கோர்மே குச்சி ஐஸ் நம்ம சென்னையில்! (மகளிர் பக்கம்)
கோடை காலம் துவங்கிட்டாலே இரவு பத்து மணிக்கு மணி அடிக்கும் சத்தத்தை வைத்தே குல்ஃபி ஐஸ்வண்டி என்று கண்டுபிடிச்சிடலாம். இரவில் குல்ஃபி ஐஸ் என்றால் பகலில் தள்ளு வண்டியில் மேங்கோ, கிரேப், பால் ஐஸ் என குச்சி ஐஸ்கள் விற்பனை செய்து வருவார்கள். இது நாளடைவில் கோன் ஐஸ், ஐஸ்கிரீம் கேக் மற்றும் ஐஸ்கிரீம் பார்லர்களில் சென்று சாப்பிடும் வழக்கமாக மாறியது. இப்போது அதே குச்சி ஐஸ்தான் ஆனால், அதனை கோர்மே வடிவங்களில் கொடுத்து வருகிறார்கள் சென்னையைச் சேர்ந்த நண்பர்களான ரம்யா மற்றும் விக்னேஷ்.
‘‘ரம்யா என்னுடைய ஃபிரண்டோட ஃபிரண்ட். எனக்கும் அவருக்கும் பிசினஸ் செய்ய வேண்டும் என்று விருப்பம். அந்த விருப்பம்தான் நாங்க இந்த தொழிலில் ஈடுபட காரணம். நான் இந்த தொழிலுக்கு வரும் முன் சினிமாத் துறையில் ஆர்டிஸ்ட் கோஆர்டினேட்டரா வேலை பார்த்து வந்தேன். சினிமா தொழிலில் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பிசினஸ் செய்யணும்னு விருப்பம். எனக்கு உணவு சார்ந்து எதுவும் தெரியாது.
ஆனால் ரம்யா பேஸ்டரீஸ், கேக்ஸ், ஐஸ்கிரீம் எல்லாம் செய்திட்டு இருந்தாங்க. அவங்களுக்கு இந்த துறையில் அனுபவம் இருக்கு. அதற்காக அவர்கள் தனிப்பட்ட முறையில் பயிற்சி எல்லாம் எடுக்கல. எல்லாமே சுயமாக யுடியூப் பார்த்துக் கற்றுக்கொண்டதுதான். கேக், பேஸ்டரீஸ் மற்றும் ஐஸ்கிரீம்களில் அடிப்படை விஷயம் தெரிந்தால் போதும், அதன் பிறகு அதில் நாம் பல மேஜிக்கினை செய்யலாம். அந்த சமயத்தில்தான் லாக்டவுன் வந்தது. கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்றவரை தொடர்ந்தார் ரம்யா.
‘‘லாக்டவுன், பலருடைய தொழில் மற்றும் வேலையினை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளி இருந்தாலும், அந்த இரண்டு வருட காலம் குச்சி ஐஸுக்கான விதை விதைக்கப்பட்டதுன்னு சொல்லலாம். வீட்டில் சும்மா டி.வி பார்த்துக் கொண்டு இல்லாமல், அந்த இரண்டு வருடம் என்ன தொழில் துவங்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சோம். அப்பதான் பாப்சிகல்ஸ் செய்யலாம்னு எண்ணம் ஏற்பட்டது. பாப்சிகல்ஸ் என்பது குச்சி ஐஸ்தான். இதை சாதாரணமாக கொடுக்காமல் கோர்மே வடிவத்தில் கொடுக்க நினைச்சோம்.
கோர்மே என்றால் உயர் ரகம் மற்றும் சிறப்பு முறையில் தயாரிக்கப்படுவது என்று அர்த்தம். எனக்கு ஏற்கனவே உணவுத் துறையில் அனுபவம் இருந்ததால், ஒவ்வொரு ஃபிளேவராக செய்து பார்த்தோம். சில ஃபிளேவர் நன்றாக வந்தது. சிலது நாங்க விரும்பியது போல் இல்லை. டிரையல் அண்ட் எரர் முறையில் நிறைய ஆய்வுகளில் ஈடுபட்டோம். அதில் எது சுவையில் நன்றாக வந்ததோ அதனை தேர்வு செய்தோம்.
