மண் சிலைகள் கரைந்து போகாது! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 6 Second

கண்ணால் பார்த்து பயந்து எல்லாவற்றையும் வணங்கினான் பழங்குடி மனிதன். காலம் போகப்போக பார்த்தவற்றை எல்லாம் பாறைகளில் வரைந்தான். யானைகள், குதிரைகள், பழங்குடி சடங்குகள், நெருப்பை சுற்றி ஆடுதல் என அவன் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயங்களையும் பல வகைகளில் வரைந்தவைகளை பார்த்துதான் பின் நாட்களில் மண் சிற்பங்களாக வடிக்கத் தொடங்கினார்கள். தங்களின் குல குறியீடுகள், ஓவியங்களை மண் சிற்பங்களாக வடித்து தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர் நம் முன்னோர்கள். அவர்கள் வடித்த அந்த சிலைகளை நாம் பல நூற்றாண்டுகள் கழித்து அகழ்வாராய்ச்சி மூலம் பூமிக்குள் புதைந்து இருப்பதை தோண்டி எடுத்து வருகிறோம். சுடுமண் சிற்பங்கள், மண் குடுவைகள், மண்பானைகள் என பலவற்றை பார்த்து நாம் இன்றும் அதை பிரமித்து பார்த்து மகிழ்கிறோம். மண்ணால் செய்த பொருட்கள் எல்லாமே அழிந்து போகும் என்று நம்முடைய எண்ணத்திற்கு அப்படியே நேர்மாறாக இருக்கிறது நமக்கு கிடைத்த பொருட்கள்.

மண் சிற்பங்களிலேயே மிகவும் உச்சம் என்றால் நாம் செய்த தெய்வங்களின் சிற்பங்களை தான் சொல்லவேண்டும். ஒரு மனிதனை அப்படியே தத்ரூபமாக செய்யும் கலைதான் அந்தக் கால மனிதனின் கலைத்திறமைகளில் மிகவும் ஆகச்சிறந்தது. தெய்வங்களின் சாந்த முகம், உக்கிரமான முகம் என பல வகை முக அசைவுகளையும் அப்படியே மண்ணில் செய்திருப்பார்கள். இன்று பாறைக்கல், தங்கம், வெள்ளி, ஐம்பொன் என பலவற்றில் சிலைகள் செய்து வழிபட்டாலும் மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை பார்க்கும் போது அந்த தெய்வத்தின் மனநிலை அப்படியே நமக்குள் வந்து விடும். பல வகைகளில் சிலைகள் செய்தாலும் இன்னமும் மண்ணில் சிலைகள் செய்யக்கூடிய கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த கலையினை அதிகம் ஆண்களே வடித்து வந்தாலும், பெண்களும் தற்போது சாமி சிலைகளை செய்து வருகின்றனர். அப்படியானவர்களுள் ஒருவர்தான் புதுக்கோட்டையை சேர்ந்த பூமதி.

‘‘நம்முடைய மண் சார்ந்த சாமிகளை நம்முடைய மண்ணிலேயே செய்து தான் கும்பிடணும்’’ எனப் பேசத் தொடங்குகிறார் பூமதி. ‘‘எனக்கு சொந்த ஊரு புதுக்கோட்டை. எங்க ஊர்ல பாதி பேருக்கு மண்ணுல சாமி சிலைகள் செய்வதுதான் வேலை. புதுக்கோட்டையில பல வகையான சிற்பங்கள் உள்ள சாமி சிலைகள பார்க்கலாம். அதனாலேயே இந்த ஊர்ல சாமி சிலைகள் செய்யறவங்க அதிகமா இருப்பாங்க. என்னோட தாத்தாவும் மண்ணால் சாமி சிலைகளை வடிவமைத்து வந்தார். அவரைத் ெதாடர்ந்து என் அப்பா அந்த வேலையை செய்ய தொடங்கினார். அப்பா சிலைகள் வடிவமைக்கும் போது பள்ளிக்கு போகும் முன் நானும் அவருக்கு உதவியா சின்ன சின்ன வேலைகள் செய்வேன். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அப்பா சிலைகள் செய்வதை பக்கத்துலேயே உட்கார்ந்து பார்த்துட்டு இருப்பேன்.

