கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-கடவுள் கண் திறந்தாரா? (மருத்துவம்)

Read Time:13 Minute, 49 Second

இது கடுங்கோடைக் காலம். இந்தப் பருவத்திற்கே உரித்தான பல நோய்களுடன் அம்மை தொடர்பான நோய்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகமாகக் காணப்படுகிறது. சராசரியாக வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அம்மனின் கோபத்தால் வருகிறது. அதனால் மருந்து மாத்திரை எடுக்கக் கூடாது என்பது போன்ற எத்தனையோ தவறான கருத்துக்கள் அம்மை நோய் குறித்து நம் சமூகத்தில் உலவுகின்றன.

உண்மையில் இந்த நோய் வைரஸ் தொற்றினால் ஏற்படுவது. பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி நிரந்தரப் பார்வையிழப்பு, தழும்புகள் போன்ற அறிகுறிகளை இன்னும் மக்களிடையே விட்டு வைத்திருக்கும் பெரியம்மை (small pox) நோய் தற்போது உலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இதே போன்றதொரு வைரஸ் தொற்றால் (varicella virus) ஏற்படுவது தான் தமிழில் சின்னம்மை என்றும், ஆங்கிலத்தில் chicken pox (varicella zoster) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் பரவலாக பல பகுதிகளிலும் காணப்படும் ஒரு தொற்று.

கடந்த மூன்று மாத காலமாக என்னிடம் தொடர்ந்து சிகிச்சைக்கு வருகிறார் ஒரு மத்திய வயதுப் பெண். அவருக்கு ஏற்பட்ட முதல் அறிகுறி வலது கண்இமை முழுவதுமாக மூடிவிட்டது, வலது கண்ணில் பார்வை சுத்தமாகத் தெரியவில்லை என்பது. பரிசோதித்துப் பார்க்கையில் அவருக்கு வலதுபுற நெற்றியிலும் வலது கண் இமையிலும் கொப்புளங்கள் காணப்பட்டன. ஏதோ பூச்சி கடித்ததாக நினைத்து கை மருந்துகளை அரைத்து அதில் பூசி இருக்கிறார். அதனால் அவை தழும்புகளாக மாறிவிட்டன. ”பச்சிலை அரைச்சுப் போட்டுத் தான் கண்ணு மூடிக்கிச்சு” என்றார் அவர். அவருக்கு ஏற்பட்டிருந்தது ‘அக்கி’ என்று பரவலாக அழைக்கப்படும் Herpes zoster என்ற பிரச்சனை. சிறு வயதில் சின்னம்மையால் பாதிக்கப்பட்ட எவருக்கு வேண்டுமானாலும் பின்நாட்களில் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும். கடந்த சில ஆண்டுகளாகத் தான் சின்னம்மை ஏற்பட்டவுடன் மருத்துவரை அணுகும் பழக்கம் மெது மெதுவே உருவாகி வருகிறது.

இன்றும் பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே சுயமருத்துவம் செய்கின்றனர். சின்னம்மை தாக்கி, அது தானாகவே குணமான பின்பே, பள்ளிக்கு மருத்துவ சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்பதற்காக என்னிடம் பல குழந்தைகள் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களிடம் ஆரம்பத்திலேயே மருந்து மாத்திரை உட்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தியே அனுப்புகிறேன். எந்த ஒரு வைரஸ் தொற்றாக இருந்தாலும் நம் உடலுக்குள் நுழைந்து விட்டது என்றால் நம் உடல் அதற்கு எதிராக இயங்கத் துவங்கும்.

உடலின் எதிர்ப்பாற்றலால் அது சராசரியாக ஒரு வாரம் முதல் பத்து நாட்களுக்குள் சரி செய்யப்பட்டு விடக்கூடும். அப்போது சில வைரஸ்கள் உடலுக்குள்ளாக பயணப்பட்டு நரம்புகளின் நடுவே ஆங்காங்கே இருக்கும் முடிச்சுகளில் (நரம்பணுத் திரள்- ganglion) தங்கிக் கொள்வது உண்டு. இத்தகைய திரள்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை பல இடங்களில் இருக்கின்றன. பெரும்பாலானவை தண்டுவடப் பகுதியில் அமைந்திருக்கின்றன.