பாப்சிகல்ஸ் நம்ம ஊரில் ஏற்கனவே இருக்கு. ஆனால் கோர்மே ஐஸ்கிரீம்கள் தனிப்பட்ட பார்லர் அல்லது நட்சத்திர ஓட்டல்களில் வைத்திருப்பார்கள். நாங்க கொஞ்சம் வித்தியாசமாக அதே ஐஸ்கிரீமினை ஸ்ட்ரீட் உணவாக கொடுக்க விரும்பினோம். காரணம், இது போன்ற உயர் ரக ஐஸ்கிரீம்களையும் எல்லோரும் சுவைக்க வேண்டும். அதனால்தான் ரூ.60 முதல் ரூ.180 வரை விற்பனை செய்கிறோம்.
பத்து ரூபாய்க்கு கிடைக்கும் குச்சி ஐஸிற்கு இவ்வளவு விலை கொடுக்க வேண்டுமா என்று கேட்கலாம். பத்து ரூபாய்க்கு கொடுக்கும் குச்சி ஐஸில் நாங்க கொடுக்கும் தரம் மற்றும் சுவை இருக்காது. சாதாரணமாக விற்கப்படும் சார்பே குச்சி ஐஸின் தரம் மற்றும் சுவையினை ஒப்பிட்டு பார்க்கும் போது, எங்களின் சார்பே குச்சி ஐஸில் நிறைய வித்தியாசம் இருக்கும். கிரேப் சார்பே என்றால் நாங்க திராட்சை பழங்களை கொண்டுதான் செய்கிறோம்.
அதன் எசன்சினை ஐஸ் துகள்களுடன் சேர்ப்பதில்லை. மேலும் பாலால் தயாரிக்கப்படும் மற்ற குச்சி ஐஸ்களுக்கு தரமான பொருட்களைத்தான் பயன்படுத்துகிறோம். இவை அனைத்தும் ஹாண்ட்கிராப்டெட். அதாவது ஒவ்வொன்றும் தனிப்பட்ட முறையில் செய்யப்படுவதால், இதன் தரத்தினை சுவைக்கும் போது கண்டிப்பாக உணர முடியும்’’ என்றவர் இதனை தயாரிக்கும் முறை மட்டுமில்லாமல், அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கிச்சன் அமைப்பு என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளனர்.
‘‘பல ஆய்வுகளுக்கு பின் குச்சி ஐஸிற்கு ஒரு வடிவம் கொடுக்க முடிந்தது. அதற்காக நாங்க கையில் வைத்திருந்த சேமிப்பு எல்லாவற்றையும் இதற்காகவே செலவு செய்தோம். சொல்லப் போனால் நாங்க கடையினை ஆரம்பித்த போது எங்க கையில் சிறிய அளவில் சேமிப்பு கூட இல்லைன்னுதான் சொல்லணும். முதல் படியில் இருந்துதான் துவங்கினோம். ஆனால் நாங்க ஆரம்பிச்ச காலம் முதல் இன்று வரை எங்களின் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்’’ என்றார் விக்னேஷ். ‘‘ஐஸ்கிரீம்களை நானும், ரம்யாவும் தான் தயாரிக்கிறோம்.
ஸ்ட்ரீட் ஃபுட் என்பதால் அதற்கான அனுமதி மற்றும் உரிமம் வாங்காமல் சாலையில் கடை போட முடியாது. எங்க கடைக்கு தேவையான உரிமம் பெற்ற பிறகு தான் கடையினை துவங்கினோம். மாலை ஆறு மணிக்கு கடையை திறப்போம். ஒரு மணி நேரத்தில் எல்லாம் தீர்ந்திடும். க்யூவில் நின்று வாங்குவார்கள். அன்று இரவு நானும் ரம்யாவும் மறுநாள் தேவைக்கான ஐஸ்கிரீம்களை தயாரிப்போம். இந்த ஐஸ்கிரீம் செட்டாக சுமார் ஆறு முதல் எட்டு மணி நேரமாகும்.
