தலைமைச் செயலகம்… மூளை A to Z!!! (மருத்துவம்)
அண்மைக் காலமாக மருத்துவ உலகில் அறிவியல்ரீதியாக பெருமளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றபோதிலும், இன்னும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு, சிக்கலான அமைப்புகளைக் கொண்டதாகவும், இன்னும் கண்டறிய வேண்டிய ஏராளமான ரகசியங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது மனிதனின் மூளை. ஏனென்றால், உடல் உறுப்புகள் அனைத்தும் நரம்பு மண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நரம்பு மண்டலம் அனைத்தும் மூளையுடன் இணைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, ஒரு மனிதனின் தலைமைச் செயலகமாக செயல்படுவது மூளைதான். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூளையின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் நரம்பியல் துறை சிறப்பு மருத்துவர் சங்கர் கணேஷ்.
“மனித உடலிலேயே மிக மிக முக்கிய உறுப்பு என்றால் அது மூளைதான். மூளைதான் நமது உடல் முழுவதையும் இயக்குகிறது, கண்ட்ரோல் செய்கிறது. ஒருமனிதனுக்கு மூளை சரியாக இயங்கினால் மட்டுமே அவர் சராசரி மனிதனாக பார்க்கப்படுவார். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது மூளை. மூளையின் இந்த முக்கியத்துவத்தை முன்னிட்டே, படைக்கும்போதே மண்டையோட்டுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு படைத்திருக்கிறது இயற்கை.
பொதுவாக, குழந்தை பிறக்கும்போது மூளையின் எடை 300 கிராம்தான் இருக்கும். பிறந்த ஓர் ஆண்டில் மூளை சுமார் 3 மடங்கு வளர்ச்சி அடையும். ஆனால், பிறந்ததிலிருந்து வளர்ந்து வரும் மூளையின் வளர்ச்சி 18 வயதில் நின்றுவிடுகிறது. அந்தவகையில், சராசரியாக வளர்ந்த ஓர் ஆணின் மூளையின் எடை 1500 கிராம் கொண்டது. பெண்ணின் மூளையின் எடை 1100 – 1300 கிராம் வரை இருக்கும். மனிதனின் மொத்த எடையில் சுமார் 2 சதவீதமே மூளையின் எடை ஆகும். அதாவது, ஒருவர் 70 கிலோ எடை இருப்பின், அவரது மூளையின் எடை 1.4 கிலோ ஆகும். ஆனால், மூளையின் செயல்பாட்டில் ஆண்- பெண் வித்தியாசம் கிடையாது.
நமது வாழ்வில் நடைபெறும் பல ஆயிரக்கணக்கான நிகழ்வுகளை நாம் நமது மூளைக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறோம். அவற்றை எல்லாம் நமது மூளை உள்வாங்கி , நினைவுப்படுத்தி செயல்படுத்துகின்ற விதமே மூளையின் அளவுகோலாகவும், ஒருவரை அறிவாளி, புத்தி கூர்மையுள்ளவராக அடையாளம் காட்டுகிறது.
அதுபோன்று மனிதனின் மூளை பல குறுக்குகம்பிகளை தொடர்பு கொண்டுள்ளது. எனவே, இடது மூளை உடலின் வலது பாகங்களையும், வலது மூளை உடலின் இடது பாகங்களையும் நிர்வகிக்கும் திறன் கொண்டவையாக உள்ளது. அதாவது, உள்ளதை உள்ளபடி செய்கின்ற செயலை மூளையின் இடது பக்கமும் சற்று கடினமான செயலை வலது பக்க மூளையும் செய்கின்றது. இதனாலேயே இடது கை பழக்கம் உடையவர்கள் வலது கை பழக்கமுள்ள சாதாரணமானவர்களைவிட, 140 மடங்கு அறிவாற்றல் (IQ) அதிகம் உள்ளவர்களாக காணப்படுகிறார்கள்.
எல்லோருக்கும் ஒரே மாதிரியான அமைப்புடன்தான் மூளை இருக்கிறது. ஆனால், அதனை செயல்படுத்தும் விதத்தில்தான் அது ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. பொதுவாக, நாம் மூளை 20 சதவீதம் மட்டுமே பயன்படுத்துவதாகவும் மீதம் 80 சதவீதம் அப்படியே இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றது. அந்தவகையில், அவ்வப்போது மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருந்தால் அது சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும்.
