விதவிதமான புதுமையான பொங்கல்! (மகளிர் பக்கம்)
நாம் வருடா வருடம் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் செய்து சூரியனுக்கு படைத்து வழிபடுகிறோம். அதில் பெரும்பாலும் வெண்பொங்கல் அல்லது சர்க்கரை பொங்கல்தான் செய்வது வழக்கம். இந்த வருடம் சில சத்தான, சுவை மிகுந்த, வித்தியாசமான பொங்கல் வகைகளை தோழி வாசகர்களுக்காக அளித்துள்ளார் சமையல் கலைஞர் குப்பம்மாள். ஓட்ஸ் பொங்கல் தேவையானவை: ஓட்ஸ்- 1 கப், பாசிப்பருப்பு- ½ கப், இஞ்சி- 1 சிறு துண்டு, பெருங்காயத்தூள்- ¼ டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நெய் – 2 டீஸ்பூன், மிளகு, சீரகம் தலா – ½ டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, கறிவேப்பிலை சிறிது, முந்திரி பருப்பு – 6.
செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து ஓட்ஸ், பாசிப்பருப்பைத் தனித்தனியாக வறுக்கவும். இஞ்சி தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து அதில் ஓட்ஸ், பாசிப்பருப்பு, இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு, மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி மூடி 3(அ)4 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
சற்று ஆறியவுடன் குக்கரைத் திறந்து மசித்து விடவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு சூடானவுடன் அதில் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பொடித்த மிளகு, சீரகத்தைப் போட்டுத் தாளித்து அதை பொங்கல் மேல் ஊற்றி கிளறி விடவும். சுவையான ‘ஓட்ஸ் பொங்கல்’ தயார்.குதிரைவாலி வெண் பொங்கல் தேவையானவை: குதிரைவாலி அரிசி – ½ கிலோ, பாசிப்பருப்பு – 300 கிராம், முந்திரி – 100 கிராம், கறிவேப்பிலை – சிறிது, சீரகம், மிளகு – தலா 2 டீஸ்பூன், இஞ்சி – 1 துண்டு, உப்பு, நெய் – தேவைக்கேற்ப, பச்சை மிளகாய் – 3,காய்ந்த மிளகாய் – 3.
செய்முறை: குதிரை வாலி அரிசியை கழுவிக் கொள்ளவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய் விட்டுக் காய்ந்ததும் கறிவேப்பிலை, மிளகு, சீரகம், முழு பச்சை மிளகாய், கிள்ளிய காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, 1க்கு 3 பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்தபின் குதிரைவாலி, அரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்தவுடன் நெய் விட்டுக் கிளறி இறக்கவும். ‘சூடான குதிரைவாலி வெண் பொங்கல்’ ரெடி! இதற்கு கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட ஏற்றது.வெந்தயக் கீரை பொங்கல் தேவையானவை : பச்சரிசி – 1கப், பாசிப்பருப்பு – ½ கப், ஆய்ந்து வேகவைத்த வெந்தயக் கீரை – 1கப், பெரிய வெங்காயம் – 1 (நறக்கியது), தக்காளி – 1(நறுக்கியது), இஞ்சி – ஒரு துண்டு (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை – சிறிது, நெய் – 1 தேக்கரண்டி, பெருங்காயத் தூள் – ½ டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க: மிளகு, சீரகம், தலா – 1 டீஸ்பூன், பட்டை – 1 துண்டு, லவங்கம் – 2, ஏலக்காய் – 2, எண்ணெய் – 1 ஸ்பூன், நெய் – 2 டேபிள் ஸ்பூன்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி, பருப்பை ஒன்றாக அலம்பி போட்டு 6½ கப் தண்ணீரை சேர்த்து சிறுதீயில் வேகவிடவும். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலைச் சேர்த்து வேக விடுங்கள். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், மிளகு, சீரகம் தாளித்து பின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கி வேகவைத்த வெந்தயக் கீரையை சேர்த்து, உப்புச் சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளிச் சேர்த்து 5 நிமிடம் வதக்கி கீரை எல்லாம் நன்கு வதங்கியதும் பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறுங்கள். கம கம ‘வெந்தயக் கீரை பொங்கல்’ தயார்.வரகு அரிசி அவரைப் பருப்பு பொங்கல்தேவையானவை: வரகு அரிசி – 1 கப், அவரைப் பருப்பு – ½ கப், கடலை எண்ணெய் – 2 தேக்கரண்டி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தலா – ½ டீஸ்பூன், சீரகம், மிளகு – ½ தேக்கரண்டி, பட்டை,சோம்பு பொடித்தது – 1 தேக்கரண்டி, பூண்டு உரித்தது – 1 கைப்பிடி, சின்ன வெங்காயம் உரித்தது – ½ கப், தக்காளி – 3 (நறுக்கியது), உப்பு,நெய் – தேவையான அளவு, பச்சை மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிது, பெருங்காயம் – ¼ ஸ்பூன்.
