கண்ணைக் கட்டிக்கொள்ளாதே!! (மருத்துவம்)
இரண்டாய் தெரியும் உலகம்!
தனலட்சுமிக்கு வயது 65. கடந்த 25 வருடங்களாக சர்க்கரைநோயால் அவதிக்கப்பட்டுவருபவர். ஆரம்பத்தில் சில ஆண்டுகள் கட்டுப்பாடு இல்லாமல் இருந்து, தற்சமயம் சரியாக மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்கிறார். கடந்த ஒரு வாரமாக, பார்வை இரண்டிரண்டாகத் தெரிகிறது, குறிப்பாக இடது புறமாக பார்க்கும் பொழுது வித்தியாசமாக இருக்கிறது, படிகளில் ஏறும் இறங்கும் பொழுதும் நடக்கும் பொழுதும் தரை சரியாக தெரியாமல் தடுமாற்றமாக இருக்கிறது, ஒருமுறை விழக் கூட செய்து விட்டேன் என்றார்.
பரிசோதனை செய்து பார்த்ததில் அவருடைய இடது கண்ணின் அசைவுகள் பெரிதளவு வித்தியாசம் தெரிந்தது. வலது கண்ணை அவரால் நான் நான்கு திசைகளிலும் உருட்டிப் பார்க்க முடிந்தது, அதே சமயம் இடது கண் மற்ற எல்லா திசைகளிலும் சரியாக பார்க்க முடிந்தாலும் இடது புறத்தில் மட்டும் திருப்ப முடியவில்லை.ஒவ்வொரு கண்ணையும் மேலே, கீழே, இடது புறம் வலது புறம் மற்றும் சுற்றிலும் பார்க்க வைக்கக்கூடிய தசைகள் ஆறு இருக்கின்றன. அதில் நான்கு தசைகள் மூளையில் இருந்து வரும் பன்னிரெண்டு கபால நரம்புகளில் (12 cranial nerves) மூன்றாவது நரம்பான occulomotor nerve ஆல் இயக்கப்படுபவை. இடது புறம் பார்க்கக்கூடிய தசையை இயக்குவது ஆறாவது நரம்பு என்று அழைக்கப்படும் abducent nerve.கண்ணை உட்புறமாக சுழற்றுவதற்கு உதவும் தசையை இயக்குவது நான்காவது நரம்பான trochlear nerve.
மேலே குறிப்பிட்ட தனலட்சுமிக்கு இடது கண்ணின் lateral rectus தசை செயலிழந்திருந்தது. இதற்கு முக்கிய காரணம் சர்க்கரை நோயால் ஏற்பட்டிருக்கும் சிறிய ரத்தநாள அடைப்பாக இருக்கக்கூடும் (micro andiopathy). உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தத்தைக் கொண்டுசெல்வது ரத்த நாளங்கள்தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த ரத்த நாளங்கள் சிறு ரத்த நாளங்களாகப் பிரிந்து, பின் மீண்டும் அவை மிகச்சிறிய ரத்த நாளங்களாகி தேவைப்படும் உறுப்புகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்கின்றன.
எலும்புகள், தசைகள், நரம்புகள் என்று ஒரு இண்டு இடுக்கைக் கூட விட்டு வைக்காமல் எல்லா பகுதிகளுக்கும் இந்த குறு ரத்த நாளங்கள் ரத்தத்தைத் கொண்டு செல்கின்றன. சர்க்கரை மற்றும் ரத்தக் கொதிப்பில் முக்கியமான பிரச்சினையே குறு ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தான். சர்க்கரை நோய் காரணமாக இந்த ரத்த நாளங்கள் அடைத்துக் கொண்டால் அந்த குறிப்பிட்ட உறுப்பே செயலிழந்து போய்விடும். தனலட்சுமிக்கும் அவரது wwஆறாவது நரம்பில் ஏதோ ஒரு பகுதியில் முக்கிய ரத்தநாளம் அடைத்துக் கொண்டிருக்கக் கூடும்.
