நட்புக்கு எல்லைகள் கிடையாது! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 3 Second

‘‘உண்மையான நட்புக்கு புரிதல் ரொம்பவே அவசியம். சில சமயம் நாம் ேகாவமா இருப்போம். நாம ஏன் கோவமா இருக்கோம்னு புரிந்து கொண்டு அதன்படி செயல்படுபவர்
தான் உண்மையான தோழின்னு நான் சொல்வேன். எந்த உறவிலும் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். நட்பு என்ற உறவிலும் ஒருத்தர் மேல் மற்றொருவருக்கு எதிர்பார்ப்பு இருக்கும். அதை புரிந்து கொள்வதும் நட்பு தான். என்னைப் பொறுத்தவரை நட்பிற்கு எல்லைகள் என்று வரைமுறை படுத்த முடியாது’’ என்கிறார் சன் டி.வியில் டாப் ரேட்டிங்கில் உள்ள கயல் தொடரின் நாயகி சைத்ரா ரெட்டி.

‘‘கர்நாடகாவில் உள்ள சிறிய கிராமத்தில் தான் நான் பிறந்தேன். என்னுடைய அம்மாவின் அம்மா ரொம்ப ஸ்ட்ராங்கான லேடி. அவங்கதான் என் அம்மாவிற்கு பிரசவம் பார்த்தாங்க. நானும் அக்காவும் வீட்டில்தான் பிறந்தோம். அதன் பிறகு நான் படிச்சது எல்லாம் பெங்களூரில். எங்களுடையது ரொம்ப சாதாரணமான குடும்பம். அப்பா என்னையும் அக்காவையும் ரொம்பவே கஷ்டப்பட்டு தான் வளர்த்தார். அப்பா ஆரம்பத்தில் சின்னதா தையல் கடை வச்சிருந்தார். சில காலம் கழித்து அதை பொட்டிக்கா மாற்றி அமைத்தார். இப்ப வரைக்கும் அப்பா அதை நிர்வகித்து வருகிறார். நான் படிச்சது எல்லாம் பெங்களூரில்தான்.

அப்ப எனக்கு 19 வயசு இருக்கும். பெங்களூரில் உள்ள நேஷனல் கல்லூரியில் படிச்சிட்டு இருந்தேன். கல்லூரியில் நடைபெறும் எல்லா கலை நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்வேன். அப்படி நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியினை பார்த்து தான் எனக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர் என்னை ஆடிஷனுக்கு வரச்சொன்னாங்க. அதற்கு முக்கிய காரணம் என்னுடைய உயரம். எனக்கு சின்னத்திரை பற்றி எதுவுமே தெரியாது. முதலில் எனக்கு அதில் விருப்பமே இல்லைன்னு தான் சொல்லணும். ஜாலியா படிச்சிட்டு ஃபிரண்ட்ஸ்சோட சுத்திட்டு இருந்தேன். திடீரென்று ஆடிஷனுக்கு வரச்சொன்ன போது… சரி போய் டிரை செய்யலாம்ன்னு தான் வந்தேன். அதன் பிறகு அவங்களிடம் இருந்து எந்த தகவலும் வரல.

ஒரு மூணு மாசம் கழிச்சு, என்னை தேர்வு செய்துவிட்டதாகவும், கன்னடத்தில் சீரியல் ஒன்றில் லீட் ரோல்னு சொன்னாங்க. சரி, நடிச்சு பார்க்கலாமேன்னுதான் நான் நடிக்க சம்மதிச்சேன். அதன் பிறகு அதே சீரியல் தமிழில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதில் பிரியா பவானி சங்கர் கன்னடத்தில் நான் நடிச்ச கதாபாத்திரத்தில் நடிச்சாங்க. அவங்களுக்கு சினிமா வாய்ப்பு வந்ததால், சீரியலில் இருந்து விலகிட்டாங்க.

