பெண் பென்குயின்கள் வேட்டைக்கு செல்ல… ஆண் பென்குயின்கள் அடைகாக்கும்! (மகளிர் பக்கம்)
கடல் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது உப்பு நீரால் சூழப்பட்ட ஒரு பகுதி. அடுத்து அது பெரிய விலங்குகள் வசிக்குமிடம். இதை எல்லாம் கடந்து கடல் குறித்து பல கற்பனை கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். அவை நம் மனதில் கடல் மீதான ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கடலில் என்ன இருக்கிறது என்னும் கேள்விக்கு இன்றும் பலர் அதற்கான பதிலினை தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தக் கேள்வியினை கடல் ஆராய்ச்சியாளர் நாராயணி சுப்ரமணியனிடம்
முன் வைத்தோம்.
‘‘நமக்கு காடுகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு கடலும் முக்கியம்’’ என்று கூறும் நாராயணி கடல், விலங்குகள், காலநிலை மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்து புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ‘‘எனக்கு சொந்த ஊர் கும்பகோணம். எங்க வீட்டில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தாங்க. நான் 8ம் வகுப்பு படிக்கும் போது எனக்கு பிடிச்ச சேனல் என்றால் டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிரபி சேனல்கள்தான்.
குறிப்பாக கடலுக்கடியில் உள்ள உயிரினங்கள் குறித்த நிகழ்ச்சியினை மிகவும் ஆர்வத்துடன் ரசித்து பார்ப்பேன். பள்ளிப் பாடத்திலும் எனக்கு பிடிச்சது விலங்கியல். இது எனக்கும் கடல் சார்ந்த உயிரினங்கள் மேல் ஒரு தனிப்பட்ட ஈர்ப்பினை ஏற்படுத்தியது. அப்ப என் வகுப்பு தோழி, மெரைன் பயாலஜி படிச்சா கடல் சார்ந்த உயிரினங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்னு சொன்னா. உடனே நான் அந்த படிப்பு குறித்து தேடலில் இறங்கினேன்.
பள்ளிப் படிப்பு முடிச்சதும் ெபாறியியல் துறையில் பட்டம் பெற்றேன். அதன் பிறகு முதுகலையில் மெரைன் பயாலஜிக்கு விண்ணப்பித்தேன். அந்தமான் நிக்கோபர் தீவுகளில் படிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்தமான் கடல் உயிரினங்கள் அதிகமா வாழும் பகுதி. அங்கு நிறைய பவளப்பாறைகளும், பல வகையான மீன்கள் குறித்து ஆராய்ச்சி செய்தேன். படிப்பு முடிச்சதும் தற்போது தனியார் கல்லூரியில் ஆய்வாளர் பணியில் இருக்கேன்’’ என்றவர் தன்னுடைய கடல் ஆய்வுகள் சம்பந்தமாக பேசத் தொடங்கினார்.
‘‘காடுகளுக்கு இணையாக கடல் ஆக்சிஜனை வெளியிடுகிறது. சரியா சொல்லணும்னா நாம் சுவாசிக்கிற ஆக்சிஜன்ல பாதி கடல்ல இருந்துதான் நமக்கு கிடைக்குது. இரண்டு தடவை நாம சுவாசிக்கிறோம் என்றால் அதில் ஒரு தடவை சுவாசிக்கும் மூச்சுக்காற்று கடல்ல இருந்துதான் கிடைக்குது. நமக்கு தேவையான பருவ மழை பொழிய கடலில் சேமிக்கப்படும் கார்பன்தான் காரணம். மேலும் கடல் உணவுகள் மூலம் நமக்கு தேவையான புரதச் சத்துக்கள் கிடைக்கிறது. நமக்கு கடலைப் பற்றி பெரிய அளவு தெரிவதில்லை. காரணம், நாம் அனைவரும் சமவெளிகளில் வாழ்ந்து வருகிறோம். அதனால் காடுகள் குறித்துதான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறோம்.
கடல், நம் கண்களுக்கு புலப்படாத ஒரு உலகமாகவே இருக்கிறது. இதனாலேயே கடலில் இருந்து அதிகமான உணவுகள் நமக்கு கிடைத்தாலும் எந்த உயிரினங்கள் கடலுக்கு முக்கியம் எந்த உயிரினங்கள் எல்லாம் குறைந்து வருகிறது என்கிற புரிதல் நம்மிடையே இல்லை. கடலை வெறும் வணிகமாகவே கார்ப்பரேட் நிறுவனங்கள் பார்த்து வருகின்றன. பெரிய கப்பல்கள் இழுவை வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பார்கள். இந்த வலையில் மீன் மட்டுமில்லாமல் ஆழ் கடலில் வாழும் நத்தைகள், சிறிய வகை மீன்கள், நண்டு போன்ற உயிரினங்கள் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இவை கடல் சூழலுக்கு ரொம்ப முக்கியமானவை.
கடல் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இந்திய பெருங்கடலில் கிடைக்கும் உயிரினங்களும் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் உயிரினங்களும் ஒன்று போல இருக்காது. மேலும் கடற்கரை நமக்கு பொழுதுபோக்கும் இடம். அங்கு சிதறும் குப்பைகளை கடல் உள்வாங்கிக் கொள்கிறது. அந்த குப்பைகள் பல கடல் உயிரினங்களுக்கு அபாயமாக மாறி வருகிறது. குப்பைகளோடு ஏற்படும் காலநிலை மாற்றங்கள் மீன் இனங்கள் அழிய காரணமாக இருக்கிறது.