செய்முறை: முதலில் வரகு, அரிசி, அவரைப் பருப்பை சுத்தம் செய்து ஊறவைக்கவும். பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை தாளித்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கி பின் வரகு அரசி, அவரைப் பருப்பு போட்டு (தண்ணீர் வடித்து விட்டு) சற்று வதக்கி பின் 5 கப் தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பாதி வெந்ததும் நெய், பட்டை, சோம்புப் பொடியைச் சேர்த்து கிளறி தீயை மிதமாக வைத்து வெந்ததும் இறக்கவும். சுவையான ‘வரகு அரிசி அவரைப் பருப்பு பொங்கல்’ தயார்.குறிப்பு: அவரைப் பருப்பு சேர்ந்து இருப்பதால் இந்த பொங்கல் புது வித்தியாசமான சுவையுடன் இருக்கும். தொட்டுக் கொள்ள எந்த வித சட்னியும் தேவையில்லை.மசாலா பொங்கல்தேவையானவை: அரிசி – 2 டம்ளர், மைசூர் பருப்பு – ¼ டம்ளர், பாசிப்பருப்பு – ¼ டம்ளர், வெங்காயம் – 1(நறுக்கியது), தக்காளி – 1(நறுக்கியது), பச்சை மிளகாய் – 6, பட்டை, லவங்கம் – சிறிதளவு, புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன், நெய் – 2 தேக்கரண்டி, முந்திரி – 10, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து தக்காளி, வெங்காயத்தை லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு அரிசி, பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிது நெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, லவங்கம் போட்டு வதக்கி, பிறகு அரைத்த தக்காளி, வெங்காய விழுது, இஞ்சி-பூண்டு விழுதுச் சேர்க்கவும். நன்றாக வதங்கிய பின் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும். கொதிக்கும் தக்காளி, வெங்காயக் கலவையில் 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் என்ற கணக்கில் சேர்த்து அதில் வறுத்த அரிசி, பாசிபருப்பு, மைசூர் பருப்பைப் போட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடிச் சேர்த்து வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் வாணலியில் நெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு, சீரகம், முந்திரி தாளித்துப் பொங்கலில் கொட்டவும். சுவையான ‘மசாலா பொங்கல்’ தயார். புதினா துவையல், தக்காளித் தொக்கு போன்றவை அருமையான இணைகள். வித்தியாசமான சுவையுடன் விளங்கும் இந்த மசாலாப் பொங்கல்.மசாலா சேமியா பொங்கல்தேவையானவை: சேமியா – 1 கப், தண்ணீர் – 3 கப், பாசிபருப்பு – ¼ கப், நெய் – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்,முந்திரி – 10, உப்பு – தேவையான அளவு.தாளிக்க: காய்ந்த மிளகாய் – 2, மல்லி விதை – 1 தேக்கரண்டி, சீரகம் – ½ தேக்கரண்டி, மிளகு – 1 ஸ்பூன், பட்டை – 2, வெங்காயம் – 4, ஏலக்காய் – 2.
செய்முறை: சேமியாவுடன், பாசி பருப்பை வறுத்து தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 4 விசில் அடுப்பில் வைத்து வேக வைத்து இறக்கவும். காய்ந்த மிளகாய், மல்லி விதையை லேசாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய்யை ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, பட்டை, ஏலக்காய், லவங்கம், முந்திரி சேர்த்து இறக்கவும். வேக வைத்த சேமியாவில் உப்பு மற்றும் பொடித்த பொடி, தாளித்த பொருட்களை சேமியாவில் கொட்டி கிளறவும். சூடான மசாலா சேமியா பொங்கலை சட்னியுடன் பரிமாறலாம்.அவரை, பூசணி இனிப்பு பொங்கல்தேவையானவை : அரிசி- 1 கப், பாசிபருப்பு – 1 கப், மஞ்சள் பூசணி – ¼ கிலோ, வேகவைத்த அவரை – 1 கப், உப்பு, நெய் – தேவைக்கேற்ப, ஏலக்காய் பொடித்தது – 5, முந்திரி- 10, வெல்லம் – 400 கிராம்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் முந்திரி, ஏலக்காய் போட்டு, தாளித்துப் பின் 5 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் ஊறவைத்துள்ள அரிசி, பாசிப் பருப்பு, மஞ்சள் பூசணி சேர்த்து ¾ பாகம் வெந்ததும் உப்பு, வேகவைத்துள்ள அவரைக் கொட்டையைப் போட்டு, வெல்லம் கரைந்ததும் நெய் விட்டு நன்றாகக் கலக்கி 5 நிமிடம் கழித்து இறக்கவும். இது ஒரு வித்தியாசமான சுவையான அவரை பூசணி இனிப்பு பொங்கல்.குறிப்பு: தண்ணீருக்குப் பதில் பாலும் சேர்க்கலாம். இந்தப் பொங்கலை மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளுக்கு ‘அளிகை’ யாகப் படைப்பார்கள். மிகவும் விசேஷமானதுகாய்கறிப் பொங்கல்தேவையானவை : பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – ½ கப், பெரிய வெங்காயம் – 1 , தக்காளி- 1, வேகவைத்த பச்சை பட்டாணி – 1 கப், கேரட்- 1, இஞ்சி- 1 துண்டு, கறிவேப்பிலை – சிறிது, நெய் – 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் – ½ ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.தாளிக்க: மிளகு, சீரகம் – தலா 1 டீஸ்பூன், பட்டை – 2 துண்டு, லவங்கம் – 4, ஏலக்காய் – 3, நெய் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 1 ஸ்பூன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி, பருப்பை ஒன்றாக அலம்பி 6½ கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் சேர்த்து, அடுப்பில் சிறு தீயில் வேகவிடவும். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து நெய், எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், மிளகு, சீரகம் தாளித்து, பின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கி பின் நறுக்கிய காய்கறி கலவையை சேர்த்து தக்காளி, உப்புச் சேர்த்து சிறு தீயில் நன்கு வதக்கி, 5 நிமிடம் கழித்து காய்கள் நன்றாக வதங்கியதும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். கம கம காய்கறிப் பொங்கல் தயார்.