வளமான வாழ்க்கைக்கு சுகாதாரம் அவசியம்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 3 Second

‘‘சுத்தம் மற்றும் சுகாதாரம் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படையான விஷயம். இவை இரண்டையுமே நாம் கடைபிடித்து வந்தால், எந்தவித தொற்றும் நம்மை அண்டாது. ஆனால் நாம் வாழும் இந்த சூழலில் தொற்றுக்கள் காற்று மூலமாக கூட பரவும் என்று கோவிட் நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது’’ என்கிறார் ரட்சனா. இவர் ‘மைக்ரோ கோ’ என்ற பெயரில் தொற்றுக்களை அழிக்கக் கூடிய கருவிகளை தயாரித்து வருகிறார்.

‘‘நான் மைக்ரோபயாலஜியில் முதுகலைப் பட்டம் படிக்கும் போதுதான் எனக்கு இந்த எண்ணம் ஏற்பட்டது. நம் சமூகத்திற்கு பயனுள்ள மற்றும் பிரச்னைகளின் தீர்வாகவும் இருக்கக்கூடிய ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு எப்பவுமே அப்லைட் சயின்ஸ் அதாவது பயன்பாட்டு அறிவியல் சார்ந்த விஷயம் மேல் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. மேலும் என்னுடைய ஆர்வத்தைப் பார்த்த என் பேராசிரியர் என்னை பி.எச்.டி படிக்க சொன்னார். என் சொந்த ஊர் குஜராத் என்பதால் அங்கேயே பி.எச்.டி படிப்பில் சேர்ந்தேன். அந்த சமயத்தில் அமெரிக்காவில் உள்ள ஆய்வு நிறுவனம் எங்க கல்லூரியுடன் இணைந்து செயல்பட விரும்பினாங்க.

அதன் காரணமாக நான் என் படிப்பை அமெரிக்காவில் தொடர்ந்தேன். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது பயன்பாட்டு அறிவியல் துறை உலகளவில் எவ்வாறு முன்னேறியுள்ளது என்பது. அங்கு 18 மணி நேரம் வேலை பார்த்தாலும், எனக்கு அலுப்பு ஏற்படவில்லை. காரணம், ஒவ்வொரு ஆய்விலும் என்ன மாதிரியான பொருட்களை உருவாக்க முடியும் என்பதில்தான் எங்களின் சிந்தனை இருந்தது. அமெரிக்காவில் படிப்பு மற்றும் வேலை என்பது பலரின் கனவு. அது எனக்கு தானாகவே அமைந்தது. அப்படி இருந்தும் என்னுடைய ஆழ் மனதில் நம் நாட்டிற்காக நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி ஒலித்துக்கொண்டே இருந்தது. அதை என் படிப்பினால் திருப்பித் தர விரும்பினேன்’’ என்றவர் எந்தவித யோசனையும் இல்லாமல் இந்தியா திரும்பினார்.

‘‘என் கணவரும் என்னைப் போல் ஆராய்ச்சியாளர். அவர் மும்பையில் பாபா அணுமின் நிலையத்தில் வேலைப் பார்த்து வந்தார். நான் பி.எச்.டி படிக்கும் போதே வீட்டில் எனக்கு திருமணம் செய்திட்டாங்க. குஜராத்தி பரம்பரையில் திருமணம், குழந்தைகள், குடும்பம் என்பது அந்தந்த வயதில் நடைபெற வேண்டும். படிக்க வேண்டும் என்று சொன்ன போது, கல்யாணம் அதற்கு தடையாக இருக்காது. கல்யாணத்திற்கு பிறகு உன் படிப்பை தொடரலாம் என்று சொல்லிட்டாங்க. அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு நானும் கல்பாக்கத்தில் உள்ள பாபா அணுமின் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி மட்டுமில்லாமல் சமூகத்திற்கு உதவக் கூடியது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நானும் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டது மட்டுமில்லாமல் சின்னச் சின்ன பொருட்களை உற்பத்தியும் செய்தேன். ஐந்து வருடங்கள் அங்கு வேலைப் பார்த்த காலங்களில் நான் பலவிதமான பொருட்களை உருவாக்கி இருந்தேன். அந்த சமயத்தில்தான் இதனை இங்கிருந்து செய்வதைவிட தனியாக செயல்பட விரும்பினேன்’’ என்றவர் ‘மைக்ரோ கோ’ உருவான காரணம் குறித்து விவரித்தார்.

‘‘அணு மின் நிலையத்தில் வேலை பார்த்து வந்த போது, மக்களை பாதிக்கக் கூடிய பலவிதமான தொற்றுகள் குறித்து தெரிந்து கொண்டேன். இவை சர்வதேச அளவில் எவ்வாறு பரவும் என்பதையும் புரிந்துகொண்டேன். அதற்கான ஒரு தீர்வு சுத்தம் மற்றும் சுகாதாரம். அது சார்ந்த பொருட்களை உருவாக்க விரும்பினேன். இதற்கு என் கணவர் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். எனக்கு பிசினஸ் குறித்து பெரிய விவரம் தெரியாது. காரணம், நான் ஒரு ஆராய்ச்சியாளர். அதனால் ஒரு நிறுவனம் துவங்கவும் அதற்கான நிதி குறித்தும் ஒரு ஆண்டு திட்டமிட்டேன். என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகு வேலையை ராஜினாமா செய்தேன். மைக்ரோ கோ மூலம் சுகாதாரமில்லாத காரணத்தால் ஏற்படும் தொற்றினை கட்டுப்பாட்டில் வைக்கவும் ஆரோக்கியமான வாழ்வினை அளிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.

