கண்ணைக் கட்டிக்கொள்ளாதே! (மருத்துவம்)
குறைந்தும் மறைந்தும் வரும் தொற்றுக்கள்
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக எழுபது வயதான பெண்மணி ஒருவருக்கு திடீரென பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சைக்கு வருகிறார் நன்கு அறிமுகமானவர். அவ்வப்போது கண்ணாடி அணிவதற்கு, கண்புரை அறுவைசிகிச்சைக்காக என்று வந்திருக்கிறார். எப்பொழுதும் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருப்பதில்லை. கேட்டால், ‘எனக்கு எப்பவுமே இப்படித்தான் இருக்கும்’ என்று கூறிவிடுவார். புரிந்து கொள்ள மாட்டார். கடந்த ஓராண்டாக சர்க்கரை மற்றும் வயதுமுதிர்வு காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளால் தொடர்ச்சியாக அவதிப்பட்டு வருகிறார். முதலில் வலது கையும் காலும் செயலிழந்து போய்விட்டது. அதற்கான சிகிச்சை, பிசியோதெரபி என்று சென்று கொண்டிருந்த நேரம் கால்களில் புண் ஏற்பட்டது.
இன்சுலின், மாத்திரைகள் உடற்பயிற்சிகள் என்று முடிந்த அளவு முயற்சி செய்து வந்த நிலையில் முதுகு மற்றும் வயிற்றுப் பகுதியில் அக்கி (herpes zoster) பிரச்சனை ஏற்பட்டது. மீண்டும் மருந்து மாத்திரைகள். அக்கிக்கான சிகிச்சை முடியும் தறுவாயில் இப்போது பார்வைக் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது விழிப்படிக நீர்மம் (vitreous) பகுதியில் கடுமையான அழற்சி (vitritis) காணப்பட்டது.
அதைக் குறைப்பதற்கான மருந்துகளை அளித்து, ஓரிரு நாட்களில் விழித்திரை பரிசோதனை மற்றும் விழித்திரையைத் துல்லியமாகப் படம் பிடிக்கும் பரிசோதனையான Optical coherence tomography (OCT) செய்து பார்க்க, அதில் மிக அரிதாகக் காணப்படும் ஒரு விழித்திரை நோயான toxoplasmosis தொற்று காணப்பட்டது. இது பெரும்பாலும் பூனைகளின் கழிவிலிருந்து Toxoplasma gondii என்ற ஒட்டுண்ணி மூலமாக மனிதனுக்குத் தொற்றக்கூடிய அரிதான ஒரு நோய். மான்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் மூலமாகவும் பரவக்கூடும். சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாத முந்தைய காலங்களில் பூனை வளர்ப்பவர்கள் பலருக்கு இது ஏற்பட்டது.
பின் தொடர்ச்சியான விழிப்புணர்வும் சுகாதாரமும் மேம்பட்ட காரணத்தால் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டோரைக் காண்பது மிக அரிதாகி விட்டது. எனினும் வளர்ச்சி அடைந்த, அடையாத நாடுகள் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்துப் பகுதி மக்களையும் பாதிக்கக் கூடிய ஒரு நோய் இது.எதிர்ப்பாற்றல் குறைந்த நிலைகளான எச்ஐவி தொற்று, புற்றுநோய் சிகிச்சை போன்றவற்றின் வரவு அதிகரித்த பின் அத்தகைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் இத்தகைய சந்தர்ப்பவாத நோய்கள் அதிகம் காணப்படுகின்றன.
நீண்ட நாள் சர்க்கரை நோயாளியான மேற்குறிப்பிட்ட பெண், ‘‘எங்கள் வீட்டில் கடையில் எங்கும் பூனைகள் வருவதில்லையே, பின் ஏன் toxoplasmosis தொற்று ஏற்பட்டது?” என்று மிகவும் வருந்தினார். அவர் ஒரு கடையின் கல்லாவில் அமர்ந்திருப்பார். அந்தத் தெருவில் பல உணவகங்கள் இருப்பதால் பூனைகள் இருக்கலாம் என்று ஒரு அனுமானம் இருக்கிறது. கூடவே சரியாகக் கழுவப்படாத காய்கறிகள், பழங்கள் மற்றும் சமைக்கப்படாத அல்லது பாதி சமைக்கப்பட்ட இறைச்சி உணவுகள், நீர் மூலமாகவும் Toxoplasma gondii என்ற புழுவின் முட்டைகள் மனித உடலுக்குள் பரவிவிடக் கூடும். தாயின் உடலில் இருந்து கிருமிகள் சிசுவின் உடலுக்கு நஞ்சுப் பையின் வாயிலாகப் பரவி பிறவித் தொற்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் அதிகம் இருக்கிறது.
