மகளிர் உரிமைத் தொகை ₹1000!! (மகளிர் பக்கம்)
காலையில் எழுந்ததும் சமையல் வேலை, பாத்திரம் துலக்குவது, வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது, குழந்தை வளர்ப்பு, முதியோர் பராமரிப்பு, குடும்பத்தில் நோயுற்றோரை பராமரிப்பது, குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருவது, வீட்டிற்கான திட்டமிடல், பொருள் வாங்குதல், பண்டிகை வேலை களென வீட்டிலிருக்கும் பெண்கள் செய்து வரும் வேலைகள் எண்ணிலடங்காதவை. இத்தனையும் செய்துவிட்டு, ‘‘வீட்டில் நான் சும்மாதான் இருக்கிறேன்’’ என்று பெண்கள் சொல்வதன் காரணம், அவர்கள் பார்க்கும் வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காமல், வருமானமின்றி இருப்பதுதான்.
இதைக் கருத்தில் கொண்டு, பெண்களின் நலனில், பெண்களுக்கான உரிமையில் அக்கறை கொண்ட, ஆளும் திராவிட முன்னேற்றக்கழக அரசு தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் சட்டமன்ற பட்ஜெட் உரையின்போது அறிவித்திருக்கிறார்.
தமிழக அரசின் 1 கோடி மகளிருக்கான உரிமைத் தொகை திட்டம் குறித்து சிலரிடம் கருத்துக் கேட்டபோது…ஓவியா, சமூக செயற்பாட்டாளர்.‘‘பெண்களின் உழைப்பிற்கு எந்தவிதமான பொருளாதார மரியாதையும், சமுதாய மரியாதையும் இங்கே கிடைப்பதில்லை. நாள் முழுவதும் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம், “என்ன செய்கிறாய்?” எனக் கேட்டால்… “நான் வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்” என்பார். தகுதியானவர்களாக தங்களை பெண்கள் நினைப்பதில்லை. இந்த மாதிரியான சமூகக் கட்டமைப்பில், கணவன் மற்றும் மகனிடம் கையேந்தி வாழவேண்டிய நிலையில் இருக்கும் பெண்களுக்கு, இந்தத் தொகை ஒரு சின்ன ஆறுதல். இது அடிப்படை ஆதாரத்தை பெண்களுக்கு தந்திருக்கிறது என்று சொல்லலாம்.
ஆண்களின் கைகளில் இருக்கும் பொருளாதாரம் வீணாகிற மாதிரி, பெண்களின் கைகளில் பொருளாதாரம் வீணாகாது. நாட்டின் சுழற்சிக்கு ஏதோ ஒரு வகையில் இந்த பணம் பங்களிப்பாகத்தான் இருக்கும். நடைபாதை கடை போன்ற தொழில் செய்கிற பெண்களுக்கு, தொழில் ரீதியாக மேம்படுத்திக்கொள்ள உதவித் தொகையாக இருக்கும். கணவர் கையில் இதைச் சேர்க்காமல், எந்த அளவுக்கு பெண்கள் தங்களுக்கான உண்மையான உரிமைத் தொகையாக பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.’’ பா.ஜீவசுந்தரி, மூத்த பத்திரிகையாளர்.
‘‘எந்த நேரமும் வீட்டு வேலை செய்கிற பெண்களை மதித்து யாரும் கையில் பணம் கொடுப்பதில்லை. ஆனால், ஒரு அரசாங்கம் பெண்ணின் உழைப்பை, அவர்கள் உணர்வை மதிக்கிறது. இது பாராட்டப்பட வேண்டிய விஷயம். கொரோனா லாக்டவுன் நேரத்தில், வருமானமே இல்லாத நிலையில், என்னைக் காப்பாற்றியது உண்டியல் சேமிப்புதான். சிறுவாடு சேர்க்கும் பழக்கம் பெண்களிடம் எப்போதுமே உண்டு. ஒரு நூறு ரூபாயை எடுத்து தனியாக வைத்தால்கூட அது சேமிப்புதான். பெண்கள் இந்தப் பணத்தை கண்டிப்பாக சேமித்து குடும்பச் செலவுக்கும், குழந்தைகளுக்கும்தான் பயன்படுத்துவார்கள்.’’ஜி.மஞ்சுளா, மாநிலச் செயலாளர்,இந்திய மாதர் தேசிய சம்மேளனம்.
