கர்ப்பப்பைவாய் புற்றுநோய்… அறுவைசிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு…!! (மருத்துவம்)

Read Time:7 Minute, 19 Second

கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கு, அதற்குப் பிந்தைய வாழ்க்கை கடினமான, உணர்ச்சிகரமான பயணமாக இருக்கலாம். அறுவைசிகிச்சைக்குப் பிறகு மீண்டவர்கள் அதிலிருந்து எப்படி மீள்வது, வாழ்க்கையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றிய பல கேள்விகள், கவலைகள் அடிக்கடி எழலாம். இதற்கு நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது புற்றுநோய்க்கு பிந்தைய அறுவை சிகிச்சையின் கடினமான பயணத்தை எளிதாக்கும்.

சுய-கவனிப்பு, மன அழுத்த நிவாரணம் பெறுவதன் முக்கியத்துவம், உடல் – உணர்ச்சி சார்ந்த அறிகுறிகளை எவ்வாறு நிர்வகிப்பது, சரியான பராமரிப்புக் குழுவைக் கண்டுபிடிப்பதற்கான உதவிக்குறிப்புகள் பற்றிப் பார்க்கலாம். சரியான வழிகாட்டுதலுடன், கருப்பை – கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் வெற்றிகரமான, நீடித்த உடல்நலத்தைப் பெறலாம். புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சுய-கவனிப்பு, மன அழுத்த நிவாரணத்தின் முக்கியத்துவம் மன அழுத்தம் உடலிலும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், குணமாகும் நடைமுறையையும் தடுக்கலாம்.

எனவே புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் மனச்சோர்வடைய உடல் செயல்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். யோகா, நடைப்பயிற்சி, தியானம், சுவாசப் பயிற்சி போன்ற செயல்பாடுகள் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும். உடல் தன்னைத் தானே மீட்டெடுக்கவும் குணப்படுத்துவதற்கும் தூக்கம் அவசியம். எனவே தினசரி குறைந்தது ஏழு முதல் எட்டு மணிநேரம் தூங்குவது முக்கியம். வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். குளிப்பது உடல் அசதியைக் குறைக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.

கருப்பை அல்லது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், இணைய சமூகங்களின் ஆதரவைக் கண்டறிவது மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கும். இறுதியாக, ஒருவர் தன்னைச் சார்ந்தே கனிவான அணுகுமுறையை கடைப்பிடிப்பதும் முக்கியம். அறுவைசிகிச்சைக்குப் பிறகு பயம், பதற்றம், பரபரப்பாக இருப்பது சாதாரணமானதுதான். அப்போது ஒருவர் தனக்குத்தானே கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். உடல் குணமடைவதற்கான நேரத்தையும் வெளியையும் கொடுக்க வேண்டும்.

சுய பராமரிப்புக்கான குறிப்புகள் உடல், உணர்ச்சி சார்ந்த அறிகுறிகளை எப்படிக் கையாள்வது?

கருப்பை அல்லது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் மற்றும் உணர்ச்சி சார்ந்த அறிகுறிகள் ஏற்படுவது சாதாரணமானதுதான். உடல் அறிகுறிகளில் சோர்வு, வலி, குமட்டல் ஆகியவை அடங்கும். போதுமான ஓய்வு, தூக்கம், ஆரோக்கியமான உணவை உண்ணுதல், போதுமான நீரைக் குடிப்பது ஆகியவை அவசியம். வலி நிவாரணி மருந்துகளும் வலியைக் கட்டுப்படுத்த உதவும். உணர்ச்சி சார்ந்த அறிகுறிகளில் கவலை, மனச்சோர்வு, பயம் ஆகியவை அடங்கும். சுய-கவனிப்பு மற்றும் குடும்பத்தினர் – நண்பர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவது இந்த அறிகுறிகளை நிர்வகிக்க உதவும்.

உடலை மீட்க உடற்பயிற்சி செய்யுங்கள்

உடற்பயிற்சி மன அழுத்தத்தைத் தணிக்கவும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமான மனநிலையை மேம்படுத்தவும் உதவும். இது உடல் சோர்வைக் குறைக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். நடைப்பயிற்சி, நீச்சல், யோகா போன்ற குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சிகள் பலனளிக்கும். வலிமை சார்ந்த பயிற்சி, உடலை நீட்டி மடக்கும் பயிற்சிகளை வழக்கமான முறையில் செய்வது அவசியம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது, தேவைப்படும்போது ஓய்வு எடுப்பது ஆகியவையும் முக்கியம்.

உடல் மீட்புக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து

பல்வேறு பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொழுப்பு குறைந்த புரதங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவை உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. இது உடல்சோர்வைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும், சர்க்கரை நிறைந்த பானங்களை தவிர்க்க வேண்டும். இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்களுடன் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ ஆகியவை உடலில் சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

சரியான பராமரிப்பு குழுவைக் கண்டறிதல்

கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பராமரிப்புக் குழு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் ஆதரவு, வழிகாட்டுதலுக்காக குழுவில் ஒரு மனநல நிபுணர் இருப்பதை உறுதிசெய்வது முக்கியம். நெருக்கமானவர்களிடமிருந்து பரிந்துரைகளை பெறுவது சரியான பராமரிப்புக் குழுவைக் கண்டறிய உதவும். உங்கள் கவலைகள், தேவைகளை காது கொடுத்துக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் தயாராக இருக்கும் ஒரு பராமரிப்புக் குழுவைக் கண்டறிவது கடினமான காலத்தை சமாளிக்க உதவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடலை செம்மையாக்கும் செம்பருத்தி தேனீர்!! (மகளிர் பக்கம்)
Next post நாதம் நம் ஜீவனே!! (மருத்துவம்)