இந்தப் பெண்மணிக்கு வழக்கமாக விழித்திரையில் தொற்று ஏற்படுத்தும் TORCH syndrome கிருமிகளைக் கண்டறியும் (toxoplasmosis, Others (Hepatitis B, syphilis) rubella, cytomegalovirus, histoplasmosis) TORCH profile பரிசோதனையைச் செய்யுமாறு பரிந்துரைத்தோம். பல்வேறு பிறவிக் குறைபாடுகள், குறிப்பாக கண் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த சோதனை அடிக்கடி செய்யப்படுவதுண்டு.
அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் தாய்மார்களுக்கும் ரூபெல்லா உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனை செய்யப்படும். மேற்கூறிய நோய்களில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டிருந்தால் இந்தப் பரிசோதனைகளில் அவற்றைக் கண்டுபிடிக்க முடியும். Toxoplasma தொற்று ஒட்டுண்ணிகள் மூலமாக ஏற்படுவதைப் போல, Cytomegalovirus, Rubella தொற்றுக்கள் வைரஸ் கிருமியால் ஏற்படுபவை. Histoplasmosis தொற்று பூஞ்சைக் கிருமியால் ஏற்படுவது. Syphilis பாக்டீரியா தொற்றால் ஏற்படுவது. எதிர்ப்பாற்றல் குறைவால் அவதிப்படும் நோயாளிகளில் இவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொற்றுகள் இணைந்து தாக்கியிருப்பதையும் (coexistent) பார்க்க முடியும்.
TORCH profile சோதனையின் மூலம் கண்டறியப்படும் இந்த நோய்கள் அனைத்துமே தீவிரமானவைதான். அதிலும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரூபெல்லா பிரச்சனை மிகவும் தீவிரமானது. தாய் கருவுற்றிருக்கையில், குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் சாதாரண வைரஸ் காய்ச்சல் போலவே இந்தத் தொற்றும் தோற்றமளிக்கும். காதுகளுக்குப் பின் பகுதியில் லேசாக நெறி கட்டியிருக்கும். தாய் அதை சாதாரண காய்ச்சல் என்று கடந்திருப்பார். மருத்துவருக்குக் கூட பல நேரங்களில் ரூபெல்லாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் வருவதில்லை.
பின்னாளில் குழந்தைக்கு இதனால் கண்புரை, விழித்திரை பாதிப்பு, இதய நோய், செவித்திறன் குறைபாடு, எலும்புகளில் குறைபாடுகள் ஆகிய பல பிரச்சனைகள் (Congenital rubella syndrome) வந்தபின் தாய்க்கும் குழந்தைக்கும் ஒரு சில பரிசோதனைகளை செய்தும், கவனமாக தாயின் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட நோய்கள் பற்றிய கேள்விகளைக் கேட்டறிந்தும் இந்த நோயை உறுதிப்படுத்துவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதற்கு நிரந்தரத் தீர்வு எதுவும் கிடையாது.
நான் இளநிலை மருத்துவம் படித்த காலத்தில் இந்தத் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்ட பல சிசுக்களைப் பார்த்திருக்கிறேன். சிலருக்குக் கண்புரை மட்டுமே இருக்கும். அதை அறுவைசிகிச்சை செய்து சரி செய்த பின் முழுமையான ஆயுளுக்கும் இயல்பாக இயங்க முடியும். தீவிர இதய நோய் இருக்கும் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சையும் தேவைப்படும். வெகு சில குழந்தைகளே பிறரைப் போன்ற சீரான வாழ்நாளைக் கழித்ததைப் பார்க்க முடிந்தது. ஒப்பீட்டளவில் தற்போது இந்தப் பிரச்சனை மிக குறைவாகவே பார்க்கிறேன். பல நாடுகளில் திருமணத்திற்கு முன்பாகவே பெண்கள் ரூபெல்லா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. நமது நாட்டிலும் குழந்தை பிறந்த பதினைந்தாவது மாதத்தில் மம்ப்ஸ், மீசில்ஸ் இவற்றுடன் சேர்த்து ரூபெல்லா தடுப்பூசியும் (MMR vaccine) வழங்கப்படுகிறது. தற்போது பிறவி ரூபெல்லா தொற்று குறைந்திருப்பதற்கு தாய்க்கு சிறுவயதிலேயே ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதும் ஒரு முக்கிய காரணம்.
