முதல் முயற்சியே வெற்றி !! (மகளிர் பக்கம்)
தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஜீஜீ
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் அகில இந்திய அளவில் முதல் நான்கு இடங்களையும் பெண்களே பிடித்து அசத்தி இருக்கின்றனர். மாநில அளவில் முதல் இடத்தை சென்னை கொளத்தூரை சேர்ந்த மாணவி ஏ.எஸ்.ஜீஜீ பிடித்துள்ளார். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற முதல்நிலை தேர்வை இந்தியா முழுவதிலும் இருந்து 5.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதில் 13,090 பேர் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து மெயின் தேர்வும், நேர்முகத் தேர்வுகளும் நடைபெற்றன.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் யுபிஎஸ்சி இணையதளத்தில் அண்மையில் வெளியானது. இதில் அகில இந்திய அளவில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய அளவில் முதலிடத்தை இஷிதா கிஷோர் பெற்றுள்ளார். கரிமா லோஹியா இரண்டாவது இடமும், உமா ஹாரதி 3வது இடமும், ஸ்மிருதி மிஸ்ரா 4வது இடத்தையும் பிடித்து முதல் நான்கு இடங்களும் பெண்களே என சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை கொளத்தூரை சேர்ந்த ஏ.எஸ்.ஜீஜீ என்ற மாணவி முதல் இடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 107வது இடம் பிடித்துள்ளார் என்பதைத் தாண்டி, முதல் முயற்சியிலேயே யு.பி.எஸ்.ஸி. தேர்வில் தேர்ச்சி பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 42 பேர் சிவில் சர்வீஸ் பணிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஜீஜீயிடம் பேசியதில்… ‘‘சாதாரண எளிய குடும்பம் என்னுடையது. அப்பா எலெக்ட்ரீசியனாக இருக்கிறார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம். இறுதி ஆண்டு படிக்கும்போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வுகள் குறித்து கல்லூரி பேராசிரியர்கள் மூலம் எனக்குத் தெரிய வந்தது. அதன் பிறகே அதற்கான முயற்சியில் இறங்கினேன். யுபிஎஸ்சி தேர்வை எழுதப் போகிறேன் என்பதற்காக என்னேறமும் புத்தகமும் கையுமாக நான் இருக்கவில்லை. நார்மலாக படிப்பதையே புரிந்து படிப்பேன். அவ்வளவுதான்.
மற்றபடி நான் வழக்கம்போல இயல்பாகவே இருந்தேன். சிவில் சர்வீஸ் தேர்வை எழுத கல்லூரி பேராசிரியர்களும் எனக்கு ரொம்பவும் உதவியாக இருந்தனர். முறையான வழிகாட்டுதல்களோடு சரியான முறையில் படித்தால் முதல் முயற்சியிலேயே வெற்றிபெறலாம்’’ என்கிறார் விரலை உயர்த்தி வெற்றிப் புன்னகையோடு.
‘‘எனக்கு சிறுவயதில் இருந்தே நாளிதழ்களை படிக்கும் பழக்கம் இருந்தது. எனது கதை, கவிதை, கட்டுரைகள் பிரபல வார இதழ்களிலும் பிரசுரமாகியிருக்கிறது. இதன் காரணமாக எழுத்தாளராகும் கனவு எனக்குள் இருந்தது. கல்லூரியில் செயல்படுகிற தமிழ் கிளப்பிலும் இணைந்து தமிழ் மொழிக்காக நான் சிறப்பாகவே பங்காற்றியிருக்கிறேன். தமிழ் மீதிருந்த ஆர்வம் காரணமாகவே யுபிஎஸ்ஸி தேர்வில் விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியத்தையே தேர்ந்தெடுத்துப் படித்தேன்’’ என்ற ஜீ.ஜீ, இந்தியன் ஃபாரின் சர்வீஸ்தான் தனது விருப்பம் எனத் தெரிவித்தார். தமிழக முதல்வரும் ஜீஜீக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.