பறவைகளை ஆவணப்படுத்திய 12 வயது சிறுமி! (மகளிர் பக்கம்)
‘தி பேர்ட்ஸ் ஆஃப் மசினக்குடி’ என்ற பெயரில் 288 வகையான பறவைகளை புகைப்படமெடுத்து ஆவணப்படுத்தியிருக்கிறார் 12 வயது சிறுமி அனன்யா விஸ்வேஸ். நீலகிரி முழுக்க சுற்றி பல வகையான பறவைகளை பார்த்து அதன் தகவல்களையும் சேகரித்து புத்தகம் எழுதி அதை இலவசமாக கொடுத்து வருகிறார். ‘‘பறவைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு வரணும்… எவ்வளவு பறவைகள் இருக்குனு மக்களுக்கு தெரியணும்… அதுக்காகத்தான் இந்த புத்தகம் எழுதினேன்’’ என பேசத் தொடங்குகிறார் அனன்யா விஸ்வேஸ்.
‘‘நான் பிறந்தது மும்பைல. சொந்த ஊரு கேரளா. இப்ப கடந்த பத்து வருஷமா தான் ஊட்டியில் இருக்கேன். ஊட்டி மலைப்பிரதேசம் பக்கத்திலேயே முதுமலை புலிகள் காப்பகம் இருக்கு. அடிக்கடி என்னை என்னோட அப்பா அங்க அழைச்சிட்டு போவார். அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி என்பதால் அங்க நிறைய பறவைகளை நான் பார்த்தேன். அந்த பறவைகள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நான் பார்க்கிற பறவைகள் பெயரை எல்லாமே என்னோட அப்பா கிட்ட கேட்பேன். அவருக்கு தெரிஞ்ச பறவைகள் பெயரை எல்லாமே சொல்வார்.
ஒரே பறவை நிறைய வண்ணங்கள்ல இருந்ததையும் பார்த்தேன். ஒரு பறவை ஏன் நிறைய வண்ணங்கள்ல இருக்கு. அந்த பறவைகளோட சிறப்பு, என்னென்னவெல்லாம் அந்த பறவை சாப்பிடும், அவை தன் கூடுகளை எப்படி கட்டும், ஒவ்வொரு பறவையும் ஏன் ஒரே மாதிரி இருக்கிறதில்ல, பறவைகள் ஏன் காட்டுக்கு முக்கியம் என பல கேள்விகள் எனக்குள் வந்தது. பறவைகள் சம்பந்தமா நான் நிறைய கேள்விகள் கேட்கிறதால என்னோட அப்பா எனக்கு பறவைகள் பற்றிய ஒரு சார்ட் ஒன்று வாங்கி கொடுத்தார்.
அதில் பறவைகள் குறித்த குறிப்பு இருக்கும். அதாவது அதன் குணாதிசயம், அதன் பெயர், அதன் விஞ்ஞான பெயர், அதன் சிறப்பம்சங்கள் என அனைத்தும் குறிப்பிட்டு இருக்கும். பறவைகள் மேல் எனக்கு இருந்த ஆர்வத்தினால் நான் அந்த சார்ட்டை முழுமையாக படித்து ஒவ்வொரு பறவைகள் குறித்தும் தெரிந்து கொண்டேன். எனக்கு பறவைகள் மேல் இருந்த ஆர்வத்தை பார்த்து என் அப்பா பறவைகள் பற்றி நீ நிறைய படிச்சு தெரிஞ்சுக்கன்னு சொல்வார்.
அதற்கான வழியும் ஹோம் ஸ்கூலிங் மூலமாக ஏற்படுத்திக் கொடுத்தார். அதாவது நான் மற்ற பிள்ளைகள் போல் நேரடியாக பள்ளிக்கு சென்று படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தே ஆன்லைன் முறையில் எனக்கு பாடங்கள் நடக்கும். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் தான் வகுப்புகள் நடக்கும். இதை நேஷ்னல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங்னு சொல்வாங்க. இந்த வகுப்புகளிலும் மற்ற பள்ளிகளில் இருப்பது போல் நிறைய கிரேடுகள் இருக்கும்.