மைக்ரோ என்றால் கண்களுக்கு தென்படாதவை. நம் உடலுக்கு தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரஸ், பங்கஸ் இவை அனைத்தையுமே நம்மால் பார்க்க முடியாது. ஆனால் அதை சென்சார் செய்யக்கூடிய கருவிகளை நம்மால் உருவாக்க முடியும். அதன் மூலம் அதனை அழிக்கலாம். பொதுவாகவே தொற்று சாப்பாடு மற்றும் மருத்துவ துறையில்தான் அதிகம் பரவும். இவை இரண்டையும் ஆரோக்கிய முறையில் பாதுகாக்க வேண்டும். ஒரு தொழில் இயங்காமல் போகலாம்.

தண்ணீர், உணவு இல்லாமல் நம்மால் வாழ முடியாது. அடுத்து நம்மைக் காக்கும் மருத்துவத் துறை. இவை இரண்டுமே சுகாதாரமாக இருக்க வேண்டும். தொற்று எளிதாக பரவக்கூடிய இந்த இரண்டு இடங்களிலும், அதனை கட்டுப்பாட்டில் வைக்கக்கூடிய கருவியினை உருவாக்க திட்டமிட்டேன். தொற்றுக்கள் 80% நம்முடைய கைகளில் உள்ள கிருமிகள் மூலம் பரவும். அதனால் தான் கோவிட் காலத்தில் நம்முடைய கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தினோம். சாதாரண மக்களான நம்முடைய கைகளினால் தொற்றுக்கள் பரவும் என்றால் உணவு மற்றும் மருத்துவத் துறையில் இருப்பவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். அதனால் அந்த இரண்டு நிறுவனங்களை டார்கெட் செய்தோம். உணவுத்துறை பொறுத்தவரை நம்முடைய கைகள் அல்லது காய்கறிகளை சோப் மூலம் கழுவினால் போதும்.

அதுவே மருத்துவ துறைக்கு அந்த சோப்பில் ஆல்கஹால் கலந்திருக்க வேண்டும். மேலும் கைகளை கழுவும் போது சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சரியான முறை மற்றும் நேரம்தான் நல்ல பலனை கொடுக்கும். நாம் தற்போது கண்களுக்கு தெரியாத பாக்டீரியா, வைரசினை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு தொழில்நுட்பம் எங்களுக்கு கை கொடுத்தது. எங்களின் அனைத்துப் பொருட்களும் டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட்டவை.

நாம் அதனை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் அவ்வளவு தான். ஆட்டோமேடெட் ஹேண்ட் ஹைஜீன். இந்த கருவியில் நம்முடைய கையினை வைத்தால் போதும், அது நம் கைகளில் உள்ள கிருமிகளை கண்டறிந்து அழித்துவிடும். இதனை ஒரு செஃப் சமையல் அறைக்கு செல்லும் முன் பயன்படுத்தலாம். அதேபோல் மருத்துவ துறை என்றால் அறுவை சிகிச்சையின் போதோ அல்லது நோயாளிகளை ஆய்வு செய்த பிறகு உபயோகிக்கலாம். இதைத் தவிர தண்ணீர் சுத்திகரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு, காய்கறிகள் மற்றும் தரையினை சுத்தம் செய்ய தனிப்பட்ட பொருட்கள் உள்ளன. இவை அனைத்தும் கண்களுக்கு தென்படாத கிருமிகளை அழிக்கும் தன்மைக் கொண்டது.

கிருமிகள் 24 மணி நேரமும் நம்மை சுற்றித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனை முற்றிலும் அழிக்க முடியாது என்றாலும், நம்மை தாக்காமல் கட்டுப்பாட்டில் வைக்கலாம். தற்போது உணவு மற்றும் மருத்துவ துறையில் மட்டுமே நாங்க கவனம் செலுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் நாம் எந்த நோயால் பாதிக்கப்படுவோம் என்று சொல்ல முடியாது. ஆனால் அதில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள நாங்க அஸ்திவாரம் போட்டிருக்கிறோம். மேலும் பல பொருட்களை உருவாக்கி மக்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்க வேண்டும் என்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது’’ என்றார் ரட்சனா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வீரியம் அதிகரிக்க கட்டிலுக்கு போகும்முன் தொப்புளில் இந்த எண்ணெயை தடவிட்டு போங்க..!!(அவ்வப்போது கிளாமர்)
Next post முதல் முயற்சியே வெற்றி !! (மகளிர் பக்கம்)