பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மறுபடி!! (மகளிர் பக்கம்)
‘‘கம்ப்யூட்டரில் பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் துறை சார்ந்தவர்களுக்கு சொர்க்க வாசலாக இருந்தது சாஃப்ட்வேர் நிறுவனங்கள். தற்போது அந்த நிலை மாறி, எந்த துறை படித்து இருந்தாலும் கம்ப்யூட்டர் மொழியினை கற்றுக் கொண்டால், நீங்களும் சாஃப்ட்வேர் வல்லுனராகலாம்’’ என்கிறார் தர் வேம்பு. சாஃப்ட்வேர் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தாலும், நாம் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தான் வேலை பார்க்கிறோம். வங்கி, காப்பீடு, மருத்துவம், தனியார் நிறுவனங்கள் என அனைத்து துறைக்கும் அவர்களின் வசதிக்கு ஏற்ப சாஃப்ட்வேர்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாஃப்ட்வேர்களை நாமே நமக்காக தயாரிக்கலாம் என்ற நோக்கத்தில் சோஹோ என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை துவங்கினார் ஸ்ரீதர்.
சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து, ஐ.ஐ.டி.யில் படித்து, அமெரிக்காவில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, அங்கேயே ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். சில காலம் அங்கு வேலை பார்த்தவருக்கு நாம் உருவாக்கும் சாஃப்ட்வேர்களை நம் நாட்டு மக்களுக்கு பயன்படுத்தலாமே என்ற எண்ணம் அவர் மனதில் உதித்தது. அமெரிக்க வாழ்க்கையை துறந்து சிறிய முதலீட்டில் தன்னுடைய வீட்டு மாடியில் இந்த நிறுவனத்தை துவங்கினார்.
சிறிய அளவில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களுக்கு ஏற்ப சாஃப்ட்வேர்களை பயன்படுத்துவதில்லை என்றாலும், அவர்களின் தேவைக்கு ஏற்ப சாஃப்ட்வேர்களை உருவாக்க முடிவு செய்தார். 1996ல் நிறுவனத்தை துவங்கி அதன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர்கள் தற்போது இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாட்டில் உள்ள பல நிறுவனங்களுக்கு சாஃப்ட்வேர்களை உருவாக்கி வருகிறார்கள். தற்போது இவரின் முக்கிய நோக்கம் கிராமப்புறத்தில் இந்நிறுவனத்தின் மைய அலுவலகங்கள் மற்றும் கல்வி மையங்களை அமைப்பது. அது குறித்து தர் விவரித்தார்.
“எங்களின் நிறுவனம் துவங்கி 27 வருடங்களாகிறது. பொறியியல் மற்றும் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் துறை படித்தவர்களுக்கு எங்க நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கொடுத்தாலும், எங்களின் முக்கிய நோக்கம் கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கும் இந்த துறையில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது. அவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் சோஹோ ஸ்கூல். பொறியியல் அல்லது கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. +2 அல்லது டிப்ளமோ படித்திருக்கலாம். கம்ப்யூட்டர் தெரிந்திருக்க வேண்டும் என்றில்லை. சென்னையில் இந்த பயிற்சி மையம் கடந்த மூன்று வருஷமாக செயல்பட்டு வருகிறது. தற்போது ெதன்காசியிலும் இதனை துவங்கி இருக்கிறோம்.
தென்காசியில் ஆரம்பித்த போது ஒன்பது பேர்தான் பயிற்சியில் இணைந்தாங்க. தற்போது 53 பேர் படிக்கிறாங்க. ஏற்கனவே பத்து பேட்ச் மாணவர்கள் தேர்ச்சி பெற்று எங்க நிறுவனத்தில் பல துறைகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த திட்டத்தில் இணைய முதலில் சோஹோ ஸ்கூல் (Zohoschool) இணையதளத்தில் 17 முதல் 20 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு நேர்காணல் நடைபெறும். அதில் தேர்ச்சிப் பெற்றவர்கள் இரண்டு வருட பயிற்சிக்கு பிறகு பணியில் அமர்த்தப்படுவார்கள். முதல் ஒரு வருடம் வகுப்பு பாடங்களும் அடுத்த வருடம் நேரடி பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி ெபறும் காலத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இது கம்ப்யூட்டர் புரோகிராமிங் சார்ந்த பயிற்சி என்பதால் எபிலிட்டி, அனாலடிக்கல் மற்றும் கணித திறமை உள்ளவர்களை தேர்வு மூலம் தேர்வு செய்கிறோம். தமிழ், ஆங்கிலம் இரு மொழியிலும் பயிற்சி அளிக்கப்படும். புரோகிராமிங் மட்டுமில்லாமல், மார்க்கெட்டிங், விற்பனை, விளம்பரம் என பல்வேறு துறையில் பயிற்சி அளிப்பதால், பயிற்சிக்கு பிறகு அவர்களுக்கு பிடித்த துறையில் வேலை பார்க்கலாம். தென்காசியை ெபாறுத்தவரை கிராமத்தில் உள்ள மாணவர்கள் பயிற்சி பெறுவதால், அவர்களுக்கு சாஃப்ட் ஸ்கில்ஸ் குறித்தும் பயிற்சி அளிக்கிறோம். பொது இடங்களில் பயமில்லாமல் பேசவும், பழகவும் இந்த பயிற்சி. மேலும் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க பினான்ஷியல் மேனேஜ்மென்ட் பயிற்சியும் உண்டு. பயிற்சி இலவசம். சென்னை மட்டுமில்லாமல் தென்காசி, கோவை, திருச்சி, மதுரையிலும் சோஹோ ஸ்கூல் செயல்பட்டு வருகிறது’’ என்றவரை தொடர்ந்தார் சாந்தி.
