‘ஆழி தூரிகை’ ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)
மனிதனுடைய கற்பனைகள் எல்லாமே சாத்தியம் ஆனது என்றால் அது ஓவியங்களில்தான். தன்னால் பார்க்க முடியாத காட்சிகள், தங்களுடைய எண்ணங்களில் தோன்றிய காட்சிகள், ஒரு போதும் இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லையென்ற நிகழ்வுகள் என எல்லாவற்றையுமே ஓவியங்களாக வரைந்து அக மகிழ்ந்து கொண்டான். இதனுடைய தொடர்ச்சிதான் திரைப்படங்கள். திரைப்பட காட்சிகளில் தங்களால் சொல்ல முடியாத விஷயங்களை எல்லாம் குறியீடுகளாக காட்சியின் ஓரங்களில் பொருட்களாக வைத்திருப்பார்கள். இந்த மாதிரி காட்சியமைப்புகளுக்கு ஓவியங்களே முன்னோடி.
காலத்திற்கு தகுந்தாற் போல கலையும் மாற்றம் அடையும். அது போல தான் ஓவியமும். கற்பனைகளை ஓவியங் களாக வரைந்து பார்த்ததை தாண்டி தற்போது அந்த ஓவியங்களை எல்லாம் தொட்டு உணர்வது போன்ற ஓவியங்களும் வந்துவிட்டது. அதன் பெயர் அக்ரலிக் ஓவியங்கள். இந்த அக்ரலிக் வகை ஓவியங்களுக்கு அழகாக வண்ணம் தீட்டி தன்னுடைய ‘ஆழி தூரிகை’ என்ற சமூக வலைத்தள பக்கங்களில் விற்பனை செய்து வருகிறார் ஊக்ரா.
‘‘ஓவியங்களுக்கு கற்பனைதான் அடிப்படையே’’ எனப் பேசத் தொடங்கினார். ‘‘நான் சென்னைப் பொண்ணு. அப்பா, அம்மாவோட சொந்த ஊரு தூத்துக்குடி என்பதால், சில வருடங்கள் அங்கே தங்கி இருந்தேன். அங்கு ஆரம்ப பள்ளிப் படிப்பினை படிச்சேன். அதன் பிறகு சென்னையில் நாங்க செட்டிலாயிட்டோம். பள்ளிக்கூடம் படிக்கும் போது எனக்கு ஓவியம் வரையறது ரொம்ப பிடிக்கும். வீட்ல இருக்குற எல்லா சுவர்களிலும் கிறுக்கி வச்சிருவேன். நான் நல்லா ஓவியம் வரைவேன் என்பதால் என் நண்பர்கள் அவர்களுக்கு ஓவியங்கள் வரைந்து தரச் சொல்லிக் கேட்பாங்க. நானும் வரைந்து தருவேன். அப்படித்தான் ஓவியங்கள் வரைய தொடங்கினேன்னு சொல்லலாம்.
10ம் வகுப்பிற்கு மேல் என்னால் படிப்பில் பெரிய அளவில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் பத்தாம் வகுப்பிற்கு பிறகு ஓட்டல் மேனஜ்மென்ட் துறையில் சேர்ந்து படிக்க விரும்பினேன். அதற்காக விண்ணப்பித்தேன். அட்மிஷன் கிடைக்கும் வரை வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல், ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன். அவை அனைத்தும் டார்க் சைட் ஓவியங்களாக இருந்தது. அதாவது ஒரு மனிதன் தனிமையில் இருக்கும் போது அவன் மனதில் ஏற்படும் உணர்வினை வெளிப்படுத்துவது போல் இருந்தது. அதை என் நண்பர்களிடம் காண்பித்த போது… அவர்கள் என்னை பாராட்டாமல் பரவாயில்லைன்னு சொல்லிடுவாங்க. காரணம், நான் எங்கு தனிமையில் மூழ்கி இது போன்ற ஓவியங்களை வரைய ஆரம்பித்துவிடுவேனோ என்ற பயம் அவர்களுக்கு.
இதற்கிடையில் நான் நினைத்தது ேபால் எனக்கு ஓட்டல் மேனேஜ்மென்ட் துறையில் படிக்க இடம் கிடைச்சது. அதிக நேரம் படிக்க வேண்டும் என்பதால், என்னால் ஓவியங்களை வரைய நேரம் ஒதுக்க முடியவில்லை. படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இந்த நேரத்தில தான் என் அக்கா வீட்டுக்கு போயிருந்தேன். அவங்க வீட்டில இருந்த ஓவியங்களை பார்த்தவுடன் மீண்டும் வரைய வேண்டும்ன்னு ஆசை வந்தது. அடுத்த நிமிஷமே கையில் பிரஷைப் பிடித்து வரையத் தொடங்கினேன். அப்படி ஆரம்பிக்கப்பட்ட என் ஓவியங்கள் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கு’’ என்றவர் தன் ஓவியங்கள் குறித்து பேசத் தொடங்கினார்.
