புடவைகளுக்கு மெருகூட்டும் டாசில்ஸ்! (மகளிர் பக்கம்)
ஆரம்ப காலம் முதலே பெண்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது புடவை. புடவைகளில் பல வகைகள் இருந்தாலும், ஒவ்வொன்றும் அணிந்து வலம் வரும் போது பார்க்கவே அழகாக இருக்கும். அதிலும் ஒவ்வொரு புடவையும் தனிச் சிறப்பு மற்றும் பாரம்பரியம் கொண்டது. அப்படிப்பட்ட புடவைக்கும் அதிலிருக்கும் வேலைப்பாடுகள் மென்மேலும் அழகை சேர்த்தாலும், ஒரு புடவையின் முக்கிய அழகே அதன் முந்தானை பகுதியில் உள்ள சுங்கு வேலைப்பாடுகள். இதனை டாசில்ஸ் (Tassels) அல்லது குச்சு என்றும் கூறுவார்கள்.
கண்களைப் பறிக்கும் வண்ணங்களில் புடவைகள், மனதைக் கவரும் டிசைன்கள், பிரமாண்டமான வேலைப்பாடுகள் இருந்தாலும் அதில் சிறியதாக சுங்கு போட்டால் மட்டுமே ஒரு திருப்தி கிடைக்கும். சிலர் அதை தாங்களே போட்டுக் கொள்வார்கள். ஒரு சிலர் வெளியில் கொடுத்து போட்டுக் கொள்வது உண்டு. புடவைகள் மற்றும் ப்ளவுஸ்களில் சுங்கு போடுவதை பொழுதுபோக்கிற்காக கற்றுக்கொண்டது மட்டுமில்லாமல் அதனை ஒரு தொழிலாக நடத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த சாந்தி முத்து. இந்த நூல் வேலைப்பாடுகளில் தனக்கு ஆர்வம் வந்தது முதல் அதில் உள்ள சிறு சிறு சிக்கல்கள் வரை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
‘‘நான் படிச்சது பி.பி.ஏ. ஆனால் டெய்லரிங்ல எனக்கு ஆர்வம் அதிகம். அதுக்கான காரணம் என்னோட அம்மா. சின்ன வயசிலிருந்தே அவங்க புடவைகளுக்கு பால்ஸ் தைப்பதை பார்த்து நானும் டெய்லரிங் கத்துக்கணும்னு விரும்பினேன். அதற்கான தனிப்பட்ட வகுப்புகளுக்கு போய் கத்துக்கிட்டேன். அதோட தொடர்ச்சியா, ஆரி வொர்க் போடவும் கத்துக்கிட்டேன். அப்போது, எனக்கு கற்றுக்கொடுத்த என்னோட பயிற்சியாளர் புடவைகளில் சுங்குகள் போடுறதை பார்த்து அதையும் கற்றுக் கொண்டேன்.
பொதுவாக, இந்த தையல், ஆரிவொர்க் கத்துக்கிறவங்க அதை ஒரு பொழுது போக்கிற்காகத்தான் கத்துப்பாங்க. ஆனா, எனக்கு இதை பெரிய அளவில் கொண்டு வரணும்னு ஆசை இருந்தது. இதை ஒரு தொழிலாக மாற்றணும்னு நினைச்சேன். நான் என் கணவர் உதவியுடன் ஒவ்வொரு கடைகளா ஏறி இறங்கினோம். பிறகு நான் செய்த டிசைன்ஸ் எல்லாம் என்னுடைய இன்ஸ்டாகிராமில் ‘Tassels world 1947’ எனும் பெயரில் பதிவு செய்தேன். அதுக்கான முயற்சியில் எனக்கு கிடைச்ச வெற்றி பெருசு.
சொல்லப்போனால், இப்போ மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரைக்கும் புடவைகளுக்கு டாசில்ஸ் போடணும். யாரை கேட்டாலும் ‘சாந்தி டாசில்ஸ்’னு என்னோட பெயரை தான் சொல்றாங்க. அதுவே என்னுடைய தொழிலுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியா நான் நினைக்கிறேன்’’ என்றவர் தன்னுடைய ஐந்து ஆண்டு கால டிசைனர் வேலைகளை குறித்து பகிர்ந்தார்.