இதை நாங்க பிஸ்ஸிங்க் பிரஷர் என்று அழைப்போம். மக்கள் விரும்பி சாப்பிடும் மீன்களை பிடிக்க மீனவர்கள் கட்டாயப்படுத்துவாங்க. இது அந்த உயிரினங்களையே அழிச்சிடும். மேலும் நாங்க காலநிலை மாற்றம் குறித்து பேசினால் பொய் சொல்வதாக கூறுகிறார்கள். நான் செய்த ஆராய்ச்சி மூலம் கண்டறிந்த விஷயங்களை பகிர்கிறேன். நாம நினைத்ததை விட பூமி மீள முடியாத இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
கால நிலை மாற்றங்களால் ஏற்படப்போகும் முதல் பாதிப்பு தண்ணீர் தட்டுப்பாடு. ஒரு குடம் தண்ணீருக்காக இன்றும் இந்தியாவின் பல கிராமங்களில் பெண்கள் கால் கடுக்க நடந்து செல்கிறார்கள். இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் பருவம் தவறி பொழியும் மழையால் ஏற்படும் வெள்ள அபாயங்கள்’’ என்றவர் விலங்குகளிடையே உள்ள பாலினம் குறித்த ஆய்வு பற்றி விவரித்தார்.
‘‘நாம் உருவாக்கிய பாலின வேறுபாடுகள் எல்லாம் இயற்கையில் கிடையாது. பெண்கள் சாந்தமானவர்கள், உணர்ச்சிகரமானவர்கள், தாய்மை உணர்வு அதிகம் பெண்களுக்கு மட்டுமே உள்ளது என நாம் இயற்கையை எடுத்துக்காட்டாக சொல்லிதான் பெண்களுக்கு அறிவுரை வழங்குகிறோம். சில வகை விலங்குகளில் ஆண் விலங்குகள்தான் குட்டிகளை பார்த்துக் கொள்ளும்.
அதேபோல் தன்னுடைய பாலினத்தை மாற்றிக்கொள்ளக்கூடிய தன்மையும் விலங்குகளிடம் இயற்கையில் உள்ளது. ஆணாக பிறந்து பெண்ணாக மாறக்கூடிய மீன்களும், பெண்ணா பிறந்து ஆணா மாறக்கூடிய விலங்குகளும் பிரபஞ்சத்தில் உள்ளது. பன்முக பால் பண்பு, தன்பாலின் மேல் ஈர்க்கப்படுபவை, இரு பாலினம் மீதும் ஈர்ப்பு கொள்ளக்கூடிய மாற்று பாலின விலங்குகள் இயற்கையால் படைக்கப்பட்டுள்ளது. சில ஆண் விலங்குகள் பிரசவிக்கக் கூடியவை.
கடல் குதிரைகளில் ஆண் கடல் குதிரைகளே பிரசவிக்கின்றன. கருவுற்ற சினை முட்டையை ஆணோட வயிற்றுப் பையில் பெண் கடல் குதிரைகள் போட்டு விடும். அதை பத்திரமாக பிரசவிக்கும் வேலை ஆண் கடல் குதிரையுடையது. பறவையினங்களில் ஆண் தாமரை கோழிகளே குஞ்சுகளை பார்த்துக்கொள்கின்றன. பென்குயின்களில் பேரரச பென்குயின் என்று ஒரு வகை இருக்கு.
இவை முட்டையினை போட்டுவிட்டு அதை ஆணிடம் கொடுத்துவிட்டு வேட்டையாட சென்றுவிடும். அந்த நேரத்தில ஆண் பென்குயின்கள்தான் முட்டைகளை அடைகாக்கும். பெண் பென்குயின் வந்ததும் ஆண் வேட்டையாட போகும். இப்படியாக இருவருமாக சேர்ந்துதான் குட்டிகளை பார்த்துக் கொள்கின்றன. கடும் வறட்சி அல்லது வெள்ள காலங்களில் கூட ஆண் பென்குயின்கள் முட்டைகளை அடைகாக்கும்.
இதைத்தான் பாலின சமத்துவம் என்று சொல்கிறோம். இந்த மாதிரியான பாலின சமத்துவம் விலங்குகளிடம் இயற்கையாகவே அமைந்துள்ளது. ஆனால், இயற்கையை காரணம் காட்டி குழந்தைகளை பெண்கள் மட்டுமே பார்த்துக்கொள்ள வேண்டும். ஆண் குடும்பத்தை பார்த்துக்கொள்வார் என்பது சொல்பவர்களின் சுயநலமே. ஒவ்வொருவரின் சுயநலமும் இயற்கையை காரணம் காட்டி மற்றவரை ஒடுக்குவதற்காகவே உள்ளது. இயற்ைக பின்பற்றும் பாலின சமத்துவத்தை நம் தேவைகளுக்காக இனி காரணம் காட்ட வேண்டாம்’’ என்கிறார் நாராயணி சுப்ரமணியன்.