கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
* எந்த வகை சட்னி அரைத்தாலும் சிறிதளவு வெள்ளைப் பூண்டை சேர்த்தால் மணமாகவும், சுவையாகவும் சட்னி இருக்கும்.
* புளிக்குழம்பு, சாம்பார் போன்றவற்றை கொதித்து இறக்கும்போது துளி வெந்தயம் பொடி தூவி இறக்கினால், நல்ல வாசனையோடு திகழ்வதோடு, உடலுக்கு ஆரோக்கியமும் அளிக்கும்.
* துவரம்பருப்பை வேகவைக்கும் போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
* முளைகட்டிய பச்சை பயிறை அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து, பிசைந்து செய்யப்படும் சப்பாத்தி மிகவும் சத்தோடு, சுவையாகவும் இருக்கும்.
– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
* பக்கோடா மாவு கலக்கும் போது அதில் சிறிதளவு நெய், உப்பு, தயிர் சேர்த்துக் கொண்டால் பக்கோடா மொறு மொறுப்பாக இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும்.
* உளுத்தம் பருப்பு வடை செய்ய மாவு அரைக்கும் போது, அத்துடன் சிறிதளவு துவரம் பருப்பை சேர்த்துக் கொண்டால் வடை மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
– எஸ்.சுஜிதா, மதுரை.
* வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி அதனுடன் தேவையான காய்கறிகள், உப்பு சேர்த்து, வதக்கவும். மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். கத்தரிக்காய்களை நீளவாக்கில் நறுக்கி, உள்ளிருக்கும் விதையை எடுத்துவிடவும். தயாரித்து வைத்த கலவையை கத்தரிக்காயில் நிரப்பவும். மைதாக்கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
* இரண்டு பங்கு பாசிப்பருப்பு, ஒரு பங்கு கடலைப்பருப்பு என்ற விகிதத்தில் அரைத்த மாவில் ‘மைசூர் பாகு’ செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.
* குலோப்ஜாமூன் மாவைப் பிசைந்து உருட்டி வைக்கும்போது, சிறிய ஊசியைக் கொண்டு துவாரம் இட்டு, பின்னர் பொரித்து எடுத்தால் மாவு உள்ளேயும் நன்றாக வெந்து இருக்கும்.
* அப்பத்துக்கு மாவு தயாரிக்கும்போது சிறிதளவு சுக்குத்தூள் சேர்த்து அப்பம் சுட வயிற்றுக்கு எந்த கேடும் ஏற்படாது.
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
* எலுமிச்சை ஊறுகாயுடன் சிறிது வதக்கிய இஞ்சி துண்டுகள் சேர்த்தால் ருசி கூடும்.
* குளிர்ந்த தண்ணீரில் தேங்காய் மூடிகளை நனைத்து வைத்தால் மூன்று நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
* மீன் குழம்பில் தேங்காய்ப்பால் சேர்த்து சமைத்தால் சுவை சூப்பராக இருக்கும்.
– எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
* பருப்புப்பொடி அரைக்கும்போது, இரண்டு டீஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நல்லது.
* அரிசி, பருப்பு புழுக்காமல் இருக்க காய்ந்த கறிவேப்பிலைகளை அடியில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது.
– எஸ்.சடையப்பன், திண்டுக்கல்.
* மில்க் ஸ்வீட் மீந்திருந்தால் அதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்தக் கலவையை பாலில் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
* லட்டு செய்யும்போது முந்திரி, திராட்சை, கிராம்பு, ஏலக்காய் இவற்றுடன் கொப்பரை தேங்காயை துருவிப்போட்டால் நன்றாக இருக்கும்.
* இடியாப்ப மாவில் கொஞ்சம் நெய் விட்டுப் பிசைந்தால் இடியாப்பம் மிருதுவாக இருக்கும்.
* காய்கறிகளை நறுக்கி குக்கரில் வைத்து கொஞ்சமாகத் தண்ணீர், உப்பு போட்டு ஒரு விசில் வந்தவுடன் உடனே இறக்கி குக்கரைத் திறக்க காய்கறிகள் நிறம் மாறாமல் பசுமையாகவே இருக்கும்.
– ஆர்.பூஜா, சென்னை.
* பாசுமதி அரிசியை களைந்து நீரை வடித்து வைக்கவும். வாணலியில் நெய்யைக் காய வைத்து அரிசியை வறுக்கவும். இரண்டு நிமிடங்கள் நிதானமாய் தீயில் வறுத்தபின் உப்பு, சர்க்கரை, தண்ணீர், ஆரஞ்சுச்சாறு சேர்த்து ஒரு விசில் வரும்வரை வேக வைக்கவும். ஆறியதும் திறந்து ஆரஞ்சு சுளைகள் சேர்ந்து, நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸைத் தூவவும். பைனாப்பிள் ரைத்தா அல்லது பூந்தி ரைத்தாவுடன் பரிமாறவும். மாட்டுப்பொங்கலன்று இதை செய்து அசத்தலாம்.
* வாழைக்காய் சமைப்பது நம் பாரம்பரிய பண்டிகை ஸ்பெஷல். இதை இரண்டாக வெட்டி வேக விட்டு தோலுரித்து மசிக்கவும். பிறகு இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, அரிசி மாவு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துப் பிசைந்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.
* வெல்லப் பொங்கலுக்குத் தேங்காய்ப்பாலையும், சர்க்கரைப் பொங்கலுக்கு மாட்டுப்பாலையும் சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.
– இந்திராணி தங்கவேல், சென்னை.
* பச்சை காய்கறிகளில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து வேக வைத்தால் காய்கறிகளின் இயற்கை நிறம் சிதையாது.
* பக்கோடா மாவில் சிறிது நெய், சிறிது உப்பு கலந்த தயிரை சேர்த்தால் பக்கோடா மொறு மொறுப்பாக இருக்கும்.
– கே.கவிதா, வேலூர்.
* சேனைக்கிழங்கு நறுக்கும்போது கையில் நல்லெண்ணெயை தடவிக் கொண்டால் அரிப்பு உண்டாகாது.
* கொத்தவரங்காயை சிறிது எண்ணெயில் வதக்கி விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். சாப்பிடவும் மெதுவாக இருக்கும்.
– கே.ராகவி, திருவண்ணாமலை.
பாலக் பாசிப்பருப்பு வறுவல்
கீரை என்றாலே அனைவருக்கும் ஒரு வெறுப்பு ஏற்படுவது சகஜம்தான். ஆனால் கீரையில் இருக்கும் சத்துக்களை போல் வேறு எந்த உணவிலும் சத்துக்கள் இல்லை. எனவே பிள்ளைகளுக்கு கீரை வகைகளை சுவையாக சமைத்து தருவது மிக முக்கியம். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் சமையல் முறையில் அனைத்து வகை கீரைகளையும்
சுவையாக சமைத்து உண்ணலாம்.
தேவையானவை:
பாலக்கீரை – 2 கட்டு,
பாசிப் பருப்பு – 1/2 கப்,
இஞ்சி-பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்,
பூண்டு – 6,
பச்சை மிளகாய் – 4,
வெங்காயம் – 1,
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிறிதளவு.
செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் மற்றும் பாசிப் பருப்பை சேர்த்து வதக்கவும். இவை அனைத்தும் நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், பாலக் கீரை, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சமைத்து இறக்கவும்.