வாழ்க்கை+வங்க=வளம்!!! (மகளிர் பக்கம்)
வேளாண்மை உலகின் மிகத்தேவையான முதல்நிலை தொழிலாகும். இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை மட்டும் நுகராமல், அறிவாற்றலோடு இயற்கையின் உதவி கொண்டு மனிதன் பொருட்களை உற்பத்தி செய்கின்றான். உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழத் தேவை உணவு. உலக வங்கியின் அறிக்கையின்படி 2050ம் ஆண்டு உலகில் 1000 கோடி மக்களுக்கு தினமும் உணவளிக்க இன்றைய அளவைவிட உணவுத் தேவை மேலும் 70% அதிகரிக்கும்.
இத்தேவையை பூர்த்தி செய்ய 80 பில்லியன் டாலர் அதாவது, இன்றைய மதிப்பில் 6,63,512 கோடி ரூபாய் வருடாந்திர முதலீடுகள் வேண்டும். அந்த அளவீடை எட்டப் பல வழிகள் கண்டுபிடிக்கப்படலாம். பயிரிடும் நிலப்பரப்பை அதிகரித்தல், உற்பத்தி அளவை, அதாவது, ஒரு ஏக்கர் நிலத்தின் உற்பத்தி அளவை (Per Acre Production) மேம்படுத்துதல், விவசாயத்தைப் பெருக்க உதவும் காரணிகளான இடுபொருட்கள், இயந்திரமய உதவிகள், இதற்கெல்லாம் தேவையான முதலீடுகள் ஆகியவை உரிய காலத்தில் கிடைக்கச் செய்தல், மனித உழைப்பின் பெருக்கத்தை உறுதிசெய்தல். பொருட்களும் நேரமும் விரயமாவதைக் குறைத்தல் இவையாவும் முதன்மையான வழிகள். இவற்றில் குறிப்பாக விவசாயத்திற்குத் தேவையான முதலீடுகளை உரிய காலத்தில் வழங்கும் பணிகளில் வங்கிகள் பெருமளவில் ஈடுபட்டுள்ளன.
விவசாயப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியும் மக்களின் உழைப்பும்தான் உலக மக்களை வாழவைக்க முடியும். காலநிலை மாற்றம், மக்கள்தொகைப் பெருக்கம், மாறிவரும் உணவுத் தேவைகள், இயந்திரமயமாக்கல், புதியவகை பயிரூட்டம், சந்தை வாய்ப்புகள் ஆகியவை விவசாயத்தில் நிதித்தேவைகளை அதிகரித்துள்ளன. வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் வழங்கும் நிதி பெருமளவு விவசாயத் தேவைகளுக்கு ஈடு கொடுக்கின்றன.
விவசாயக் கடன் வழங்கும் வங்கிகள் விவசாயத்தினை தொழில்நுட்ப மயமாக்குவதற்கும், பசுமைப்படுத்துவதற்கும், விவசாயத்திற்கு ஏற்படும் இயற்கை மற்றும் செயற்கை இடர்களை நிர்வகிப்பதற்கும் பல அமைப்புகள் உதவுகின்றன. இந்தியாவில் வேளாண்மை விவசாயம் மற்றும் அதன் இணைத்துறைகளும் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரும் உயிரோட்டமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. விவசாயம், உணவுப் பாதுகாப்பு, கிராமப்புற வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், மண் பாதுகாப்பு, இயற்கை வள மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவை முழுமையான கிராமப்புற வளர்ச்சிக்குத் தேவை.
பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, மஞ்சள் புரட்சி, நீலப் புரட்சி ஆகியவற்றின் அளவீடுகள் இந்திய வேளாண்மையில் தொடர்ந்து மக்களின் ஒளிமயமான வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன. இந்தியாவில் வங்கிகளின் விவசாயம் சார்ந்த பணிகளுக்காக அரசின் நிதி மற்றும் வங்கி நிர்வாகத் துறைகளும், இந்திய ரிசர்வ் வங்கியும் அதன் கீழுள்ள நிறுவனங்களும் வேளாண் நிர்வாகத்தை நெறிப்படுத்தி, மேற்பார்வையிட்டு அதன் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்றன.
