தைராய்டு பிரச்னைக்கு சித்தா தீர்வு! (மருத்துவம்)
மிகை தைராய்டு நோய் (Hyperthyrodism)
*தைராய்டு சுரப்பி ‘‘தைராக்ஸின்” ஹார்மோனை அதிகளவில் சுரப்பிக்கும் நிலை.
*தைராக்சின் உடலில் வளர்சிதை மாற்றத்தை தீவிரப்படுத்துவதால், உடல் இளைத்து மெலிந்த தேகத்துடன், தீவிர இதயத்துடிப்புடனும் இந்நோயினர் காணப்படுவர்.
*தைராக்சினுடன் குளோபுலின் புரதப் பிணைப்பு (TBG) குறையும்போது FT3, FT4 தைராக்சின் அளவு அதிகரித்து காணப்படும்.
நோய்க் காரணம்
*Grave’s நோய்: இது ஒரு ‘‘ஆட்டோ இம்யூன் நோய்”. மூளையின் ஹைப்போதலாமஸ் சுரக்கும் ‘‘தைரோட்ரோபின் ரிசப்டார் ஆன்டிபாடி” (Thyrotropin receptor antibody- TRAb), பிட்யூட்டரி சுரப்பியின் TSH போன்று தைராய்டு சுரப்பியைத் தவறுதலாக தூண்டிவிடுகிறது. இதனால் தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக ‘‘தைராக்சினை” உற்பத்தி செய்கிறது.
*தைராய்டு சுரப்பியில் உருவாகும் சிறிய உருண்டை வடிவ முடிச்சுகள் (Thyroid nodules) தைராய்டு சுரப்பியைப் பாதித்து, தைராக்சின் உற்பத்தியை அதிகப்படுத்தும்.
*தைராய்டு சுரப்பியில் ஏற்படும் வீக்கங்கள் (Thyroiditis), தைராய்டு சுரப்பியைப் பாதித்து தைராய்டு சுரப்பி சுரந்து வைத்துள்ள தைராக்ஸின் ஹார்மோனை இரத்தத்தில் கலக்கச் செய்துவிடுகிறது. இதனால் இரத்தத்தில் தைராக்சின் அளவு அதிகரித்து விடுகிறது.
*காய்டர் (Goiter) – இது தைராய்டு சுரப்பியில் தோன்றும் ஒழுங்கற்ற வளர்ச்சியாகும்.
*மிகை தைராய்டு நோயில் தைராய்டு சுரப்பியில் சிறுசிறு முடிச்சுகள் உருவாகி, வீங்கி பருத்து தொடுவதற்கு கடினமாக தோன்றும்.இது Toxic nodular or multinodular goitre எனப்
படும்.இதனால் பேசுவதற்கு சிரமமும், குரலில் மாற்றமும் ஏற்படும்.
*தைராய்டு சுரப்பியில் வளரும் புற்றுநோயிலும் (Thyroid cancer) தைராய்டு சுரப்பு அதிகமாக செயல்பட்டு, ஏராளமான தைராக்சினை உற்பத்தி செய்கிறது.
நோய்க் குறிகுணங்கள்
*இதயத்துடிப்பு அதிகரித்தல் (Rapid heartbeat – Tachycardia)
*ஒழுங்கற்ற இதயத்துடிப்பு (Arrhythmia)
*தீவிரப்பசி
*கை, கால் நடுக்கம் (Tremors)
*வெப்பம் தாங்க முடியாமை
*உடல் களைப்பு, சோர்வு
*அதிக வியர்வை, தோல் மென்மையாதல்
*குடல் இயக்கத்தில் மாறுபாடு (Frequent bowel movements)
*பேசுவதற்கு சிரமப்படுதல்
*கண் உலர்ந்து, புடைத்துக் காணுதல்
தைராய்டு நோய்களைக் கண்டறியப் பயன்படும் பரிசோதனைகள்
*TBG (Thyroxine Binding Globulin) – குளோபுலின் புரதத்துடன் இணைந்த தைராக்சின்)
*ஈஸ்ட்ரோஜன் அதிகரித்த போதும், கல்லீரல் அழற்சியின் (Hepatitis) போதும் TBG அதிகரித்துக் காணப்
படும். TBG கல்லீரலில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
*டெஸ்டோஸ்டிரோன் அதிகரித்த போதும், சிறுநீரக நோய்கள் (Nephritic syndrome), கல்லீரல் சுருக்க நோய்களில் (Cirrhosis) TBG குறைந்து காணப்படும்.
