மாறுபட்ட மருத்துவ சேவையில் டாக்டர் தோழிகள்!! (மகளிர் பக்கம்)
கோயம்புத்தூர் அவினாசி ரோட்டில் உள்ளது இளம் பருவ வயதினருக்கான உடல் நல மையம். இதனை குழந்தை நல மருத்துவர்களான டாக்டர் ஜெயஸ்ரீ, டாக்டர் லஷ்மி சாந்தி இருவரும் நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவரும் பல நாள் தோழிகள். தனிப்பட்ட முறையில் இளம் வயதினரின் பிரச்னைக்கு தீர்வு அளித்து வரும் இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சென்று வாழும் கலை குறித்த பயிற்சி வகுப்புகளை அளித்து வருகிறார்கள். இளம் வயதினர் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் அவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விவரித்தனர் டாக்டர் தோழிகள்.
*நீங்கள் இருவரும் இணைந்து செயல்படுத்தும் மருத்துவ சேவைகள்…
வளர் இளம் பெண்களுக்கான சிறப்பு கவுன்சிலிங் அளித்து அதன் மூலம் அவர்களின் பிரச்னைக்கு ஒரு தீர்வு அளிப்பதுதான் எங்களின் முக்கிய வேலை. சில சமயம் இளம் சிறுவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளுக்கும் கவுன்சிலிங் அளிக்கிறோம். இதற்கு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது. வெளியே சொல்ல முடியாத பிரச்னைகளை இன்று பல டீன் ஏஜ் ஆண்-பெண் இருவரும் சந்திக்கிறார்கள். மனதுக்குள் புழுங்குவதால், மன அழுத்தம் பிரச்னையால் இவர்கள் மட்டுமில்லாமல் பெற்றோர்களும் அவதிப்படுகிறார்கள். எப்படி யாரிடம் கூறி சரி செய்வது என்று பெற்றோர்களும் தவிக்கிறார்கள்.
அவர்களுக்கு எங்களின் கவுன்சிலிங் உதவுகிறது. ஒரு டாக்டரான எங்களுக்கே இவர்களுள் இப்படி எல்லாம் பிரச்னைகள் ஏற்படுமா என்று வியக்க செய்யும் அளவிற்கு விதவிதமான வித்தியாசமான பிரச்சனைகளுடன் எங்களை சந்திக்க வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆரோக்கியம், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, பாலியல் சார்ந்த சந்தேகங்கள், உடல் பருமன் என பலவித பாதிப்புகளுக்கு ஏற்ப கவுன்சிலிங் அளித்து வருகிறோம்.
*பள்ளிக் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், கல்லூரி பெண்களுக்கு உங்களின் பணி?
நாங்கள் கோவையில் உள்ள பல என்.ஜி.ஓக்கள் உதவியுடன் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று அவர்கள் அவசியமான பாதுகாப்பு எச்சரிக்கை மற்றும் ஆரோக்கியம் குறித்து பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளித்து வருகிறோம். குறிப்பாக வாழும் கலை சார்ந்த பயிற்சிகள். இதில் பெற்றோர்கள் வளர் இளம் பருவ குழந்தைகளை எப்படி கையாள்வது, நல்வழிப்படுத்துவது என்பது குறித்தும் தெளிவுப்படுத்துகிறோம்.
குழந்தைகளுக்கான பயிற்சியினை பள்ளியில் அளிக்கும் போது தான் டீன் ஏஜ் வயதினரும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டோம். அதன் பிறகுதான் இந்த மையத்தினை துவங்கினோம். இங்கு பிறந்த குழந்தை முதல் பதினெட்டு வயது வரை உள்ள அனைத்து வயதினருக்கும் வழிகாட்டி வருகிறோம்.
*டீன் ஏஜ் வயதினரின் செயல்பாடுகள்?
