கவுன்சலிங் ரூம் மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)
எனக்குக் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. வீட்டுப் பெரியவர்கள் குழந்தைகளைக் குளிக்க வைக்கும்போது தலையை அழுத்துவது, முதுகில் தண்ணீர் அடிப்பது, மூக்கைத் தூக்கிவிடுவது, மார்பகத்தை அழுத்திப் பால் எடுப்பது, பிறப்பு உறுப்பை இழுத்துவிடுவது போன்ற செயல்களைச் செய்யச் சொல்கிறார்கள். மருத்துவ முறைப்படி இவையெல்லாம் சரிதானா?
– தீபா, நீடாமங்கலம்.
எந்தச் சூழலிலும், பிறப்பு உறுப்பு மற்றும் மார்பகத்தில் இது மாதிரியான செயல்களைச் செய்யாதீர்கள். குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளின் மூக்கில் எண்ணெய்விடுவது, வாய்க்குள் விரல்விட்டு நாக்கைச் சுத்தம் செய்வது, மூக்கில் ஊதி அழுக்கை எடுப்பது போன்ற செயல்களை தினமும் செய்ய வேண்டுமென சில பெரியவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்வார்கள். அவை அனைத்துமே தவறான பழக்கங்கள்தான்.
இவற்றால் குழந்தைகளுக்கு எளிதில் நோய் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு அவர்களைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருந்தால் போதும். உடல் அமைப்பென்பது மரபணுக்களால் உருவாக்கப்படுவது. அழுத்துவதால் மாறாது. செயற்கையாக மாற்றுவதும் தவறு. குழந்தைக்கு, அதன் உறுப்புகளைச் செயற்கையாக மாற்றுவதற்கென தனியே எந்த வழிமுறைகளும் இல்லை என்பதும் உண்மை. இப்போதைக்கு, ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுத்து, குழந்தையை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதுவே போதுமானது.
கடந்த சில நாட்களாக, எனக்கு வாய்ப்புண் மற்றும் தாங்க முடியாத தொண்டைவலி. சரியாகச் சாப்பிட முடியாமல் தவிக்கிறேன். சாப்பிடும்போது மூச்சுக்குழாயில் எரிச்சல் ஏற்படுகிறது. எளிய வீட்டு மருத்துவம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்.
– ராஜரத்தினம், திருச்சி.
வாய்ப்புண் வருவதற்குத் தொற்றுக்கிருமிகள், சத்துக் குறைபாடு, அல்சர் போன்றவைதான் காரணமாக இருக்கும். அதனால் சாப்பிடும்போது மூச்சுக்குழாயில் எரிச்சல், தொண்டையில் வலி போன்றவை ஏற்படும். காரம், புளிப்பு வகை உணவுகள், வறுத்த உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். உணவில் அதிகமாகக் காய்கறிகள், கீரைகள், பழங்களைச் சேர்த்துக்கொள்ளவும். மணத்தக்காளிக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவரவும்.
திரிபலா சூரணம் எடுத்துக்கொள்வது நல்லது. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் அது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அனைத்து வயதினரும் இதைச் சாப்பிடலாம். வாய்ப்புண் உள்ளவர்கள் இதைக்கொண்டு வாய் கொப்பளிக்கலாம். அவ்வாறு செய்வதால் வாய்ப்புண் விரைவில் சரியாகிவிடும். தொடர்ந்து மோர், வெள்ளரிக்காய், இளநீர் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிட்டுவருவது பிரச்னையை எளிதில் சரிசெய்யும்.
என் மகனுக்கு பதினான்கு வயது. முகத்தில் நிறைய பருக்கள் இருக்கின்றன. எனக்கும் சிறுவயதில் இப்படி இருந்தது. சந்தனத்தை அரைத்துப் பூசுவேன். குணமாகிவிடும். இவனுக்கும் அப்படிச் செய்யலாம் என்று செய்தால் சரியாவதே இல்லை. அதாவது, பருக்கள் மறைந்து, சில நாட்கள் கழித்து புதியன முளைத்துவிடும். எந்நேரமும் கிரிக்கெட் என வெயிலில் விளையாடிக்கொண்டே இருப்பான். இதற்குத் தீர்வு என்ன டாக்டர்?
– அனுராதா, தஞ்சாவூர்.
இந்த வயதில் பருக்கள் வருவது இயல்புதான். பருவம் முடிந்ததும் சிலருக்கு அதுவாகவே நீங்கிவிடும். விளையாடிவிட்டு வந்ததும் நன்றாக முகத்தைச் சுத்தம் செய்யச் சொல்லுங்கள். காலமைன் கலந்துள்ள இயற்கை சார்ந்த க்ரீம்களை முகத்தில் தடவலாம். சந்தனமும் நல்லதுதான். அதிக நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். வேர்க்க விறுவிறுக்க விளையாடுவது நல்லதுதான். அது உடலில் உள்ள எண்ணெய்ப்பசையை நீக்கும். அதனால் விளையாட்டைத் தடுக்க வேண்டாம்.
எனக்கு உதட்டைச் சுற்றிலும் சிறு சிறு தடிப்புகளாக ஏற்படுகிறது. வீட்டுப் பெரியவர்கள், ‘பல்லி எச்சம்’ என்று இதைச் சொல்கிறார்கள். உண்மையில் இது எதனால் ஏற்படுகிறது… எப்படிச் சரிசெய்வது?
– சுபிதா, கும்மிடிப்பூண்டி.
நீர்க்கொப்புளங்கள்போல ஏற்படுவதுதான், `பல்லி எச்சம்’ எனக் குறிப்பிடப்படுகிறது. அது ஒரு வகை தொற்றுநோய். Herpes Simplex Virus (HSV) என்ற வைரஸ் கிருமியால் ஏற்படும். ஐந்தாறு நாட்களுக்குள் குணமாகிவிடும். இந்த பாதிப்பு இருக்கும்போது உணவு மற்றும் தண்ணீரைப் பகிர்ந்துகொள்வது, குழந்தைகளை முத்தமிடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், சத்தான உணவுகள், பழ வகைகள் போன்றவற்றை உண்ண வேண்டும்.
நீர்க்கொப்புளங்கள் இல்லாமல் வெறும் தடிப்பு மட்டும் இருந்தால், அது அலர்ஜியாக இருக்கலாம். எந்தெந்த உணவுகளைச் சாப்பிடும்போது இது ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு அவற்றைத் தவிர்க்கவும். வெறும் தடிப்புகளாக மட்டும் இருந்தால், மருத்துவரிடம் கேட்டு அலர்ஜி மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் போதும். அப்படியும் சரியாகாவிட்டால், சரும மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.