உங்களை காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்! (மகளிர் பக்கம்)
‘பெண்கள்தான் சக்தி. அவர்கள் தான் வீட்டினை காக்கும் மகாசக்தி. அம்மா, அக்கா, தங்கை, மனைவி என பல முகங்கள் கொண்டவர்கள். இப்படி பல வாக்கியங்கள் பெண்களைப் போற்றும் வண்ணம் நாம் பார்த்திருப்போம், படித்திருப்போம். ஆனால் அவர்களுக்கு என தனிப்பட்ட நேரம் என்று இருக்கிறதா? என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. அந்த எண்ணம்தான் பெண்கள் தங்களுக்காக என்ன யோசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இந்த டேபிள் புத்தகத்தை வெளியிட முடிவு செய்தேன்’’ என்கிறார் அழகுக்கலை மையத்தின் நிர்வாகி வீணா. இவர் ‘செல்ஃப் லவ்’ என்ற பெயரில் பல பிரபலங்கள் தங்களை எவ்வாறு நேசிக்கிறார்கள் என்பதைப் பற்றி சின்ன குறிப்பெடுத்து அதனை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
‘‘பெண்கள் இன்று மட்டுமல்ல, எப்போதுமே தங்களுக்கான நேரத்தினை ஒதுக்குவதில்லை, அவர்கள் பல துறையில் சாதித்து வந்தாலும், குடும்பம், குழந்தைகள் மற்றும் வேலைக்கு முக்கியத்துவம் தருவது போல் தங்களுக்காக ஒரு சில நிமிடங்கள் யோசிப்பதில்லை. அந்த எண்ணம் எனக்கும் ஏற்பட்டது பெண்கள் தங்களுக்காக யோசிக்க வேண்டும் என்று விரும்பினேன். குறிப்பாக என் சலூனிற்கு வரும் போது அவர்கள் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் அதனை தங்களுக்கான நேரமாக யோசிக்க வேண்டும். அதை நாம் சொன்னால் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே சமயம் அதனை பல துறைகளில் சாதித்த பெண்கள் சொல்லும் போது அவர்களுக்குள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அந்த எண்ணத்தை தூண்டத்தான் என்னுடைய இந்த முதல் முயற்சியாக செல்ஃப் லவ் என்ற காபி டேபிள் புத்தகம்.
இந்த புத்தகத்தில் பத்துக்கும் மேற்பட்ட பல துறைகளில் தங்களுக்கு என அடையாளம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பெண்களை தேர்வு செய்தோம். அவர்களிடம் செல்ஃப் லவ் என்றால் என்ன என்று கேட்டோம். அழகாக நான்கு வரிகளில் அவர்கள் சொன்னதை சின்னச் சின்ன குறிப்புகளாக அவர்களின் புகைப்படத்துடன் இதில் வெளியிட்டு இருக்கிறோம். அமர் ரமேஷ் ஒவ்வொரு வரையும் அழகாக படம் பிடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பவித்ரா லட்சுமி போன்ற பிரபலங்கள் சொல்லும் போது கண்டிப்பாக மற்ற பெண்கள் அவர்களை அதில் ஒப்பிட்டு பார்ப்பார்கள், எல்லாவற்றையும் விட தங்களுக்காக நேரம் ஒதுக்குவது தவறல்ல. அதற்காக குற்ற உணர்வு பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த புத்தகத்தை எங்களின் அனைத்து கிளை சலூன்களிலும் வைக்க இருக்கிறோம். அங்கு பலதரப்பட்ட பெண்கள் வருகிறார்கள். அவர்களுக்கு இந்த புத்தகத்தில் உள்ள சிலரை தெரியும், சிலரைத் தெரியாது. மேலும் அவர்களுக்கு தெரிந்த பெண்கள் சொல்லும் போது அது அவர்களின் மனதில் பதியும். இதனை நாங்க சமூக வலைத்தளத்தில் வெளியிட்டால், அதைப் பார்த்து அப்படியே கடந்திடுவார்கள். வார்த்தையாக படிக்கும் போது மனதில் பதியும். மேலும் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியும்’’ என்றவர் அவரைப் பொறுத்தவரை செல்ஃப் லவ் என்பது பிடித்த விஷயங்களை செய்வதாம்.
‘‘நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்களுக்கு பிடிச்சதை செய்யுங்கள். இன்றும் சிலர் தங்களை அழகுப்படுத்திக் கொண்டால் வீட்டில் என்ன சொல்வார்கள் என்று யோசிப்பார்கள். காரணம், அழகுப்படுத்திக்கொள்வது சினிமா நடிகைகளின் வேலை. அதை மற்ற பெண்கள் செய்து கொள்வது அவசியமில்லை என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இன்றைய உலகம் அப்படி இல்லை. வீட்டில் இருக்கும் பெண்களும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் ஃபேஷியல், ஐப்ரோ தீட்டுவது, ஹேர்ஸ்டைலிங் எல்லாம் செய்து கொள்ள விரும்புவதில் தவறில்லையே. சாஹித்யா ஜகநாதன், பிரபல மாடல். அவர்கள் குடும்பத்தில் பெண்கள் வெளியே செல்லக்கூடாது, மேக்கப் போட்டுக் கொள்ளக்கூடாது.
இவர் மாடல் துறைக்கு வந்த பிறகுதான் அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். பெண்கள் வீட்டின் படியினை தாண்டக்கூடாது என்று நினைக்கும் குடும்பத்தில் பிறந்தவர் பல போராட்டங்களுக்கு பிறகு தான் இந்த துறைக்கு வந்துள்ளார். ஒரு பெண் தான் செய்ய விரும்புவதை சுதந்திரமாக செய்ய வேண்டும். அது அவர்களை அழகுப்படுத்துவது மட்டுமல்ல, தங்களுக்கு பிடித்த வாழ்க்கை துணை, பிடித்த கல்வி, பிடித்த நாட்டுக்கு பயணம்… இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு.
பிரச்னையுள்ள திருமண வாழ்க்கையில், சுவாசிக்க முடியாமல் மூச்சு முட்டி தவிப்பதற்கு, அதில் இருந்து விலகி, சுவாசிக்கலாம். இது சரியோ, தவறோ… எதுவாக இருந்தாலும், அதை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்ட பெண்கள் இன்று பலர் உள்ளனர். இந்த புத்தகத்தில் உள்ள வரிகளை படிக்கும் போது ஏதாவது ஒரு வரி அவர்கள் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டு இருக்கும். அதுதான் இந்த புத்தகத்தின் வெற்றி என்று நான் நினைக்கிறேன்’’ என்றார் வீணா.