எச்ஐவி நோய் பாதித்தவர்கள் மத்தியில் விழித்திரையில் பல சந்தர்ப்பவாதத் தொற்றுக்கள் அதிக அளவில் ஏற்படுவதைப் பார்க்கிறோம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எச்ஐவி நோயாளிக்கு ஏ ஆர் டி சிகிச்சை (Antiretroviral therapy) துவங்கும் முன்பாக அவரது உடலில் வேறெந்த இடத்திலாவது சந்தர்ப்பவாதத் தொற்று இருக்கிறதா என்று முழுமையாகக் கவனிக்கப்படும். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட எச்ஐவி நோயாளிகள், ஏற்கனவே மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கும் நோயாளிகள் அனைவரும் சீரான இடைவெளியில் விழித்திரையில் பாதிப்பு (HIV Retinopathy) ஏற்பட்டிருக்கிறதா என்பதற்கான பரிசோதனைக்காகக் கண் சிகிச்சைப் பிரிவுக்கு வருவார்கள். ஒரு சிலருக்கு சந்தர்ப்பவாத தொற்றுகள் முழு வீச்சில் இருப்பதையும் (active infection), சிலருக்கு முன்பே தொற்று ஏற்பட்டு அது கவனிக்கப்படாமலேயே போய் பின் தானாகவே தழும்பாகி (old chorioretinal scar)
இருப்பதையும் பார்க்கிறோம்.
இப்படி விழித்திரையில் தழும்புடன் பார்வை மிகக் குறைவாக இருக்கும் அறுபதைத் தாண்டிய பெண்மணிகள் சிலர், ‘‘எனக்கு சின்ன வயசிலேயே ஒரு கண்ணில் பார்வை கிடையாது. ஏதோ ‘அம்மா பார்த்ததா’ (அம்மை விளையாடியதாக) சொல்லுவாங்க” என்பார்கள். அவர்களைப் பரிசோதனை செய்கையில் toxoplasmosis உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு அதன் தழும்புகள் மட்டும் நிலைத்து இருப்பதைப் பார்க்கிறோம். இந்தத் தழும்புகள் முன்பு ஏற்பட்டிருந்த தொற்றுகளைப் பற்றிய வரலாற்றைக் கூறும் சான்றாக நமக்கு விளங்குகின்றன.
தடுப்பூசி, சுகாதாரம், விழிப்புணர்வு போன்றவற்றின் மூலம் பல சீரிய முயற்சிகளை செய்தால் விழித்திரையை பாதிக்கும் சந்தர்ப்பவாதத் தொற்றுக்கள் மிகக் குறைந்திருக்கின்றன. தற்போது புழக்கத்தில் இருக்கும் மிகுந்த செயல்திறன் மிக்க ஏஆர்டி சிகிச்சைகள் வந்த பின்னரும் இந்த சந்தர்ப்பவாதம் தொற்று குறைந்திருப்பது மிகவும் ஆறுதலான விஷயம். முதலில் குறிப்பிட்ட பெண்மணிக்கு தற்பொழுது சிகிச்சையை தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகின்றன.
நீர்மம் பகுதியில் ஏற்பட்ட அழற்சி வெகுவாகக் குறைந்திருக்கிறது. சர்க்கரை நோய் காரணமாக ஸ்டீராய்டு மாத்திரைகள் துவங்க முடியாத சூழ்நிலை. சமீபமாக ஏற்பட்ட பக்கவாதம் காரணமாக அவரால் அடிக்கடி மருத்துவமனைக்கு வர இயலாத சூழலும் கூட. அதிதீவிர சிகிச்சைகள் அளித்தாலும் முழுவதுமாகப் பார்வை மீண்டு விடுமா என்பது கேள்விக் குறிதான். சர்க்கரை நோய்க் கட்டுப்பாடு எவ்வளவு அவசியம் என்பதை நமக்குக் கூறும் மற்றொரு முக்கியமான சம்பவம் இது.