பெண்கள் கைத்தொழில் கற்றுக்கொள்வது அவசியம்! (மகளிர் பக்கம்)
‘‘நான் ஒரு தொழில்முனைவோரா உங்க முன் இருக்கக் காரணம் என் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்கள்தான். மற்றவர்கள் முன் நான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம்தான் இன்று பலர் தொழில் துவங்க நான் ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறேன்’’ என்கிறார், சென்னையை சேர்ந்த ரோஷ்னி. இவர் ‘பேக்கிங்டாக்’ என்ற பெயரில் பேக்கிங் குறித்த பயிற்சி மையம் மூலமாக பலருக்கு பேக்கிங் குறித்து சொல்லித் தருகிறார்.
‘‘நான் இந்த துறையில் 12 வருஷமா இருக்கேன். எங்க வீட்டில் என்னை ரொம்ப செல்லமாதான் வளர்த்தாங்க. சகோதரர்கள் இருந்தாலும், வீட்டில் பெண் பிள்ளை மேல் தனி பாசம் இருக்கும். அப்படித்தான் நானும் வளர்ந்தேன். படிப்பு முடிச்சதும் திருமணம், இரண்டு பசங்கன்னு சந்தோஷமாதான் இருந்தது வாழ்க்கை. ஆனால், அந்த சந்தோஷம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. எனக்கும் என் கணவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழ முடியாது என்ற காரணத்தால் நானும் அவரும் விவாகரத்து பெற்றுவிட்டோம்.
இதற்கிடையில் என் அப்பாவையும் நான் இழந்தேன். இந்த இரண்டு இழப்பு எனக்கு மனதளவில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. என்னுடைய பலமே என் அப்பா தான். அவர் போன பிறகு நான் என்ன செய்யப்போறேன்னு தெரியல. ரொம்பவே நொடிஞ்சிட்டேன். பினான்ஷியலா எனக்கு பாதிப்பு இல்லை என்றாலும், என்னுடைய இரண்டு பசங்களையும் வளர்க்கணும்.
சிங்கிள் பேரன்டா அவங்களுக்கு எல்லாம் செய்யணும். அந்த சமயத்தில் அம்மாதான் எனக்கு ரொம்பவே உறுதுணையா இருந்தாங்க. எனக்கு தைரியம் கொடுத்தாங்க. ‘இப்படி உடைஞ்சி உட்கார்ந்தா பசங்கள எப்படி பார்ப்ப… வாழ்க்கை இதோடு முடிந்துவிடாது. அதனால் உனக்கு பிடிச்சதை செய். உனக்கான ஒரு அடையாளத்தினை ஏற்படுத்திக்கொள்’ என்று எனக்கு அவங்க அட்வைஸ் செய்தாங்க. அப்படித்தான் பேக்கிங் குறித்து படிக்கலாம்னு முடிவு செய்தேன்’’ என்றவர் பல துறை இருந்தும் பேக்கிங் தேர்வு செய்த காரணத்தைப் பற்றி விவரித்தார்.
‘‘நான் இந்த துறைக்கு வரும் முன் நிறைய பிசினஸ் செய்தேன். அப்பாவோட பிசினஸ் கூட சில காலம் பார்த்தேன். அதன் பிறகு ஒரு ஸ்டேஷ்னரி கடை வச்சேன். அதுவும் செட்டாகல. கடைசியில் இதுதான் எனக்கானது என்று தோன்றியது. நான் அடிப்படையில் ஒரு ஃபுட்டீ. குறிப்பா சாக்லெட்ஸ், கேக் மற்றும் டெசர்ட்ஸ் வகைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் இருந்த மனநிலையில் மனசுக்கு பிடிச்சதை செய்தால், கண்டிப்பாக ஒரு டைவர்ஷன் கிடைக்கும்னு தோணுச்சு. அப்படித்தான் நான் பேக்கிங் குறித்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
கற்றுக்கொண்ட பிறகு வீட்டில் தயாரித்து தெரிந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுப்பேன். அவர்கள்தான் ஏன் ஒரு பயிற்சி மையம் ஆரம்பிக்கக்
கூடாதுன்னு கேட்டாங்க. ஆரம்பத்தில் எனக்கு பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்ததில்லை. அப்ப என் வீட்டுப் பக்கத்தில் இருந்த ஆன்ட்டிதான், அவங்களுக்கு தெரிஞ்சவங்களிடம் சொல்லி சின்னதா சாக்லெட் மேக்கிங் குறித்த பயிற்சி அளிக்க சொன்னாங்க.
அதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அதன் பிறகுதான் சாக்லெட் முதல் கேக், பன், பிரெட், பீட்சா எல்லாம் சொல்லித்தர ஆரம்பித்தேன். பேக்கரி குறித்து நிறைய ஆய்வு செய்திருக்கேன். காரணம், இதை பொறுத்தவரை அடிப்படையில் அதை எப்படி செய்யணும் என்று தெரிந்தால் போதும், மற்றபடி நம்முடைய கிரியேடிவ் தான். தற்போது பேக்கரி குறித்த பயிற்சி மட்டும்தான் அளித்து வருகிறேன், ஆர்டர் எடுத்து செய்து தருவதில்லை’’ என்றவர், தன் வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் பற்றி விவரித்தார்.
‘‘என் கணவர் என்னை விட்டுச் சென்ற போது அது எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதையும் தாண்டி என் பின்னால் நம்மை நன்கு அறிந்தவர்களே பேசும் போது அது என்னை பெரிய அளவில் பாதித்தது. அவர்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் நான் ரொம்பவே வைராக்கியமா இருந்தேன். ஒரு ஆள் பயிற்சிக்கு வந்தாலும், நான் முடியாதுன்னு சொன்னதில்லை. அதையுமே கிண்டல் செய்தாங்க.
அதனால் இவர்கள் என்ன பேசினாலும் அதை நான் மனதளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதில் உறுதியா இருந்தேன். அந்த வைராக்கியம்தான் என்னால் இப்போது தலை நிமிர்ந்து இவர்கள் முன் வாழ வைத்துள்ளது. என் பசங்களுக்குள் ஒரு நல்ல வாழ்க்கையினை அமைத்துக் கொடுத்திருக்கேன். நிறைய பேர் என்னை பேக்கரி ஆரம்பிக்க சொன்னாங்க. எனக்கு அதில் விருப்பம் இல்லை.
காரணம், என்னால் முழு நேரம் கடையில் இருக்க முடியாது. மாஸ்டர் வச்சுதான் நடத்தணும். ஒரு நாள் அவர் வரவில்லை என்றால், அன்று நான் கடையில் இருக்கணும். அவரை நம்பி மட்டுமே என்னுடைய பேக்கரி செயல்படணும். எல்லாவற்றையும் விட என் பசங்களுடன் நேரம் செலவழிக்கணும். பயிற்சி மையம் பொறுத்தவரை அப்படி இல்லை. காலை முதல் மாலை வரை தொடர்ந்து பயிற்சி அளித்தாலும், மாலையில் என் குடும்பத்துடன் இருக்கலாம். உடல் நிலை சரியில்லை என்றால், லீவு சொல்லிடலாம். எனக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும்.
ஆனால், நான் ஆரம்பிச்ச போது ரொம்பவே கஷ்டப்பட்டேன். பயிற்சி குறித்து அறிவிப்பேன். யாரும் வரமாட்டாங்க. நண்பர்கள் மூலமா இரண்டு பேர் வந்தாங்க. அதன் பிறகு சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்தேன். பலர் தேடி வர ஆரம்பிச்சாங்க. மேலும், என்னிடம் பயிற்சி எடுத்தவங்க மூலமாகவும் வந்தாங்க. இங்கு பாடத்திட்டம் மூலம் பயிற்சி அளிக்கிறேன். சிலர் கேக் மட்டும் கத்துக்க வருவாங்க. அவங்களுக்கு மூன்று நாள் பயிற்சி இருக்கும். கேக், பிரெட் என்றால் ஆறு நாள் பயிற்சி. எல்லாமே வேண்டும் என்றால் (கேக், பிரெட், குக்கீஸ், சாக்லெட், பஃப், வெட்டிங் கேக்) 14 நாட்கள் பயிற்சி என தனித்தனியாக பிரித்திருக்கிறேன்.
