சருமத்தைப் பாதுகாக்கும் சன்ஸ்கிரீன்! (மருத்துவம்)
கோடை தொடங்கியதும், சூரியஒளியிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள், நமது சருமத்தை தாக்காமல் இருக்கும் பொருட்டும், அதிகப்படியான வெப்பத்தாக்கத்தினால் ஏற்படும் எரிச்சல், தோல் கறுத்தல், தோல் சுருக்கம், சிறுசிறு கொப்புளங்கள் போன்றவற்றிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும் கவசமாக செயல்படுகிறது சன்ஸ்கிரீன். சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்:
பயன்கள்
புற ஊதாக்கதிர்கள், நமது தோல் செல்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அதை விரைவில் முதிர்ச்சி அடைய செய்துவிடுகிறது. இந்த பாதிப்புகள், தோலின் நிறத்தை மாற்றி அமைப்பதோடு மட்டுமல்லாது, சுருக்கங்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன. இதன் காரணமாக, இளம்வயதிலேயே, தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதால், முதிர் தோற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
அதுபோன்று சன்ஸ்கிரீனை வெளியில் செல்லும்போது மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. உதாரணமாக, இன்று பலரும் வீட்டில் இருந்தே கணினி வழியாக அலுவலக பணிகளை மேற்கொள்கிறார்கள். அவ்வாறு பணிபுரியும்போது, கணினியில் இருந்தும் அதிகளவில் புற ஊதாக்கதிர்கள் வெளிவருகின்றன. இந்த கதிர்கள் சருமத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளன. இதனால், வீட்டில் இருக்கும்போதும், சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்ல பலனை தரும் என்று கூறுகின்றனர் தோல் சிகிச்சை நிபுணர்கள்.
அதேசமயம், சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன்னர், ஒவ்வொருவரின் தோல் எந்த வகையை சேர்ந்தது என்பதை முதலில் தெரிந்து கொண்டு அதற்கேற்ற சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், சன் ஸ்கிரீனில், ஒவ்வொருவரின் வயதுக்கேற்றவாறு சன் புரொடெக்டர் பேக்டர் (SPF) என்பது பல அளவுகளில் இருக்கும். அதில் எந்த வயதினர் எந்த அளவை பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து பயன்படுத்தினால் நல்ல பலன்கிட்டும்.
எந்த வகை சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்:
சன்ஸ்கிரீன் கிரீமை வாங்கும்போது முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது, அதன் ஆயுட்காலம். பின்னர், அதிக நேரம் நம்மை சூரியக்கதிர்களிலிருந்து பாதுகாக்கும் சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் தண்ணீர் படும்போது எளிதில் கரையாதவண்ணம், தண்ணீர் புகா சன் ஸ்கிரீனை வாங்க வேண்டும். சன்ஸ்கிரீன் கிரீமை மற்ற கிரீமைப் போன்று சிறிதளவு எடுத்து தடவுவது பயனற்றது. மாறாக அதிகளவு எடுத்து வெயில்படும் இடங்களில் தடவ வேண்டும். அப்பொழுதுதான் அது சருமத்தில் ஊடுருவி பாதுகாப்பை அளிக்கும்.
அதுபோன்று, 1வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் எஸ்.பி.எப் 50 உடன், 100 சதவீதம் மினரல் உள்ள சன் ஸ்கிரீனும், 6 வயது முதல் 16 வயது வரை உள்ளவர்கள் சாதாரண எஸ்.பி.எப் 50 சன் ஸ்கிரீனும், 16 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் ஈரப்பதத்தை அதிகரிக்கும் அன்சீன் எஸ்.பி.எப் 40 சன் ஸ்கிரீனும், 25 முதல் 35 வயது உள்ளவர்கள் ஜிங்க் கலந்த, 100 சதவீதம் மினரல் உள்ள எஸ்.பி.எப் 40 சன் ஸ்கிரீனும், 35 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் கலர் கரெக்ட்டிங் எனப்படும் சிசி எஸ்.பி.எப் 35 சன் ஸ்கிரீனும், 45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் எஸ்.பி.எப் 30-ல் சீரம் வகை சன் ஸ்கிரீன் மற்றும் எஸ்.பி.எப் 40-ல் பட்டர் வகை சன் ஸ்கிரீனும், 60 வயதை கடந்தவர்கள் மாய்ஸ்சுரைஸ் வகையில் எஸ்.பி.எப் 40 வகை சன் ஸ்கிரீனும் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறைவெளியில் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே சன் ஸ்கிரீனைத் தடவ வேண்டும். அதிக நேரம் வெயிலில் இருக்க நேர்ந்தால் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.வெளியிடங்களுக்கு சென்றுவந்த பின்னரும், நாம் இதை தடவிக்கொள்ள வேண்டும். நாள் ஒன்றுக்கு, இரண்டு முறை, சன்ஸ்கிரீனை தடவிக்கொள்ளலாம்.
சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதற்கு முன்பு, அது உள்ள பாட்டிலை, நன்கு குலுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், காதுகள், முழங்காலின் பின்பகுதி மற்றும் கால்கள் பகுதியில் சன்ஸ்கிரீனை தடவ வேண்டும். 30 நிமிடங்கள் காத்திருந்த பின்னர், மீண்டும் ஒரு லேயர் தடவிக் கொள்ளலாம்.