தி கேரளா ஸ்டோரி!! (மகளிர் பக்கம்)
கேரள மாநிலத்துப் பெண் ஒருவர் திடீரென்று காணாமல் போகிறார். செவிலியராக பணிபுரிந்து வந்தவர் தன் பெயரை பாத்திமா என்று மாற்றிக் கொண்டு இஸ்லாமிற்கு மதம் மாறுகிறார். இந்துவான இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி, இஸ்லாமிய தேசமான ஈராக் மற்றும் சிரியாவில் இயங்கும் ISISல் தன்னை இணைத்துக் கொண்டு அதற்காக செயல்பட துவங்குகிறார். அவர் அந்த இயக்கத்தின் தீவிரவாத செயலில் ஈடுபட்ட காரணத்தால் ஆப்கான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காபூல் சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் மட்டுமில்லாமல் அவரைப் போல் 32 ஆயிரம் கேரள இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்கள் மதம் மாற்றப்பட்டு ISISல் இணைந்து இருப்பது அவர் கைதான பிறகு தெரிய வருகிறது.
இந்த உண்மைச் சம்பவத்தைத் திரைப்படமாக ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் இயக்கியுள்ளார் சுதிப்தோ சென். இம்மாதம் 5ம் தேதி வெள்ளித்திரையில் ரிலீசாக இருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் தற்போது ரிலீசாகி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் கதையினை இயக்குனர் சென் மற்றும் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
இஸ்லாமிய நாடான ஈராக் மற்றும் சிரியாவிற்கு (ISIS) ஆட்சேர்ப்பு செய்வதற்காக கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டதைப் பற்றிய கதைதான் ‘தி கேரளா ஸ்டோரி’. இதன் டீசர் இணையத்தில் வெளியான நிலையில் திரைப்படம் திரையில் வரும் முன்பே பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் விபுல் பேசுகையில், ‘‘இந்தத் திரைப்படம் கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல ஆய்வுகள் செய்து உண்மையை இதன்மூலம் வெளியே கொண்டு வர நானும் இயக்குனர் சென்னும் நினைச்சோம்.
பல காரணங்களால் மறைக்கப்பட்ட மற்றும் பேசத் தயங்கிய உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சிதான் ‘தி கேரளா ஸ்டோரி’. கேரளாவைச் சேர்ந்த நான்கு பெண்கள் எவ்வாறு இஸ்லாம் மதத்திற்கு மாறி தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதைத்தான் இப்படம் குறிப்பிடுகிறது. மேலும் பெண்கள் எவ்வாறு அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பதை காணும் போது அது உங்களை கண்டிப்பாக நிலைகுலையச் செய்யும்.
இயக்குனர் சென் என்னை சந்தித்து இந்த உண்மை சம்பவத்தைப் பற்றி கூறிய போது, என்னால் என் கண்ணீரை அடக்கமுடியாமல் மிகவும் திணறினேன். நான்கு ஆண்டுகள் அவர் இந்தச் சம்பவம் குறித்து மேற்கொண்ட ஆய்வுதான் என்னை இந்தத் திரைப்படத்தை கண்டிப்பாகத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது. நாங்க இருவரும் மிகவும் யதார்த்தமாகவும் ஒவ்வொரு நிகழ்வுகளும் துல்லியமாக சித்தரிக்கப்பட வேண்டும் என்றும் விரும்பினோம். கேரள மக்களே தவிர்க்க நினைக்கும் அந்த நிகழ்வினை பற்றி எல்லோருக்கும் தெரியப்படுத்த நினைத்தோம். இதன்மூலம் நமது தேசத்தின் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்தான அச்சுறுத்தலை வெளிப்படுத்துவது மட்டுமில்லாமல் இந்தியாவிற்கு எதிராக தீட்டப்படும் சதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம்’’ என்றார் விபுல்.
கேரளாவின் அழகிய நிலப்பரப்புடன் துவங்குகிறது படத்தின் டீசர். இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர் ஷாலினி உன்னிகிருஷ்ணன். கல்லூரி படிப்பிற்காக ஹாஸ்டலில் தங்கி படிக்கச் செல்கிறார். அங்கு அவர் தங்கி இருக்கும் அறையில் இஸ்லாமிய பெண் ஒருவர் இணைகிறார். அவர், ஷாலினி மற்றும் அவரின் மற்ற தோழிகளை இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்கிறார். அதன்பிறகு அவர்கள் ISISல் இணைகிறார்கள். இதனால் கைதாகும் ஷாலினியிடம் அதிகாரிகள் விசாரிக்க, அவர் ‘‘நான் எப்போது ISISல் சேர்ந்தேன் என்பதை அறிவதைவிட, நான் ஏன், எப்படி ISISல் சேர்ந்தேன் என்பதை தெரிந்துகொள்வது முக்கியம்’’ என்கிறார்.
அதா ஷர்மா, ஷாலினி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இவருடன் யோகிதா பிஹானி, சோனியா பலானி மற்றும் சித்தி இதானியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ஷாலினி போல் ஆயிரக்கணக்கான பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்படும் காரணம் என்ன? எவ்வாறு மதம் மாற்றப்பட்டார்? ISISல் இணைய காரணம்? என்பதற்கான விளக்கம்தான் ‘தி கேரளா ஸ்டோரி’. இது பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கிறது.