வலி தீர வழி என்னவோ? (மருத்துவம்)
முதுகுவலி ஏற்படப் பல காரணங்கள் இருக்கின்றன. தூங்கி எழும்போதே சிலருக்கு முதுகில் வலி ஏற்படும். அது, நாள் முழுவதும் தொடரும். சரியான உயரம், வடிவம் இல்லாத தலையணைகள் மற்றும் லேசான மெத்தைகளைப் பயன்படுத்துவதே அதற்குக் காரணம். திடமான, வலுவான மெத்தைகளைப் பயன்படுத்தினால் முதுகுவலியைத் தவிர்க்கலாம். அதேபோல குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல் காரணமாகவும் முதுகுவலி ஏற்படும். அந்த நேரத்தில் வெந்நீரில் சீரகத்தைப் போட்டுக் குடித்தால் செரிமானக் கோளாறு சரியாகும். அத்துடன், வாழைப்பழம் போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டு சரியாக மலம் கழித்து வந்தாலே, வாய்வுத் தொல்லையால் உண்டாகும் முதுகுவலி சரியாகிவிடும். முதுகுத்தண்டின் அருகில்தான் சிறுநீரகம் இருக்கிறது. எனவே, சிறுநீர் கழிக்கும்போது முகுதுவலியும், சிறுநீர் கழிப்பதில் சிரமமும் ஒருசேர இருந்தால், அது சிறுநீரகக்கல் பாதிப்பாக இருக்கலாம்.
எனவே, உடனடியாக மருத்துவரைச் சந்தித்து, முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டால் அந்த பாதிப்பைச் சரிசெய்துவிடலாம். பின்னந்தொடையில் ஏற்படும் தசைப்பிடிப்பு காரணமாகவும் முதுகுவலி உண்டாகும். அகலக்கால்வைத்து நடப்பது, நீண்ட நேரம் நின்றுகொண்டிருப்பது, நீண்ட தூரம் பயணம் செய்வது போன்றவற்றால் பின்னங்கால் தசைகள் பிடித்துக்கொள்ளும். அது போன்ற சூழலில் ஒரு காலை தரையில் ஊன்றி, மற்றொரு காலை சேரில்வைத்து ஸ்ட்ரெட்ச் செய்தால், தசைப்பிடிப்பு விலகி முதுகுவலி குறையும். அதோடு வெந்நீர் நிரப்பிய பையால் ஒத்தடம் கொடுத்தாலும் வலி குறையும்.
முதுகுவலிக்கு எளிமையான மற்றும் முதன்மையான சிகிச்சை ஓய்வுதான். ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக வேலை செய்தாலும் முதுகுவலி ஏற்படும். ஒருநாள் முழுக்க எந்த வேலையும் செய்யாமல் முழு ஓய்வு எடுத்தாலே முதுகுவலி சரியாகிவிடும். தற்போது வீட்டிலிருந்தபடியே கம்ப்யூட்டரில் வேலை செய்யும் முறை அதிகரித்துவருகிறது. அப்படி வேலை செய்பவர்கள், சோபாவில், கட்டிலில் அமர்ந்துகொண்டு வேலை செய்யாமல், அலுவலகத்தில் இருப்பதுபோலச் சரியான நிலையில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும்.
வலி தீர வழி என்னவோ?
வீட்டிலிருந்தபடியே செய்ய சில எளிய பயிற்சிகள்
*முதுகை சுவரில் சாய்த்தபடி சில நிமிடங்கள் நிற்கலாம்.
*முதுகால் சுவரை நன்றாக அழுத்தித் தள்ளுவதுபோல சுமார் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.
*கால்களை நன்றாக மடக்கி, நீட்டலாம்.
*கட்டிலுக்கு அருகே தரையில் படுத்துக் கொண்டு, கால்கள் இரண்டையும் கட்டிலின் மேல் செங்குத்தாகவைத்து சில நிமிடங்கள் இருந்தாலும் முதுகுவலி குறையும்.
*முதுகுவலியால் அவதிப்படுபவர்கள், இடுப்புப் பகுதியில் பெல்ட் அணிந்துகொள்ளலாம்.
*வாகனங்களில் அடிக்கடி வெளியே செல்பவர்கள், முதுகுவலி இல்லையென்றாலும் இடுப்புப் பகுதியில் பெல்ட் அணிவது நல்லது.
*அதிக தூரம் பயணம் செல்லும்போது, டிராஃபிக் சிக்னலில், இடுப்பில் கைவைத்து முன்னால், பின்னால் சாய்ந்து ஸ்ட்ரெட்ச் செய்வது நல்லது.
தவிர்க்கும் வழிகள்
*முதுகுவலி இருப்பவர்கள் அடிக்கடி குனிவதைத் தவிர்க்க வேண்டும்.
*தேவையான பொருட்களை தங்களுக்கு அருகே, உயரமான இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும்.
*ஷவரில் குளிக்கலாம் அல்லது சற்று உயரமான சேரில் பக்கெட்டை வைத்துக்கொண்டு குளிக்க வேண்டும்.
*தென்னமரக்குடி எண்ணெய், பிண்ட தைலம் போன்ற வலி நிவாரணிகளையும் பயன்படுத்தலாம்.
*இருசக்கர வாகனங்களில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் சிறிய சக்கரம் இருக்கும் வாகனங்களைவிட, பெரிய சக்கரங்கள் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்துவது நல்லது.
*வாகனத்தின் ஷாக் அப்சார்பர் சரியான நிலையிலிருக்கிறதா என்பதை அவ்வப்போது மெக்கானிக்கிடம் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
*பள்ளமான பகுதியில் வாகனம் விழுந்து எழும்போது, அப்படியே உட்காராமல் சீட்டிலிருந்து லேசாக எழுந்துகொள்வது நல்லது. மொத்த அழுத்தமும் முதுகில் சென்று சேர்வதை இது தடுக்கும்.
*முதுகுவலியைப் பொறுத்தவரை வலி இருப்பது தெரிந்துவிட்டால், உடனடியாக ஓய்வு எடுக்க வேண்டும். தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கக் கூடாது. ஓய்வுக்குப் பிறகும் சரியாகவில்லையென்றால், உடனடியாக அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.’’
எப்படித் தூங்க வேண்டும்?
முதுகுவலி இருப்பவர்கள் குப்புறப் படுத்துத் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். கருவில் குழந்தை எந்த வடிவத்தில் இருக்குமோ, அப்படி ஒரு பக்கமாக சாய்ந்து, கால்கள் இரண்டையும் வயிற்றுப் பகுதியை ஒட்டி மேல்நோக்கி இருக்குமாறு வைத்துக்கொண்டு தூங்க வேண்டும். முதுகுவலி இருப்பவர்கள் மட்டுமல்ல அனைவருமே இப்படித் தூங்குவது நல்லது. அதேபோல உட்காரும்போதும், நடக்கும்போதும் குனிந்தபடி, முன்னோக்கிச் சாய்ந்தபடி இல்லாமல் நிமிர்ந்து இருக்க வேண்டும், நடக்க வேண்டும்.