அங்கு சென்று தங்களுக்கென ஒரு குடியிருப்பை அமைத்து தங்கிக் கொள்ளும் வைரஸ்கள் அமைதியான நிலையில் (dormant) ஒரு மனிதனின் ஆயுள் முழுமைக்கும் அங்கேயே குடியிருக்கும். சர்க்கரை நோய், இரத்த சோகை, சிறுநீரக செயலிழப்பு புற்றுநோய்க்கான சிகிச்சை, அதிக மன அழுத்தம் போன்றவற்றை சந்திக்கும் போது அந்த வைரஸ்கள் பெருகுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இதனை அவற்றின் பெருக்கத்துக்கு சாதகமான சூழல் (favourable situations) என்று அழைப்போம். அப்படி சாதகமான சூழல் வருகையில் ஏதோ ஒரு குறிப்பிட்ட நரம்புப் பகுதியில் தங்கியிருக்கும் வைரஸ்கள் பெருகி அந்த நரம்புடன் தொடர்புடைய தோல்பகுதியில் (corresponding dermatome) தங்களை வெளிப்படுத்துகின்றன.

உதாரணமாக முதுகுத் தண்டுவடத்தின் மேல் பகுதியில் வலது புறம் இருக்கும் நரம்புகளில் உள்ள வைரஸ்கள் பெருக்கம் தடந்தால், அவை வலதுபுற மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கொப்புளங்களை உருவாக்கி இருப்பதைக் காணலாம். இந்தக் கொப்புளங்களை பெரியவர்கள் பார்த்தவுடன் கண்டுபிடித்துவிடுவார்கள். ‘ரோஜா இதழில் இருக்கும் பனித்துளி போல’ என்ற அடைமொழி இந்தக் கொப்புளங்களை விவரிக்க மிகப் பொருத்தமானவை. சரியாக உடம்பிற்கு நடுவில் நேராக ஒரு கோடு கிழித்தால் அந்தக் கோட்டிற்கு ஒரு புறம் மட்டுமே இவை இருக்கும். எச்ஐவி போன்ற கடுமையான எதிர்ப்பாற்றல் குறைவு நோய்கள் உடலின் மத்தியக் கோட்டிற்கு இரண்டு பக்கமும் வரக்கூடும் (Cross the midline). கூடவே ஒன்றுக்கும் மேற்பட்ட நரம்புப் பகுதிகளையும் பாதிக்கக்கூடும் (multi dermatomal herpes).

மேலே குறிப்பிட்ட பெண்ணிற்கு முகத்தின் ஒரு முக்கிய நரம்பான Trigeminal nerve பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நரம்பிற்கு மூன்று கிளைகள் உண்டு. இவருக்கு அதன் முதல் கிளையான ophthalmic branch பாதிக்கப்பட்டிருந்ததால் கண் பாதிப்பு இருந்தது. கூடவே மூக்கின் வலது பகுதியிலும் கொப்புளங்கள் இருந்தன. மூக்கின் நுனியில் கொப்புளம் தென்பட்டால் கருவிழியிலும் நிச்சயமாக பாதிப்பு இருக்கும் என்பது இந்தப் பிரச்சனையில் ஒரு முக்கியமான விதி.

இவருக்கு கண் இமை மூடியிருந்ததுடன், கருவிழியிலும் வெண்புள்ளிகள் காணப்பட்டன. அதுவே அவரது பார்வையிழப்பிற்குக் காரணம். தீவிர சிகிச்சையைத் தொடங்கினோம். இவ்வளவு தீவிரமாகக் கிருமிகள் பெருகக் காரணம் என்ன என்று முழுமையாகப் பரிசோதனை செய்ததில் அவருக்கு எச்ஐவி தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே நான் குறிப்பிட்டபடி எச்ஐவி தொற்று பாதித்தவர்களுக்கு நரம்பு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் இவருக்குத் தாங்க முடியாத வலியும் இருந்தது (herpetic neuralgia).

கண் திறக்கவில்லையே என்ற கவலையும் அவருக்கு வெகுவாக இருக்க, \”தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள், இத்தகைய நரம்பு செயலிழப்புக்கள் பிரச்சனைகள் சராசரியாக மூன்று மாதத்தில் தாமாகவே சரியாகக் கூடியவை. ரத்தசோகையை சரி செய்யுங்கள், தற்போது எச்ஐவிக்கு மிக சக்தி வாய்ந்த மருந்துகள் வந்து விட்டன, உங்களால் மற்ற எவரையும் போல சாதாரணமான வாழ்வை வாழ முடியும்\” என்று விளக்கி சிகிச்சையைத் துவங்கினேன். அன்று முதல் வாரம் தவறாமல் என்னிடம் வந்து விடுகிறார்.

