குலோப் ஜாமூன் ரசமலாய் கேக்…!! (மகளிர் பக்கம்)
மதுரை பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி இயற்பியல் பட்டம் முடித்தவர், தான் படித்த அதே கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். ஆசிரியர் பணியில் ஒரு பக்கம் இருக்க, வீட்டில் இருக்கும் நேரத்தினை உபயோகமாக கழிக்க விரும்பினார். அவருக்கு பிடித்த பேக்கிங் தொழிலைக் கையில் எடுத்தவர் தற்போது கப் கேக்குகள் மட்டுமின்றி அனைத்து வகை கேக்குகளையும் வீட்டிலேயே தயாரித்து ஆர்டரின் பேரில் விற்பனை செய்து வருகிறார் மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த அன்னை தெரசா.
‘‘என்னுடைய அப்பா வழி தாத்தா வைத்தியர். அவர்தான் எனக்கு அன்னை தெரசானு பெயர் வச்சார். காரணம், உலகமே வியந்து பார்க்கக்கூடிய பெண்மணி அவங்க. சமூக சேவையின் முன் உதாரணமா திகழ்ந்தவங்க. அவர் மேல் என் தாத்தாவிற்கு பெரிய மரியாதை இருக்கு. அதற்காகவே அவங்க பெயரை எனக்கு வச்சாங்க. இந்த பெயரால் எனக்கு நிறைய பெருமை கிடைச்சிருக்கு. என் பெயரைச் சொன்னதும், வயதானவர்கள் கூட உடனே எழுந்து எனக்கு வணக்கம் சொல்வாங்க. அது எனக்கு கிடைத்த மரியாதை இல்லை. என் பெயருக்கு இருக்கும் அடையாளம்.
மேலும் அந்தப் பெயர் புனித எண்ணம் கொண்ட தெய்வத்தாயின் மகத்தான மனிதநேய சேவைக்கு கிடைத்த மரியாதை என்று நான் நினைக்கும் போது எல்லாம் மெய்சிலிர்க்கும். மேலும் நான் செல்லும் இடங்கள் எல்லாம் பணிவா, பாசமான வரவேற்பு கிடைக்கும். அதற்கு நான் என் தாத்தாவிற்கு தான் நன்றி தெரிவிக்கணும். ஆனால் சில சமயம் பெரியவர்கள் கூட என்னை வணங்கும் போது கொஞ்சம் தர்ம சங்கடமா இருக்கும். அந்த சமயத்தில் வேறு பெயர் மாற்றி வைத்துக் ெகாள்ளலாமான்னு தோணும். இப்படி ஒரு பக்கம் பெருமையா இருக்கும் விஷயம் சிலருக்கு கேலியாக தோன்றும். பலர் என் பெயரைக் கொண்டு கிண்டலும் ெசய்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நம்மால் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது’’ என்றவர் பேக்கரி தொழில் பற்றி குறிப்பிட்டார்.
‘‘என்னுடைய கப் கேக்குகளுக்கு மதுரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கு. ஆர்டரின் பெயரில் தயாரித்துக் கொடுப்பதால், என்னுடைய கேக் எப்போதும் ஃப்ரஷ்ஷாக இருக்கும். ஏற்கனவே தயார் செய்து ஃபிரிட்ஜில் வைத்து நான் கொடுப்பதில்லை. பிறந்த நாள், வெட்டிங் கேக், கிறிஸ்துமஸ், பார்ட்டி கேக் என அனைத்து விழாக்களுக்கான
கேக்குகளை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயார் செய்து கொடுத்து வருகிறேன். பொதுவாகவே கேக் என்றால் அதில் கிரீம், சாக்லெட், பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு வரும். நான் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று குலோப் ஜாமூன், ரசமலாய் என தனிப்பட்ட சுவைகளில் கேக்குகளை செய்து வருகிறேன். அதை பலரும் விரும்பி ஆர்டர் செய்கிறார்கள்.
மதுரை மட்டுமில்லாமல் அதை சுற்றியுள்ள இடங்களில் இருந்தும் எனக்கு ஆர்டர்கள் வருவதால், அதற்கு ஏற்ப செய்து தருகிறேன். சிலர் வெளியூர்களில் இருந்து மதுரைக்கு வரும் போது, என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு கேக் ஆர்டர் செய்ய கொடுக்கிறார்கள். இது மட்டுமில்லாமல் என் கல்லூரியில் நடைபெறும் விழாக்களின் போதும் தனிப்பட்ட ஸ்டால்கள் அமைக்கிறேன். ஆண்டுதோறும் எங்கள் கல்லூரி மாணவிகளின் பிரிவு உபசார விழாவில் என்னுடைய கேக் கண்காட்சி இடம் பெறும்.
நான் ஆசிரியர் வேலை பார்த்து வந்தாலும், மனசுக்கு பிடித்தமான வேலையை சேர்த்து செய்யும் போது வாழ்க்கையில் சாதித்த திருப்தி ஏற்படும். அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் என் குடும்பத்தினர். தற்போது வீட்டில் இருந்த படிதான் கேக்குகளை தயாரித்து வருகிறேன். எதிர்காலத்தில் பேக்கரி ஒன்றை துவங்கி அதில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும். அதற்கான வேலையினை இப்போது இருந்தே துவங்கிவிட்டேன்’’ என்றார் அன்னை தெரசா