வீட்டுக்கு வரும் டிரங்க் பெட்டி பொட்டிக்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 11 Second

‘இரண்டு வருஷம் முன்பு ஏப்ரல் மாதம்தான் இதனை நானும் என் மனைவி தீபாவும் சேர்ந்து துவங்கினோம். பார்த்த போது புதுசா இருந்தது, செய்யலாம்னு தோணுச்சு, அப்படித்தான் ‘இந்திரா டிரங்க்ஸ்’ என்ற நடமாடும் டிரங்க் பெட்டி பொட்டிக்கினை துவங்கினோம்’’ என்று பேசத் துவங்கினார் திலீப்.‘‘நாங்க சென்னைதான். சவுகார்பேட்டையில் எங்களுக்கு ஃபேன்சி கடை ஒன்று இருக்கு. அதனை என் அப்பா, தம்பி மற்றும் நான் மூவரும் சேர்ந்துதான் நடத்தி வருகிறோம்.

நான் தனியாக ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வந்தேன். புதிதாக ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனம் வாங்க விரும்புபவர்களுக்கு அதனை விற்பனை செய்து வந்தேன். ஆனால் கொரோனாவின் போது, ஊரடங்கு காரணமாக கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதும், தொழிலை பழையபடி துவங்கினேன். ஆனால், அந்த சமயத்தில் யாரும் புதிய வாகனம் வாங்க முன்வரவில்லை. கடையை தினமும் திறப்பேன்.

வாடிக்கையாளர்கள் யாரும் வரமாட்டாங்க. தொழிலே இல்லாமல் சும்மா ேநரத்தினை வீணடிக்க விரும்பாமல், வேறு தொழிலில் ஈடுபடலாம்னு கடையை முழுவதுமாக
மூடிவிட்டேன். அப்பதான் டிரங்க் பெட்டி பொட்டிக் பற்றி கேள்விப்பட்டேன். மேலும் என் மனைவி தீபாவும், வீட்டில் சும்மா இருப்பதால், ஏதாவது தொழில் செய்யலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இது பெண்களுக்கான ஆடை என்பதால், அவரும் நானும் சேர்ந்து செய்யலாம்னு முடிவு செய்து இரண்டு வருடம் முன்பு துவங்கினோம்’’ என்றவரை தொடர்ந்தார் தீபா.

‘‘அவர் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்த போது, கடையை பார்த்துக் கொள்ள காலையிலேயே கிளம்பிடுவார்.

வீட்டில் சமையல் நேரம் போக மற்ற வேளை சும்மாதான் இருந்தேன். அந்த நேரத்தை பயனுள்ளதாக்க விரும்பினேன். வீட்டில் இருந்தபடியே ஏதாவது ஒரு தொழில் செய்கிறேன்னு சொன்னாலும், என்ன செய்வதுன்னு எனக்கு தெரியல. அந்த சமயத்தில் என் உறவினர் ஒருவர் மூலம் இந்த பிசினஸ் பற்றி தெரிய வந்தது. அவர் பிரான்சைசி மூலமாகத்தான் செய்து வருகிறார். ஓரளவிற்கு நல்ல லாபம் பார்க்க முடிகிறது என்றார். அவர் ராஜஸ்தானில் இதை செய்து வருகிறார். சென்னை மக்களுக்கு இது புதுசு என்பதால், எங்களுக்கும் சரின்னு பட்டது, உடனே தொடர்பு கொண்டு அதற்கான பிரான்சைசியினை எடுத்தோம்’’ என்றவர் டிரங்க் பெட்டி பொட்டிக் பற்றி விவரித்தார்.

‘‘இதனை முதன் முதலில் சூரத்தில் உள்ள ஒருவர்தான் பிசினசாக ஆரம்பித்துள்ளார். சூரத் காட்டன் மற்றும் அனைத்து உடைகளுக்கும் பிரபலம். மேலும் அங்கிருந்து தான் மற்ற ஊர்களுக்கு உடைகள் எக்ஸ்போர்ட் செய்யப்படுகிறது. அவரை என் உறவினர் மூலம் தொடர்பு கொண்டு பேசினோம். சென்னையில் இது போல் யாரும் செய்யவில்லை என்பதால், அவர் எங்களுக்கு இதற்கான பிரான்சைசியினை கொடுக்க முன்வந்தார். இதற்காக இடம் அமைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்க வீட்டில் உள்ள அறையில் ஒரு பகுதியினை இதற்காக மாற்றி அமைத்தோம்.

கொரோனா காலத்திற்கு பிறகு பலர் கடைகளுக்கு சென்று உடைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் செலுத்துவதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆன்லைன் பொறுத்தவரை உடைகள் நமக்கு பொருந்தவில்லை என்றால், அதனை மீண்டும் மாற்ற வேண்டும். சில சமயம் அதே டிசைனில் வேறு சைசில் உடை இருக்காது. அடுத்து நாம் ஒரு உடையினை பார்த்து தேர்வு செய்திருப்போம். ஆனால் நமக்கு வருவதோ வேறாக இருக்கும்.

இப்படி சில பிரச்னைகள் இருக்கு. இதில் அப்படி இல்லை. உடை வாங்க விரும்பினால், அவர்களின் அளவிற்கு ஏற்ற உடையினை நாங்க டிரங்க் பெட்டியில் அடுக்கி அதை அவர்கள் வீட்டிற்கே கொண்டு போய் கொடுத்திடுவோம். அவர்கள் அதனை உடுத்திப் பார்த்து பிடித்திருக்கும் உடையினை தேர்வு செய்யலாம். ஸ்மால் முதல் 3xl சைஸ்கள் வரை எங்களிடம் இருக்கு’’ என்றவர் டெலிவரி முதல் பர்ச்சேஸ் வரை இவர்கள் இருவருமே பார்த்துக் கொள்வதாக கூறினார்.