அறுபதைத் தாண்டிய நோயாளிகளில் ஏற்படும் நரம்பு பாதிப்புகளில் 90 சதவீதத்திற்கும் மேல் சர்க்கரை போன்ற வாழ்வியல் நோய்களால் ஏற்படுபவை. 12 கபால நரம்புகளில் ஆறாவது நரம்புதான் தலையின் பின்பகுதியில் துவங்கி மூளைப் பிரதேசத்தில் பல இடங்களில் பயணம் செய்து இறுதியாகக் கண்ணில் வந்து முடிகிறது. இந்த நீளமான பயணத்தின் போது எங்காவது ஏற்படும் நீர்க்கட்டிகள், புற்றுக்கட்டிகள் அல்லது காயம் காரணமாக ஏற்படும் ரத்தக் கசிவுகள், அருகில் உள்ள ரத்த நாளங்களின் குறைபாடுகள் (aneurysms) இவற்றால் ஆறாவது நரம்பில் அழுத்தம் ஏற்பட்டிருந்தாலும் இப்படி வருவது இயல்பு. அதனால் தனலட்சுமிக்கு எம் ஆர் பரிசோதனை செய்தோம். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பெரிய அழுத்தம் எதுவும் இல்லை. மூளை முழுவதிலும் ஆங்காங்கே சிறிய ரத்த நாள அடைப்புகள் காணப்பட்டன. அதனால் இதுவும் அப்படிப்பட்ட ஒரு அடைப்பால் ஏற்பட்டது தான் என்ற முடிவுக்கு வந்து அவருக்கு சிகிச்சையைத் தொடங்கினோம்.
இதுபோன்ற பிரச்சனைக்கான முதல் சிகிச்சை Reassurance என்போம். அதாவது நோயின் தன்மையை விளக்கி, இது தானாகவே சரியாகிவிடக்கூடிய பிரச்சனைதான், அதனால் கொஞ்சம் பொறுத்திருங்கள் மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் முழுமையாக குணமாகிவிடும் என்று தனலட்சுமியிடம் கூறினேன். அடுத்ததாக வேறு எந்த ரத்த நாளங்களும் அடைத்துக்கொள்ளாமல் பார்ப்பது அவசியம். சர்க்கரைநோயை கட்டுக்குள் வைப்பதே அதற்கான வழி. தனலட்சுமியின் சர்க்கரை அளவு 240 என்ற அளவிலும் அவருடைய கடந்த மூன்று மாதங்களிற்கான சராசரி சர்க்கரை அளவைக் குறிக்கும் HbA1c என்ற மதிப்பீடு 8.5 சதவீதமாகவும் இருந்தது. அவர் ஏற்கனவே இன்சுலின் எடுத்துக் கொண்டிருந்தார் அதனால் அதற்கு தகுந்தவாறு இன்னும் கொஞ்சம் இன்சுலின் அளவைக் கூட்டி வழங்கினோம்.
சமதளமான இடத்தில் உங்கள் கண்களால் மாறு கண்ணால் பாதிப்பு ஏற்ப அந்த வகையில் பாதுகாப்பான நடைப் பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டைத் தொடருங்கள், கூடவே புரதச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். ‘‘சுகரைக் குறைச்சாலே சரியாயிடுமா? அது எப்படி தன்னாலேயே சரியாகும்?” என்பது தனலட்சுமியுடன் வந்த அவரது பேரனின் சந்தேகம். ஒரு மரத்தின் முக்கியமான வேரை வெட்டி விட்டால் என்ன நடக்கும் என்று அவனிடம் கேட்டேன்.
‘‘நல்லா தண்ணி ஊத்தினா வேற ஒரு வேர் வளரும்” என்றான். ‘‘மிகச் சரி! அதைப்போலத்தான், இந்த நரம்பிற்கு வரக்கூடிய முக்கிய ரத்த நாளம் ஒன்று அடைத்துக் கொண்டால் இயற்கை நமக்கு அளித்திருக்கும் பல வரப்பிரசாதங்களின் உதவியால் அடைத்துக் கொண்டதற்கு அருகில் இருக்கும் வேறு ஏதாவது ஒரு ரத்த நாளத்தில் இருந்து புதிய ரத்தக்குழாய் வளர்ந்து வந்து இந்த இடத்திற்கும் ஊட்டம் அளிக்கும். அதுவரை பாதிக்கப்பட்டிருந்த நரம்புகள் (nerve fibres) கொஞ்சம் கொஞ்சமாக உயிர்த்தெழத் துவங்கும் என்று அவனுக்கு விளக்கினேன்.
