அழகை மேம்படுத்தும் கண்கள்!! (மகளிர் பக்கம்)
பெண்களின் முக அழகு அவர்களது கண்களை பொருத்தே அமையும். ஆகவே கண்களின் ஆரோக்கியம் மற்றும் அதனை பாதுகாக்க சில எளிய டிப்ஸ்…
*கண்களை தினமும் பன்னீரால் துடைத்து வந்தால் கண்கள் புதுப்பொலிவு பெறும்.
*திரிபலா சூரணத்தை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக இருக்கும்.
*மூடிய கண் இமைகளின் மீது பன்னீரை பஞ்சில் நனைத்து தேய்த்துவிட்டால் கண் இமைகளின் நிறம் மேம்படும்.
*வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும், கண்களைச் சுற்றியும் பேக் போட்டு வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், பிரகாசமும் கிடைக்கும்.
*சந்தனக்கல்லில் ஜாதிக்காயை அரைத்து இரவில் பூசி வந்தால் கண்களைச்சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
*உருளைக்கிழங்கை அரைத்து கண்களைச்சுற்றியும், கண்களின் மேலும் பேக் போட கருவளையங்கள் மறைந்துவிடும்.
*கண்களை இடது, வலதாக மேலும், கீழுமாக ஐந்து முதல் ஆறு முறை சுற்ற வேண்டும். பிறகு கண்களை இறுக்கமாக மூடித் திறக்க வேண்டும். இது கண்களுக்கு சிறந்த பயிற்சியாகும்.
*கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் பெண்கள், எம்பிராய்டரி வேலை செய்யும் பெண்கள் தொடர்ந்து அதிக நேரம் கண்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது. அப்படி வேலை செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் சிறிது நேரம் வேலை செய்வதை நிறுத்திவிட்டு பூச்செடிகள், மரங்கள் போன்ற இயற்கை வளங்களை பார்க்கும்போது கண்கள் ஓய்வு பெற்று, சோர்வு நீங்கும்.
– அ.சித்ரா, காஞ்சிபுரம்.
அகத்திக்கீரையின் அற்புதங்கள்
நீரின்றி அமையாது உலகு என்றால் கீரையின்றி வளராது உடல் என்றும் சொல்லலாம். காரணம், கீரை என்ற அந்த மூலிகை இலைகளால் மனித வாழ்விற்குத் தேவையான வளமான புரதச்சத்துக்கள் உள்ளதுதான்.
*இந்தியாவில் பல இடங்களில் பயிரிடப்படும் கீரைச்செடிதான் அகத்திக்கீரை. இச்செடி 15 அடி முதல் 25 அடி உயரம் வரை வளரக்கூடிய தாவரமாகும். இச்செடியின் மேல் வெற்றிலைக் கொடியை படர விடவே வளர்க்கப்பட்டது. பின்னாளில் இந்தக் கீரையே கால்நடைகளின் தீவனமாகவும் உபயோகமாயின.
*அகத்திக்கீரையில் இருவகை உண்டு. சாதா அகத்தியில் வெண்மைநிற பூ வரும். செவ்வகத்தியில் சிவப்புநிற பூ பூக்கும். இதில் சீமை அகத்தி, சாழை அகத்தி, சிறு அகத்தி, பேய் அகத்தி என சில வகைகள் உண்டு.
*அகத்திக்கீரையை முனி, அச்சம் என்ற பெயர்களிலும் அழைப்பர். அகத்தியின் இலை, பூ, வேர், தண்டு ஆகியவை மருந்தாக பயன்படுகிறது.
*இக்கீரையை உண்பதால் உடலிலுள்ள விஷத்தை முறிக்கும். குளிர்ச்சியை தரும். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும். உடலில் சுண்ணாம்புச்சத்தை உருவாக்கும். பித்தத்தை குறைக்கும். கட்டி போன்ற தழும்புகளை கரைத்திடும். வாயுத்தொல்லை குறையும்.
*நோய் உள்ளவர்கள் இக்கீரையை சாப்பிடலாகாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை சமைத்து சாப்பிடலாம். அடிக்கடி சாப்பிட்டால் ரத்தம் குறையும். சொறி சிரங்கு, வீக்கம், எரிச்சல், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட காரணமாகும்.
இக்கீரையை சாப்பிட பல நன்மைகளும் உண்டு. அகத்திப்பூவை சமைத்து உண்டால் போதைக்கு அடிமையானவர்கள் அதை மறப்பர். பல நல்ல நிவாரண குணங்களை கொண்ட ஓர் அற்புத மூலிகைதான் அகத்திக்கீரை என்பதில் ஐயமில்லை.