கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 55 Second

வடாம் டிப்ஸ்

வருவது வெயில் காலம் மட்டுமல்ல, வடாம் சீஸனும், மாங்காய் சீஸனும்கூட. இவற்றை பயன்படுத்த சில யோசனைகள்….

* தர்பூசணியின் தோலைச் சீவி, கழுவி, உப்பு கலந்த தயிரில் ஒருநாள் ஊற வைத்து, பிறகு வெயிலில் காய வைத்து எடுத்தால் தர்பூசணி தோல் வடாம் தயார்.

* கோவைக்காயை உப்பு கலந்த தயிரில் ஊற வைத்து, மறுநாள் வெயிலில் காய வைத்தால் கோவைக்காய் வற்றல் கிடைக்கும்.

* வடாம் மாவில் வடிகட்டிய இஞ்சிச்சாறும், எலுமிச்சம்பழச்சாறும் கலந்தால் சுவையும், மணமும் கூடும். ஜீரணமும் ஆகும்.

* கெட்டி அவலை சுத்தம் செய்து, சுத்தமான குடிநீரில் ஊற வைத்து, நீரை வடித்துவிட்டு, அதனுடன் தேவைக்கேற்ப உப்பு, அரைத்த பச்சை மிளகாய் விழுது, பெருங்காயப் பொடி சேர்த்துப் பிசைந்து, பூசணிக்காய்த் துண்டுகள் சேர்த்து, உருண்டைகளாக உருட்டி, தட்டி வெயிலில் காய வைத்து எடுத்தால் சுவையான அவல் வடாம் தயார்.

* வடாம்களை காயவைக்க பிளாஸ்டிக் ஷீட்களை தவிர்த்து, வாழையிலை, தென்னங்கீற்று போன்றவற்றில் எண்ணெயும், தண்ணீரும் கலந்து தடவி விட்டு, வடாம் வைத்தால் காய்ந்ததும் வடாம்களை எடுப்பது எளிது.

* வடாம் வைக்கும் டப்பாக்களில் வெந்தயம் போட்டு வைத்தால் நமத்துப் போகாது.

* எந்த வடாமானாலும் உப்பைக் குறைத்துப் போட்டால் காய்ந்ததும் சரியாக இருக்கும்.

* வடாம் கூழில் உப்பு கூடிவிட்டால் ஊற வைத்த ஜவ்வரிசியை வேக வைத்துச் சேர்த்தால் சரியாகி விடும்.

* வடாம் கூழ் நீர்த்துவிட்டால், ஊற வைத்த அவலை அரைத்து கலந்தால் பதமாகி விடும்.

* வடாம் டப்பாவில் வரமிளகாயைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

* வடாம் கூழை இடியாப்ப அச்சில் பிழிந்து இட்லித்தட்டில் வேக வைத்து (ஆவியில்) எடுத்துக் காய வைத்தால் சீக்கிரம் காய்ந்துவிடும்.

* வடாம் கூழில் கேரட் சாறு, தக்காளிச்சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சாறு கலந்தால் வண்ண வண்ண, சத்துள்ள வடாம்கள் தயார்

– எஸ். ராஜம், திருச்சி.

* வத்தக்குழம்பு செய்யும்போது அதனை இறக்கியவுடன் சுட்ட அல்லது பொரித்த அப்பளத்தை பொடித்துப் போட்டால் சுவை கூடும்.

* துவையல் அரைக்கும்போது துளசி இலையையும் சேர்த்து அரைத்தால் சுவையும் கூடும். சளியும் பிடிக்காது.

* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அது சூடாக இருக்கும்போதே கொஞ்சம் தேங்காய்ப்பால் சேர்க்கலாம். ஆறியபின் சேர்த்தால் சேராது, சுவையும் இராது.

* பீரோவில் துணிகளை அடுக்கி வைக்கும்போது அடியில் பெரிய பிளாட்டிங் பேப்பரை போட்டு அதன்மீது அடுக்கலாம். ஈர வாடை வராது.

– நா.செண்பகவல்லி, பாளையங்கோட்டை.

* தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துடன் வடித்து எடுக்கப்பட்ட சாதத்தையும் போட்டு அரைத்தால் தோசை மொறுமொறுவென்றும் சுவையாகவும் இருக்கும்.

– கே.ராகவி, வந்தவாசி.

* ஒரு டீஸ்பூன் சர்க்கரையை தூவினாற்போல் போட்டு விட்டு பிறகு காபித்தூள் போட்டு வடிகட்டினால், டிகாஷன் சூப்பராக இறங்கும்.

* மஞ்சள் கிழங்குகளை உலர்த்தி ஈரமில்லாத பாட்டில்களில் ஒரு துண்டு கெட்டியான கற்பூரத்தைப் போட்டு இறுக்க மூடி வைத்தால் உளுத்துப் போகாது.

* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அது சூடாக இருக்கும்போதே அரை கப் தேங்காய்ப்பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் சுவை அருமையாக இருக்கும்.

– ஆர்.கீதா, சென்னை.

* சுண்டலை தாளிதம் செய்து இறக்கியபின் இரண்டு தேக்கரண்டி அவலை வறுத்து பொடித்து தூவினால் சுண்டலின் சுவையே அலாதி.

* உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக்கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.

* பாயசம் எவ்விதமாக இருந்தாலும் அதில் ஒரு மேஜைக்கரண்டி வெந்த பயத்தம்பருப்பைச் சேர்த்துவிட்டால் சுவை அதிகமாக இருக்கும்.

– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

சொதிக் குழம்பு

தேவையானவை:
தேங்காய் – 1,
பீன்ஸ் – 5,
கேரட் – 1,
உருளைக்கிழங்கு – 1,
முருங்கைக்காய் – 1,
எலுமிச்சை – 1,
உப்பு – தேவைக்கு.

அரைத்துக்கொள்ள:
பெரிய வெங்காயம் – 1,
இஞ்சி – 1 சிறிய துண்டு,
பச்சைமிளகாய் – 3,
சீரகம் – 1 டீஸ்பூன்,

வேகவைக்க:
பாசிப்பருப்பு – 20 கிராம்.
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுந்து – 2 ஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு,
பெருங்காயம் – சிறிது,
தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்.

செய்முறை: தேங்காய் துருவலை அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும். முதல் பாலை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள விழுதில் நீர் ஊற்றி அரைத்து 2 மற்றும் 3 ம் பாலையும் எடுக்கவும். பீன்ஸை சிறிது நீளமாகவும், கேரட்டை வட்டமாகவும் நறுக்கவும். உருளை, முருங்கை, பீன்ஸ் போல நறுக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நீளமாக நறுக்கிய வெங்காயம், காய்கறிகளையும் சேர்த்து வதக்கி அதனுடன் 3வது தேங்காய்ப் பாலை சேர்த்து வேக விடவும். காய் நன்கு வெந்தவுடன் அதில் இரண்டாம் பாலை ஊற்றி (வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம்) அரைத்த விழுதை சேர்க்கவும். பிறகு உப்பு சேர்க்கவும். கொதித்த பிறகு வேக வைத்த பருப்பு சேர்க்கவும். கடைசியாக முதலாம் பால் சேர்க்கவும். கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து விடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். நன்கு ஆறிய பிறகு எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செக்ஸ் அடிமை (sexual addiction)!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)