ஒரு கிரேடுக்கு 22 மாணவர்கள் இருப்பாங்க. இதில வெளிநாட்டு மாணவர்களும் இருப்பாங்க. பொதுவாக இந்த படிப்பு படிக்கிறவங்க பெரும்பாலானவர்களுக்கு தனித் திறமை இருக்கும். அதை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதற்கான தனிப்பட்ட பயிற்சியில் ஈடுபடுவாங்க. அதே சமயம் கல்வியும் முக்கியம் என்பதால், இந்த பாடத்திட்டத்தினை தேர்வு செய்வார்கள். எனக்கு வகுப்பு மட்டுமில்லாமல் பறவைகளை குறித்தும் ஆய்வு செய்ய இந்த பாடத்திட்டம் மிகவும் உதவியா இருக்கு’’ என்றவர் பறவைகளை கண்காணிப்பது குறித்து விவரித்தார்.
‘‘ஒரு நாளைக்கு வகுப்புகள் போக மீதி நேரங்களில் நான் பறவைகளை பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவேன். நான் படிச்ச பறவைகள் எல்லாவற்றையும் நேரில் பார்ப்பது மட்டுமில்லாமல் அவைகளை புகைப்படம் எடுக்க வேண்டும்னு ஆசை வந்தது. என்னுடைய ஆசையை அப்பாவிடம் சொன்னேன். அவரின் நண்பர் ஆபித் அண்ணாவை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஆபித் அண்ணா பறவைகள் சம்பந்தமா ஆராய்ச்சி செய்திட்டு இருந்தாரு. அதோட அவர் ஃவைல்ட் லைப் போட்டோகிராபரும் கூட.
அப்பா அவரிடம் புகைப்படம் மற்றும் பறவைகள் குறித்த ஆராய்ச்சி செய்வதற்கான பயிற்சிக்காக அவரிடம் சேர்த்துவிட்டார். ஒரு கேமராவும் வாங்கி கொடுத்தார். நானும் ஆபித் அண்ணாவும் மசின குடி, ஊட்டி, கோத்தகிரினு பல ஊர்கள் எல்லாம் சுத்தி பல வகையான பறவைகளை படம் எடுத்தோம். நான் படிச்ச பறவைகளை நேரில் பார்க்கும்போது இன்னும் அழகாகவும், அற்புதமாகவும் இருந்தது. அதன் குணாதிசயங்களை நேரில் கண்ட போது, நானும் ஒரு பறவையா மாறிட முடியாதான்னு எனக்கும் ஒரு ஏக்கம் ஏற்பட்டது.
பறவைகள் அனைத்தும் தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும். இந்த பறவைகளை வலசை பறவைகள்னு சொல்லுவோம். அந்த பறவைகள் ஒரு இடத்தை நோக்கி பயணம் செய்கிறது என்றால் அது வளமான பகுதியாக இருக்கும் என்று அர்த்தம். மசினக்குடியில நிறைய வலசை பறவைகளை பார்க்கலாம். அதிகமா வெப்பமாகவும் குளிர்ச்சியாகவும் இல்லாம மிதமான வெப்பநிலையில இருக்கிற பகுதி மசினகுடி.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் பல ஊர்களில் இருந்து இங்கு பறவைகள் வரும். அதே மாதிரி இங்க இருக்கிற பறவைகள் ஆசிய கண்டம் முழுக்க போகும். பல பறவைகள் நம்மை வியக்க வைக்கும். குறிப்பாக இங்கு இருக்கும் இண்டியன் ஹார்ன் பில் பறவை. இதை தமிழில் மலை இருவாச்சின்னு சொல்வாங்க. இந்த பறவை பறக்கும் போது ஹெலிகாப்டர் பறக்கிற மாதிரி சத்தம் வரும். இந்த பறவையோட இறக்கைகள் இரண்டடி அகலங்களுக்கு இருக்கும். கருப்பு, வெள்ளை, ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு, நிறங்களில் இருக்கும். காய்கறி, பழங்கள் தான் அதிகமா சாப்பிடும். பார்க்கவே அழகான ஒரு பறவை. இதே போல இரவு நேரத்தில மட்டும் பார்க்கக்கூடிய பறவையும் இருக்கு. அதன் பெயர் ‘நைட் ஜார்’. இந்த பறவையோட தமிழ் பேரு ‘பக்கி.’
