சிந்தடிக் ஷிபான் டிசைனர் புடவைகள் என்னுடைய சாய்ஸ் கிடையாது! (மகளிர் பக்கம்)
சா ஃப்ட்வேர் துறையில் வேலை பார்த்தாலும் மனசுக்கு பிடித்த துறையில் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் தான் ஏழு வருடமாக தனக்கு பிடித்த தொழிலில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துள்ளார் சென்னையை சேர்ந்த சுபாஷினி ஸ்ரீநிவாசன். இவர் சென்னை அடையாரில் ‘எஸ் ஸ்டுடியோ’ என்ற பெயரில் ஹாண்ட்லூம் மற்றும் ஹாண்டிகிராப்ட் புடவைகளை தனிப்பட்ட டிசைன்களில் அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறார். ‘‘பொதுவா கடைகளில்், ஒரே டிசைனில் பல வண்ணங்களில் புடவைகள் இருக்கும். அது மாதிரி இல்லாமல், புதுமையாக கொடுக்க நினைச்சேன். குறிப்பாக புடவையின் துணி் தரமாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். அதன் அடிப்படையில் என்னுடைய ஹாண்டிகிராஃப்ட் புடவைகளில் கலம்காரி், எம்பிராய்டரி, கட்ச் எம்பிராய்டரி, பட்டசித்ரா பெயின்டிங் எல்லாம் அறிமுகம் செய்தேன். ஒரு கலையுடன் மற்றொரு கலையினை சேர்த்து அந்த புடவையினை மெருகேற்றினேன். உதாரணத்திற்கு கலம்காரி பெயின்டிங் செய்யப்பட்ட புடவையில் எம்பிராய்டரியை இணைத்தேன். இதுேபால் பலவிதமான தனிப்பட்ட புடவைகளை நான் உருவாக்க ஆரம்பிச்சேன். நான் ஆரம்பத்தில் சாஃப்ட்வேரில் வேலை பார்த்து வந்தேன். திருமணம், குடும்பம் காரணமாக ஃபிரிலான்சரா சில காலம் வேலை பார்த்தேன். எனக்கு அழகாக உடை அணிய பிடிக்கும். நான் தனித்து தெரிய விரும்புவேன். வீட்டில் சின்ன விசேஷம் என்றாலும் எனக்கான உடையினை பார்த்து பார்த்து தேர்வு செய்வேன். நான் செய்வதைப் பார்த்து என் ஃபிரண்ட்ஸ், உறவினர்கள் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள். அவர்களுக்கு டிசைன் செய்து கொடுப்பேன். அது அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போனது. அப்போது தான் நாம் ஏன் இதையே சிறிய அளவில் தொழிலாக செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. வீட்டில் சிறிய அளவில் புடவைகளை வாங்கி விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மட்டுமே என் புடவைகள் பிரபலமாக இருந்ததால், அது மற்றவர்களுக்கும் செல்ல வேண்டும் என்று பெங்களூர், ஐதராபாத், சென்னை என கண்காட்சி வைத்தேன். ஆனால் அங்கும் ஒரு குறிப்பிட்ட மக்களைத்தான் என்னால் அடைய முடிந்தது. எல்லோருக்கும் என்னுடைய புடவையை கொடுக்க வேண்டும் என்பதால், ‘எஸ் ஸ்டுடியோ’வை திறந்தேன். அப்பதான் சென்னை மட்டுமில்லாமல் உலகம் முழுதும் என்னுடைய புடவையினை கொண்டு செல்ல முடியும். கடை ஆரம்பித்த அடுத்த நிமிடம் அதற்கான இணையத்தையும் துவங்கினேன். காரணம், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் இங்கு வருடத்திற்கு ஒரு முறைதான் வருவார்கள்.அப்படி வரும் போதுதான் அவர்களுக்கான உடைகளை வாங்குவார்கள். குறிப்பாக புடவைகள். அப்படியே அவர்கள் இணையத்தில் தேர்வு செய்தாலும், துணியின் தரம் மற்றும் நிறம் சரியாக இருப்பதில்லை என்று வருத்தப்பட்டார்கள். அவர்களை பொறுத்தவரை கொடுக்கும் பணத்திற்கு தரமான உடையினை வாங்க வேண்டும் என்பதுதான். அதனால் எங்களின் இணையத்தில் பார்க்கும் புடவைகள் அனைத்தும் அதில் எப்படி இருக்கிறதோ அதேபோல்தான் நேரிலும் இருக்க வேண்டும் என்பதில் நான் ரொம்பவே கவனமாக இருந்தேன். அதற்காகவே நாங்க புகைப்படம் எடுக்கும் போது கொஞ்சம் கூட நிறம் மாறாமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். சில சமயம் டபுள் நிற புடவைகளை புகைப்படம் எடுத்தால் அதில் வேறு நிறமாக வெளிப்படும். இதை எல்லாம் மனதில் கொண்டுதான் நாங்க இணையதளத்தையே அறிமுகம் செய்தோம்’’ என்றவர் ஒரு புடவையை எடுத்தால் அதற்கான பிளவுஸ் அனைத்தும் பேக்கேஜாக அளிப்பதாக தெரிவித்தார்.