எதிலும் நிதானமாக செயல்படுவதில்லை. சிறிய விஷயங்களுக்கு கூட அதிகம் கோபப்படுகிறார்கள். பெற்றோர் பேச்சை கேட்பதில்லை. சரியாக தூங்குவதில்லை. அதிகமாக ஓட்டல் உணவுகள் சாப்பிடுகிறார்கள். இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் இதுதான் இவர்களின் உலகமாக இருக்கிறது. செல்போன் இவர்களின் முழு நேரத்தினை ஆக்கிரமித்துக் கொள்கிறது. மனநல பாதிப்புக்கு தங்களின் தவறான வாழ்க்கை முறை என்பது கூட தெரியாமல் அதை மாற்றிக் கொள்ள தவறுகிறார்கள்.
இதுபோல் பலவித குற்றச்சாட்டுகளை இன்றைய சமுதாயம், இவர்கள் மீது சுமத்திவிட்டு அதற்கு தீர்வு தராமல் வேடிக்கை பார்க்கிறது. அதை சரி செய்தே தீர வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறோம். நாங்க கொடுக்கும் கவுன்சிலிங்கால் அவர்களின் பிரச்னைகளை அவர்களாகவே தீர்வு காணும்படி இருக்கும். மேலும் எங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்கள் குறித்த விவரங்களை நாங்க பாதுகாப்பதால், பெற்றோர்களும் தயங்காமல் தங்கள் குழந்தைகளை அழைத்து வருகிறார்கள்.
*டீன் ஏஜ் பெண்களின் பிரச்னைகள்
மனப் பிரச்னை மட்டுமில்லாமல் ஆரோக்கிய குறைபாடும் இவர்களுக்கு உள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகள் ரத்தசோகை, மைக்ரோன் நியுட்ரியன்ஸ் என்னும் ஊட்டச்சத்து குறைபாட்டினை சந்திக்கிறார்கள். இதனால் அனீமியா, ரத்தசோகை ஏற்படுகிறது. இது அடுத்த தலைமுறையினரையும் பாதிக்கும். இதனால் தான் அரசுப் பள்ளிகளில் வாரம்தோறும் இரும்புச் சத்து, போலிக் ஆசிட் மாத்திரைகளை சப்ளிமென்டாக கொடுக்கிறார்கள். அடுத்து உடல் பருமன். துரித உணவினை அதிகம் சாப்பிடுவதால் உடல் பருமன் மட்டுமில்லாமல் ரத்தசோகையும் ஏற்படுகிறது. இதற்கான சிகிச்சையினையும் அளிக்கிறோம். இதனை தொடர்ந்தால், சிறுவயதிலேயே ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, இருதய நோய்கள் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
அடுத்து பள்ளிப் பருவத்திலேயே போதை பொருட்களுக்கு அடிமையாகிறார்கள். இதனால் படிப்பில் கவனம் சிதறுகிறது. அதனால் பள்ளிகளுக்கு சென்று கெட்ட பழக்கத்தினால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகளை விளக்கி அவர்களுக்கு எச்சரிக்கை தருகிறோம். எங்களின் பேச்சினால் பல மாணவ-மாணவிகள் திருந்தி நல்வழியில் இருப்பதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
வளர் இளம் தலைமுறையினர் செல்போனிற்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் தெரியாத நபர்களுடன் தகாத உறவுமுறை மேற்கொண்டு சிக்கிக் கொள்கிறார்கள். சோஷியல் மீடியாவில் தங்களின் புகைப்படங்களை பதிவு செய்து, பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். தங்களின் புகைப்படத்திற்கு எத்தனை பேர் லைக் சொல்கிறார்கள் என்பதே அவர்களுக்கு ஒரு போதை பழக்கம் போலாகிவிடுகிறது. இவர்களிடம் பேசி அவர்களுக்கு வேறு பிடித்த விஷயங்கள் (விளையாட்டு, ஓவியம் வரைவது, இசை, நடனம்) என்ன என்று அறிந்து அதற்கான மாற்று தீர்வினை தருகிறோம். சிலர் இதனால் தற்கொலை முயற்சி வரை சென்றுள்ளனர். அவர்களின் மனநிலையையும் மாற்றுகிறோம்.
தற்போது கோவையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே செயல்படுத்தி வருகிறோம். இதனை மற்ற ஊர்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் செயலாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது’’ என்றனர் டாக்டர் தோழிகள் கோரசாக.