கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 33 Second

என் வயது 30. திருமணமாகிவிட்டது. தற்போது இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்குக் கடந்த ஐந்து வருடங்களாகச் சிறுநீரகக்கல் பிரச்னை இருக்கிறது. ஒரு தடவை மருந்து கொடுத்து, கல்லை வெளியேற்றியும் இருக்கிறார்கள். நான் கர்ப்பமாக இருக்கிற இந்த நேரத்தில், மறுபடியும் சிறுநீரகத்தில் கல் இருந்தால் ஏற்படுகிற வலிபோல ஆரம்பித்திருக்கிறது. என்னுடைய மருத்துவரோ, `கிட்னி ஸ்டோனுக்குத் தற்போது எந்தச் சிகிச்சையும் தர முடியாது. அது வயிற்றிலிருக்கும் சிசுவை பாதிக்கும்’ என்று சொல்லிவிட்டார். நான் என்ன செய்வது?

– எம்.ஜோதிபாலா, நாமக்கல்.

முதலில், பூரணநலத்துடன் உங்கள் குழந்தையைப் பெற்றெடுக்க வாழ்த்துகள் இப்போது உங்கள் பிரச்னைக்கு வருவோம். நீங்கள் கர்ப்பமாக இருப்பதால், முடிந்தவரை வேறு சிகிச்சைகள், மருத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது உங்கள் வயிற்றிலிருக்கிற கருவுக்கு நல்லது. நிறைய தண்ணீர் குடியுங்கள். ஒருவேளை சிறுநீரகக்கல்லால் உங்களுக்குத் தாங்க முடியாத வலி ஏற்பட்டால், அல்ட்ரா சவுண்ட் செய்து, யூரிட்டர் வழியாக மெல்லிய டியூபை உள்ளே செலுத்தி, அடைப்பை நீக்கிவிடுவோம்.

அந்தச் சிறுநீரகக்கல், சிறுநீர் வழியாக வெளியே வந்துவிடும். எனவே, கவலை வேண்டாம். குழந்தைப் பேறுதான் முக்கியம் அதில் கவனம் செலுத்துங்கள். மருத்துவர் உங்கள் நலனுக்காகவும் உங்கள் சிசுவின் நலனுக்காகவுமே சொல்கிறார் அதை மனதில் கொள்ளுங்கள். நீங்களாக எந்தவித சுயவைத்தியமும் செய்துகொள்ள வேண்டாம். அவசியம் எனில் மருத்துவரை நாட தயங்காதீர்கள்.

எனக்கு வயது 57. கடந்த ஆறு மாத காலமாக தைராய்டு பிரச்னைக்கு மருந்து சாப்பிடுகிறேன். கடந்த மாதம், வலது கண் இயற்கைக்கு மாறாகச் சற்றுப் பெரிதானது. விழிகளை மூடவோ, அசைக்கவோ முடியவில்லை. `இது, தைராய்டால் ஏற்படும் `ஆன்டிஜென் கிரேவ்’ (Antigen Grave) எனப்படும் ஒரு வகைப் பிரச்னை’ என்று சொல்லி, கதிரியக்கச் சிகிச்சை கொடுத்தார்கள் மருத்துவர்கள். ஆன்டிஜென் கிரேவ் என்பது என்ன… தைராய்டு பிரச்னை இருந்தால் கண்களில் பாதிப்பு ஏற்படுமா… கண்களுக்குக் கதிரியக்கச் சிகிச்சை எடுத்துக்கொண்டால் எதிர்காலத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுமா?

– கே.மகேஸ்வரி, ஆண்டிப்பட்டி.

உடலில் தைராய்டு ஹார்மோனின் அளவு அதிகமானால் ஏற்படும் பிரச்னைதான் இந்த `கிரேவ் நோய்’ (Grave Disease). ஹார்மோன் அளவு அதிகரித்தால், கண் பிரச்னை ஏற்படுவது இயல்பே. ஹார்மோனின் அளவைப் பொறுத்து ஸ்டீராய்டு மருந்துகளோ அல்லது கதிரியக்கச் சிகிச்சையோ, அறுவை சிகிச்சையோ பரிந்துரைக்கப்படும். அந்த வகையில், உங்களுக்குக் கதிரியக்கச் சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. `தைராய்டு ரிசப்டர் ஆன்டிபாடிஸ்’ (Thyroid Receptor Antibodies) அளவு அதிகரித்தால், கண்களைச் சுற்றியிருக்கும் `ஆர்பிட்டல்’ (Orbital) தசைகள் பாதிக்கத் தொடங்கும். அதனால் கண் பாதிப்பு ஏற்படும்.

நீங்கள் சொல்வதுபோல விழிகளை மூட முடியாமலும், அசைக்க முடியாமலும் திணற இதுதான் காரணம். இப்படியான கண் பிரச்னைகள், `பிராப்டோசிஸ்’ (Proptosis) எனப்படும். அதேபோல் கண்கள் சிவப்பது, பொருள்கள் இரண்டு இரண்டாகத் தெரிவது (Double Vision), பார்வைக் குறைபாடு, கண்ணில் நீர் வடிதல் போன்றவைகூட ஏற்படலாம். மற்றபடி, உடலில் தைராய்டு ஹார்மோன் அளவு சீராக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

TSH, FT3 மற்றும் FT4 போன்ற பரிசோதனைகளின்போது அளவுகள் அனைத்தும் சீராக இருக்க வேண்டும். தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் சிகரெட் புகை இருக்கும் சூழல்களைத் தவிர்த்துவிடுங்கள். நாளமில்லாச் சுரப்பிக்கான நிபுணரை அணுகுவதுபோலவே, கண் மருத்துவரைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை சந்தித்து ஆலோசனை பெறுவதும் அவசியம்.

தைராய்டு பிரச்னைக்கு கதிரியக்கச் சிகிச்சை அளிக்கும்போது, பெரும்பாலும் `20 கிரே’ (Gray) என்ற அளவுதான் பரிந்துரைக்கப்படும். இது மிகவும் குறைந்த அளவே. ஆனாலும், கதிரியக்கச் சிகிச்சையால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். உதாரணமாக, புருவம் அல்லது கண் இமை முடிகள் விழுதல், கண்கள் வறண்டுபோதல், கண்புரை போன்றவை ஏற்படலாம். புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதேவேளையில் மேற்சொன்ன பக்கவிளைவுகளும் தற்காலிகமாகத்தான் இருக்குமே தவிர, வாழ்நாள் பாதிப்பாக இருக்காது. கண் மருத்துவரின் அறிவுரையைச் சரியாகப் பின்பற்றினால் இவற்றை எளிமையாகத் தவிர்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கர்ப்ப காலப் பராமரிப்பு!! (மருத்துவம்)