வேளாண்துறையில் வங்கிகளின் சேவை
பருவகால வேளாண் நடவடிக்கைகளுக்கும், அவைசார்ந்த பணிகளுக்கும் வங்கிகள் கடன் வழங்குகின்றன. நிலத்தை பண்படுத்துதல், தரமான விதைகளை நிலத்திலிடுதல், இயற்கைவழி உரமிடுதல், இடுபொருட்கள் வாங்குதல், டிராக்டர், டிரில்லர் முதலான இயந்திரங்களை வாங்குதல், விவசாய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கச் செலவுகள், விளைபொருட்களை சந்தைப்படுத்துதல், வேளாண் தொடர்புடைய இணைப் பணிகளான பால் பண்ணை அமைத்து இயக்குதல், மீன்கள் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மலர்கள் பயிரிடுதல், நீர்ப்பாசன வழித்தடங்கள் நிறுவுதல், பட்டு வளர்ப்பு, மண்வள பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து நிதித் தேவைகளுக்கும் வங்கிகள் கடன் வழங்குகின்றன. வேளாண் சார்ந்த முதலீட்டுக்கு நீண்ட காலக் கடன்களும், விவசாய உற்பத்திக்கு குறுகியகாலக் கடன்களும் பல்வேறு திட்டங்கள் வங்கிகள் வழங்குகின்றன.
சிறு மற்றும் குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள், பங்குதாரர்கள் மற்றும் பெருவிவசாயிகள் என அனைவரும் வங்கியில் கடன் பெறலாம். இடைத்தரகர்கள், மறைமுகச் செலவுகள் இல்லாமல் குறைந்த வட்டியில், விரைவான கடன்களை வங்கிகள் வழங்குகின்றன. இதன் மூலம் விவசாயிகள் வளமுடன் வாழ்ந்து சேமிக்க முடிகிறது. நுகர்வோருக்கும் நியாயமான விலையில் பொருட்கள் கிடைக்கின்றன.
வங்கிகளின் வேளாண் கடன்கள் குறுகிய கால, இடைக்கால, நீண்டகாலத் தவணைகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் அமைகின்றன. விவசாய பணக்கடன், கிசான் கடன் அட்டை, விவசாய தவணைக் காலக் கடன், மிகைப்பற்று, கேட்புக்கடன், தங்கநகை அடமானக் கடன் ஆகிய வடிவங்களில் அனைத்து விவசாய பணிகளுக்கும் வங்கிகள் கடன் வழங்குகின்றன. விவசாயிகளுக்கு எந்தெந்தப் பணிகளுக்காகக் கடன் தேவைப்படுகிறது, அதனை எவ்வாறு வங்கியிலிருந்து பெறமுடியும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
விவசாய பணக் கடன்
பயிர் உற்பத்தி செய்ய, அறுவடைக்குப் பின், விளைபொருள் விற்பனைக்குமுன், ஆகியவற்றுக்காக விவசாய பணக்கடன் வழங்கப்படுகிறது. விண்ணப்பித்த விவசாயியின் பெயரில் கடன் கணக்கை வங்கி துவக்கி அதிலிருந்து அனுமதிக்கப்பட்ட கடன்தொகையை விவசாயியின் சேமிப்புக்கணக்கில் வங்கி செலுத்தும். அதில் இருந்து தேவைப்படும்போது விவசாயி பணம் எடுத்து பயன்படுத்தலாம். கிசான் கடன் அட்டை, மின்னணு ரூபே கார்டு வடிவத்திலும் இந்தக் கடன் வங்கியின் மூலம் கிடைக்கிறது. சேமிப்புக் கணக்கின் மூலம் வழங்கப்பட்ட ஏ.டி.எம் அட்டை அல்லது கிசான் கடன் அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி பணத்தினைப் பெறலாம்.