மூளையின் பகுதிகள்
மூளை முன்மூளை, நடுமூளை, சிறுமூளை என்று மூன்று பகுதிகளாக உள்ளது. இந்த மூன்று பகுதிகளின் கீழ் பல பிரிவுகளும் உள்ளன. அவை:
முன்மூளை: முன் மூளையில், பெருமூளை, ஹைபோதாலமஸ், தாலமஸ் கொண்டுள்ளது.
நடுமூளை: டெக்டம், டெக்மென்டம் கொண்டவை.
பின் மூளை: சிறுமூளை, மெடுல்லா, பொன்ஸ்.அதேசமயம், மூளையின், பெரும்பகுதி பணிகள் பெருமூளை, சிறுமூளை மூலமே நடைபெறுகிறது. பெருமூளை என்பது மண்டையின் முன்பகுதியில் பெயருக்கேற்றாற்போல் அளவில் பெரிதாக இருக்கும். சிறுமூளை என்பது பின் தலையில் சிறிய அளவில் இருக்கும்.
பெருமூளையில், வலது, இடது என இரண்டு பகுதிகள் உள்ளன. இதில் 90 சதவீத கட்டளைகளை வழங்குவது இடது பாகம்தான். வலது பாகமும் முக்கிய வேலைகளை செய்தாலும், இடது பக்க மூளைதான் பார்ப்பது, பேசுவது, சிரிப்பது, அழுவது யோசிப்பது, நடப்பது என எல்லா உறுப்புகளுக்கும் கட்டளையிடுகிறது. பெருமூளை இடும் கட்டளையை சரிவர செயல்பட வைப்பது
சிறுமூளையின் பணியாகும்.
அதேசமயம், மூளை ரொம்பவும் மெத்தனமானது, அதற்கு பணி கொடுத்துக் கொண்டே இருந்தால்தான் அது சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும். உதாரணமாக, ஒருவருக்கு கணக்குப் பாடம் நன்றாக வருவதற்கும், ஒருவர் கணக்குபாடத்தை கண்டாலே பயப்படுவதற்கும் கூட இதுதான் காரணம். சிறுவயதிலிருந்தே மூளைக்கு வேலைகளை கொடுத்து துண்டிவிட்டுக் கொண்டே அது சுறுசுறுப்பாக இருக்கும்.
செயல்பாடுகள்
மூளைக்குள் பல நூறு கோடி நியூரான்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 10 ஆயிரம் இணைப்புகளைக் கொண்டவை. அவை நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியைக் கடக்கும்போதும் மூளையை மறுவடிவாக்கம் செய்து கொண்டேயிருக்கின்றன. எனவேதான், மனித உடலிலுள்ள அனைத்து பகுதிகளையும் இணைக்கும் நரம்பு மண்டலங்களை தனது கண்ட்ரோலில் வைத்திருக்கிறது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு வீட்டில், பல அறைகள் இருக்கும் ஒவ்வொன்றிலும், லைட் , ஃபேன், மிக்ஸி , கிரைண்டர் என பல மின்சாதனங்கள் இருக்கும். அவை அனைத்துக்கும் மெயின் பாக்ஸில் இருந்து ஒயர் மூலம் கரண்ட் சப்ளை ஆகிறது அல்லவா, அதுதான் மூளையின் செயல்பாடும். நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் நரம்புகள் மூலம் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, மூளை ஒவ்வொரு நொடியும் நமக்கு கட்டளையிட்டுக் கொண்டே இருக்கிறது.
உதாரணமாக, ஒரு பந்து நம்மை நோக்கி வருகிறது என்றால், கண் அந்த பந்தை பார்க்கும், அந்த பந்து எவ்வளவு வேகத்தில் வருகிறது அது எங்கு விழும் என்பதை நொடிப்பொழுதில் கணக்கிட்டு கையை எவ்வளவு தூர அளவில் தூக்கி அந்த பந்தை பிடிக்க வேண்டும் என்று கைக்கு கட்டளையிடுவது மூளைதான். மூளையின் இந்த கட்டளைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு மற்ற உறுப்புகள் இயங்குகிறது.
மூளைக்கு ஏற்படும் பாதிப்புகள்
பொதுவாக மூளை ரொம்பவும் மென்மையானது, அதனால், சிறு அதிர்ச்சிகளைக் கூட தாங்க முடியாது. உதாரணமாக, காரிலோ, பஸ்ஸிலோ பயணம் செய்யும்போது, திடீரென்று பிரேக் போட்டால் தலைக்குள் ஓர் அசைவும், அதிர்வும் ஏற்படுகிறது. இந்த அதிர்வுகளைக் கூட மூளை தாங்கிக் கொள்ளாமல் சில நேரங்களில் பாதிக்கப்படைகிறது.