ஒவ்வொரு சிலையை செய்து முடிச்ச பின்னாடியும் அந்த சிலையை தொட்டு பார்த்து எப்படியெல்லாம் செய்திருக்காங்கனு ரசிப்பேன். என்னோட ஆர்வத்தை பார்த்து அப்பா எனக்கு சின்னச் சின்ன சிலைகளை செய்ய சொல்லி கொடுத்தார். ஒரு அடி, இரண்டடின்னு சிலை செய்ய தொடங்கினேன். அதன் பிறகு ஐந்தடி சிலைகள் வரைக்கும் செய்ய பழகினேன். தினமும் சிலைகள் செய்யும் வேலையில் ஈடுபட ஆரம்பிச்சேன். விளைவு கொஞ்ச நாட்களிலேயே எல்லா விதமான சிலைகளையும் செய்ய கத்துகிட்டேன். படிக்கும் நேரம் போக வீட்டில் சும்மா இருக்கும் நேரம் சிலைகளை செய்ய ஆரம்பித்தேன். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் வீட்டின் சூழல் காரணமாக என்னால் தொடர்ந்து கல்லூரியில் படிக்க முடியவில்லை. அதனால் முழு நேரமாக சிலைகளை செய்யத் தொடங்கிட்டேன்’’ என்றவர் சிலைகள் செய்வது குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘எங்க ஊரில் பலர் சிலைகள் வடிவமைத்து வந்தாலும், அவர்கள் அனைவரும் ஆண்கள் தான். பெண்களிலேயே நான் ஒருத்தி தான் சிலைகளை செய்து வருகிறேன். பொதுவாக கல்யாணமான பெண்கள்தான் இந்த வேலையில் ஈடுபடுவாங்க. கல்யாணமாகாத பெண்களை இந்த வேலைகள் செய்ய அனுமதிக்கமாட்டாங்க. ஆனாலும் என் அப்பா இந்த வேலையை நான் செய்ய அனுமதி கொடுத்தார். சிலைகள் வடிக்கும் போது உள்ள சில நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார்.

ஊர்காரங்களும் நான் சிலைகள் செய்வது குறித்து ஆட்சேபிக்கவில்லை. மாறாக சின்ன வயசுல அழகான சிலைகள் செய்றன்னு சொல்லி ஆச்சரியப்பட்டாங்க. தொடர்ந்து சிலைகள் செய்யத் தொடங்கினேன். பொதுவாக சிலைகள் செய்ய ஆற்று மணல் தான் பயன்படுத்துவோம். ஆற்றுக்கு பக்கத்துல இருக்குற வண்டல் மண்ணை வெட்டி எடுத்து வருவோம். வண்டல் மண்ணில் தண்ணிய ஊத்தி அதனுடன் களிமண்ணை கொஞ்சம் கலப்போம். இரண்டு மண்ணும் நன்றாக கலக்க காலால் தான் மிதிக்கணும். அப்பதான் இரண்டும் ஒன்றாக கலந்து சிலை செய்ய வசதியாக இருக்கும். பிறகு இரண்டு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அதன் பிறகு தான் சிலைகள் செய்ய தொடங்குவோம். சிலைகள் ஆர்டர் செய்ய வருபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்து தருவோம். அதாவது எந்த மாதிரியான சிலைகள், அதன் உயரம் எல்லாம் கேட்டுக் கொண்ட பிறகுதான் செய்ய துவங்குவோம்.