‘‘ஓவியங்கள், அதை வரைபவர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தக்கூடியது. அதே நேரத்தில இந்த சமூகத்தோட நிலையையும் இதில் வெளிப்படுத்தலாம். எனக்கு வான்காவோ அவர்களின் ஓவியங்கள் ரொம்ப பிடிக்கும். தனிமை, விரக்தி, காதல், வானம், மலைகள், கடல், நிலா, நட்சத்திரங்கள், சூரிய காந்தி பூக்கள் என எல்லாமே அவரின் ஓவியங்களில் இருக்கும். ஆனால் அவை எல்லாமே நிஜ கனவு கோட்பாடுகளுக்குள் இருக்கும். ஒருவரின் மனதில் கற்பனைகள் ஊற்று எழும் போது தான் அவர் கலைஞர் ஆகிறார் என சொல்வாங்க. கற்பனைகள் எப்பவுமே நாம உருவாக்கி வைத்திருக்கிற நியதிகளுக்குள்ளும், சட்டதிட்டங்களுக்குள்ளும் அகப்படாதவை. அதனோட உலகம் எல்லாமே கற்பனை மயமானது.
அதே போலதான் கலைஞனும். இப்படித்தான் வாழணும் என்கிற கோட்பாடுகளுக்குள்ள அடங்காதவன். இந்த எண்ணங்களை பிரதிபலிக்கிற மாதிரி தான் வான்காவோட ஓவியங்கள் இருக்கும். நான் அவரை என்னோட இன்ஸ்பிரேஷனா பார்த்தேன். என்னுடைய கற்பனைகளுக்குள் என்ன மாதிரியான ஓவியங்கள் வருதோ அதை எல்லாமே வரையத் தொடங்கினேன். என் ஓவியங்கள் எல்லாமே என் எண்ணங்களை பிரதிபலிக்கிற மாதிரி தான் இருக்கும். உதாரணமாக, என்னால பறக்க முடியாது. ஆனால் நான் வரையும் ஓவியங்களுக்கு இறக்கைகள் கொடுத்து பறக்க வைக்கலாம். என்னுடைய ஓவியங்களில் இரவில் செவ்வானமாக இருக்கும். கடலுக்குள் நட்சத்திரங்களை பார்க்கலாம். அருவியின் மேல் பச்சை நிற வானத்தை பார்க்கலாம்.
நான் அதிகமா என்னோட வாழ்க்கையில பார்த்த இடங்கள் கடலும் வானமும் தான். அதனாலேயே என்னுடைய ஓவியங்களில் அதிகமான இடத்தை கடலும் வானமும் எடுத்துக் கொண்டன. வானம் எப்படி முடிவில்லாம போகுதோ அதே மாதிரி தான் என்னுடைய எண்ணங்களும் முடிவில்லாமல் போகக்கூடியவை. வானமும் கடலும் நாம் நினைத்து பார்க்க முடியாத அற்புதங்களை நிகழ்த்தக் கூடியவை. என் ஓவியங்களும் அப்படித்தான்.
என் எண்ணத்தில் தோன்றும் விஷயத்தை வரைய தொடங்குவேன். பாதி ஓவியம் வரையும் போதே நான் நினைத்ததை விட மேலும் சில கற்பனைகளை எனக்குள்ள அந்த ஓவியம் கொண்டு வரும். சிலர் அவர்களுக்கான ஓவியங்களை வரையச் சொல்லி கேட்பார்கள். அந்த சமயம் நான் அழுதிருக்கிறேன். காரணம், ஓவியங்கள் என்னுள் மிகவும் நெருக்கமாக இருப்பதை நான் உணர்வேன். ஆரம்பத்துல நான் வரையறதை என்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் போஸ்ட் செய்தேன். அதை பார்த்து என் நண்பர்கள், மற்றவர்கள் ஓவியம் வரைந்து தரச்சொல்லிக் கேட்பார்கள். நான் வரைந்து கொடுப்பேன். அது அவர்களுக்கு பிடித்து போகவே அவர்கள் மூலம் மட்டுமில்லாமல் இணையம் மூலமாகவும் அடுத்தடுத்து ஆர்டர்கள் வரத் தொடங்கின. வரைவது தான் இப்போது என்னுடைய ெதாழிலாக மாறிவிட்டது. நான் கண் முழிப்பதே என் ஓவியங்கள் முன்தான்.
ஓவியங்கள்ல ஏதாவது புதுசா பண்ணலாம்னு யோசிக்கும் போது தான் அக்ரலிக் ஓவியங்கள் என்னை ஈர்த்தது. அதன் சிறப்பு நாம் வரைந்த ஓவியங்களை தொட்டு உணர முடியும். சின்ன கோடுகள் என்றாலும் அதில் உள்ள நெளிவு சுழிவுகளை தொட்டு உணர முடியும். இதனாலயே அந்த வகையான ஓவியங்கள் மீது ஆர்வம் எனக்கு வந்தது. அதனை முறையாக கற்றுக் கொண்டேன்.
என் கற்பனையில வந்த உலகத்தை எல்லாம் வரைந்து அதை தொட்டு உணர்கிறேன். எனக்கு வண்ணங்களிலும் அதிகமா நீல நிறம் ரொம்ப பிடிக்கும். அதனாலேயே நான் வரையற ஓவியங்களில் நீல நிறங்கள் பிரதானமாக இருக்கும். அக்ரலிக் ஓவியங்களிலேயே அடுத்து நான் பாடல்களோட வரிகளை மையப்படுத்தி ஓவியங்களை வரைய தொடங்கி இருக்கேன். அதற்கும் நிறைய வரவேற்பு இருக்கு. நம்முடைய கற்பனைகள் எவ்வளவு தூரம் விரிவடைகிறதோ அவ்வளவு தூரம் ஓவியங்களும் விரிவடையும்’’ என்கிறார் ஊக்ரா.