கண்டாங்கி சேலைக்கட்டி… கையில் பனை ஓலை கூடை வைத்து…!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 39 Second

காரைக்குடி கண்டாங்கி சேலைகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதே அளவிற்கு தற்போது காரைக்குடியில் தயாராகும் கூடைகளும் பிரபலமாகி வருகிறது. பனை ஓலைகளில் தயாராகும் இந்தக் கூடைகளை பலரும் விரும்பி வாங்கி வருகின்றனர். ‘‘பிளாஸ்டிக்கில் செய்யும் எல்லா பொருட்களையும் பனை ஓலைகளிலும் செய்யலாம்’’ என்கிறார் 15 வருடமாக கூடைகள் தயார் செய்து வரும் புஷ்பவல்லி. பல பெண்களுக்கு கூடைகள் பின்னுவதற்காக பொருட்களை வாங்கி கொடுத்து வீட்டிலிருந்த படியே கூடைகளை பின்னி கொடுக்க அதை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவருடைய வீட்டையே கடையாக மாற்றி கூடைகள், கண்டாங்கி சேலைகளை விற்று வருகிறார். வீட்டின் முன் தொங்கிய கூடைகளுக்கு இடையில் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தவரை அவருடைய ஓய்வு நேரத்தில் சந்தித்து பேசினோம்.

‘‘எனக்கு சொந்த ஊரு காரைக்குடி. நான் ஒன்பதாவது வரைக்கும் படிச்சிட்டு வீட்டுல சும்மா இருக்க வேண்டானு டெய்லரிங் கத்துக்கிட்டேன். இதற்கிடையில் எனக்கு திருமணமாச்சு. என் கணவரின் ஊர் கானாடுகாத்தன், அங்கு செட்டிலாயிட்டேன். அவர் பஞ்சு மில் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நான் இங்க வந்தும் வீட்ல சும்மா இருக்க பிடிக்காமல், வீட்டு வேலை போக கிடைக்கும் நேரத்தில் ஊரில் உள்ள பெண்களுக்கு துணி தைத்து கொடுத்து வந்தேன்.

அதில் ஓரளவு வருமானம் வந்தது. இருந்தாலும் குடும்பத்திற்கு எங்க இருவரின் வருமானம் போதவில்லை. அதனால் என்ன செய்யலாம்னு யோசிச்சேன். காரைக்குடியிலேயே கானாடுகாத்தன் ஊர் ரொம்ப பிரபலம். இங்க இருக்கிற 200 வருஷ பழமையான செட்டியார் மாளிகைகளும், அரண்மனையும் பார்க்க பல மாவட்டம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் பயணிகள் இங்க வருவாங்க. இங்கு இருக்கும் பழமையான பொருட்களை எல்லாம் வியந்து பார்த்து செட்டியார் மாளிகையை தாண்டி வேற என்ன காரைக்குடியில் ஸ்பெஷல்னு கேட்பாங்க. செட்டிநாட்டு சமையல் அடுத்து காரைக்குடி சேலைகள் ரொம்ப பிரபலம்னு அவர்களிடம் சொல்வோம். உடனே காரைக்குடி சேலைகள் பற்றி விசாரிப்பாங்க.

அது இங்கில்லை காரைக்குடியில்தான் கிடைக்கும்னு சொல்வோம். அப்பதான் எனக்குள் ஒரு எண்ணம் ஏற்பட்டது. அந்த புடவைகளை நாம் இங்கேயே விற்பனை செய்ய முடிவு செய்தேன். என் கணவரிடம் சொன்ன போது, அவரும் சரின்னு சொல்ல கடன் வாங்கி கைத்தறிகளை வாங்கி வீட்டுலேயே போட்டேன். நான் ஏற்கனவே டெய்லரிங் வேலை செய்துகொண்டு இருந்ததால நூல் எங்க மலிவாக கிடைக்கும் என்று எனக்கு தெரிந்திருந்தது. அதனால மலிவா கிடைக்கிற இடத்தில் நூல் வாங்கி வேலையை தொடங்கினேன். எங்க ஊரிலேயே பல வருஷமா காரைக்குடி சேலைகள் செய்றதுல கைதேர்ந்த வயதான இரண்டு பேரை அழைச்சு கைத்தறி சேலைகள் நெசவு செய்ய தொடங்கினேன்’’ என்றவர் எப்படி பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார் என சொல்லத் தொடங்கினார்.

‘‘முதலில் நகரத்தார்கள்தான் இந்த காரைக்குடி சேலைகள் கட்டுவாங்க. சாதாரண மக்கள் எல்லாம் கந்தல் சேலைகள் தான் கட்டுவாங்க. காரைக்குடி சேலைகள் பார்க்கிறதுக்கு அழகா இருக்கும்.  இதனாலேயே காரைக்குடி சேலைகள் மேல பல பெண்களுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. ஒரு தடவையாவது அந்த மாதிரி சேலைகளை வாங்கி கட்டிரணும்னு ஆசையோட இருந்தாங்க. காரைக்குடி சேலைகளில் ரொம்ப பிரபலமானது செட்டிநாடு தாழம்பூ கோர்வை சேலைகள். இந்த டிசைன் ரொம்ப பாரம்பரியமானது. இரண்டு பேரு சேர்ந்து தான் இந்த சேலையை நெய்ய முடியும். அதே போல பாலும் பழமும் டிசைன், தேன் நிலவு டிசைன், ஆட்டு முழி டிசைன், கோட்டையூரான் கண்டாங்கி சேலைகள் எல்லாமே ரொம்ப பிரபலம். காரைக்குடி டிசைன்கள் எல்லாம் கட்டம் கட்டமாகவும், கோபுரம் வடிவங்கள், தாழம்பூ அன்னப் பறவை, யானை இவைதான் இருக்கும்.