*Thyroglobulin (TG) இது தைராய்டு சுரப்பி அழற்சி (Thyroiditis) மற்றும் புற்றுநோய்களில் அதிகரித்துக் காணும்.
*Thyroperoxidase antibody- TPO, Antithyroid microsomal antibody – ATMA இது ஹாசிமோட்டோஸ் குறை தைராய்டு நோய்களில் அதிகரித்துக் காணப்படும்.
*Thyrotropin receptor antibody (TRAB), Thyroid stimulating immunoglobulin (TSI) இதில் கிரேவ்ஸ் (Grave’s) நோய்களில் அதிகரித்து காணப்படும்.
*T3, T4 – இரத்தத்தில் தைராய்டு சுரப்பி எவ்வளவு உள்ளது என்று பார்க்கலாம் (Total T3, T4 அளவு தைராய்டு சுரப்பி குளோபுலின் புரதத்துடன் இணைந்த அளவைத்தான் குறிக்கும்).
*FT3, FT4 – இரத்தத்தில் உள்ள தைராய்டு சுரப்பியின் அளவைக் குறிக்கிறது. இது குளோபுலின் புரதம் இணையாத தனித்த தைராய்டு சுரப்பியின் அளவைக் குறிக்கும்.
*TSH – குறை தைராய்டு அல்லது மிகை தைராய்டு என்பதைக் கண்டறிய உதவும்.
*FNAC – Fine Needle Aspiration Cytology (நுண் ஊசி உறிஞ்சல் திசு பரிசோதனை)
*Thyroglobulin (TG), Calcitonin, Carcino embryonic antigen (CEA) இவை தைராய்டு புற்றுநோய் கண்டறியப் பயன்படுகிறது. இதனுடன் FNAC பரிசோதனை முடிவும் இறுதியானவை.
*USG – Thyroid Gland தைராய்டு சுரப்பியில் உள்ள புற்றுநோய் (Cancer), சதை முடிச்சுகள் (Nodules), காய்டர் (Goiter), நீர்க்கட்டிகள் (Cyst), தைராய்டு சுரப்பியின் அழற்சி வீக்கம் (Thyroiditis) கண்டறிய உதவுகிறது.
குறிப்பு
*குறை தைராய்டு நோய் உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் குறைவாகவும், TSH அளவு அதிகமாகவும் இருக்கும்.
*மிகை தைராய்டு நோய் உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் அதிகமாகவும்,. TSH அளவு குறைவாகவும் இருக்கும்.
*சிலருக்கு குறை தைராய்டு பிரச்சனை உடலில் இருக்கும். ஆனால், குறிகுணங்கள் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாகவும், TSH அளவு அதிகமாகவும் இருக்கும்.
*அதேபோல சிலருக்கு மிகை தைராய்டு பிரச்சனை உடலில் இருக்கும். ஆனால், குறிகுணங்கள் இருக்காது. இவர்களுக்கு T3, T4 அளவு சரியாகவும், TSH அளவு குறைவாகவும்
இருக்கும்.
*T3, T4, TSH மூன்று அளவுகளும் குறைந்தோ அல்லது மூன்று அளவுகளும் அதிகரித்திருந்தாலோ, முன் பிட்யூட்டரி சுரப்பியில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
தைராய்டு நோய்களுக்குரிய உணவுப் பழக்கவழக்கங்கள்:
*இரும்புச் சத்து குறைவில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்து குறைபாட்டிற்கும், தைராய்டு குறைபாட்டிற்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. தைராய்டு ஹார்மோன் T4 லிருந்து T3- க்கு மாறுவதற்கு இரும்புச் சத்து தேவை. T3 தான் தைராய்டு ஹார்மோன்களில் சக்தி வாய்ந்தது. ஆகவே, இரத்தத்தில் ‘‘Ferritin’’ அளவு சரியாக இருக்க வேண்டும். இரும்புச்சத்து உடலில் சேர்வதற்கு போலிக் அமிலம், B12 மற்றும் விட்டமின் சி தேவை.
