சிறுகதை-ஒரு முழம் பூ!! (மகளிர் பக்கம்)
எப்போதும் போல் சூரியன் மஞ்சள் கதிர்களை வீசி விடிந்து விட்டான். விடியாத தன்னை போன்ற எத்தனை பெண்கள் மனதில் அலுத்து அழுது வடிந்தபடி காலைப்பொழுதை கடக்கின்றனரோ? நினைத்த கவிதாவுக்கு முந்தைய இரவின் நினைவு வர படுக்கையிலிருந்து எழ மனமின்றி கண்களை கைகளால் இறுக்கமாக மூடிக்கிடந்தாள். இரவு வைத்த அலாரம் விடாமல் அலற மனதில் வெறுப்புடன் எழுந்து வேலைகளை பார்க்கத் துவங்கினாள்.
ஒன்றுமில்லாத விஷயத்துக்கு எப்படி பேசி விட்டான் மதன். தலைவலி என்று நேரமாக படுத்துவிட்டது ஒரு குற்றமா? நானும் வேலைக்குப் போகிறேன் என்ற கருணை கொஞ்சம் கூட இல்லையே அவனுக்கு? டிபன் போடவும் சிரிச்ச முகத்துடன் வரவேற்கவும் நான் என்ன இவன் அடிமையா? ஒத்து ஊத அவன் அம்மா வேறு? மனசு பொருமியது.
மனதில் வெறுமை இருந்தாலும் குடும்பக்கடமைகளை நிறைவேற்ற வேண்டுமே? பரபரவென்று இயங்கினாள் கவிதா.
“சாரி… நேத்து கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்…” மதனின் மெதுவான சாரியைக் காதில் வாங்காதது போல் விலகிப்போனாள். தினம் ஏதோவொரு விஷயத்துக்காக கன்னாபின்னாவென்று பேசுவான்.வார இறுதி நாட்களில் பரபரப்பு இல்லாத நேரங்களில் ஒரு முழம் பூவுடன் வந்து நிற்பான். இதுவே வாடிக்கையாகிப் போச்சு.சாரி சொன்னால் மாறுமா வார்த்தைகள்? எத்தனை நாட்கள்தான் பிள்ளைக்காக என்று பொறுப்பது? இதற்கு என்னதான் முடிவு?
செய்திருந்த எலுமிச்சை சாதத்தையும் உருளைக்கிழங்கு வறுவலையும் லஞ்ச் டப்பாவில் அடைத்து கைப்பையை மாட்டியவள் கண் கொத்திப் பாம்பு போல் தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த மாமியாரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
இதோ அலுவலக பேருந்து வந்துவிட்டது. ஏறி அமர்ந்தாள். அருகிலிருந்த பத்மா மேடத்தைப் பார்த்து சிநேகமாக சிரித்து வைத்தாள். அவள் சிரிப்பில் சுரத்து இல்லாததைக் கண்ட பத்மா கனிவான புன்சிரிப்புடன் அவளிடம் பேச்சு தந்தார்.
“என்ன கவிதா உன் முகமே சரியில்லையே? ஏன் ஏதாவது பிரச்னையா?”
பத்மா ஆறுதலாக கேட்டார். கவிதாவுக்குள் சிறு சலனம். தன் மேலதிகாரியான அவரிடம் மனப்புலம்பல்களை கொட்டலாமா? தன்னைப்பற்றி என்ன நினைப்பார்? ஆனால், இப்போது எனக்கு இருக்கும் மனநிலைக்கு யாரிடமாவது பேசினால் சற்று தெளிவாக இருக்கலாமே… பத்மா மேடமும் ஓர் பெண்தானே? என் சகோதரியை போன்றவர்தானே? இப்போதைக்கு என் மன இறுக்கத்தைப் போக்க நம்பிக்கையானவர் வேண்டும்… அது இந்த மேடமாக இருந்தால்தான் என்ன?