அவங்க கதாபாத்திரத்தில் நான் தமிழில் நடிச்சேன். எனக்கு அப்ப தமிழே தெரியாது. ஒரு நாலு மாசம் தான் ஷூட்டிங்னு சொன்னதால நடிச்சேன். அதன் பிறகு யாரடி நீ மோகினி தொடரில் நெகடிவ் கதாபாத்திரம் செய்தேன். எனக்கு அந்த கேரக்டர் ரொம்பவே பிடிச்சிருந்தது. அதன் பிறகு தான் எனக்கு நடிப்பு மேல ஒரு ஈர்ப்பு ஏற்பட ஆரம்பிச்சது. மூன்றரை வருஷம் அந்த தொடர். எனக்கு நல்ல அடையாளத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது. அதைப் பார்த்து தான் கயலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

யாரடி நீ மோகினி முடிந்த பிறகு ஒரு சின்ன பிரேக் எடுத்து என் கணவருடன் நேரம் செலவு செய்யலாம்னு நினைச்சேன். ஆனால் இந்த கதையை கேட்ட பிறகு நான் எமோஷனலா ரொம்பவே கனெக்ட் ஆனேன். ஒரு பெண் தன் குடும்பத்தை காப்பாற்ற என்ன செய்கிறாள் என்பதுதான் கயலின் ஒன் லைன். அது என்னுடைய நிஜ வாழ்க்கைக்கு ரொம்பவே பொருந்தியது. அதனால இதை செய்ய முடிவு செய்தேன். நான் இதில் கமிட் ஆன பிறகு என் நண்பர்களிடம் சொன்ன ஒரே விஷயம் தான், இந்த கதை சூப்பர் ஹிட்டாகும். இல்லைன்னா ஃபிளாப்பாகும். நடுவில் எங்கேயும் நிக்காதுன்னு தான் சொன்னேன். நான் சொன்னது போலவே மக்கள் கயலுக்கு நிறையவே ஆதரவு கொடுத்து வராங்க. நான் சின்னத்திரையில் வந்த நாள் முதல் எதுவுமே பிளான் செய்ததில்லை. இந்த துறைக்கு வருவேன்னு நினைக்கல.

கடவுளா எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கார். நிறைய பேர் இதில் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்படுறாங்க. என்னைப் பொறுத்தவரை நமக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியா தேர்வு செய்து அதன் படி நடக்கணும். வலிமை படத்தில் குற்றவியல் பிரிவு போலீஸாரின் கண்ட்ரோல் ரூமில் பணிபுரியும் பெண்ணாக அஜித் சாருடன் நடிச்சேன். அந்த வாய்ப்பும் தானாகத்தான் வந்தது. ஷூட்டிங் முடிந்து ஒன்றரை வருஷம் கழிச்சு தான் படம் ரிலீசானது.

ஆனாலும் எனக்கு ஒரு நல்ல அடையாளம் கிடைச்சது’’ என்றவர் தன் நட்புலகம் குறித்து பகிர்ந்தார்.‘‘ஸ்கூலில் முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கவுதம்னு ஒரு ஃபிரண்ட். நாங்க இருவரும் பக்கத்து பக்கத்து வீடு என்பதால், ஒன்னா தான் ஸ்கூலுக்கு போவோம் வருவோம். இப்ப நான் பெங்களூர் போனாலும் கவுதமை பார்க்காமல் வரமாட்டேன். அதன் பிறகு பி.யு.சி பிஷப் காட்டன் கல்லூரியில் படிச்சேன். நான் படிச்சது ஆங்கில வழிக் கல்வி என்றாலும், சரளமா ஆங்கிலம் பேச வராது. ஆனால் பிஷப் கல்லூரியில் படிக்கும் அனைவரும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவாங்க. பணக்காரங்க படிக்கும் கல்லூரி.

என்னுடைய அக்காக்கு நான் அங்கு படிக்கணும்னு ஆசை. அதனால் அவளுக்காக அங்கு சேர்ந்து இரண்டு வருஷம் படிச்சேன். அந்த இரண்டு வருஷம் யாருடனும் பேசமாட்டேன். சைலன்டா தான் இருப்ேபன். அதன் பிறகு நேஷனல் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு ஒரு வருஷம் தான் படிச்சேன். அதன் பிறகு எனக்கு சின்னத்திரையில் வாய்ப்பு வந்ததால், நான் கல்லூரியில் தொடர்ந்து படிக்கல. அந்த ஒரு வருஷத்தில் நரேன், சுப்பு, சஹானான்னு மூணு பேரின் நட்பு கிடைச்சது. அவங்க இப்ப வரைக்கும் என்னுடைய பெஸ்ட் ஃபிரண்டா இருக்காங்க. என்னோட கல்யாணத்திற்கு எல்லாம் வந்து ரொம்பவே எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. எந்த விஷயமா இருந்தாலும் அவங்ககிட்ட தான் முதலில் சொல்வேன். எனக்கு எல்லாமுமா இருப்பாங்க. நான் சோகமா இருந்தா, அவங்க தான் ஆறுதல் சொல்வாங்க.

சின்னத்திரைக்கு வந்த பிறகு எனக்கு முதலில் அறிமுகம் ஆனவர்தான் அமித் பார்கவ். அவர் கன்னடத்துக்காரர். கன்னட பிக்பாசிற்கு அவர் தான் குரல் கொடுத்தார். கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் அவருடன் நடிச்சேன். அப்ப எனக்கு தமிழ் தெரியாது. அது மட்டுமில்லாமல் சென்னை வெயிலை என்னால தாக்கு பிடிக்க முடியல. நான் அழுதிட்டேன். அப்ப பார்கவ் தான் என்னை உட்கார வச்சு பேசினார். இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்காதுன்னு சொல்லி புரிய வைத்தார். நான் நடிச்ச அந்த நாலு மாசம் எனக்கு தமிழ் எப்படி பேசணும்னு கன்னடத்தில் சொல்லி புரிய வைப்பார். ரொம்பவே சப்போர்ட்டா இருந்தார்.

கன்னடத்தில் என்னுடைய முதல் ஹீரோ சூர்யா. அவர் ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த துறைக்கு வந்தார். அப்ப நான் சின்ன பொண்ணு. எப்படி பேசணும் எப்படி நடந்துக்கணும்னு தெரியாது. அப்ப அவர் சொல்வார். இதோட அருமை உனக்கு புரியாது. அது புரியும் போது, உனக்கு தெரியும்னு சொல்வார். அந்த சீரியலில் சூரியாவின் தம்பியா நடிச்சவர் தான் ஸ்வரூப். நானும் அவரும் ரொம்பவே க்ளோஸ். ஃபிரண்ட்தான் என்றாலும் எங்க குடும்பத்தில் ஒருவர் போல தான் இருப்பார்…

இப்ப அப்படியாகவே ஆயிட்டார். ஏழு வருஷம் தொடர்ந்த எங்களின் நட்பு உறவா மாறியது. அவர் என் அக்காவை திருமணம் செய்து கொண்டார். என் பெற்றோருக்கு பிறகு இவர் மேலதான் நான் ரொம்ப மரியாதை வைத்திருக்கேன். எங்க குடும்பத்தின் தூண்னுதான் சொல்லணும். நான் இல்லாத இடத்தை என் பாவா நிரப்பி வருகிறார். என் பெற்றோருக்கு எல்லாமுமா இருக்கார். இந்த தலைமுறையில் அப்படி ஒருவர் கிடைப்பது ரொம்ப கஷ்டம்.

