மகளிர் மனநலம் காப்போம்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 15 Second

தினமும் 30 – 40 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வது உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் மிகவும் நல்லது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் செரடோனின் அதிகமாக உற்பத்தி ஆகும். அது மனதை அமைதிப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

தூக்கத்துக்கு நோ காம்ப்ரமைஸ்!

நல்ல தூக்கத்தை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்காதீர்கள். 6 – 8 மணி நேர தூக்கம் அவசியம். நல்ல தூக்கம் மனநலத்துக்கு மிகவும் அவசியம்.

பரந்த மனதுடன் உலகை நோக்குங்கள்!

குறுகிய மனதுடன் இல்லாமல் பரந்த கண்ணோட்டத்துடன் உலகைப் பாருங்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது உங்கள் வாழ்வைத் தொய்வின்றி சுறுசுறுப்பாக இயக்க உதவும்.

சுற்றி இருப்பவர்களிடம் பழகுங்கள்!

சுற்றி இருப்பவர்களிடம் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக் கொள்வது நம் மனநலத்துக்கு மிக முக்கியம். பிறரிடம் பேசுவதற்கு தயக்கம் காட்டாமல் புதிய உறவுகளை உருவாக்க முயலுங்கள்.

புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்!

நடனம், ஓவியம், தையல் என உங்களுக்குத் தெரியாத ஏதாவதொரு கலையைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருங்கள். புதிய கலைகளைக் கற்றுக்கொள்வது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள்!

குடும்பத்தினருடன் கலந்து பேசுவது மனநலத்துக்கு மிகவும் முக்கியம். ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுவது, வெளியில் செல்வது போன்றவை குடும்பத்துக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதோடு மனநலத்தை மேம்படுத்தவும் உதவும்.

வீட்டுக்குள் அடையாதீர்கள்!

பெண்கள் எப்போதும் வீட்டுக்குள் முடங்கி இருக்காமல் வெளியில் செல்ல வேண்டும். புதிய மனிதர்களைப் பார்ப்பது, அவர்களிடம் பேசுவது, புதிய அனுபவங்களைக் காண்பது போன்றவை ஒரு புத்துணர்ச்சி தரும்.

சுற்றுலா செல்லுங்கள்!

பயணங்கள் நம் வாழ்வில் பல புதிய அனுபவங்களைத் தர வல்லவை.தனியாகவோ, குழுவுடன் சேர்ந்தோ நிறைய பயணம் செய்ய முயலுங்கள். அது இறுக்கங்களைத் தவிர்க்கும், மனதை லேசாக்க உதவும். உங்கள் ஊரிலேயே நீங்கள் சென்றிடாத ஏதோவோர் இடம் இருக்கலாம். அதைப் பார்த்துவிட்டு உற்சாகத்துடன் வீடு திரும்பலாம்.

தவறுகளைக் கண்டு வருந்தாமல் திருத்திக் கொள்ளுங்கள்!

ஏதாவது தவறு செய்துவிட்டால், இப்படிச் செய்துவிட்டோமே என எண்ணிக் கொண்டே இருப்பது மன வருத்தத்தை அதிகமாக்குவதோடு மனநலனையும் பாதிக்கும். தவறு நிகழ்ந்துவிட்டால் அதை ஏற்றுக்கொண்டு அடுத்த முறை இப்படி இந்தத் தவறு நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்!

யாருமே உங்களுடைய முயற்சியைப் பாராட்டவில்லை என்பதால் அது வீணான முயற்சி என்று அர்த்தம் கிடையாது. பிறருடைய பாராட்டுக்காக ஏங்கி வருத்தம் அடையாமல் உங்களுடைய ஒவ்வொரு முயற்சியையும் வெற்றியையும் நீங்களே கொண்டாடுங்கள். அது உங்களை சோகமாக விடாமல் வெற்றியை நோக்கி முன்னேற உறுதுணையாக இருக்கும்.

மனநலமும் உணவும்

மனநலத்துக்கும் உணவுக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உடல் செயல் பாட்டுக்கும், மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் உணவு மிகவும் அவசியமான ஒன்று. மூளையையும் குடலையும் இணைக்கும் வகையில் ஒரு நரம்பு உள்ளது. அந்த நரம்பின் பெயர் ‘வேகஸ்’ (Vagus nerve). ஒருவரின் மனநிலைக்கு ஏற்றது போல மூளையிலிருந்து குடலுக்குச் செய்தி கிடைக்கும்.
மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற சூழலில் மூளையிலிருந்து குடலுக்கு செய்தி கிடைக்கும். அதன் காரணமாக சோகமாக இருக்கும் நேரங்களில் அதிக உணவை உண்ணத் தொடங்குவோம். ஊட்டச்சத்து இல்லாத துரித உணவுகளை விரும்பி உண்ணும் வாய்ப்பு அதிகமாகும்.

துரித உணவுகள் என்று சொல்லும்போதே, அவை அதிக அளவு சர்க்கரை உடையதாகவும், கொழுப்பு சத்துகள் உடையதாகவும்தான் இருக்கும். இந்த மாதிரி உணவுகளை உண்ணுவது உடனடியாக ஓர் இன்பத்தையும், நிம்மதியையும் தரும். அதிக சர்க்கரை உடைய உணவுகள் சாப்பிட்ட உடனேயே மூளையை மிகவும் சுறுசுறுப்பாக்கிவிடும் என்பது உண்மைதான். ஆனால், அவை உடம்புக்கு ஆரோக்கியமானதல்ல. மன அழுத்தத்தில் இருந்ததால் பருமனாகிவிட்டேன் எனப் பலர் கூறக் கேட்டிருப்போம். அதன் பின்னணியில் உள்ள காரணம் இதுதான். நம் உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டையும் காப்பதற்கு ‘Mindful eating’ முறையைக் கடைப்பிடிப்பது நல்லது.

மன பாதிப்பு காரணமாக வரும் உணவு தொடர்பான நோய்கள் என்னென்ன (Eating Disorders)?மன பாதிப்பு காரணமாக ஏற்படும் உணவு தொடர்பான நோய்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு நோய்க்கும் ஏற்றது போல் அறிகுறிகள் மாறுபடும்.அனரெக்சியா நெர்வோசா (Anorexia Nervosa): இந்த வகை நோய் உடையவர்கள் தங்கள் உடல் எடை குறித்து அதீத அக்கறையுடன் இருப்பார்கள். தாங்கள் குண்டாக ஆகிவிடுவோமோ என்ற பயம் அதிகமாக இருக்கும்.

அந்த பயத்தின் காரணமாகவே இவர்களால் சாப்பிட முடியாது. உருவத்தின் மேல் அதிக சிந்தனை இருக்கும். எப்போது பார்த்தாலும் கண்ணாடி முன் நின்று உருவத்தைப் பார்த்துக்கொள்வது, குண்டாக இருக்கிறோமா என ஆராய்வது போன்ற செயல்களைச் செய்வார்கள். வழக்கத்தைவிட உடல் எடை மிகவும் குறைவாக இருப்பார்கள். சருமம் வெளுப்பாகக் காணப்படுவதோடு வாய், தொண்டை வறண்டு காணப்படும். இவை அனைத்துக்கும் ஊட்டச்சத்து குறைவாக இருப்பதே காரணமாகும்.

புலிமியா நெர்வோசா (Bulimia Nervosa): இந்த வகை நோய் இருப்பவர்கள் உடல் எடை அதிகரிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். ஆனால், அனரெக்சியா போல சாப்பிடாமல் இல்லாமல் இவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். அதிகமாக சாப்பிட்ட பிறகு உடல் எடை அதிகரிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அவர்களாகவே விரல்களால் வாந்தி வரவைத்து சாப்பிட்டதை வெளியேற்றுவார்கள். இவர்களுக்கு உடல் பருமன், சரும பாதிப்புகள், மாதவிடாய்க் கோளாறுகள் எனப் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

பிஞ்சே ஈட்டிங் டிசார்டர் (Binge Eating Disorder): இந்த வகையில், கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுகிறேன் என நிறைய சாப்பிடுவார்கள். சாப்பாடு சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என அதைத் தவிர்த்துவிட்டு நொறுக்குத் தீனிகளாகச் சாப்பிடுவார்கள். அதிக கலோரிகள் உள்ள உணவுகளையும், ஆரோக்கியமற்ற உணவுகளையும் சாப்பிடுவார்கள். இது உடல் எடை அதிகரிப்பதற்குக் காரணமாக அமையும்.

பைகா டிசார்டர் (Pica Disorder): இவர்கள் உணவு அல்லாத பிற பொருள்களைச் சாப்பிடுவார்கள். பேப்பர், சுண்ணாம்பு, மண் போன்ற பொருள்களைச் சாப்பிடும் இந்த நோய் ஆபத்தானது. வயிறு பிரச்னைகள், குடல்களில் அடைப்பு, செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் உண்டாகலாம். இந்த உபாதைகளால் சாதாரண உணவு சாப்பிடுவதில் பாதிப்பு வரலாம். மிகவும் ஒல்லியாக, உடல் எடை குறைவாக இருப்பார்கள்.

இந்த உணவு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் மனநலனுக்கும் பெரிய தொடர்பு உண்டு. இந்த நோய்கள் இருப்பவர்கள் அனைவருக்கும் உடல் அளவில் எந்தவித பிரச்னையும் இருக்காது. அவர்களுடைய மனம் மற்றும் சிந்தனைகள் காரணமாகவே இப்படி நடந்துகொள்வார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அதை செய்துவிட்டு உறவு கொள்ளலாமா ?..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மாறுபட்ட மருத்துவ சேவையில் டாக்டர் தோழிகள்!! (மகளிர் பக்கம்)