இந்தப் பெண்மணியின் தரப்பில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் அவரது குடும்பத்தினர் அவருக்குத் தந்த பெரும் ஆறுதல். கடந்த சில ஆண்டுகள் வரை எச்ஐவி தொற்று பாதித்துவிட்டது என்றால் அந்த நபரைக் குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைத்துவிடுவது வழக்கம். அவருக்கு அந்தத் தொற்று எப்படி ஏற்பட்டது என்ற சந்தேகத்தில் தொடங்கி அவருடைய ஒழுக்கம் கேள்விக்குறியாக்கப்படும். ஒருவேளை கணவனுக்கு முதலில் தொற்று ஏற்பட்டிருந்து, அதன் பின் மனைவிக்கு வந்தால் பரவாயில்லை.

முதலில் பெண்ணுக்கு ஏற்பட்டு விட்டால் அவளுடைய வாழ்வே அதன் பின் நரகமாகி விடுவதைப் பார்த்திருக்கிறேன். இந்த பெண்மணியும் அவரது குடும்பத்தினரும் மிகவும் அன்பானவர்கள். இவருக்கு மட்டுமே தொற்று இருந்தாலும் எந்த சுணக்கமும் அருவருப்பும் காட்டாமல் அவருக்காகக் குடும்பமே பணிவிடை செய்கிறார்கள்.

இறுதியாக நேற்று அவர் பரிசோதனைக்கு வந்திருந்தார். வந்தவருக்கு இரண்டு கண்களும் முழுவதுமாகத் திறந்திருந்தன. ‘‘நீங்க கரெக்டா மூணு மாசம் ஆகும்னு சொன்னீங்க. கரெக்டா பங்குனி உத்திரம் அன்னைக்கு கண்ணு திறந்துச்சு. கடவுள் கண்ணைத் திறந்து விட்டுட்டார்” என்றார் மகிழ்வுடன். ‘‘இது முழுக்க முழுக்க அறிவியல் தான். நீங்கள் சிகிச்சையை சரியாக பின்பற்றியதால் முழுவதுமாக பாதிக்கப்பட்ட நரம்புகளுக்கு பதிலாக புதிய நரம்புகள் வளர்ந்து உங்கள் கண்களைத் திறக்கச் செய்திருக்கின்றன.

கருவிழியின் புண்கள் 90% ஆறிவிட்டன. சுத்தமாக விரல் அசைவைக் கூட உணரமுடியாது என்ற நிலை மாறி, இருபதடி தூரத்தில் இருக்கும் பொருளை அவரால் நன்கு பார்க்க முடிகிறது. போகப்போக இன்னும் பார்வையில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம், நீங்கள் செய்ய வேண்டியது இதே உத்வேகத்துடன் சிகிச்சையைத் தொடருங்கள். வேறு பல சந்தர்ப்பவாத கிருமிகளின் தாக்குதலை முற்றிலும் தவிர்த்து விடலாம். தற்பொழுது வைரஸ் கிருமியைக் கொல்லும் மருந்துகளை எடுத்திருப்பதால் உடம்பில் வேறு எங்காவது ஒளிந்திருக்கும் varicella வைரஸ் கிருமிகளும் மரணித்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகம்” என்று அவர்களுக்கு விளக்கினேன். மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் சென்றார்கள்.

நேற்றைய தினமே சந்தித்த ஒரு 25 வயது இளைஞனுக்கு இரண்டு நாட்களாக உடல் முழுவதும் கொப்புளங்கள். அவருக்கு அப்போதுதான் சின்னம்மை நோய் தாக்கியிருந்தது. ‘‘இப்போது ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு வைரஸ் கிருமியை கொல்லும் antiviral மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள், விரைவில் நோய் பாதிப்பு குறைவதுடன், பின்னர் ‘அக்கி’ போன்ற பாதிப்புகளைத் தவிர்க்கலாம். கூடவே சின்னம்மை நோயால் வரும் மூளைக்காய்ச்சல், நிமோனியா போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கலாம் என்று கூறினேன். வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு சின்னம்மைத் தடுப்பூசி போட்டால் இந்தப் பிரச்சனை வராமலேயே இருக்கும் என்றும் எடுத்துக் கூறினேன். எந்தவிதமான மூடநம்பிக்கைக்கும் ஆட்படாமல் அவர் உடனே ஒத்துக் கொண்டது மேலும் மகிழ்ச்சியைத் தந்தது!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post போட்டோ கிராபியில் கலக்கும் இரட்டை சகோதரிகள்!! (மகளிர் பக்கம்)
Next post தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு!! (அவ்வப்போது கிளாமர்)