சோஹோ பயிற்சி மையத்தின் முதன்மை ஆசிரியராக இருப்பவர் சாந்தி. இவர் பெண்களுக்கான ‘மறுபடி’ பயிற்சி திட்டத்தினை பற்றி விவரித்தார். ‘மறுபடி’, முழுக்க முழுக்க பெண்களுக்கானது. முதலில் சென்னையில் தான் இதனை துவங்கினோம். அதன் பிறகு தென்காசியிலும் ஒரு பேட்ச் பெண்களுக்கு பயிற்சி அளித்தோம். சாஃப்ட்வேர் துறையில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் வேலை பார்த்து வருகிறார்கள். பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும், அவர்களுக்கு என தனி சம்பாத்தியம் இருக்க வேண்டும். யாரையும் நம்பி அவர்கள் இருக்கக் கூடாது என்று நாம் பேசினாலும், பல பெண்கள் திருமணம், குழந்தை என்ற கட்டத்திற்குள் அடைந்துவிடுகிறார்கள். இதனால் ஏற்படும் இடைவேளையால் வேலையில் தொடர முடிவதில்லை.
அதன் பிறகு விண்ணப்பித்தால், அவர்களின் அனுபவத்திற்கான வேலை கிடைப்பதில்லை. இந்த நிலையை போக்க ஆரம்பிக்கப்பட்டதுதான் மறுபடி. மூன்று மாதப் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறோம். ஏற்கனவே வேலை பார்த்திருந்தாலும், இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டு இருக்கும் மாற்றத்தினை அப்கிரேட் செய்கிறோம். பயிற்சி காலத்தில் அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறோம்’’ என்றார் சாந்தி. கல்வி என்பது அடிப்படையான விஷயம். அதை சிறுவயதில் இருந்தே பயிரிட வேண்டும். அதற்கான அடித்தளம்தான் தென்காசி, கோவிந்தபேரியில் உள்ள கலைவாணி கல்வி மையம்.
இதனை நிர்வகித்து வரும் அக்ஷயா அது குறித்து விவரித்தார். ‘‘கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கும் தரமான கல்வியினை அமைத்து தர வேண்டும் என்பதற்காகவே துவங்கப்பட்டதுதான் இந்த கல்வி மையம். இங்கு 2 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் படிக்கிறார்கள். கோவிட் போதுதான் இந்த கல்வி மையம் துவங்கப்பட்டது. தொற்று காலத்தில் உலகமே ஸ்தம்பித்து இருந்தது. நகர மக்களுக்கு ஆன்லைன் முறையிலாவது கல்வி கொடுக்கப்பட்டது. ஆனால் இங்குள்ள குழந்தைகளுக்கு அந்த வசதி கிடையாது.
பள்ளிகள் முற்றிலும் மூடப்பட்ட காரணத்தால் குழந்தைகளின் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பள்ளிகள் திறந்த பிறகும் சரியாக பள்ளிக்கு செல்லாமல் கிராமத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த தர் இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார். அவர்களுக்காகவே விதைக்கப்பட்டதுதான் இந்த கல்வி மையம். இந்த இரண்டு வருடங்களில் 112 மாணவர்கள், 20 ஆசிரியர்கள் மற்றும் 5 பகுதி நேர ஆசிரியர்கள் என எங்களின் கல்வி மையம் விரிவடைந்துள்ளது.