அந்த காலத்தில் கண்களால் பார்ப்பதைக் கொண்டுதான் சேலைகளின் டிசைன்களாக நெய்வாங்க. காரைக்குடியில் கல்யாணம் என்றால் அதில் பெரும்பாலானோர் யானை டிசைன் புடவைகளைதான் விரும்புவாங்க. ஆரம்பத்தில் இந்த சேலைகள் கனமாக இருக்கும். இப்போது அதில் சில மாற்றம் செய்து அதில் எடை இல்லாமல் தயார் செய்கிறோம். காரைக்குடியில எங்க பார்த்தாலும் கைத்தறிகளாக இருக்கும். நூல் விலை கட்டுப்படியாகாததால் இந்த தொழில் அப்படியே நலிந்து விட்டது. அதில் ஒரு சிலர் மட்டுமே இந்த தொழிலை விடாமல் வீட்டில் இரண்டு கைத்தறி போட்டு செய்றாங்க. நான் ஆரம்பத்தில் சேலைகளை வாங்கி அதை விற்பனை செய்து வந்தேன்.

அப்பதான் எனக்கு குழந்தை பிறந்து இருந்தது. ஆனாலும் குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு வீடு வீடாக சென்று புடவையை விற்பேன். தறி போட்ட பிறகு என் வீட்டுலேயே சேலைகள் விற்க தொடங்கினேன். நான்கு வருஷம் முன்பு தான் இந்த சேலைகளுக்கு புவிசார் குறியீடு கொடுத்தாங்க. அதன் பிறகு பலர் இந்த புடவையினை தேடி வந்து வாங்க ஆரம்பிச்சாங்க. எல்லாமே தறி புடவைகள் என்பதால், ஒவ்வொரு புடவையும் நெய்ய குறிப்பிட்ட நாட்கள் தேவைப்படும். காரைக்குடி கண்டாங்கி சேலைகள் நெய்து முடிக்க ரெண்டு நாட்கள் தேவைப்படும்’’ என்றவர் காரைக்குடியின் மற்றொரு அடையாளமான கூடைகள் பற்றி விவரித்தார்.

‘‘இங்கு புடவைகள் எப்படியோ அதேபோல் கூடைகளும் ஃபேமஸ். பனை ஓலையில் தான் கூடைகள் செய்வாங்க. பொதுவாக பனை ஓலையில செய்யும் கூடைகளில் தான் அந்த காலத்தில் நகைகளை போட்டு வைப்பாங்க. பீரோ எல்லாம் அப்ப கிடையாது. மேலும் பனை ஓலை டப்பாக்களில் வெள்ளி, தங்கம் போட்டு வெச்சா கருக்காதுன்னு சொல்லுவாங்க. அதனாலயே பனை ஓலையில் செய்கிற பாக்ஸ்களில் நகைகளை போட்டு வைப்பது இங்கு வழக்கமாக உள்ளது. பட்டுச்சேலைகள் கூட இந்த பனை ஓலை கூடைகளில்தான் வைப்பாங்க.
அந்த கூடைகள் செய்ய எனக்கு ஓரளவுக்கு தெரியும் என்பதால், முழுமையாக செய்ய கற்றுக் கொள்ள ஆரம்பிச்சேன்.

அதன் பிறகு கோயிலுக்கு எடுத்து செல்லும் கூடைகள், கடைக்கு சாமான்கள் வாங்குவதற்கு, நகைகள் போட்டு வைக்கும் பாக்ஸ், காய்கறிக்கு, அரிசி மொறம் என பனை ஓலைகளில் செய்யக்கூடியவற்றை செய்ய ஆரம்பித்தோம். பனை ஓலைகள் முளைச்ச ஒரே வாரத்தில் வெட்டி அதில் தான் கூடைகள் பின்ன முடியும். ஓலைகளை வெட்டி வந்ததும் அதை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கணும், அதன் பிறகு கூடைகளுக்கு ஏற்ப ஊசியால் அதை கிழித்துக் கொள்வோம்.

அதன் பிறகு வண்ணங்களுக்கு ஏற்ப சாயத்தில் முக்கி எடுக்க வேண்டும். நாங்க இயற்கை சாயங்கள் தான் பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக் கூடைகளை விட இதைத்தான் மக்கள் தற்போது அதிகம் விரும்புகிறார்கள். வெற்றிலைப் பாக்கு தட்டு, சாக்லெட் மற்றும் டீ தட்டுகள் என பல வகை பொருட்களும் பனை ஓலைகள்ல செய்கிறோம். செட் கூடைகளும் எங்களிடம் உள்ளது. செட்டிநாட்டில் கல்யாணமாகி போகும் பெண் வீட்டில் சீதனமாக இந்த கூடைகளை கொடுப்பது வழக்கம்’’ என்ற புஷ்பவல்லி கூடை பின்னும் தொழிலில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிறுகதை-விலகிப் போகாதே… நில்! (மகளிர் பக்கம்)
Next post வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)