சேமிப்பு / கடன் அட்டையைப் பயன்படுத்தி உரம், பூச்சிக்கொல்லிகள், நுண்ணூட்டச்சத்துக்கள் வாங்குதல், இருபொருட்கள் வாங்குதல் மற்றும் விற்பனைக் கூடங்களில் / அங்காடிகளில் விவசாயம் செய்வதற்குத் தேவையானவற்றை வாங்க முடியும். சொந்தமாக நிலமில்லாமல் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் பயிரிடும் விவசாயிகளும் வங்கியில் விவசாய பணக்கடன் பெறலாம். மேலும் பெருநிறுவனங்களுடன் மேற்கொள்ளும் ஒப்பந்த அடிப்படையில் பயிரிடும் விவசாயிகளும் கடன் பெறமுடியும்.
கடன் நிதி அளவீடு
பயிரிடும் விவசாயி தனது நிலத்திற்கு எவ்வளவு வங்கிக்கடன் கிடைக்கும் என்பது அவர்கள் பயிரிடும் நிலத்தின் அளவு, எதைப் பயிரிடுகிறார், பயிரின் உற்பத்தி கால அளவு ஆகியவற்றைப் பொறுத்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிகளின் பிரதிநிதியை வங்கி ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயித்து இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் அனைத்து வங்கிகளுக்கும் தெரிவிக்கும். அந்த நிதி அளவீட்டின் அடிப்படையில்தான் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகள் கடன் வழங்குகின்றன. கரும்பு, வாழை போன்ற பணப்பயிர்களுக்கு வழங்கப்படும் கடன் அளவு நெல் மற்றும் கோதுமைப் பயிர்களைவிட சற்று கூடுதலாகும்.
நில மேம்பாட்டுக் கடன்
பயிர்கள் செழிப்பாக வளர்வதற்கு மண்வளம் ஒரு முக்கிய காரணியாகும். வெவ்வேறு பயிர் வகைகளை பயிரிட்டு வளர்க்க வெவ்வேறு மண்வகை தேவைப்படுகிறது. ஆற்றுப் படுகைகளில் காணப்படும் வண்டல் மண் ஒரு வளமிக்க மண்ணாகும். ஏனெனில், மலையில் இருந்து வடியும் ஆறுகள் தொடர்ந்து ஊட்டச் சத்துக்களைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. கரிசல் மண் மற்றும் புல்வெளி மண் போன்ற மண் வகைகள் வேளாண்மைக்குப் பரவலாகப் பயன்படுகின்றன. சமமான நிலப்பரப்புடன் கூடிய வண்டல் மண் நிறைந்த சமவெளி வேளாண் தொழில் செய்ய மிகவும் ஏற்றதாகும்.
குடியிருப்பு நிலம் மற்றும் தொழிற்பேட்டை அமைந்துள்ள நிலம் ஆகியவை தவிர்த்து விவசாய நிலமாக அரசின் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்ட நிலத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்க, குறிப்பாக பண்படுத்த மற்றும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற வங்கிகள் நீண்டகால தவணைக்கடன் வழங்குகின்றன. நீராதாரம் உருவாக்கவும், புதிய கால்வாய் வழித்தடங்கள், கிணறு தோண்டுதல், ஆழ்துளைக்கிணறு அமைத்தல் மற்றும் நீர்பாய்ச்ச குழாய்கள் நிலத்தில் அமைத்தல், மின்மோட்டார் அல்லது சூரிய சக்தி மோட்டார் நிறுவுதல் ஆகிய முதலீட்டுப் பணிகளுக்கு வங்கிக் கடன் வசதி உண்டு.
