சக மனிதர்களின் உணர்வுகளை என் பாடல் மூலம் பகிர்கிறேன்! (மகளிர் பக்கம்)
‘‘எ ஃப்.எம். தொலைக்காட்சியில் இசை சேனல்கள், ஓ.டி.டி எல்லாம் நான் சிறுமியாக இருந்த பொழுது கிடையாது. அப்போது வானொலியில் தான் சினிமா பாடல்களை கேட்க முடியும். தொலைக்காட்சியிலும் வெள்ளிக் கிழமை மட்டும்தான் சினிமா பாடல்கள் ஒளிபரப்புவாங்க. அதுவும் பழைய பாடல்கள்தான். எனக்கு தொலைக்காட்சியில் சினிமா பாடல்களை பார்ப்பதை விட ரேடியோவில் பாடல்களை கேட்கதான் பிடிக்கும்.
காரணம், ஒவ்வொரு பாடல் ஒலிக்கும் முன் இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் என்று பாடலாசிரியர்கள் பெயரை குறிப்பிடுவார்கள். அதனைத் தொடர்ந்து பாடியவர்களின் பெயர்களை குறிப்பிடுவார்கள். பாடியவர்களில் ஆண்-பெண் இருப்பார்கள். ஆனால் பாடலாசிரியர்கள் ஆண்களாக மட்டும் இருந்தார்கள். அப்போது என் மனதில் நான் எதிர்காலத்தில் ஒரு பெண் பாடலாசிரியராக வரவேண்டும் என்று முடிவு செய்தேன்’’ என்றார் உமா சுப்பிரமணியன். அவர் தன் மனதில் பதிவு செய்த அந்த லட்சியத்தில் பின் வாங்காமல் அந்த பாதையில் வெற்றியினை நாட்டி வருகிறார்.
‘‘1997ம் ஆண்டுக்குப்பின் தான் நான் கதை, கவிதை, நாவல் என வார மாத இதழ்களில் எழுதத் தொடங்கினேன். என் தந்தை ஒவ்வொரு ஆண்டும் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக பாடல்கள் எழுதுவார். அதுமட்டுமின்றி அவர் தான் வேலை செய்த ஒரு நிறுவனத்தின் ஆண்டு விழாவுக்கும் அந்த நிறுவனம் குறித்தும் பாட்டு எழுதுவார். அவருக்கும் சினிமாவில் பாட்டு எழுதணும்னு விருப்பம்தான். ஆனால் அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கல.
அவர் எழுதி இருக்கும் பாடல்களை நான் எடுத்து படித்து பார்ப்பேன். அதில் ஏதாவது புதிய வரிகளை சேர்த்து மெருகூட்டுவேன். மற்றபடி எனக்கு சினிமா துறைச் சார்ந்த பின்புலம் எல்லாம் கிடையாது. அதேப்போல் இலக்கியத் துறையிலும் எனக்கு தனிப்பட்ட ஆர்வமுண்டு. இதன் மூலம் புதுப்புது கதைகளை புரிந்து கற்றுக்கொண்டேன். தமிழ் மேல் ஆர்வமும் வளர்ந்தது. அது எனக்கு நல்ல பயிற்சியாகவே அமைந்தது’’ என்றவர் பாடலாசிரியராக தன் பயணத்தைக் குறித்து விவரித்தார்.
‘‘2011ல் எனக்கு சினிமாவில் பாடல்களை எழுத வாய்ப்பு கிடைச்சது. அந்த ஆண்டு ‘தம்பி அர்ஜுனா’ என்ற படத்தில் ‘நீயே நீயே உயிர் நீயே…’ என்ற பாடலை எழுதினேன். பின்பு ‘வில்லாலன்’ படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானேன். ‘முத்துக்கு முத்தாக’ படத்தில் ‘‘மண் வாசம் வீசும் ஊரு எங்க ஊரு…’’ என்ற டைட்டில் பாடல் எனக்கான அடையாளம். ‘ரொம்ப நல்லவன்டா’ படத்திலும் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன்.
கதைகள், நாவல்கள் எழுதும்போது நாம் என்ன எழுதப் போகிறோம் என்பதை நாம் முன்பே முடிவு செய்திடுவோம். அதன் பிறகு எழுதுவோம். பாடல்கள் எழுதுவது அப்படியில்லை. பாடலுக்கான சூழலை உள்வாங்கிய பின்பு தான் வரிகளை அமைக்க முடியும். அதை மெட்டுக்கு ஏற்ப பொருத்தமாக்கி ஒன்று கோர்த்து தரவேண்டும். ராகங்களை தெரிந்து கொண்டு பாடல் எழுதுவது கூடுதல் பலம். எனக்கு ராகங்கள் குறித்து அதிகம் தெரியாது.
அதே நேரத்தில் தமிழ் நன்றாக தெரியும் என்பதால் மெட்டுக்கு பாடல் எழுதுவதில் எனக்கு சிரமம் எதுவும் ஏற்பட்டதில்லை. இதுவரை 12 திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளேன். ‘விடியலே நீ’, ‘நானும் எனது நாட்களும்’ என்று இரண்டு கவிதை தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறேன். ‘விமலா ஒரு விடிவெள்ளி’, ‘மலரே குறிஞ்சி மலரே’ என்ற தலைப்புகளில் நாவல்களை எழுதி இருக்கேன். ‘அழகு தமிழ் பழகு’ குழந்தை பாடல்கள் எழுதி புத்தகம் வெளியிட்டிருக்கிறேன்.
சினிமாவில் கால்தடம் பதிப்பது அவ்வளவு சுலபமில்லை. அதுவும் ஒரு பெண்ணாக எந்தளவு கஷ்டம் என்பதை நானும் அனுபவப்பூர்வமாக சந்தித்திருக்கிறேன். ஒரு சிலர் என்னை ஊக்குவிக்கிறார்கள். பலர் குத்துப்பாட்டு எழுதித் தரச்சொல்லியும் கேட்கிறார்கள். அப்படிப்பட்ட பாடல்களையும் எழுதி கொடுத்திருக்கிறேன். அவர்கள் அதை கிண்டலாக கேட்டிருந்தால், என் பாடல் வரிகள் அதற்கான பதிலாகத்தான் இருக்கும்’’ என்றவர் முன்னோடி பெண், சாதனைப் பெண் மற்றும் சிங்கப்பெண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.