இதுபோன்ற அதிர்வினால் மூளைக்கு பாதிப்பு ஏற்படும்போது, உடனடியாக அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் மூளை மீண்டும் நார்மலாகி செயல்பட தொடங்கும். ஆனால், சிலர் வேலை்பபளு காரணமாக, மீண்டும் வாய்ப்பு கிடைப்பது அரிதானது என்பதாலும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமலே தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவ்வாறு செயல்படும்போது மூளை ஒரு கட்டத்தில், ஹேங்காகி நின்றுவிடும்.
அதுபோன்று உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்போதும், மூளை பாதிக்கிறது. சில நேரங்களில், உயர் ரத்த அழுத்தத்தினால் மூளை நரம்புகள் வெடித்து ரத்த கசிவுகள் ஏற்பட்டு பாதிக்கிறது. அப்படி ரத்த கசிவு ஏற்படும். அது எந்த இடத்தில் ஏற்படுகிறதோ, அதன் அருகிலுள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு, அந்த நரம்புகளுக்கான உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக, கை, கால்களுக்கான நரம்புகளுக்கு அருகில் ரத்தக் கசிவு ஏற்பட்டால், கை, கால் செயலிழந்து பக்கவாதம் ஏற்படும்.
சில நேரங்களில் உடலில் கொழுப்பு அதிகமாகி ரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். அப்போதும், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். உடலில் ஏற்படும் புற்றுநோய்களைப் போல் மூளைக்குள்ளும் புற்றுநோய் ஏற்படலாம். அல்லது கட்டிகள் உருவாகி மூளை பாதிக்கப்படலாம்.இவை தவிர பொதுவாகக் காணப்படும் பல மரபியல் நோய்களும் மூளையைத் தாக்க வல்லவை. அவற்றுள், நடுக்குவாதம் (பார்கின்சன் நோய்), உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் மல்டிபிள் சுகுலோரோசிஸ் (multiple sclerosis) ஆகியவை முக்கியமானவை.
மேலும், உளவியல் நோய்களான உளச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, மந்த அறிவு ஆகியவையும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றுகின்றன. அதுபோன்று, உடலில் உள்ள அத்தனை உறுப்புகளில் ஏதேனும் ஒன்று செயலிழந்துவிட்டால், அது இறந்துவிட்டதாக நாம் சொல்வதில்லை. ஆனால், மூளை செயலிழந்துவிட்டால் மட்டும் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக சொல்லப்படுவதற்கு மூளையின் முக்கியத்துவமே காரணம்.
அறிகுறிகள் – சிகிச்சைகள்
தொடர் தலைவலி, ஒற்றைத் தலைவலி, வாந்தி, கண் பார்வை மங்குதல் இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ச்சியாக தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். அதுபோன்று ஒரு மனிதனுக்கு எட்டு மணி நேரம் தூக்கம் என்பது மிக மிக அவசியம். இரவில் மூளைக்கு சரியான அளவு ஓய்வு கொடுத்தால்தான் , அது மறுநாள் சுறுசுறுப்பாக இயங்கும். இப்போதுள்ள அவசரயுகத்தில், நிறைய பேர் தூக்கத்தை குறைத்துக் கொள்கிறார்கள், போன், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தி தொடர்ந்து தூக்கத்தை குறைத்துக் கொள்ளும்போது , அந்த நேரத்தில் ஏதும் தெரியாவிட்டாலும், நாளடைவில், 30 வயதுக்குரிய மூளை 50 வயதுக்குரியதாகிவிடும் அபாயம் உள்ளது.
மூளையும் கம்ப்யூட்டர் மாதிரிதான் ஓய்வே இல்லாமல் தொடர்ச்சியாக கமெண்ட்ஸ் கொடுத்துக் கொண்டே இருந்தால் ஒருகட்டத்தில் ஹேங்காகிவிடும். அதுபோன்ற நிலையில், செய்கின்ற அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டு சில மணி நேரங்கள் தூங்கி எழுந்தால் மூளை திரும்பவும் புத்துணர்ச்சி பெற்று ரீஸ்டார்ட் ஆகும்.