வேளாண் தொடர்புடைய பணிக்கடன்
பால் பண்ணை வைத்திருப்போர் மாடுகளுக்கான கொட்டகை அமைத்தல், நீர்த்தொட்டிகள், தீவனத் தொட்டிகள் அமைத்தல், பால் மற்றும் பால் பொருட்கள் சந்தைக்கு எடுத்துச்செல்ல வாகனங்கள் வாங்குதல், பசுமைப் புல்வெளிகளை உருவாக்க நிலத்தைப் பண்படுத்தல் மற்றும் அதற்கான நீராதாரம் உருவாக்கல் ஆகியவற்றுக்காக தவணைக்கடனும், கன்று வளர்ப்பு செய்தல், தீவனம் வாங்குதல், பணியாட்கள் ஊதியம், வாடகை, மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட நடப்பு மூலதனச் செலவுகளுக்காக குறுகியகாலக் கடனும் வங்கி வழங்குகிறது.
மீன்கள் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மலர்கள் பயிரிடுதல், பட்டு வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ள அவற்றின் பல்வேறுகட்ட நிதித்தேவைகளுக்கு வங்கிகளில் கடன் திட்டங்கள் உள்ளன. நன்னீர்/உவர் நீர் மீன்/இறால் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது திட்ட அறிக்கையை உரிய நேரத்தில் வங்கியில் கடன் பெற வழங்கவேண்டும். விவசாயிகள் கலப்புப்பண்ணை வைத்திருந்தால், விவசாயம் செய்துகொண்டு இணையாக கால்நடை வளர்ப்புத் தொழிலும் செய்தால் அதற்கு முன்னுரிமையாக வங்கிகள் கடன் வழங்குகின்றன.
கிடங்குகளில் சேமிக்க நிதிக்கடன்
கிராமப்புற வேளாண் பொருள் சேமிப்பு கிடங்குகள் அமைக்க வங்கிகள் தவணைக்கடன் வழங்குகின்றன. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாயிகளுக்கு கிடங்குகள் அமைக்க நிதிக்கடன் வழங்குவதன் மூலம் அவர்கள் தங்கள் விளைபொருட்களை உரிய காலம் வரை சேமித்து வைத்து நியாயமான நல்ல விலைக்கு விற்க முடியும். கிடங்கில் சேமித்து அவற்றின் தரத்தைப் பாதுகாத்து மிகச்சரியான விலை நிலவும் காலத்தில் விற்பனை செய்தால் விவசாயிக்கு உரிய லாபம் கிடைக்கும். விளைபொருட்களின் தரம் மற்றும் அளவினை பதிவிட்டுக் குறிப்பிடும் கிடங்கு ரசீதுகளின் அடமானத்தில் பெயரிலும் பொருட்களின் விலையில் 70% வரை விவசாயிக்கு உடனே வங்கிக்கடன் கிடைக்கிறது.
இயந்திரங்கள், தளவாடங்கள் நிதிக்கடன்
விவசாயிகள் டிராக்டர் வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அதனுடன் இணைத்து நிலம் சார்ந்த, உற்பத்தி சார்ந்த பணிகளுக்காக உதவும் ரோட்டாவேட்டர் என்னும் துரிதமாகச் செயல்படும் இயந்திரங்கள் வாங்குவதற்கும் வங்கிகள் நீண்டகாலத் தவணைக்கடன்கள் வழங்குகின்றன. இந்த இயந்திரங்கள் விவசாயிகளின் பணிகளை எளிமைப்படுத்துவதோடு, நேரத்தை மிச்சப்படுத்தவும் செய்கின்றன. விவசாய இயந்திரங்கள், குறிப்பாக டிராக்டர் வாங்குவதற்கு அதன் விலை, பதிவுக்கட்டணம், காப்பீட்டுக் கட்டணம் உள்ளிட்ட மொத்த தொகையில் 85% வங்கியிடமிருந்து தவணைக்கடனாகப் பெறலாம்.
