காதை கவனிப்போம்…!! (மருத்துவம்)
குழந்தைகளுக்கான காது பராமரிப்பு
குழந்தைகளின் காதிலுள்ள மெழுகை `அழுக்கு’ என்று தவறாக நினைத்துக்கொண்டு அகற்றக் கூடாது.
குழந்தைகளைக் குளிப்பாட்டியதும், காதைத் துணியால் சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
காதிலுள்ள மெழுகு என்பது இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை. அது, காதில் சேரும் அழுக்கை வெளியேற்ற உதவக்கூடியது. எனவே, அதை அகற்றக் கூடாது.
சில குழந்தைகளின் காதில் நீர் கோத்துக்கொள்ளும். இதனால் காது கேட்காமல் போக வாய்ப்பிருக்கிறது. நன்றாகப் படிக்கும் குழந்தையால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும். இதற்கு, மூக்கின் பின்புறமுள்ள `அடினாய்டு’ (Adenoid) சதை வளர்ச்சியே முக்கியக் காரணம். இதன் அறிகுறியாக, குழந்தைகள் தூங்கும்போது குறட்டைவிடுவார்கள் அல்லது வாயைத் திறந்தபடி தூங்குவார்கள். இதை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுக்க வேண்டும்.
பிறந்த குழந்தையை சத்தங்கள் பாதிக்குமா?
குழந்தைகளைச் சிறு சிறு சத்தங்கள் பாதிக்காது. அவர்களுக்கு சத்தம் கேட்பதுதான் நல்லது. ஆனால், பலத்த சத்தங்கள் குழந்தைகளை பாதிக்கும். சத்தமாகச் சண்டை போடுவது, அதிகச் சத்தத்தில் மியூசிக் சிஸ்டம் பயன்படுத்துவது, டி.வி பார்ப்பது குழந்தைகளின் காதுகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களின் காதுகளையும் பாதிக்கும். எனவே, மெல்லிய ஒலியில் பயன்படுத்துவதே நல்லது. அது குழந்தைகளின் காதுகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களின் காதுகளுக்கும் கெடுதல் தராது.
காதில் எண்ணெய்விடலாமா?
காதில் எண்ணெய்விடுவதைச் சிலர் வழக்கமாகக்கொண்டிருகிறார்கள். லேசான சூட்டிலோ அல்லது காய்ச்சி, ஆறவைத்தோ காதில் எண்ணெய்விடுவார்கள். இது தவறான வழிமுறை. இயல்பாகவே, காதுக்குள் மெழுகு போன்ற எண்ணெய் சுரக்கும். அது தானாக காதைச் சுத்தம் செய்துவிடும் என்பதால், காதில் எந்த எண்ணெயையும் விடாமல் இருப்பது நல்லது.
பட்ஸ் பயன்படுத்தலாமா?
காதை `பட்ஸ்’ வைத்துக் குடைவதால் எந்தப் பயனும் இல்லை. அதனால், காதுக்குப் பல பிரச்னைகள்தான் ஏற்படும். காதின் வெளிப்பகுதியிலிருக்கும் மெழுகு தானாக வெளியே வந்துவிடும். பட்ஸ் மூலம் குடைந்தால் மெழுகு உள்ளே சென்று, வெளியே வர முடியாதபடி அடைத்துக்கொள்ளும். இதனால், காதில் தொற்று ஏற்படும். அதனுள் தண்ணீரும் சேரும்போது அது வலியை உண்டாக்கும். எனவே, பட்ஸ் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
குளித்தவுடன் காதைச் சுத்தம் செய்யலாமா?
குளித்தவுடன் கண்டிப்பாக காதைச் சுத்தம் செய்யக் கூடாது. காதில் சீழ் வடியும் பிரச்னை உள்ளவர்கள், காது திரையில் ஓட்டை உள்ளவர்கள் காதில் நீர் புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள், பஞ்சில் தேங்காய் எண்ணெய் அல்லது `வாஸலின்’ தடவி, காதின் துவாரத்தில் வைத்துக்கொண்டு குளித்தால் காதுக்குள் தண்ணீர் புகாது. அதனால், காதில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும். காதைச் சுத்தம் செய்யவேண்டிய தேவையும் இருக்காது.