“ஆமா மேடம்… வேறென்ன? குடும்ப பிரச்னைதான். நானும் மதனும் காதலித்து எதிர்ப்புக்கிடையில் கல்யாணம் செய்தவங்க… காதலிச்சப்ப இருந்த அன்பு மொத்தமும் இப்ப காணாம போய்டுச்சு மேடம். கூடவே இருக்கற மாமியார் தொந்தரவு வேறு.
நான் எது செய்தாலும் கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்துட்டு மதன் கிட்ட ஒண்ணுக்கு இரண்டா சொல்லி இரண்டு பேருக்கும் இடையில் பிரச்னை பண்றாங்க. என் அப்பா வாட்ச்மேன் என்பதும் அவ்வளவாக வசதி இல்லை என்பதும் தெரிந்துதான் நான் நல்ல வேலையில் இருப்பதால் சம்மதம் சொல்லி கட்டி வெச்சாங்க மாமியார். இப்ப என் பிறந்த வீட்டைக் குறை சொல்றதை என்னால பொறுத்துக்க முடியல.
அவங்கம்மா பேசினா அது அவங்க பழமையானவங்கன்னு இந்தக் காதுல வாங்கி விட்டுடலாம்… ஆனா, என்னை, என் குடும்பத்தைப் பற்றி முழுசா தெரிஞ்ச மதனும் அவங்கம்மா கூடசேர்ந்துட்டு பேசினா எப்படி விட முடியும்? நான் கொண்டு வர காசு மட்டும் வேண்டும்…ஆனா, நான் பொம்பளையா லட்சணமா அவங்க சொல்றதைக் கேட்டு வாய் மூடிநிக்கணுமாம். இது எவ்வளவு அநியாயம் பாருங்க மேடம்.
கொஞ்ச நேரம் லேட்டாப் போகக்கூடாது, ஆபீஸ் வர்றதுக்குள்ள டிபன் லன்ச் செய்து முடிக்கணும்… அதுவும் வித விதமா… நைட்டு வேற புதுசா டிபன் செய்யணும். மதன் உதவி செய்ய வந்தாலும் ஆம்பிளைப் பிள்ளை நீ ஏண்டா சமையலுக்குப் போறேன்னு சொல்லி தடுக்கிறாங்க…இதுல வீட்டு வேலை வேறு… வேலைக்கு ஆள் வேணும்னு எவ்வளவோ கேட்டுப் பார்த்தாச்சு. வீட்டுல ஆள் இல்லாதப்ப மாமியாருக்கு வேற ஒரு பெண்ணை உள்ளே விடுவது பயமாக இருக்காம். நம்பிக்கை இல்லாத ஜென்மங்கள்.
எனக்கு பொண்ணு பொறந்ததும் இன்னும் மோசமா பேசறாங்க மேடம்… அவங்கம்மாவுக்குப் பேரன்தான் வேண்டுமாம்.பொண்ணுன்னா அவ்வளவு மட்டமா என்ன? நேத்து பாருங்க… ஆபீஸ்ல வேலை ஜாஸ்தின்னு அசதியில மதனுக்கு டிபன் போடாம தூங்கிட்டேன். அதுக்கு என்ன பேச்சு பேசிட்டாரு? குட்டக் குட்டக் குனிஞ்சிட்டு போகணுமா? இப்படி ஒரு வாழ்க்கை வாழ்றதுக்கு பேசாம பிரிஞ்சி போயிடலாமான்னு தோணுது மேடம்…”கண்களில் நீர் முட்ட சொல்லி முடித்த கவிதாவின் கைகளை ஆறுதலாக அழுத்திய பத்மா, “இதோ பார் ஆபீஸ் வந்தாச்சு…
நீ ரொம்ப வெக்ஸ் ஆகியிருக்கே… ஆபீஸ் விட்டதும் என் வீட்டுக்கு வந்துட்டுப்போ கவிதா. மனசு லேசாகும்…”‘‘சரிங்க மேடம்…’’ என்று யாரும் பார்க்கும் முன்னே கண்களைத் துடைத்து கீழே இறங்கினாள். இருவரும் அவரவர் அலுவலில் மூழ்கியதில் நேரம் சென்று மாலை கிளம்பும் நேரம் வந்தது.