‘‘வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு கொண்டு போய் கொடுப்பது எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். டிசைன்களை தேர்வு செய்வது என் மனைவி’’ என்று பேச ஆரம்பித்தார் திலீப். ‘‘வீடியோ மூலம் தான் நாங்க உடைகளை தேர்வு செய்வோம். அதன் பிறகு அதனை அவர் எங்களுக்கு சூரத்தில் இருந்து பார்சல் செய்திடுவார். இங்கு வாடிக்கையாளர்கள் துணிகளை வாங்க வேண்டும் என்று விரும்பினால், எங்களிடம் ஒரு நாள் முன்பே புக் செய்திடணும்.

காலை, மாலை என இரண்டு வேளையும் நாங்க டெலிவரி செய்வோம். அவர்கள் அளவிற்கு ஏற்ற உடைகளை டிரங்க் பெட்டிக்குள் அடுக்கி, வீட்டிற்கு டெலிவரி செய்திடுவேன். இரண்டு மணி நேரம் அவர்கள் உடைகளை உடுத்திப் பார்த்து பிடித்ததை தேர்வு செய்யலாம். சாதாரண குர்த்தி, சுடிதார் செட்கள் (துப்பட்டாவுடன்) அனைத்தும் ரூ.600 முதல் ரூ.1600 வரை மட்டுமே. தினமும் அலுவலகம் அல்லது கல்லூரிக்கு அணிந்து செல்லக்கூடிய காட்டன் உடைகள் என்பதால், பலர் விரும்பி வாங்குகிறார்கள்.

உடைகளின் டிசைன்களும் அந்தந்த டிரண்டிற்கு ஏற்ப தேர்வு செய்கிறோம். டெலிவரிக்கு ஆட்கள் நியமிக்கவில்லை. நான்தான் டெலிவரி செய்கிறேன். 10 கிலோ மீட்டர் தொலைவு என்றால், அதற்கான டெலிவரி சார்ஜ் செய்வதில்லை. அதற்கு மேல் என்றால் குறைந்த கட்டணம் சார்ஜ் செய்கிறோம். அதேபோல் எங்களை வரவழைத்து உடைகள் ஏதும் தேர்வு செய்யவில்லை என்றாலும் அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். ஆரம்பத்தில் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதில்லை.

ஆனால் பலர் அதை தவறாக பயன்படுத்தியதால், ஒரு உடையாவது தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறோம். சிலர் அதிக தூரம் இருப்பதால், வீடியோ மூலம் உடைகளை தேர்வு செய்வார்கள். அதனை கொரியர் செய்திடுவோம். சில சமயம் உடையின் பிராண்ட் ெபாருத்து அளவு மாறுபடும். அதனால் அவர்களின் அளவினை இஞ்ச் டேப் கொண்டு அளந்து குறிப்பிடச் சொல்கிறோம். அந்த அளவிற்கு ஏற்ப பிடித்த உடைகளை தேர்வு செய்யலாம். சென்னை மட்டுமில்லாமல் வெளிநாட்டிற்கும் கொரியர் மூலம் உடைகளை டெலிவரி செய்கிறோம்’’ என்றவரைத் தொடர்ந்தார் தீபா.

‘‘பிசினஸ் ஆரம்பித்த போது தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் கண்காட்சி மூலமாகத்தான் விற்பனை செய்து வந்தோம். அதன் பிறகு இன்ஸ்டாவில் இது குறித்து பதிவு செய்தோம். அதைப் பார்த்து நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. சிலர் சர்ப்பிரைஸ் பரிசு கொடுக்க சொல்லி எங்களிடம் ஆர்டர் கொடுக்கிறார்கள். ராக்கி தினத்தில் தங்கைக்கு பரிசளிக்க அண்ணன் ஆர்டர் செய்திருந்தார். மகள் வெளிநாட்டில் இருந்து கொண்டு அவரின் அம்மாவின் பிறந்தநாள் பரிசாக கொடுக்க சொன்னார். அந்த சமயத்தில் டிரங்க் பெட்டியை பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று எழுதி அலங்கரித்து கொண்டு செல்வோம். பெண்கள் கிட்டி பார்ட்டி அல்லது தோழிகள் ஒன்றாக கூடும் போதும் ஆர்டர் செய்கிறார்கள்.

பத்து பேர் இருக்கும் குழுவில், ஒவ்வொருவரின் அளவிற்கு ஏற்ப எடுத்து செல்வோம். இது பிரான்சைசி என்பதால், நாங்க உடைக்கான விலையினை நிர்ணயிப்பது இல்லை. சூரத்தில் இருந்தே உடைகள் விலை பட்டியலுடன் வந்திடும். ஆரம்பித்து இரண்டு வருடம்தான் ஆகிறது. தற்போது வீட்டில் இருந்துதான் செய்து வருகிறோம். ஆனால் எதிர்காலத்தில் சிறிய அளவில் பொட்டிக் வைக்கும் எண்ணம் இருக்கு. பொட்டிக் வைத்தாலும் டிரங்க் பெட்டியில் டெலிவரி செய்வதையும் தொடர்வோம்’’ என்றனர் தீபா, திலீப் தம்பதியினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தினமும் உறவில் ஈடுபடலாமா?… அப்படி ஈடுபட்டால் இவ்வளவு நன்மையா..?..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post அழகான நினைவுகளை தரும் ஹேண்ட் காஸ்டிங்!! (மகளிர் பக்கம்)