுடைய பயன்பாட்டிற்காக வாங்கி வந்தேன். நம்ம ஊரில் கைப்பைகள் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட கலெக்ஷன்ஸ் தான் இருக்கு. ஆனால் வட இந்தியாவில் குறிப்பாக தில்லியில் இக்காட் பேக்ஸ் விற்பனை ஆரம்பமாகிய காலம்’’ என்றவர் அதன் பிறகு இக்காட் கைப்பைகளின் விற்பனையாளராக மாறியுள்ளார்.
‘‘நான் செய்து வரும் டெரக்கோட்டா, குயிலிங் நகைகளை பலர் செய்து வருகிறார்கள். ஆனால் செருப்பு மற்றும் கைப்பைகள் பொறுத்தவரை வட இந்தியாவில் தான் பல வித கலெக்ஷன்ஸ் இருக்கு. அப்போது தான் எனக்கு ஒரு யோசனை வந்தது. இந்த இக்காட் பேக்ஸ்களை வாங்கி நம்ம ஊரில் ஏன் விற்கக் கூடாது? நேரடியா இக்காட் பேக்ஸ் தயாரிக்கும் இடத்திற்கு போனேன். தயாரிப்பாளர்களை சந்தித்து பேசினேன். அவர்களுக்கும் என்னுடைய கான்செப்ட் பிடித்து இருந்ததால், எனக்கு தேவையான ஒரு சில கலெக்ஷன்ஸ் பார்த்து நானே வாங்கி வந்து இங்க விற்க ஆரம்பிச்சேன். இதை நான் தனியா பண்ண முடியுமான்னு யோசிச்ச போது என்னோட இந்த முயற்சியில் எனக்கு பண ரீதியாக மட்டுமில்லாமல் மனதாலும் ஊக்குவித்தார் என் கணவர். ஒரு சில பைகள் தினசரி பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த முடியாது. சிலது நாம விரும்பும் அளவில் கிடைக்காது. இன்னுமொரு சில பைகளை துவைக்க முடியாது.
ஆனால் நான் விற்பனை செய்யும் இக்காட் பைகள் அனைத்தும் நூல் மற்றும் துணியால் செய்யப்பட்ட பைகள் தான். இதனை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். சில பைகள் துவைத்த பிறகு அதன் தன்மை மாறிடும். ஆனால் இந்த பைகள் பொறுத்தவரை எவ்வளவு முறை துவைத்தாலும் அதன் தன்மை மாறாது’’ என்றவர் இக்காட் பைகளை பயன்படுத்தும் முறைகள் பற்றி விவரித்தார்.
‘‘சிறிய அளவில் சில்லறைகள் கொண்டு செல்லும் பர்ஸ் முதல் ஒரு மொபைல் போன், வாட்டர் பாட்டில் வைக்கும் அளவிலும், வெறும் மொபைல் போன் வைக்கும் அளவிலும் மற்றும் லேப்டாப் கொண்டு செல்லும் வகையிலும் என்னிடம் பைகள் இருக்கு. நான் ஆரம்பத்தில் சின்ன கடை போட்டு அதில் தான் என்னுடைய பைகளை விற்பனை செய்தேன். குறிப்பாக ஐ.டி கம்பெனி இருக்கும் இடங்களிலும், பெரிய பெரிய மால்களிலும் கடைகள் போட்டேன்.
அதன் பிறகு சோஷியல் மீடியாவிலும் தனிப் பக்கம் துவங்கி அதிலும் என்னுடைய பைகளின் கலெக்ஷன்சை பதிவு செய்தேன். எனக்கான வாடிக்கையாளர்கள் கிடைக்க ஆரம்பிச்சாங்க. பொதுவாக என்னிடம் அப்போதைக்கு கையில் இருக்கும் கலெக்ஷனை மட்டும் தான் நான் சோஷியல் மீடியாவில் பகிர்வேன். சிலர் தங்களுக்கு எந்த மாதிரியான டிசைனில், கலரில் வேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்களுக்கு ஏற்றது போல் தயாரிக்கும் இடங்களில் சொல்லி அதே போல் செய்து வாங்கி வருவேன். என்னிடம் உள்ள பைகளின் அதிக பட்ச விலையே ரூ.650 தான் என்பதால் பலர் அதனை விரும்பி வாங்குகிறார்கள்’’ என்றவர் இந்தியா முழுதும் ஆன்லைன் முறையில் தன்னுடைய பையினை விற்பனை செய்து வருகிறார்.