அதிகபட்ச கடன்தொகை ரூ.5. லட்சமாகும். மேலும் அறுவடை இயந்திரங்கள், ரோட்டாவேட்டர், த்ரெஷர், கலப்பை, லெவலர், டிராலி / டிரேலியர், லோடர், டோசர் போன்ற பண்ணை பணிக்கருவிகள் வாங்க வங்கி அவற்றின் விலையில் 70% வரை கடனாகத் தருகிறது. சில வங்கிகள் தங்கள் கடன் வழங்கவேண்டிய இலக்குத்தொகை அதிகமாக இருந்தால் இயந்திரங்களின் விலையில் 90% வரை கடனாக வழங்குகின்றன. விவசாய இயந்திரங்கள் கடனில் பெறுவதற்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 60 என்றும் வங்கிகள் பொதுவாக நிர்ணயித்துள்ளன.
கிராம தத்தெடுப்புத் திட்டம்
ஒரே கிராமத்திற்கு பல வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு விவசாயக் கடன் வழங்கினால் ஒரு விவசாயி பல வங்கிகளில் கடன் பெற்று நிதி விரயமாகும் என்பதால் ஒரு வங்கிக்கு ஒரு கிராமம் என்ற வகையில் வங்கிகள் கிராம தத்தெடுப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி அந்த கிராமம் முன்னேற உதவுகின்றன. மிகப்பெரிய கிராமங்கள் அல்லது பல கிராமங்களுக்கு நடுவில் விவசாய கிளினிக் அமைத்து செயல்படவைத்தல், இடுபொருட்கள் மற்றும் விளைபொருட்கள் சேமிக்க வசதிகள் செய்து தருதல், பொருட்களை சந்தைப்படுத்துதல், வாகன வசதி ஏற்படுத்துதல், கூட்டாண்மை சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் தத்தெடுத்த கிராம மேம்பாட்டுக்கு உதவுதல் போன்ற பல நிதி சார்ந்த வளமீட்டும் பணிகளை வங்கிகள் செய்கின்றன.
வங்கிக்கடன் பெறத் தேவையான முதன்மை ஆவணங்கள்
குறுகிய அல்லது நீண்டகால வங்கிக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பவரின் நில உரிமைச் சான்று முதன்மையானதாகும். அரசுப் பதிவேடுகளில் உள்ள பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகல், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை / ஸ்மார்ட் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், மானியம் பெறுவதற்கு சாதிச் சான்று.
விண்ணப்பிப்பவரின் இரண்டு புகைப்படங்கள், இயந்திரம் அல்லது பிற தளவாடங்கள் வாங்குனதாக இருந்தால் அவற்றின் விலை பட்டியல் மற்றும் மதிப்புச் சான்று, சிறு/ குறு விவசாயியென்றால் அதற்குரிய சான்று, வங்கி சேமிப்புக்கணக்கின் வரவுசெலவு அறிக்கை, பயிரிடவுள்ளவற்றைப் பற்றிய விவரங்கள், ஏற்கனவே வங்கிக்கடன் பெற்றிருந்தால் அவற்றின் விவரம், கிராமத்தில் இயங்கும் அரசின் கூட்டுறவு சங்கத்திலிருந்து பெறப்பட்ட கடன் நிலுவை எதுவும் இல்லை என்னும் சான்று, பிற விவசாய / விவசாயம் சார்ந்த பணிகளுக்கான கடன் தேவை என்றால் அந்தப் பணிகளின் விவரம் அதற்கான திட்டம் மற்றும் நிதி அறிக்கை ஆகிய அனைத்தையும் வங்கி வழங்கும் உரிய விண்ணப்பத்துடன் இணைத்து நேரிடையாக வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரிடம் வழங்கவேண்டும். விவசாயிகளுக்கு ேதவையான நிதிக்கடன், அதன் செயல்முறை, திருப்பச் செலுத்தும் காலம் மற்றும் பெற்ற நிதிக்கடனுக்கான காப்பீடு பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.