நீச்சல் வீரர்கள் காதுகளைப் பாதுகாக்கும் வழி!நீச்சல் வீரர்கள் காதுகளைப் பாதுகாப்பது ஒருபுறம் இருந்தாலும், நீச்சல்குளத்தைப் பராமரிப்பவர்கள் அதிலுள்ள நீரைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நீச்சல் வீரர்கள் அவர்களுடைய காதுகளுக்கேற்றவாறு `கஸ்டம் மோல்டடு இயர் பிளக்ஸ்’ (Custom Molded Ear Plugs) இருக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தினால் காது தொடர்பான பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். காதிலிருந்து சீழ் வடிந்தால் நீச்சலைத் தவிர்ப்பது நல்லது.
உப்புநீரில் குளித்தால் காது பிரச்னை வருமா?
கடல் மற்றும் ஆறுகளில் குளிப்பதால் காதுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மேலும், காதுக்குள் உப்புநீர் புகுவதால் பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. ஆனால், நீர் அசுத்தமில்லாமல் இருக்க வேண்டும்.
காது அடைப்பைச் சரிசெய்வது எப்படி?
காதில் எதனால் அடைப்பு ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவரை அணுகினால், அவரே காரணத்தைக் கண்டறிந்துவிடுவார். காதில் அழுக்கோ, மெழுகு அடைப்போ இருந்தால், மருத்துவர் அதைச் சரிசெய்துவிடுவார். சுய சிகிச்சை வேண்டாம். விமானத்தில் பயணம் செய்பவர்களுக்குக் காது அடைத்துக்கொள்ளும். சில நேரங்களில் காதில் வலியும் உண்டாகும். காதையும் மூக்கையும் இணைக்கும் யுஸ்டேஷன் குழாயில் பாதிப்பிருந்தால் வலி ஏற்படலாம்.
ஒருவருக்கு அதிகமாகச் சளி பிடித்திருந்தால் விமானப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கட்டாயம், பயணம் செய்யவேண்டியிருந்தால் மருத்துவரை ஆலோசித்து, விமானத்திலிருந்து இறங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக நோஸ் டிராப்ஸ் போட்டுக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக தூங்கக்கூடாது. வாயை லேசாக அங்குமிங்கும் அசைத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படிச்செய்யும்போது, காது அடைக்காது.
பட்டாசு சத்தம் காதை பாதிக்குமா?
பண்டிகைகளின்போது, பெரிய அளவில் சத்தம் எழுப்பும் வெடிகளால் காதிலுள்ள சிறு நரம்புகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. அது, செவித்திறனை நிரந்தரமாகவும் பாதிக்கலாம்.
ஹெட்போன், புளூடூத் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள்
நாம் ஒருவருக்கொருவர் நேரில் பேசிக்கொண்டது போய், செயற்கைக் கருவிகளின் துணையுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக ஹெட்போன், புளூடூத் போன்றவற்றைப் பயன்படுத்துவதால், காதுகள் பாதிப்படையும். சில நேரங்களில் காது கேட்காமல்கூட போகலாம்; வலி உண்டாகும். தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்தினால், தலைபாரம், மனஅழுத்தம் ஏற்படலாம். எனவே, குறைந்த நேரம் மட்டுமே இவற்றைப் பயன்படுத்துவது நல்லது. அதேபோல, ஒலியைக் குறைவாக வைத்துக்கொண்டு பயன்படுத்த வேண்டும்.
ஹெட்போன் பயன்படுத்தும்போது மற்றவர்கள் பேசுவதும் நமக்குக் கேட்க வேண்டும். அப்படியில்லையென்றால், அந்த ஒலி காதுக்கு கேடு விளைவிக்கும். அதேபோல, ஹெட்போன் பயன்படுத்தும்போது நீங்கள் பேசுவது சுற்றியிருக்கும் மற்றவர்களுக்கு இயல்பாக இருக்க வேண்டும். அதாவது, சத்தத்தைக் குறைவாக வைத்துக் கேட்க வேண்டும். அப்படியில்லாமல் கத்திப் பேசுகிறீர்கள் என்றால் அதுவும் ஆபத்தானதே.
ஒலி மாசு – காதை பாதிக்கும்!
* கூச்சல் எங்கெல்லாம் அதிகமாக இருக்குமோ, அங்கு செல்வதைத் தவிர்க்கலாம்.
* போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில், ஒலி மாசு அதிகமாக இருக்கும். எனவே, கூடுமானவரை அதில் சிக்கிக்கொள்ளாமல் நேரத்தைத் திட்டமிட்டு பீக் ஹவர்ஸில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.