சிறப்புக் குழந்தைகளின் டேலன்ட் டிஸ்பிளே!!
சிறப்புக் குழந்தைகளில் பலரும் இசைத் துறையில் திறமையுள்ளவர்களாக இருந்தாலும், அவர்களுக்கான வாய்ப்பு அத்தனை சுலபத்தில் கிடைத்துவிடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும், அவர்களது வாழ்வாதாரத்திற்கான வருமானம் கேள்விக்குறிதான்? இதனை மனதில் இறுத்தி, இசைத்துறையில் நண்பர்களாக பயணிக்கும் பின்னணி பாடகி ரேஷ்மி மற்றும் பாடகர் வினோத் வேணுகோபால் இருவரும் கைகோர்த்து, சிறப்புக் குழந்தைகளுக்கான ‘சமஹிருதா’ (Samagritha) இசைப் பயணத்தை வரும் ஜூன் மாதம் 7ம் தேதி, சென்னை வாணிமஹாலில்
“கடவுள் அமைத்து வைத்த மேடை” என்கிற பெயரில் துவங்கி வைக்கின்றனர்.
சமஹிருதா என்றால் எல்லோரும் சமம் (Inclusiveness) என முதலில் நம்மிடம் பேச ஆரம்பித்தவர் பாடகர் வினோத் வேணுகோபால். ‘‘பேசிக்கலி நான் சிங்கர். இளையராஜா சாரிடம் சப்போர்டிங் வோக்கல் செய்திருக்கேன். மாணவர்களுக்கு டாக்டர், இஞ்சினியர் கனவுதானே இருக்கும். எனக்கு சினிமா பாடல்களை பாடும் கனவு இருந்தது. என்னோட குடும்பத்தில் பி.லீலா, வேணுகோபால் என பல திறமையான பாடகர்கள் இருக்காங்க. என்னோட கஸின் சிஸ்டர்தான் பின்னணிப் பாடகி சுஜாதா.
காலேஜ் முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தால் பாடுவதற்கான முயற்சி எதுவுமே இல்லாமல் நான் பின்தங்கி இருந்தேன். பிறகு ஆராதனா என ஒரு குரூப் ஆரம்பித்து பாடகர்கள் பலரை மேடை ஏற்றினேன். பிரபலங்கள் பலரோடும் இணைந்து நிகழ்ச்சி பண்ணியிருக்கேன். பாடகி ரேஷ்மி என்னுடைய நட்பு வட்டத்திற்குள் வந்த பிறகே பாடுவதற்கான முழு முயற்சியில் இறங்கினேன்’’ என்றவரைத் தொடர்ந்தார் பின்னணிப் பாடகி ரேஷ்மி.
‘‘நிகழ்ச்சியில் சிறப்புக் குழந்தைகள் சிலரை அடையாளப்படுத்தி, முறையான பயிற்சி கொடுத்து மேடை ஏற்றப் போகிறோம். இதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்கின்றனர்’’ என்ற பாடகி ரேஷ்மி, இதுவரை 400 திரைப்படப் பாடல்களுக்கு மேல் பாடியிருப்பதைக் குறிப்பிட்டு, “மனசினுள்ளே தாகம் வந்துச்சா… வந்தல்லோ… வந்தல்லோ…” என மலையாளம் கலந்து தன் குரலை ‘ஆட்டோகிராஃப்’ படத்திலும், “உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே” என ‘ஜெ ஜெ’ படத்திலும் பதிவு செய்திருக்கிறார்.
கொரோனா ஊரடங்கில் இசைக் கலைஞர்கள் பலரும் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி கஷ்டப்படும்போது, எஸ்.பி.பி சார் பாடல்களை சின்னச் சின்ன க்ளிப்ஸ் பாடி சோஷியல் மீடியாவில் பதிவேற்றி வந்தார். அதில் வந்த வருமானத்தில், இசைக் கலைஞர்கள் பலருக்கும் அவர் உதவி வந்தார். அதுதான் எங்களுக்குக் கிடைத்த சின்ன பொறி’’ என இருவரும் மேலும் நம்மிடம் பேச ஆரம்பித்தனர்.
‘‘எஸ்.பி.பி சாரைப் பின்பற்றி, எங்களோடு இசைத்துறையில் பயணித்த பத்துபேருக்கும் உதவும் முயற்சியாக முதலில் களம் இறங்கினோம். லாக்டவுன் நேரம் என்பதால் எங்கள் முயற்சிக்கும் வரவேற்பு நிறையவே இருந்தது. முகநூல் பக்கத்தில் நேரலை செய்ததில், அதிக பார்வையாளர்களுடன், நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகச் சென்றது. ஆரம்பத்தில் இரண்டு மாதங்கள் முயற்சிக்கலாம் எனத் தொடங்கி, பிறகு ரோட்டரி கிளப்புடன் இணைந்து, 26 மாதங்கள் கொண்டு சென்றோம்.