‘‘என் அக்காவும் சரி, என் அண்ணாவும் சரி அவங்களுக்கான துறையில சாதிச்சு காட்டிட்டாங்க. அதனால் எனக்குப் பிடிச்ச இந்த துறையில் நானும் பெருசா ஜெயிக்கணும்னு நினைச்சேன். அதற்கு ஏற்ற மாதிரியே எங்களுக்கு இடமும் அமைஞ்சது. இப்போ நாங்கள் இருக்கும் ஏரியாவில் IT வேலைக்கு செல்பவர்கள் நிறைய இருக்காங்க. அவர்கள் இது போன்ற டாசில்ஸ் வேலைகளை அதிகம் விரும்புகின்றனர்’’ என்ற சாந்தி, இந்த வேலைப்பாடுகள் செய்வதற்கு குறைந்தது ரூ.400… அதிகபட்சம் ரூ.8,000 வரை செலவாகும் என்றார். ‘‘இதில் ஆச்சரியத்திற்குரிய ஒரு விஷயம் என்னவென்றால், பெங்களூரில் 70 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் புடவையின் முந்தானையில் டாசில்ஸ் வேலைப்பாடு இல்லாமல் புடவைகளே கட்டுவதில்லை. இதற்கென பிரத்யேக டிசைனர்கள் அங்குள்ளனர்.
ஆனால் சென்னையை பொறுத்தவரை டாசில்ஸ் வேலைப்பாடு செய்யும் டிசைனர்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். டாசில்ஸ் பொறுத்தவரை 1000த்துக்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளது. அதில் சுமார் 500க்கும் மேற்பட்ட டிசைன்களை எனக்கு போடத் தெரியும். மேலும் 850 டாசில்ஸ் ஆர்டர்கள் மட்டுமே செய்திருக்கேன். நான் தரத்தில் எப்போதுமே காம்பிரமைஸ் செய்வதில்லை. அதனால்தான் வாடிக்கையாளர்கள் என்னைத் தேடி வராங்க.
என்னுடைய தொழிலுக்கு என் குடும்பம் ஒரு பக்கம் ஆதரவு கொடுத்தாலும், மறுபக்கம் என் வாடிக்கையாளர்கள் எனக்கு பக்கபலமாக இருக்காங்க. உண்மைய சொல்லணும்னா, என் கணவர் என்னுடைய தொழில் ரீதியாக எனக்காக நிறைய உதவியிருக்கார். ஆரம்பத்தில் ஒரு புடவை கொடுக்க யோசிச்சவங்க இப்போ ஒரு நாளைக்கு 4 புடவைகளுக்கு டாசில்ஸ் போட்டுத்தர சொல்லி கேட்குறாங்க. அதன் ெதாடர்ச்சியாக புடவைகளுக்கு சுங்கு வைப்பது மட்டுமில்லாமல் ப்ளவுஸ்களுக்கும் ஹாங்கிங்க்ஸ் (Blouse Hangings) செய்து கொடுக்கிறோம்.
டாசில்ஸ் பொறுத்தவரை ரெண்டே வகைதான். அதில் அதிகமா பெண்கள் விரும்பி போடுவது பேஸிக் மாடல். அதோட விலை ரூ.400 முதல் ரூ.500 வரை இருக்கும். அதுவே கஸ்டமைஸ் செய்யணும்னா ரூ.1000த்தில் இருந்து ஆரம்பிக்கும். நான் டிசைன் செய்து இருக்கும் 850 மாடல்களும் பேசிக் டிசைன்கள்தான். அடுத்து லேட்டஸ்ட் டிசைன்களில் 1000 டிசைன்களாவது முடிக்கணும்னு ஆசை. ஒரு புடவைக்கு பேஸிக் மாடல் டாசில்ஸ் போட 4-5 மணி நேரம் ஆகும். அதே சமயம் ஒரே நாளில் முடிக்கவும் முடியாது.
புடவைக்கு தேவையான நூல், அதற்கான டிசைன்ஸ் எல்லாம் முதல் நாளிலே தயார் செய்து வைத்துக் கொண்டுதான் வேலையை ஆரம்பிக்கணும். இதுவே அட்வான்ஸ்டு மாடலாக இருந்தா ஒரு வாரம் வரைக்கும் நேரம் எடுக்கும். இதற்கான விலையை நாங்க எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் டாசில்ஸில் பயன்படுத்தியிருக்கும் பொருட்கள் குறித்து மாறுபடும்.