இரவு நேரங்களில் சாலைகளில் உட்கார்ந்து இருக்கும். அந்த பறவை மேல் வெளிச்சம் பட்டால் அதன் கண்கள் தீம்பிழம்பு நிறங்களில் இருக்கும். இதே மாதிரி யானைகளையும் சொல்லலாம். உதாரணமாக சில யானைகளுக்கு பின்னங்கால்கள் பெருசா இருக்கும். அந்த மாதிரியான யானைகளால் மலை ஏற முடியாது. பின்னங்கால்கள் குட்டையா இருக்குற யானைகள் தான் மலையேறும். அதனை மலை யானைகள்னு குறிப்பிடுவாங்க’’ என்றவர் அவர் சந்தித்த நெகிழ்ச்சியான தருணங்களையும் பகிர்ந்து கொண்டார்.
‘‘ஒரு நாள் ஆந்தையை புகைப்படம் எடுப்பதற்காக காத்துக்கிட்டு இருந்தேன். ஆந்தையை தேடிட்டு இருக்கும் போது மரத்தோட மூலையில் ஆந்தை ஒன்று உட்கார்ந்து இருந்தது. அதை போட்டோ எடுப்பதற்காக நான் கேமராவை திருப்பும் பக்கம் எல்லாம் ஆந்தையும் தன் கழுத்தை திருப்பி பார்த்தது. சொல்லப்போனால் அது என் தலைக்கு மேல இருந்தது. நான் என்னுடைய கேமராவை எடுத்து புகைப்படம் எடுக்கும் போது எல்லாம் ஆந்தையும் என்னுடைய லென்ஸ் வழியா என்னை பார்க்கும். அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. விலங்குகளுக்கும் நாம காட்டுக்குள்ள இருக்கிறது தெரியும். அதோட அனுமதி இருந்தாதான் அதை புகைப்படம் எடுக்கவோ, காட்டுக்குள்ள இருக்கவோ முடியும். பறவைகள் பொறுத்தவரை அவை காட்டுக்குள் இருந்தாலும் மனிதர்களோடு சேர்ந்து இவை வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அது மக்களுக்கு தெரிவதில்லை.
அதனால் பறவைகளை பத்தி மக்களுக்கு சொல்லணும்னு நினைச்சேன். மக்களுக்கு மட்டுமில்லாம பள்ளிக்கூட மாணவர்களும் பறவைகள் பற்றி படிச்சி தெரிந்து கொள்ள வேண்டும்னு விரும்பினேன். அதனை நான் புத்தகமாக ஆவணப்படுத்த நினைச்சேன். வீட்டில் சொன்னதும் அம்மா, அப்பா இருவருமே எனக்கு முழு சப்போர்ட் கொடுத்தாங்க. அந்த புத்தகம் முழுவதும் நான் நேர்ல பார்த்த பறவைகளின் புகைப்படங்கள், அவற்றின் அறிவியல் பெயர் மற்றும் அந்த பறவைகள் குறித்த சின்னச் சின்ன குறிப்புகளை தொகுத்து எழுதினேன். 288 வகையான பறவைகளை தொகுத்து ‘தி பேர்ட்ஸ் ஆஃப் மசினகுடி’ என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதினேன்.
மக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தணும் என்ற நோக்கத்தில் இந்த புத்தகம் எழுதியதால், இலவசமாகவே பல கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நூலகங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வச்சோம். என்னுடைய இந்த புத்தகம் வழியா பல பேருக்கு பறவைகள் மேல ஆர்வம் வரும்னும் நம்புறேன். இன்னும் அடர்ந்த காடுகளில் இருக்கும் பறவைகளை ஆவணப்படுத்த எண்ணம் இருக்கு. பறவைகள் தான் என் உலகம். அவர்களை போல் நினைத்த இடங்களுக்கு நினைத்த நேரத்தில் பறந்து சென்று அவர்களை பற்றி தகவல்களை சேகரிக்கணும்’’ என்று கூறும் அனன்யாவிற்கு வருங்காலத்தில் ஐ.எப்.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது விருப்பமாம்.