பத்மாவும் கவிதாவும் அலுவலகப் பேருந்தில் ஏறி பத்மாவின் அபார்ட்மென்ட்டில் இறங்கினர். ‘‘வா கவிதா… அதோ அங்கு லிஃப்ட் இருக்கு.அதில் போகலாம். நாலாவது மாடியில் இருக்கு வீடு…’’
லிஃப்ட் அவர்களை அரவணைத்து மேலே விட்டது. பத்மா வாசல் மணியை அடித்தார். ஒரு பெரியம்மா கதவைத் திறந்து புன்னகைத்தார். ‘‘அம்மா இவங்க என்னோட ஃப்ரண்ட்… என் ஆபீஸ்தான்.இப்ப சமீபத்துலதான் நம்ம பகுதிக்கு குடி வந்துருக்காங்க. வாங்கன்னு கூட்டிட்டு வந்தேன்.
கவிதா அம்மா போடற பில்டர் காபி சூப்பரா இருக்கும். குடிச்சுட்டு இருங்க… ஒரு அஞ்சே நிமிஷத்துல பிரெஷ் அப் பண்ணிட்டு வந்துடறேன்… அம்மா அப்படியே எனக்குமொரு கப்…” சொல்லியபடியே அருகிலிருந்த அறைக்கு சென்று கதவை மூடினார் பத்மா.ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்த கவிதா வீட்டின் அலங்காரங்களை வெகுவாக ரசித்தாள். ஒவ்வொரு இடமும் பளிச்சென்று சுத்தத்துடன் இருந்தது. அழகுப் பொருட்கள் ஆங்காங்கு நிறைந்தும் சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்தும் வீடே தெய்வீகமாக அமர்க்களப்படுத்தியது. காபியின் மணம் காற்றில் கலந்து கவிதாவின் கவனத்தைக் கலைத்தது.
“என்னம்மா வீடு ரொம்ப அழகா இருக்கா? எல்லாம் என் மருமகளே பார்த்துப் பார்த்துப் பண்ணினது. பிடிச்சுருக்கா?” கேட்டபடியே பளிச்சென்ற பித்தளை தம்ளரில் இருந்த காபியை டபராவுடன் கைகளில் தந்தார் பத்மாவின் மாமியார்.“எல்லாமே அற்புதமா இருக்கும்மா?’’ காபியை உறிஞ்சியவள், “உங்கள் காபி செம டேஸ்ட்… அப்பா இப்படியொரு காபி குடிச்சு வருஷக்கணக்காகுது… எல்லாம் என் அம்மா வீட்டோடு போயிற்று…”அறைக்கதவைத் திறந்து வெளியே வந்த பத்மா மேடம் அழகான காட்டனிலிருந்து அசத்தலான சுடிதாருக்கு மாறியிருந்தார்.
‘‘இந்தா பத்மா உனக்கு காபி”… ‘‘தேங்க்ஸ்மா” கவிதா ஆச்சர்யமாக கவனித்தாள். வாய்க்கு வாய் மாமியாரை அம்மா என அழைத்த பத்மாவை… மாமியாருக்கு தேங்க்ஸா?
அப்போதுதான் கவிதாவின் பார்வையில் பட்டது சுவற்றில் மாட்டியிருந்த ஜோடிப் போட்டோ. ஆகா என்ன ஒரு அம்சம். பத்மாவும் அவர் கணவரும் சட்சாத் பரமசிவன்-பார்வதி மாதிரி அப்படியொரு லட்சணம்.