துணி தைப்பது, ஆரி வேலைப்பாடுகள், பிளவுஸ் ஹாங்கிங்ஸ், டாசில்ஸ், புடவைகளுக்கு பால்ஸ் அடித்து மடித்து தைப்பது என ஒரு புடவை சார்ந்து அனைத்து விஷயங்களையும் நான் தெரிந்து கொண்டேன். இவை அனைத்தையும் சாதாரண மாடலில் செய்தால் ரூ.3000 முதல் ரூ.4000 வரை செலவாகும். சிலர் ஆரி வேலைப்பாடுகள் கிராண்டாக வேண்டும் என்பார்கள். அவர்களுக்கு 10 ஆயிரத்திற்கு மேல் செலவாகும்’’ என்றார்.
‘‘என் வாடிக்கையாளர் அனைவரும் டாசில்ஸ்காகவே வராங்க. என்னுடைய வளர்ச்சிக்கு ஆரம்பப் புள்ளியாக உதவியது ‘பாவை டெய்லரிங்’ எனும் டிசைனர் கடை. இதன் உரிமையாளர் பெண் என்பதால் அவருக்கு நான் சொல்வது புரிந்து அவர் கடையின் வாடிக்கையாளர்களின் உடைகளை என்னிடம் கொடுத்து டாசில்ஸ் கட்டித்தர சொல்வார். அவர் மூலமாக பல துணிக்கடையின் வாடிக்கையாளர்கள் எனக்கும் வாடிக்கையாளர்கள் ஆனார்கள். நான் செய்யும் வேலைகளிலே ரொம்பவும் கடினமானது ப்ளவுஸ் ஹாங்கிங்ஸ் செய்வதுதான். வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் எங்களையே புடவை மற்றும் ப்ளவுசிற்கு ஏற்ப செய்து தர சொல்வார்கள்.
ஒரு சிலர் ஒரு டிசைனை பார்த்துவிட்டு அதே போல் வேண்டும் என்பார்கள். அதற்காக வேலைகளை திட்டமிட்டு சரிவர செய்தால்தான் வாடிக்கையாளர்களை முழு திருப்தி அடைய செய்ய முடியும். இதில் 25 வயதிற்குட்பட்டவர்கள், நூலினால் செய்யப்பட்ட ஹாங்கிங்ஸை விரும்புகிறார்கள். 40 வயதிற்கு மேல் உள்ளவர்களின் சாய்ஸ் துணிகளால் செய்யப்பட்ட ஹாங்கிங்ஸாக உள்ளது. தற்போது ப்ளவுஸ்களில் ஆரி வேலைப்பாடுகள் செய்பவர்களே இதனையும் செய்து விடுவதால், நான் ப்ளவுஸ் ஹாங்கிங்ஸ் அதிகம் செய்ய விரும்புவதில்லை.
இருப்பினும், லெஹங்கா போன்ற ஆடைகளுக்கு பிரத்யேகமாக செய்து தரச் சொல்லி வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள். தற்போது இவைகளுடன் நூலினால் ஆன வளையல்களையும் செய்து கொடுத்து வருகிறேன்’’ என்றவர் தன் கணவரின் உதவியோடு ஆர்டர்களை நேரில் சென்று எடுத்து டெலிவரி செய்வதாக கூறினார்.
‘‘2018க்குப் பிறகு முழுமூச்சுடன் இதில் கால் பதித்து வரும் எனக்கு, என் கணவர் மட்டுமின்றி என்னுடைய அண்ணியும் அவர்களின் குழந்தைகளும் முழு ஆதரவு தருகிறார்கள். நாங்க ஐந்து பேர் கொண்ட குழுவாகத்தான் டாசில்ஸ் பயிற்சியினை மேற்கொண்டோம். அதில் நான் மட்டும் தான் இதனை தொழிலாக செய்து வருகிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை டாசில்ஸ் மற்றும் ஹாங்கிங்ஸ் போடுபவர்கள் மிகவும் குறைவு.
இதனை பெண்கள் கற்றுக் கொண்டு தொழில் ஆரம்பிக்கலாம். அதற்காக பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறேன். அதில் என்னிடம் பயின்ற மாணவிகள் இப்போது இதன் மூலம் வருமானம் பார்த்து வருகிறார்கள். தற்போது முழுநேர டாசில்ஸ் வகுப்புகள் எடுக்க ஒரு கல்லூரியில் வாய்ப்பு கொடுத்துள்ளனர். இதன் மூலம் டாசில்ஸ் டிசைனர்கள் பலரை உருவாக்குவதில் எனக்கு பெருமை’’ என்றவர், தனக்கு கிடைச்ச இந்தப் பெயருக்கு அவரின் தந்தைதான் காரணம் என்றார் பெருமையுடன்.