சில ஊர்கள்ல இருக்கிற பத்ரகாளி அம்மன் சிலைகள் உக்கிரமா இருக்கும். நாக்கு வெளிய தெரியாது. சில ஊர்களில் நாக்கு வெளிய இருப்பது போல் சிலைகள் இருக்கும். அதனால அவங்க கேட்கிற மாதிரியான சிலைகளை நாங்க செய்து தருவோம். அதிகமா நம்ம ஊர்கள்ல பெண் தெய்வங்கள் தான் இருக்கு. அதில் பாதி தெய்வங்கள் ரொம்ப உக்கிரமாகத்தான் இருக்கும். சில தெய்வங்கள் தான் சாந்த முகத்தோட இருக்கும். பெண் தெய்வங்களோட கையில சூலம், வேல், கழுத்துல பாம்பு இருக்கும். அதுவே ஆண் தெய்வங்களான மதுரை வீரன், ஐயனார் என்றால் கையில் அரிவாள் ஏந்தி இருப்பாங்க. அவங்க குதிரையில் இருப்பாங்க. ஒவ்வொரு தெய்வங்களின் கையில் உள்ள ஆயுதங்கள் என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பார்த்து செய்ய வேண்டும். நம்ம நாட்டுப்புற தெய்வங்களை பொறுத்தவரை மூன்று வகையாக பிரிப்பாங்க. குடும்ப தெய்வங்கள், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் உள்ளவங்க மட்டுமே வழிபடுவாங்க.

அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் அந்த குடும்பத்தில் கன்னிப் பெண்ணாக இறந்து போனவர்களையே தெய்வமா வணங்குவாங்க. இந்த சாமிகளை சிறு குடிசையில் அல்லது திறந்தவெளியில் வைத்து வணங்குவது அவர்களின் வழக்கம். குடும்பத்துல என்ன விசேஷம் செய்தாலும் குடும்ப தெய்வத்திடம் அனுமதி வாங்கிய பிறகு தான் செய்வாங்க. அடுத்து குல தெய்வம், ஒரு குலத்தினரால் வணங்கப்படுவது. இந்த தெய்வங்கள் எல்லாமே கருப்பு, ஐயனார், மதுரை வீரன், பெரியசாமி போன்ற தெய்வங்கள் குலசாமிகளா இருப்பாங்க. ஊரில் எல்லாருக்கும் பொதுவாக இருக்கும் சாமிகள் தான் ஊர் தெய்வங்கள். வடக்கு திசையினை பார்த்த மாதிரி உக்கிர தேவதைகளாகவோ அல்லது ஆயுதங்களுடன் இருக்கும் பெண் தெய்வங்களாகத்தான் இருப்பார்கள்.

சிலைகள் செய்ததும் ஒரு வாரம் வெயிலில் காய வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை தீயில் சுட்டு திரும்பவும் காய வைக்க வேண்டும். சிலைகளை தீயில் சுட்டு எடுப்பதால், நன்றாக இறுகி தண்ணீர் பட்டாலும் கரையாமல் இருக்கும். சுட்ட சிலைகள் காய்ந்ததும், அதன் பிறகு வண்ணம் தீட்டலாம். சாமிகளின் அணிகலன்கள், உடைகளுக்கு என தனிப்பட்ட நிறங்கள் கொடுக்கும் போது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். சாமிக்கு கண் திறக்க மட்டும் கோவில் கும்பாபிஷேகம் முன்னாடி நாள்தான் செய்வாங்க.

அதை அப்பாதான் செய்வார். கல்லில் சிலைகளை செய்தாலும், மக்கள் மண்ணால் செய்யப்பட்ட சிலைகளைதான் விரும்புறாங்க. பல கோவில்களின் கருவறைக்குள் நான் வடிவமைத்த சாமி சிலைகளை வைத்து பூஜித்து வருகிறார்கள். இந்த சிலைகளுக்கு அபிஷேகமும் நடைபெறும். இதுனால் வரை அவைகள் கரைந்தது இல்லை. மண் சிலைகளை பார்க்கும் போது அப்படியே அம்மன் நமக்கு நேரில் காட்சி தருவது போல் உயிரோட்டமாக இருக்கும்’’ என்றார் பூமதி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post தினம் வால்நட் சாப்பிடுங்க… படுக்கையில் அசத்திடுங்க…!!!! (அவ்வப்போது கிளாமர்)