பலர் என்னிடம் கேட்கும் கேள்வி… ‘இப்ப எல்லாமே இணையத்தில் இருக்கு. நீயும் அதைத்தானே சொல்லித்தரப் போற… அதற்கு எதற்கு கட்டணம் கொடுத்து கத்துக்கணும்’னு என்பதுதான். அவங்க சொல்றது சரிதான். பேக்கிங் பொறுத்தவரை சின்ன குறை வந்தா, மொத்த கேக்குமே ஸ்பாயில் ஆயிடும். சமையல் மாதிரி உப்பு இல்லை என்றால் பிறகு சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், கேக்கில் எல்லாமே சரியான அளவில் சேர்க்கணும், சரியான பதத்தில் வேக வைக்கணும். அப்பதான் பர்ஃபெக்டா இருக்கும். உதாரணத்திற்கு விப்பிங் கிரீம் செய்யும் போது, அதை பீட்டர் கொண்டு அடிப்பதிலும் ஒரு பதம் உண்டு. இது போன்ற சின்னச் சின்ன டிப்ஸ்கள் எல்லாம் இணையத்தில் கிடைக்காது. மேலும் நேரடியாக செய்து பழகும் போது, ஏற்படும் தவறினை உடனடியாக திருத்திக்கொள்ள முடியும்.
என்னிடம் பயிற்சிக்கு வரும் பெரும்பாலான பெண்கள், சின்னதா ஒரு ஸ்டார்டப் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வராங்க. அதனால் அதற்கு ஏற்ப கேக்குகள் மற்றும் அதில் என்னென்ன ஃபிளேவர்களை கொண்டு வரலாம், பேக்கரிக்கான மெனு, சேல்ஸ், மார்க்கெட்டிங் குறித்தும் ஆலோசனை வழங்கி வருகிறேன். 2013ல் வீட்டில் இருந்துதான் சொல்லிக் கொடுத்தேன். அதன் பிறகு நிறைய பேர் வர ஆரம்பிச்சதும், அகாடமியை ஏழு வருஷம் முன் துவங்கினேன்.
ஒரு பேட்சில் ஐந்து பேர்தான். அப்பதான் எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த முடியும். இதைத் தவிர பல கல்லூரிகள் மற்றும் கிண்டியில் உள்ள தொழிற்பேட்டையிலும் பயிற்சி அளித்திருக்கிறேன். கிட்டத்தட்ட என்னிடம் 7,500க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி எடுத்திருப்பார்கள். சென்னையில் மட்டுமில்லாமல் கோவையிலும் என் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. கோவையில் என் மகன் பார்த்துக் கொள்கிறார்’’ என்றவர், சிறந்த பயிற்சியாளர், பயிற்சி மையம் மற்றும் தொழில்முனைவோருக்கான விருதினை பெற்றுள்ளார்.
‘‘பெண்களால் எதையும் சாதிக்க முடியும். அதற்கு நானே பெரிய உதாரணம். படிப்பு இல்லை என்றாலும் ஒரு கைத்தொழிலை பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்வது அவசியம். அது என்றும் அவர்களுக்கு மிகப்பெரிய சப்போர்ட்டா இருக்கும். பெரும்பாலான பெண்களால் அதிக தொகை கொடுத்து பயிற்சி எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களுக்கு குறைந்த கட்டணத்திலும் பயிற்சி அளிக்கிறோம். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்த சந்தோஷம் கிடைக்கிறது. பயிற்சி மையம் பொறுத்தவரை மேலும் விரிவுப்படுத்தணும். அயல்நாட்டு கேக்குகள் குறித்தும் பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கான திட்டம் உள்ளது’’ என்றார் ரோஷ்னி.