மல்டி பர்பஸ் பவுல்பவுல்!! (மகளிர் பக்கம்)
பிப்ரவரி 14… காதலர் தினம். அன்று ரோஜா பூக்கள், டெடிபேர் பொம்மைகள், காதல் வசனம் கொண்ட கிரீட்டிங் கார்டுகள் தான் பெரும்பாலும் பரிசாக கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. ஒரு மாற்றத்திற்கு நம் மனசுக்கு நெருக்கமானவர்களுக்கு நாமே நம் கைளால் ஒரு அழகான பரிசுப்பொருளை செய்து கொடுத்தால், அதைப் பார்க்கும் போது எல்லாம் மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படிப்பட்ட அழகான பரிசுப்பொருள் ஒன்றை சிம்பிளாக எப்படி செய்வது என்று படிப்படியாக விளக்கம் அளித்துள்ளார் சுதா செல்வக்குமார்.இதற்கு தேவையான பொருட்கள்: க்ளே பாக்கெட் – 2, அக்ரலிக் கலர் – (மஞ்சள், பிரவுன், பச்சை, சிகப்பு வண்ணம்), பெயின்ட் ப்ரஷ், விருப்பமான பவுல் – 1 (சிறியது), வெள்ளை பசை (White Gum) – 1.
செய்முறை: ஒரு பாக்கெட் க்ளேவில் ஹார்டு (Hard), சாஃப்ட் (Soft) என 2 வண்ணத்தில் 2 விதமாக இருக்கும். அதை கையில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்து வைத்துக் கொள்ளவும். க்ளேவை பிசைந்த உடனேயே செய்ய ஆரம்பித்து விட வேண்டும். இல்லையெனில் இறுகி விடும்.விருப்பமான பவுலின் மேல் ஒரு பாலிதீன் கவர் கொண்டு படத்தில் இருப்பது போல் நன்கு சுற்றிக் கொள்ள வேண்டும். காரணம், அதன் மேல் தான் க்ளே கொண்டு கூடை செய்யப் போகிறோம். பவுலின் மேல் அப்படியே செய்தால், க்ளே இறுகிவிட்டால் தனியாக எடுக்க முடியாது. அதனால் தான் பவுல் மீது பாலிதீன் கவர் சுற்ற வேண்டும். பிசைந்த க்ளேவை திரி மாதிரி (தடிமனான சணல் மாதிரி) நீளவாக்கில் உருட்டவும்.
பிறகு அதை இரண்டாக மடித்து ஒன்றன் மீது ஒன்று வைத்து முறுக்கினால் ஜடை பின்னல் மாதிரி வரும்.அந்த க்ளே பின்னலை பாலிதீன் சுற்றி உள்ள பவுலை தலைகீழாக கவிழ்த்து அதில் வெள்ளை பசை தடவி அதன் மீது முறுக்கு மாதிரி சுற்றி ஒட்டவும். பவுலின் அடிப்பாகம் முதல் அதன் பக்கவாட்டில் உள்ள இடம் முழுக்க நெருக்கமாக சுற்ற வேண்டும். இது முற்றிலும் காய இரண்டு மணி நேரமாகும். அடுத்து அதே க்ளே கொண்டு இலை வடிவம், இதய வடிவம், செர்ரி பழ வடிவம் என படத்தில் காட்டியுள்ளபடி செய்து காயவைத்துக் கொள்ளவும்.பவுல் மீது சுற்றப்பட்டுள்ள க்ளே நன்கு காய்ந்தவுடன் பவுலை நிமிர்த்தி பாலிதீன் கவரை எடுத்து விட்டால் பவுல் தனியாகவும், அதன் மீது நாம் செய்த க்ளே பவுல் தனியாகவும் வந்து விடும். பிறகு இலைக்கு பச்சை வண்ணம், செர்ரி, இதய வடிவத்திற்கு சிகப்பு வண்ணம் கூடைக்கு மஞ்சள், பிரவுன் கலந்து வண்ணம் தீட்டி காயவிடவும்.பிறகு பவுலில் விருப்பமான இடத்தில் இலை, செர்ரி, மலர்கள், இதயம் ஒட்டி அலங்கரிக்கவும். இப்பொழுது அழகான பவுல் தயார்.
இதனுள் விருப்பமான சாக்லேட், ஸ்வீட் போட்டு தரலாம்.மேலும் கூடையை அலங்கரிக்க ‘U’ வடிவம் மாதிரி க்ளேவில் பின்னல் போட்டு கூடைக்கு கைப்பிடி வைப்பது மாதிரி வைத்து ஒட்டலாம். இது காய்ந்தவுடன் இதற்கும் வண்ணம் தீட்டினால் அழகான கைப்பிடிக் கொண்ட கூடை ரெடி. கடைசியாக ஒரு வார்னிஷ் அடித்து விட்டால் நெடுநாள் கூடை வீணாகாது. பூஞ்சை பிடிக்காது. தூசி படிந்தாலும் நீர்த் தொட்டு துடைத்துக் கொள்ளலாம். நிறமும் மங்கிப் போகாது.இந்த கூடையில் காசு, ஹேர்கிளிப், சாக்லேட் போட்டு பலவிதமாக பயன்படுத்தலாம். மனசுக்கு பிடித்தவர்களுக்கு பரிசாகவும் கொடுக்கலாம்.