“மேடம் உங்க ஹஸ்பென்ட்?” இழுத்தாள் கவிதா… ‘‘வா கவிதா என்னோடு…’’ காலியான காபி டபராவை டேபிளின் மீது கவனமாக வைத்து விட்டு எழுந்து பத்மாவின் பின் சென்றாள் . அந்த அறைக்குள் அவள் கண்ட காட்சி கவிதாவின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன.நீர்ப் படுக்கையில் உடலெங்கும் மருத்துவ உபகரணக் குழாய்களுடன் கண்களை மட்டும் சுழற்றி இன்னும் உயிருடன் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி உருக்குலைந்த உடலாக படுத்திருந்தார் பத்மாவின் கணவர்.
“என்ன கவிதா… இவர்தான் என் கணவர்…எங்களுக்குக் கல்யாணம் ஆகி இருபது வருசங்களாயிற்று… குழந்தை வரம் கிடைக்கவில்லை…ஆனால், அதற்கெல்லாம் நாங்கள் வருந்த வில்லை. காரணம், நாங்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அசைக்க முடியாத அன்பு. இதோ இங்கு இருக்கும் அவர் அம்மா கூட எங்களுக்கு முழு எதிர்ப்புதான். குழந்தைக்காக நாங்கள் எந்த மருத்துவத்திலும் ஆர்வம் காட்டவில்லை என்று. அவர் கவலை அவருக்கு. என்னை பேசாத பேச்சில்லை… அதிலும் மாதம் தவறாமல் வரும் தீட்டின் போது காதுகளில் ரத்தம் வரும் அளவிற்கு வார்த்தைகளால் மனதைக் கிழிப்பார்.
நான்கு வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் இவர் கோமா ஸ்டேஜிக்கு சென்று மீண்டார். ஆனாலும் உடலும் மூளையும் செயலற்று போட்டது போட்ட படி இருப்பார். எங்களுக்கு உலகமே இருண்டு போனது. ஆனால் இனி இவர்தான் என் குழந்தை எனத் தீர்மானித்தேன். மருத்துவர்களே இனி இவருக்கு செலவு செய்வது எந்தப் பயனும் தராது என்று சொன்னாலும் நான் நம்புகிறேன்… என்றாவது இவர் பழைய நிலைக்குத் திரும்புவார் என்று.
ஏனென்றால் எங்கள் அன்பு அப்படிப்பட்டது.நீ சொன்ன அந்த ஒரு முழம் பூ எனக்கு இனி என்றுமே கிடைக்காது என்பதை நான்கு வருடம் முன்பே ஏற்றுக்கொண்டேன்… கணவன்-மனைவி பந்தம் என்பது சீரியல் விளையாட்டு அல்ல… ஒருவருக்கொருவர் விட்டுத் தந்து செல்வதிலேதான் வாழ்வு முழுமையாகிறது. எங்குதான் இல்லை பிரச்னைகள்?
இதோ பார்த்தாயே என் மாமியார்… என்னிடம் எவ்வளவு அன்பை கொட்டுகிறார் என்று…வார்த்தைகளில் ஒப்பனை கலந்து பேசிப்பார்…மாமியாரை அம்மா என்று நான் அழைப்பதை கிண்டல் செய்தவர்களும் உண்டு.வாழ்க்கை என்பது நாம் தீர்மானிப்பதில்லை… வாழ வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால் வருவதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வளவுதான் கவிதா வாழ்க்கை…’’ பத்மாவின் நிலை எண்ணி மனம் வேதனையில் ஆழ்ந்தாலும் இவ்வளவு துயரத்தை வைத்துக்கொண்டு எப்படி இவரால் இயல்பாக இருக்க முடிகிறது எனும் வியப்பும் எழுந்தது கவிதாவுக்கு.பத்மாவின் வீட்டை விட்டு வெளியே வந்த கவிதா மதன் வாங்கி வரும் ஒரு முழம் பூவுக்காக வார இறுதியை ஆர்வத்துடன் எதிர்பார்த்தாள் என்பதை சொல்லவும் வேண்டுமா?!