‘‘கடுமையான உழைப்பு சுரண்டலில் பெண்கள் இருக்கிறார்கள். உழைப்பு சுரண்டலுக்கு இது மருந்து அவ்வளவே. இதை மறுக்க முடியாது. வீட்டுக்குள் பெண்கள் இருக்கிறவரை, எந்த மாற்றத்தையும் பொருளாதாரத்தில் ஏற்படுத்திவிடமுடியாது. அரசு செய்யும் பல நலத்திட்டங்களை போல் பெண்களுக்கு இதுவொரு கூடுதல் பலம்.’’
கீதா நாராயணன், சமூக சிந்தனையாளர்.
‘‘ஊதியமில்லாத பெண் உழைப்பு (Unpaid and invisible care work of women) மதிக்கப்பட வேண்டும். அதன் ஒரு படி இந்த ஆயிரம் ரூபாய். எட்டு கோடி மக்கள் தொகையை நெருங்கும் தமிழகத்தில் அனைவருக்கும் கொடுக்க முடியாதுதான். ஆகவே அரசாங்கம் எளியோரிடமிருந்து தொடங்குகிறார்கள். குடும்பங்கள் பெண் உழைப்பை மதிப்பது, வீட்டு வேலையை அனைவரும் பகிர்வது இந்த அரசியலின் இன்னொரு இலக்கு. தனித்து வாழும் பெண்கள் அதிகரிக்கும் நிலை, பெண் வருமானத்தை நம்பி இருக்கும் குடும்பங்கள் அதிகரிக்கும் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் இந்தத் திட்டத்தைப் பார்க்க வேண்டும்.”ஆரோக்கிய மேரி, தமிழ்நாடு பெண்கள் இயக்கம்.
‘‘பெண்களுக்கு உரிமைத் தொகை என்கிறபோது இது வரவேற்க வேண்டிய ஒரு திட்டமே. இது சின்ன மாற்றம் என்றே சொல்லலாம். ஆனால், இங்கு முதியோர் உதவித் தொகைகூட சரியான நபர்களுக்குச் சென்று சேர்வதில்லை. நான்கு, ஐந்து வீடு வைத்திருப்பவர்கள்கூட முதியோர் உதவித்தொகை பெறுவதைப் பார்க்க முடிகிறது. முக்கியமாக ரேஷன் கார்டு இல்லாத, தனிநபராக விடப்பட்ட பெண்களை, ஒடுக்கப்பட்ட பெண்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.’’ கீதா இளங்கோவன், ஆவணப்பட இயக்குநர்.
‘‘வீட்டு வேலைகளை செய்கிற பெண்களை, “நீ பெண் தானே கண்டிப்பாக நீதான் செய்ய வேண்டும்” என காலம் காலமாகச் சொல்லி, “டேக் இட் பார் கிரான்டெடாக” இந்த சமூகம் பெண்களை சுரண்டுகிறது.வேலைக்குச் சென்றுவரும் பெண்களுக்குக்கூட இதிலிருந்து விடுதலை கிடையாது. வீட்டில் இருக்கும் பெண்கள் இதை செய்யவில்லையென்றால், ஆயிரக் கணக்கில் செலவழித்து அதற்கென ஒரு உதவியாளரை வைக்க வேண்டிய நிலை வரும். பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் பெண்களுக்கு அடிப்படை மரியாதைகூட கிடைக்காது. குடும்பத்திற்குதானே செய்கிறாய் என்கிற ஒரு ஆணாதிக்க மனோநிலை இதில் அடங்கி இருக்கிறது.