கூட்டம் அதிகரித்ததால், ஏமாற்ற விரும்ப மனம் இல்லாமல், ஐஸ்கிரீம்களை அதிக அளவில் ஸ்டாக் செய்ய முடிவு செய்தோம். அதனால் இதற்கான பிரத்யேக கிச்சன், இயந்திரங்கள் விற்பனை வண்டியினை தயார் செய்தோம். இவை தயாராக இரண்டு மாசமானது. அதன் பிறகு மீண்டும் புதுப்பொலிவுடன் திறந்தோம். மக்களின் ஆதரவு மீண்டும் கிடைக்குமான்னு ஒரு சந்தேகத்தோடுதான் திறந்தோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு இவ்வளவு பெரிய ஆதரவு தருவாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை. இப்போது இரவு பத்தரை மணி வரை எங்க ஐஸ் கிரீம்ஸை சுவைக்கலாம்’’ என்றவர் ஐஸ்கிரீம் ஃபிளேவர்கள் பற்றி விவரித்தார்.
‘‘தியோபுரோமா, ஸ்மோர்ஸ், குக்கீஸ் அண்ட் கிரீம், மேங்கோ சீஸ் கேக், பாப்கார்ன் ஐஸ்கிரீம், பைனாப்பில் லெமன், குனாஃபா ஃபிளேவரிலும் ஐஸ்கிரீம் செய்கிறோம். இதைத் தவிர சார்ஃபேவிலும் பல ஃபிளேவர்கள் உள்ளது. தியோபுரோமா எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம். சாக்லெட் சாஸ், வைட் சாக்லெட், மில்க் சாக்லெட், டார்க் சாக்லெட் மற்றும் பிஸ்கெட் என ஐந்து லேயர் கொண்டது.
சாப்பிடும் போது பிஸ்கெட்டின் மொறுமொறுப்புடன் பல வித சாக்லெட் ஃபிளேவர்களை சுவைக்கலாம். ஸ்ேமார்ஸ், மில்க் சாக்லெட் மேல் மார்ஷ்மெல்லோஸ் வைத்து அதனை தீயில் டோஸ்ட் செய்து சாக்லெட் சாஸ் மற்றும் பிஸ்கெட் துகள்களை தூவிக் கொடுப்போம். பனானா நியுட்டெல்லா ஃபிளேவருக்கு பிரவுனியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இப்போது மாம்பழம் சீசன் என்பதால் மேங்கோ சீஸ் கேக் ஐஸ்கிரீம்களை மீண்டும் அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
மேலும் நாங்க பழங்களைப் பொறுத்தவரை அதன் எசன்ஸ்களையோ அல்லது பழங்களையோ உறைய வைப்பதில்லை. அன்று கிடைக்கும் ஃப்ரஷ் பழங்களை கூழாக்கி செய்வதால், அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை பயன் படுத்துகிறோம். இனிமேல் தான் மாம்பழம் சீசன் என்பதால், அதற்காக காத்திருக்கிறோம். அடுத்து பிரேக்பாஸ்ட் ஐஸ்கிரீமை (தானியங்கள் கொண்டு தயாரிக்கப்படுவது) அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
தற்போது மற்றொரு கிளையினை இரண்டு மூன்று மாதங்களில் துவங்க இருக்கிறோம். நானும் ரம்யா மட்டும் தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதால், மற்றொரு கிளை ஆரம்பித்தால், அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய இடமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறார்கள். ஒரு சிறிய அளவில் டெசர்ட் பார்க் போல் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கு. அதில் ஐஸ்கிரீம் மட்டுமில்லாமல் அனைத்து டெசர்ட்களும் இருக்கும். பிரான்சைசி குறித்தும் சிந்தனை இருக்கு’’ என்றனர் நண்பர்களான ரம்யா மற்றும் விக்னேஷ்.