விட்டமின் B12 – அசைவ உணவுகளில், பால், தயிர், மோர், வெண்ணைய், நெய், மீன், இறைச்சி, முட்டை இவைகளில் அதிகமாக உள்ளது.
போலிக் அமிலம் – அடர் பச்சை நிற காய்கறிகள், கீரைகள், சிவப்புக் கொண்டைக்கடலை, பீன்ஸ், வேர்க்கடலை, முட்டை, ரொட்டி, கோதுமை, ஆப்பிள், பெர்ரி வகை பழங்கள், பேரீச்சை இவைகளில் போலிக் அமிலம் உள்ளது.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் – முருங்கைக்கீரை, கறிவேப்பிலைக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பேரீச்சை, சிவப்புக் கொண்டைக் கடலை, வேர்க்கடலை, சோயா பீன்ஸ், பீன்ஸ், அவரைக்காய், இறைச்சி வகைகள், பூசணி விதை, கோதுமை, தீட்டாத சிவப்பரிசி, அத்திப் பழம், ஆப்பிள், கொய்யா, பேரிக்காய், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு மற்றும் அனைத்துக் கீரை வகைகளிலும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள் – நெல்லிக்கனி, எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்பூசணி, வெள்ளரிக்காய், நாரத்தங்காய், ஸ்ட்ராபெர்ரி, மாதுளைப்பழம் இவற்றில் விட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது.
*ஆட்டோ இம்யூன் தைராய்டு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் ‘‘விட்டமின் டி” குறைபாடு தான். ‘‘விட்டமின் டி” குறைவால் தைராய்டு சுரப்பியில் உள்ள TPO, TG இவை பாதிக்கப்படுகிறது. ஆகவே, ‘‘விட்டமின் டி” சத்துக் குறையாமல் பார்க்க வேண்டும். இதை இரத்தத்தில் 25 Hydroxy D என்ற பரிசோதனை மூலமாக அறியலாம்.
நமது தோலில் எந்த அளவுக்கு சூரிய ஒளிபடுகிறதோ, அந்த அளவிற்கு ‘‘விட்டமின் டி” உடலில் உருவாகும். உணவு வகைகளில் முட்டை மஞ்சள் கரு, மத்திச்சாளை மீன் (Sardine), சூரை (Tuna) போன்ற மீன்களிலும், சிப்பி, பால் பொருள்கள், பாதாம், பிஸ்தா, இறைச்சி வகைகள் இவற்றிலிருந்து ‘‘வைட்டமின் டி” கிடைக்கும்.
*அயோடின் – தைராய்டு சுரப்பி செயல்படுவதற்கு அயோடின் மிக முக்கியமானது. இது கடல் உப்பு, கடல் மீன்கள், நண்டு, இறால், கணவாய், பால் பொருட்கள், முட்டை, இறைச்சி வகைகள், கடல் பாசிகள், ஸ்ட்ராபெர்ரி, க்ரான் பெர்ரி, அன்னாசிப் பழம் இவைகளில் இச்சத்து காணப்படுகிறது. அயோடின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ஆம் தேதி உலக அயோடின் குறைபாடு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 1983 ஆம் ஆண்டில் இருந்து நாம் பயன்படுத்தும் உப்பு அயோடின் செறிவூட்டப்பட்ட உப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டது.
*செலினியம் – தைராய்டு சுரப்பியின் T3, T4 ஹார்மோன்கள் சுரப்பதற்கு செலினியம் ஒரு முக்கியமான பொருள். இது ஒரு நல்ல ஆன்ட்டி ஆக்சிடென்ட். உணவில் உள்ள அயோடின் சத்து அயோடைடு வடிவில் தான் தைராய்டு சுரப்பிக்குள் செல்கிறது. Thyroid peroxidase (TPO) தான் அயோடைடை, அயோடின் ஆக மாற்றுகிறது. இந்நிகழ்வு நடைபெறும் போது நிறைய தேவையற்ற பொருட்கள் (Free radicals) உருவாகிறது. இதை தடுப்பதற்கு செலினியம், குளுட்டத்தியான் உதவுகிறது. செலினியம் உணவுப் பொருட்களில், பூசணி விதை, பாதாம், பிரேசில் நட், முட்டை, பால் பொருட்கள், மீன், இறைச்சி இவைகளில் அதிகமாகக் கிடைக்கிறது.