இங்கு மாணவர்களை அவர்களின் வயதிற்கு ஏற்ப மூன்று பிரிவாக பிரித்திருக்கிறோம். பிரைமரி (2-6 வயது), மிடில் (7-13 வயது), ைஹஸ்கூல் 14 வயதிற்கு மேற்பட்டவர்கள். எங்க பள்ளியின் முக்கிய நோக்கம், ஒவ்ெவாரு மாணவர்களும் தங்களின் திறமையால் அவர்களின் வாழ்க்கையை பார்த்துக் கொள்ளும் அளவிற்கு முன்னேற வேண்டும் என்பதுதான். அதற்கு ஏற்ப பாடத்திட்டங்களை அமைத்திருக்கிறோம். ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஹிந்தி, பொதுப் பாடங்களுடன் பொறியியல், இண்டஸ்ட்ரியல் ஸ்கில்சும் சொல்லித்தருகிறோம். நாங்க என்.ஐ.ஓ.எஸ் பாடத்திட்டத்தினை பின்பற்றுகிறோம். காரணம், இங்குள்ள மாணவர்களால் ஒரே சமயத்தில் அனைத்து பாடங்களையும் தேர்வு எழுத முடியாது.
எழுதினாலும், அதில் தேர்ச்சிப் பெறுவார்களா என்பது கேள்விக்குறி. தேர்ச்சிப் பெறவில்லை என்றால் படிப்பு மேல் ஈடுபாடு குறைய வாய்ப்புள்ளது. இந்த பாடத்திட்டத்தில் முதல் வருடம் இரண்டு பாடமும் அடுத்த வருடம் மற்ற பாடங்களுக்கான தேர்வு எழுதி தேர்ச்சிப் பெறலாம். ஒரு வருடம் கூடினாலும், தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள். ஃபெயில் என்ற முத்திரை அவர்கள் மேல் விழாது. வகுப்பு பாடங்கள் மத்தியில் பரதம், சிலம்பம், டெரகோட்டா நகைகள் போன்ற கலை சார்ந்த பயிற்சியும் அளிக்கிறோம். இங்கு படிக்கும் மாணவர்களின் ஆரோக்கியம் குறித்தும் கவனித்துக் கொள்கிறோம். காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளை உணவுகள் வழங்குகிறோம். சின்னக் குழந்தைகள் படிப்பதால், அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால், அவர்களை பார்த்துக் கொள்ள ஒரு நர்ஸ் எப்போதும் இருப்பார். இங்குள்ள மாணவர்களின் பெற்றோர்கள் விவசாய நிலங்களில் கூலி வேலை செய்பவர்கள்.
அவர்களின் சம்பாத்தியம் தினசரி செலவிற்கே சரியாகிவிடும். அப்படி இருக்கும் போது இவர்களுக்கு படிப்பு மற்றும் தனி கவனம் செலுத்த முடியாது. உணவு, கல்வி இவை இரண்டும் இலவசமாக கொடுப்பதால், தங்களின் குழந்தைகள் கண்டிப்பாக எதிர்காலத்தில் நல்ல ஒரு மனிதராக இருப்பார்கள் என்று எங்கள் மேல் நம்பிக்கைக் கொண்டு இங்கு படிக்க அனுப்புகிறார்கள். கோவிந்தபேரி, ராஜாங்கபுரம், மந்தியூர், பூலாங்குலம் கிராமங்களில் இருந்து மாணவர்கள் படிக்க வருகிறார்கள்.
இங்கு படிப்பு மட்டுமில்லை, விவசாயம், மெக்கானிக்கல் வேலை குறித்தும் பயிற்சி அளிக்கிறோம். சில குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வமிருக்காது. அவர்களுக்கு ஒரு கைத்தொழில் கற்றுக் கொடுப்பதால், அவர்களின் வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்ளமுடியும். இரண்டு சக்கர வாகனங்களை பழுது பார்ப்பது குறித்து பயிற்சி அளிக்கிறோம். சில மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் புரோகிராமிங் செய்ய விருப்பம் இருக்கும்.
அவர்களை சோஹோ ஸ்கூலில் பயிற்சி பெற உதவுகிறோம். தற்போது ஒரு மாணவி சோஹோ ஸ்கூலில் பயிற்சி பெற தயாராகி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை இங்குள்ள மாணவர்கள் எதிர்காலத்தில் அவர்கள் ெபற்றோர்கள் போல் கூலி வேலையில் ஈடுபடாமல், தங்களுக்கான ஒரு வேலையினை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். அதற்கு எப்போதும் நாங்க அவர்களுக்கு உறுதுணையா இருப்போம். சொல்லப்போனால் நம் நாட்டில் உள்ள வளத்தைக் கொண்டு கண்டிப்பாக நமக்கான ஒரு வேலையினை அமைத்துக்கொள்ள முடியும். அதன் மூலம் நம் நாட்டின் வளத்தினை மேலும் உயர்த்த வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம்’’ என்றார் அக்ஷயா.