பெண்கள் செய்யும் வேலை மதிப்பு மிகுந்தது. உரிமைத் தொகை என்று பெயரிட்டுக் கொடுப்பதை நல்ல விஷயமாகவும், பெண்ணின் உழைப்பை மதிக்கும் குறியீடாகவும், காலம்காலமாக பெண்களை சுரண்டும் ஆணாதிக்க சமுதாயத்திற்கான செய்தியாகவுமே நான் பார்க்கிறேன்.’’ அமுதா, கருப்பு பிரதிகள் பதிப்பகம்.
‘‘பெண்களுக்கான உரிமைத் தொகை என்கிற சொல்லில் இருந்து எல்லாமே முக்கியமானதாக இதில் அமைந்திருக்கிறது. பொருளாதார சுதந்திரம் என்பது இந்த ஆயிரம் ரூபாயில் அடங்குவது கிடையாது. காலம் காலமாக நாம் செய்கிற வேலைக்கு நம் வீட்டு உறுப்பினர்களிடம் இருந்து அங்கீகாரம் கிடைப்பதில்லை. அந்த அங்கீகாரம், உரிமை என்கிற சொல் இதில் ரொம்பவே முக்கியமானது.
வாழ்நாள் முழுக்க உழைத்துக் கொண்டே இருக்கும் பெண்ணிற்கு ஒரு அரசாங்கம் இந்த விஷயத்தை முன்னெடுக்கும்போதுதான், குடும்பங்களில் இருக்கும் ஆண்களுக்கு கொஞ்சமாவது புரிதல் வரும். அரசு இதை எடுத்து செய்யும்போது, அதற்கான முக்கியத்துவம் பெண்களுக்கு கூடுதலாகவே கிடைக்கும். அடுத்த தலைமுறைக்கும் இதனை உணர்த்தப்பட வேண்டிய அவசியமும் இதில் இருக்கிறது. இது தொடர்ச்சியாக மாறும்போது, பெண்களுக்கான மற்ற விஷயங்களும் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.’’
உரிமைத் தொகை திட்டம் குறித்து தமிழக முதல்வரின் விளக்கம்…
பொருள் ஈட்டும் ஒவ்வோர் ஆணுக்குப் பின்னாலும், தன் தாய், சகோதரி, மனைவி என அந்த ஆணின் வீட்டுப் பெண்களுடைய பல மணிநேர உழைப்பு மறைந்திருக்கிறது. ஆண் ஒருவரின் வெற்றிக்காகவும் தங்கள் குழந்தைகளின் கல்வி, உடல்நலம் காக்கவும் இந்த சமூகத்திற்காகவும் வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் அவர்கள் உழைத்திருப்பார்கள்? அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டிருந்தால், இந்நேரம் நம் நாட்டில் குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும் சட்டம் இயற்றாமலேயே இடம்பெற்றிருக்கும். இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு அங்கீகரித்தால் ஆண்களை உள்ளடக்கிய இந்தச் சமூகமும் பெண்களுக்கான சம உரிமையை வழங்கிடும் நிலை விரைவில் உருவாகிவிடும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. எனவேதான், இந்தத் திட்டத்திற்கு ‘மகளிருக்கான உதவித் தொகை’ என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத் தொகை’ என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது. Universal Basic Income என்ற பெயரில் உலகில் பல நாடுகளில் சோதனை முறையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு சில சமூகப் பிரிவினரிடம் மட்டும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அப்படி பரிசோதனை அடிப் படையில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தின் மூலமாகவே, பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம், வறுமை பாதியாகக் குறைந்திட வாய்ப்பு உண்டு என்றும் கிடைக்கும் நிதியை பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கும் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவச் செலவு செய்திடவும் முன்னுரிமை தருகிறார்கள் எனவும் சிறு சிறு தொழில் களைச் செய்ய முன்வருகிறார்கள் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்திற்கும் மேலாக, தன்னம்பிக்கை பெற்றுள்ளார்கள்.
இந்த ‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்தது ஆண்டுக்கு 12,000 ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது.