குழந்தைகளுக்கான விளையாட்டு வழி பிசியோதெரபி!! (மருத்துவம்)
இயன்முறை மருத்துவம் என்றால் பெரியவர்களுக்கு கை கால் வலிக்கான மருத்துவம் செய்வது மட்டுமல்ல… குழந்தைகளுக்கானதும் கூட. அதிலும் குறிப்பாக, ஆட்டிசம், தாமதமாக நடக்கும் குழந்தைகள், டவுன் சிண்ட்ரோம், மூளை வாதம் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் உதவக்கூடியது. அதோடு, மேலும் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் தண்ணீரிலும் அதாவது, நீச்சல் குளத்திலும் இயன்முறை மருத்துவப் பயிற்சிகள் (Hydrotherapy) வழங்கக்கூடியது.எனவே இந்தக் கட்டுரையில் எந்தெந்த குழந்தைகளுக்கு நீச்சல் குள பயிற்சிகள் வழங்கப்படுகிறது, அது எவ்வாறு அவர்களுக்கு பயன்படுகிறது என்பது பற்றி அறிந்துகொள்ளலாம்.
ஏன் தண்ணீரில்…?
*தரையை விட தொடர்ந்து தண்ணீரிலிருந்து மூட்டுகளை அசைக்கும் போது அதிக உணர்வுத் திறன் (Sensory Skills) இருக்கும்.
*தண்ணீரில் குழந்தையின் உடல் எடை குறைவாக இருக்கும்.
*தண்ணீரில் இயல்பாகவே எதிர்க்கும் சக்தி (Resistance) அதிகம். இதனை ‘buoyancy’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது, நாம் தண்ணீரில் கைகளை அசைக்கும் போது தண்ணீர் நம்மை எதிர்த்து ஒரு விசையை உருவாக்கும்.
*தரையை விட தண்ணீரில் குழந்தைகள் உருளவும், நடக்கவும் வேகமாக கற்றுக்கொள்வார்கள்.
*80 டிகிரி முதல் 90 டிகிரி வரை உள்ள சூடான நீரில் பயிற்சிகள் செய்யும் போது தசைகள் தளர்வாக (relax) இருக்கும்.
*தரையில் நடப்பதை விட தண்ணீரில் பத்து மடங்கு எதிர்ப்பு விசை (Resistance) அதிகரிக்கும்.
யாருக்கெல்லாம்…?
*எலும்பு மற்றும் தசை சார்ந்த பிரச்சனைகளுக்கு (உதாரணமாக, எலும்பு முறிவுக்குப் பின் இருக்கும் தசை இறுக்கம் நீங்கிட).
*ஏதேனும் தசை, தசை நார் போன்ற அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட பின் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மூட்டினை அசைக்க (உதாரணமாக, மூளை வாதம் பாதித்த குழந்தைகளுக்கு பின்னங்காலில் பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்வார்கள்).
*குழந்தைகளுக்கான முடக்குவாதத்தில் (Rheumatoid arthritis) வரும் வலியை குறைக்க.
*மரபணு சார்ந்த தசை பிரச்னைகள் (உதாரணமாக, துஷின் மஸ்குலார் டிஸ்ட்டோர்பி. இதில் உடலில் உள்ள தசைகள் பலவீனமாக மாறிக்கொண்டே வரும். இதனை தடுக்க அல்லது தள்ளிப்போட தண்ணீரில் பயிற்சிகள் செய்யலாம்).
*டவுன் சிண்ட்ரோம்.
*ஆட்டிசம்.
*துறுதுறு குழந்தைகள்.
*கவனக் குறைபாடுடன் இருக்கும் குழந்தைகள்.
*அதிக உடற்பருமன் கொண்ட குழந்தைகள்.
*பெருமூளை வாதம்.
*குழந்தையின் முதுகுத் தண்டுவடம் சரியாக மூடாமல் இருந்து பிறக்கும்போது ஏற்படும் பாதிப்புகள். அதாவது, நடக்க தாமதமாவது.
*ஏதேனும் தசைகள் சார்ந்த பிறவிக் குறைபாடுகள் இருந்து அதனால் வளர்ச்சிப் படிநிலையில் (நிற்பதற்கு, நடப்பதற்கு) தாமதம் இருந்தால்.
*இப்பொழுது அதிகரித்து வரும் தாமத படிநிலைகளுக்கு (தவழ்வது, உட்காருவது, நிற்பது, நடப்பது) கூட தண்ணீரில் பயிற்சி செய்யலாம்.
பயன்கள் என்ன?
*ரத்தம் ஓட்டம் அதிகரிக்கும்.
*வெளிக்காயம் இருந்தால் அதனை ஆற்றும்.
*வீக்கம் மற்றும் வலியை குறைக்கும்.
*இறுக்கமாக இருக்கும் தசைகளையும், அதிக அளவில் மூட்டினையும் அசைக்க முடியும். உதாரணமாக, இறுக்கமாக இருக்கும் தசைகளால் முழு நீளத்தில் கைகளையோ, கால்களையோ அசைக்க முடியாது. ஆனால் தண்ணீரில் அதிக நீளம் செய்ய முடியும்.
*தண்ணீரின் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி தசைகளை வலுப்பெற செய்ய முடியும்.
*இதய-நுரையீரலின் தாங்கும் ஆற்றலும் (cardiovascular Endurance) தசைகளின் தாங்கும் ஆற்றலும் (Muscle Endurance) அதிகரிக்கும்.
*பெரிய அசைவுகளான (Gross Motor Skills) நடப்பது, ஓடுவது, கைகளை தூக்குவது, குதிப்பது, குனிந்து நிமிர்வது போன்ற திறமைகள் அதிகமாகும்.
*தண்ணீரில் சில விதமான மூச்சுப் பயிற்சிகள் செய்யும் போது குழந்தைகளின் பேச்சு திறன் அதிகரிக்கும்.
*ஸ்திரத் தன்மையும் (balance), மூளையின் ஒருங்கிணைப்பு திறனும் (Cordination) அதிகரிக்கும்.
*ஆட்டிசம் மற்றும் துறுதுறு குழந்தைகளுக்கு கவனம் அதிகரித்து, நாம் சொல்வதை கேட்பார்கள்.
இந்த அனைத்துப் பயன்களும் தரையை விட தண்ணீரில் அதிகம் கிடைக்கும்.
எப்படி செய்வது…?
குழந்தைகளுக்கான பயிற்சி என்பதால் தண்ணீரில் இயன்முறை மருத்துவர் கைகளில் குழந்தையை வைத்துக்கொண்டு பயிற்சிகள் வழங்குவார்கள். மேலும் இதற்கு சில பிரத்யேக பொருட்களையும் (Hydro therapy equipments) வைத்து பயிற்சி கொடுப்பர்.
எவ்வளவு முறை செய்யலாம்…?
*வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை செய்யலாம். அப்படிஇல்லையெனில் தரையில் மூன்று நாட்கள், தண்ணீரில் இரண்டு நாட்கள் போல செய்யலாம்.
*இதனை குழந்தையின் பிரச்னையின் தன்மை, தீவிரம் போன்றவற்றை வைத்து இயன்முறை மருத்துவர் ஆலோசனை செய்து பரிந்துரை செய்வர்.
எனவே இவ்வளவு பயன்கள் இருக்கும் இந்த ‘தண்ணீர் சிகிச்சையை’ கொண்டு, நம் மழலைகளை எளிதில் பாதிப்புகளில் இருந்து இயன்முறை மருத்துவ உதவியுடன் மீட்டெடுக்கலாம் என்பதை இந்தக் கட்டுரை வாயிலாக தெரிந்துகொள்வோம்.