‘‘தற்போது புடவை சிம்பிளாக இருந்தாலும் அதற்கான பிளவுஸ் கிராண்டாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் புடவைக்கு ஏற்ப பிளவுசையும் நாங்களே தைத்து தருகிறோம். வெளிநாட்டில் இருப்பவர்கள் புடவையை வாங்கிடுவார்கள். பிளவுசினை அவர்கள் இங்கு வரும் போதுதான் தைக்க முடியும். அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டாம். புடவையினை ஆர்டர் செய்யும் போதே அதற்கான ரெடிமேட் பிளவுசும் நாங்க கொடுக்கிறோம். சிலர் கஸ்டமைஸ்ட் பிளவுஸ் விரும்புவார்கள். அதற்கு அவர்களின் அளவினை இணையத்தில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அளவு எவ்வாறு எடுக்க வேண்டும் என்ற வீடியோ பதிவும் உள்ளது. அதைப்பார்த்து படிவத்தை பூர்த்தி செய்தால் அவர்கள் குறிப்பிட்ட அளவிற்கு ஏற்ப பிளவுசினை தைத்து புடவையுடன் சேர்த்து அனுப்பிடுவோம். சில சமயம் பழைய புடவைக்கான பிளவுஸ் பழசாகி இருக்கும் அல்லது சரியாக ஃபிட்டிங் இருக்காது. அவர்களின் புடவையின் நிறத்திற்கு ஏற்ப ரெடிமேட் பிளவுஸ் மற்றும் மேட்சிங் பிளவுஸ் துணியும் பல வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் வைத்திருக்கிறோம். விருப்பத்திற்கு ஏற்ப தைத்துக் கொள்ளலாம். பிளவுஸ் மட்டுமில்லாமல் சல்வாரும் உள்ளது’’ என்றவர் தன் கடையில் உள்ள புடவைகளின் சிறப்பு பற்றி விவரித்தார்.‘‘நான் ஆரம்பித்த போது காட்டன், டஸ்சர், காஞ்சிபுரம் புடவைகளைதான் விற்பனை செய்து வந்தேன். புடவையினை அப்படியே வாங்கி விற்பனை செய்யாமல் அதில் என்னுடைய கிரியேட்டிவிட்டியை புகுத்த நினைச்சேன். அதனால் காஞ்சிபுர புடவையில் எந்த ஒரு டிசைனும் இல்லாமல் நெசவாளர்களிடம் வாங்கி அதில் நான் எம்பிராய்டரி, கலம்காரி, கட் வர்க் செய்தேன். இவை மூன்று மட்டுமே எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லிட முடியாது.மற்ற புடவைகைளும் விரும்புவார்கள். அதனால் மற்ற புடவைகளிலும் வேலைப்பாடு செய்ய ஆரம்பித்தேன். அதே சமயம் என்னுடைய புடவைகள் அனைத்தும் ஹாண்டிகிராஃப்ட் மற்றும் ஹண்ட்லூம் புடவைகளாக இருக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தேன். சிந்தடிக் அல்லது ஷிபான் மற்றும் அதில் கற்கள் வேலைப்பாடுகள் கொண்ட டிசைனர் புடவைகள் என் சாய்ஸ் இல்லை. எல்லாவற்றையும் தாண்டி என்னுடைய பட்டுப்புடவைகள் அனைத்தும் சில்க் மார்க் சான்றிதழ் பெற்றிருக்கும். காரணம், அந்த புடவைகள் தான் தறியில் எந்தவித கலப்படம் இல்லாமல் நெய்யப்படும் புடவைகள். பொதுவாக கைகளால் நெய்யப்படும் புடவைகளில் பெரும்பாலும் அதே மஞ்சள், சிகப்பு, பச்சை என ஒரே நிறங்கள் மற்றும் டிசைன்கள் கொண்டுதான் வரும். அப்படி இல்லாமல் நான் புதுவிதமான நிறங்கள் மற்றும் டிசைன்களை அறிமுகம் செய்தேன். சிம்பிளாக அலுவலகம் கட்டிச் செல்ல நேர்கோடுகள் மற்றும் கான்ட்ராஸ்ட் நிற முந்தானைகளை அறிமுகம் செய்தேன். வெங்காய பிங்க் மற்றும் பீட்ரூட் நிற பார்டர், ஆனந்தா நீலப் புடவையில் லாவண்டர் நிற ஜரி, நாகப்பழ நிறத்தில் பச்சை பார்டர், ஏலக்காய் பச்சையில் மெஜந்தா பார்டர், குங்கும மெரூனில் பிங்க் பார்டர் என விதவிதமான கலர் காம்பினேஷன் கொடுத்தேன். அவை அனைத்தும் காஞ்சிபுர புடவையில் கொண்டு வந்தேன். அதுமட்டுமில்லாமல் அதில் கட்வர்க், கலம்காரி பிரின்ட், கச் வேலைப்பாடு, டிஜிட்டல் பிரின்டிங்கும் அமைத்திருக்கிறோம். சில சமயம் இரண்டு விதமான புடவைகளை ஒன்றாக இணைத்தும் செய்திருக்கிறோம். அதாவது, டஸ்சர் மற்றும் காஞ்சிபுரம் இரண்டையும் இணைத்து ஒரே புடவையாக அமைத்திருக்கிறோம். அடுத்து பனாரஸ் புடவைகள் பற்றி இங்கு பலருக்கு தெரியவில்லை. அதற்காக இந்தியா முழுக்க உள்ள ெநசவாளர்களை சந்தித்து அவர்களின் லைட் வெயிட், எளிய டிசைன் கொண்ட பனாரஸ் புடவைகளை வடிவமைத்து தரச்சொன்னேன். இவை தவிர காஞ்சி காட்டன், செட்டிநாடு காட்டன், மங்கள கிரி காட்டன் புடவைகளும் உள்ளது. என்னைப் பொறுத்தவரை ஒரு புடவை வாங்கினால், அதை விழாக்களுக்கு மட்டுமே உடுத்தாமல், எல்லா நாட்களும் கட்டும்படி அமைக்க வேண்டும்’’ என்றவர், இந்தியா முழுக்க உள்ள நெசவாளர்களுடன் இணைந்து அழகான புடவையினை உருவாக்கி வருகிறார்.