இதில் 26 லட்சம் வரை எங்களுக்கு ஃபண்ட் ரெய்ஸ் ஆனது. ஊரடங்கு நேரத்தில் கிட்டதட்ட 218 குடும்பங்களுக்கு உதவி செய்திருக்கிறோம். இது எங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த அனுபவம். இந்த நிகழ்வு மனதுக்கு மகிழ்ச்சியை மட்டுமில்லை, வாழ்க்கைக்கு நல்ல அர்த்தத்தையும் கொடுத்தது’’ என்கின்றனர் மனதிற்குள் அந்த நினைவுகளை அசை போட்டவர்களாக இருவரும்.
லாக்டவுன் முடிந்த நேரம். சிறப்புக் குழந்தைகளுக்கான டேலன்ட் டிஸ்பிளே நிகழ்ச்சி ஒன்றுக்கு நாங்கள் இருவரும் நடுவர்களாகச் சென்றிருந்தோம். அப்போது சிறப்புக் குழந்தைகளில் பலரும் மிகச் சிறந்த திறமைசாலிகளாக பாடுவதை நாங்கள் நேரில் காண நேர்ந்தது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. இந்த உலகத்தை அவர்களின் கண்களால் பார்க்க முடியவில்லை என்றாலும், மிகச் சிறப்பாக பாடினார்கள்.
வாய்பேச முடியாத காதுகேளாத மாணவி ஒருவர் லிப் சிங்கை பார்த்தே, தாளத்திற்கு ஏற்ப பரத நாட்டியத்தை சிறப்பாக ஆடினார். தொடர்ந்து கோவையில் நடைபெற்ற எபிளிட்டி 2022 என்கிற நிகழ்ச்சிக்கும் நாங்கள் செல்ல நேர்ந்தது. அங்கிருந்த சிறப்புக் குழந்தைகள் சிலரை ஒருங்கிணைத்து குரூப் சாங் ஒன்றினை உடனடியாக மேடையில் பாடவைத்தோம். அப்போது அந்தக் குழந்தைகளின் திறமைக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்த இரண்டு நிகழ்வுகளும் எங்கள் இருவரின் பார்வையை சிறப்புக் குழந்தைகள் மீது திருப்பியது எனலாம். மிகத் திறமைசாலிகளாக இந்தக் குழந்தைகள் இருந்தாலும், வாய்ப்புக் கிடைக்காமல் கஷ்டப்படுவதை எங்களால் உணர முடிந்தது.
சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களில் பலரும் சிங்கிள் மதராக குடும்பத்தை பிரிந்து இருந்தார்கள். இந்தக் குழந்தைகளை கவனிப்பதற்காகவே பார்த்துவந்த தங்கள் வேலையை, தொழிலை துறந்தவர்களாகவும் பல பெற்றோர்களை நாங்கள் சந்திக்க நேர்ந்தது. இந்தக் குழந்தைகள் தங்களின் திறமைகளை பெற்றோரின் சேமிப்பில் மட்டுமே வெளிப்படுத்தி வருவதை அவர்களோடு பழக ஆரம்பித்தபோது எங்களுக்கு புரிய ஆரம்பித்தது.மற்ற பாடகர்களை போலவே திறமைகளை வெளிப்படுத்த, இவர்களும் எல்லா ஊர்களுக்கும் பயணிக்கிறார்கள். போக்குவரத்து, தங்குமிடம், உணவு என செலவுகள் இருக்கிறது.
இவர்களின் திறமையை அங்கீகரிக்கும், சரியான வருமானம் இருந்தால்தானே இவர்களாலும் மற்றவர்களைப்போல வாழமுடியும். இவர்களுக்குத் தேவை வாய்ப்பு மட்டுமே இல்லை. அவர்கள் வாழ்வாதாரத்திற்கான அங்கீகாரமும்தான் என யோசிக்க ஆரம்பித்தோம். சிறப்புக் குழந்தைகள் என்ற அடைமொழிக்குள் அடக்கி, வாய்ப்பு மட்டுமே கொடுக்கிறோம்.
அவர்களின் வாழ்வாதாரத்தை யாரும் பெரிதாக இங்கு யோசிப்பதில்லை. அதற்கான முயற்சிதான் “கடவுள் அமைத்துவைத்த மேடை” இசை நிகழ்ச்சி. இதில் மேடையேற்றப்படும் குழந்தைகளுக்கு பிரபலப் பாடகர்களின் இசைக்குழுவில்(Orchestra) இவர்களை உள்ளடக்கிய(Inclusive) வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்பும் முயற்சியும்தான் இது.நாம் ஒன்றை செய்ய முயற்சிக்கும்போது, நம்முடன் பல கரங்களும் தானாகவே இணையும்…’’ நம்பிக்கையை விதைத்து புன்னகையால் விடைகொடுத்தனர் இருவரும்.