யாரடி நீ மோகினியில் நடிச்ச போது நட்சத்திரா, ஷபானா, ரேஷ்மா மூவரின் நட்பு கிடைச்சது. அதில் எனக்கும் நட்சத்திராவுக்கும் நெருக்கம் அதிகம். சீரியலில் மூன்றரை வருஷம் ஒன்றாக பயணித்தாலும், நானும் அவளும் ஒரே வீட்டில் தான் தங்கி இருந்தோம். அதனால் எங்களுக்குள் பாண்டிங் ரொம்பவே அதிகம்னு சொல்லணும். நட்சத்திரா ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் ரேஷ்மாவும், ஷபானாவும் எனக்கு எல்லா விஷயத்திலும் ரொம்பவே சப்போர்ட்டா இருந்தாங்க. என்னுடைய சந்தோஷமான கல்யாண நிகழ்வு முதல் என்னுடைய சோகமான காலங்களிலும் எனக்கு தோள் கொடுத்தாங்க. ஒரே சீரியலில் நடிக்கும் போது, ஒருவருக்கு ஒருவர் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வது வழக்கம்.

அப்படி பகிரும் போது எங்களின் மனநிலை எல்லாம் ஒன்றாக இருந்ததால்தான் நாங்க ஃபிரண்ட்ஸ்சானோம். மேலும் ஒருவருக்கு ஒருவர் எப்போதும் ஆறுதலா இருக்கும் போது தான் அந்த நட்பு உறுதியாகும். எனக்கு காபி ரொம்ப பிடிக்கும். அதனால நாங்க எப்ப சந்திச்சாலும் காபி ஷாப்பிற்கு போயிடுவோம். அங்க நண்பர்களுடன் சேர்ந்து காபி குடிக்கும் சுகமே தனிதான். எல்லாரும் இப்ப அவங்க அவங்க துறையில் பிசியா இருப்பதால், நேரம் கிடைக்கும் போது நாங்க பார்த்துக் கொள்ள முடிகிறது. இப்ப நட்சத்திரா கர்ப்பமா இருக்கா. எங்களுக்கு கல்யாணம் ஆன பிறகு, யாருக்கு முதலில் குழந்தை பிறக்கும்னு நாங்க பேசிக் கொள்வோம். இப்ப நட்சத்திரா கர்ப்பமா இருப்பதைக் கேள்விப்பட்ட பிறகு நாங்க மூவரும் ரொம்பவே உற்சாகமா இருக்கோம். அவளுடைய குழந்தையை கையில் ஏந்த காத்துக் கொண்டிருக்கிறோம்.

கயல் தொடரில் அன்பு கதாபாத்திரத்தில் நடித்த அவினாஷ் எங்க குடும்பத்தில் ஒருவர். நட்பை தாண்டி இப்ப எங்க உறவு குடும்ப உறவாக மாறிவிட்டது. எனக்கு இந்த தொடரைப் பொறுத்தவரை உடன் நடிப்பவர்களை விட இயக்குனர் மற்றும் ேகமராமேன் தான் ரொம்ப க்ளோஸ். அவங்க வீட்டு பெண் போல என்னை நல்லாவே பார்த்துப்பாங்க. என் பிரச்னையை புரிந்து கொண்டு எனக்கு ஆறுதல் சொல்வாங்க. அடுத்து என் கணவர்.

அவர் ஹைதராபாத்தில் ஒளிப்பதிவாளரா இருக்கார். நானும் சீரியலில் பிசியாக இருக்கேன். அவரும் ஒரு பிராஜக்டில் பிசியா இருப்பதால், நாங்க மூணு மாசத்துக்கு ஒரு முறை தான் சந்திச்சுக்குவோம். இருந்தாலும் கணவர் என்ற உறவை விட ஒரு நண்பரா எனக்கு எல்லாமுமா அவர் இருக்கார்’’ என்றார் சைத்ரா ரெட்டி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண்களை பிரசவ அறையில் அனுமதிக்க வேண்டும்! (மகளிர் பக்கம்)
Next post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)