‘‘இவ்வளவு வயசான பிறகும் புது நரம்பு வளருமா?” என்றார் தனலட்சுமி. ‘‘நிச்சயமாக! ஒவ்வொரு உயிரும் தன்னுடைய இறுதிக் காலம் வரை காயமடைந்த பல தசைகள் மீண்டும் பெருகும் ஆற்றலைப் பெற்றிருக்கிறன அதை நாம் மேலும் மேலும் தொந்தரவு செய்யாமல், கொஞ்சம் உதவி செய்தாலே போதும், இந்தத் தசைகள் வளர்ந்துவிடும். நரம்புகள், கல்லீரல், கணையம் போன்ற பல உறுப்புகளில் இப்படித் தானாகவே மீள் உருவாக்கம் செய்து கொள்ளும் வாய்ப்பு (regenerating capacity) இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பாக மகப்பேறு மருத்துவமனை ஒன்றிலிருந்து உள்நோயாளியாக சேர்ந்திருக்கும் வித்யா என்ற பெண்ணைப் பரிசோதனை செய்வதற்காக அழைப்பு வந்தது. அங்கு சென்று அவரை பரிசோதித்த போது அவருக்கும் தனலட்சுமிக்கு வந்ததைப் போன்ற அதே பிரச்சனை. நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் சிகிச்சைக்குப் பின் இரட்டை குழந்தைகளைக் கருவுற்றிருந்தார். அடிக்கடி வலி வந்து இன்னும் ஒரு மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நிகழலாம் என்ற நிலையில் இருந்ததால் அடுத்தகட்ட சிகிச்சைகளுக்கு அவர் செல்ல விரும்பவில்லை. இதைத் தவிர வேறு குறைபாடுகள் இல்லை என்பதால் நரம்பியல் நிபுணரின் ஒத்திசைவுடன் அவரை கவனிப்பில் வைத்திருந்தோம்.
சுமார் 15 நாட்கள் கழித்து இடது பக்கம் மட்டுமே கண்ணைத் திருப்ப முடியவில்லை என்ற நிலையிலிருந்து மேலே- கீழே உருட்டுவதும் சிரமமாக இருக்கிறது என்றார் வித்யா. கூடவே இடது கண்ணின் இமையும் லேசாக மூடியிருந்தது. பிரசவத் தேதி நெருங்கி அனேகமாக சிசேரியன் செய்ய வேண்டும் என்ற நிலை. சில சமயங்களில் மூளையின் உள்ளிருக்கும் அழுத்தம் (intracranial pressure) லேசாக அதிகரித்தாலும் இந்த நரம்புகளின் செயல்பாட்டில் மாற்றம் தெரியக்கூடும்.
அப்படி ஏதாவது ஒரு காரணத்தால் மூளை அழுத்தம் அதிகரித்திருக்குமானால் சிசேரியன் செய்யும் பொழுதும் மயக்கம் மருந்து கொடுப்பதிலும் சில பிரச்சினைகளை உண்டு பண்ணக்கூடும் என்பதால் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்குமாறு வலியுறுத்தினார் நரம்பியல் மருத்துவர். அதில் வித்யாவின் கண்களுக்குப் பின்னே மூளையைச் சுற்றியுள்ள உரையில் ஒரு சிறிய கட்டி இருப்பது (meningioma) கண்டறியப்பட்டது. அதனால் பிரசவத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் குறித்த தேதியில் சிசேரியன் செய்யப்பட்டது.
குழந்தைகள் சற்று வளர்ந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அந்தக் கட்டி மீண்டும் அதே அளவில் இருக்க, அதற்கான நரம்பியல் அறுவை சிகிச்சையைத் திட்டமிட்டிருக்கிறார்கள். இவ்வளவு நாட்களும் வித்யாவிற்கு பார்வை இரண்டிரண்டாகத் தான் தெரிந்து கொண்டிருந்தது. அதைத் தவிர்க்கும் வண்ணமாக இடது கண்ணை மறைத்தாற் போல் கண்ணாடி அணிந்திருந்தார். அறுவை சிகிச்சை சற்றே சிக்கலானது தான், இருந்தும் மூன்றாம் மற்றும் ஆறாம் நரம்புகளின் மேலிருக்கும் அழுத்தம், கட்டியை அகற்றிய பின்னர் முழுமையாக நீக்கப்பட்டு விடும் என்பதால், அதன் பின் அவர் இயல்பு நிலைக்குத் திரும்புவது உறுதி!