சருமத்துக்கேற்ற ஃபவுண்டேஷனை தேர்வு செய்யுங்கள் ! (மருத்துவம்)
முகத்துக்கு மேக்கப் போடும்போது, அதற்கு அடித்தளமாக இருப்பதுஃபவுண்டேஷன் (Foundation)தான். இது சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், வடுக்கள் ஆகியவற்றை மறைத்து, முகம் முழுவதும் ஒரே நிறத்தில் மிளிர வைக்க உதவுகிறது. மேலும் மேக்கப்பை நீண்ட நேரத்துக்கு மிளிர வைக்கிறது.
எனவே, சருமத்தின் நிறத்துக்கு, தன்மைக்கு ஏற்ப ஃபவுண்டேஷனை தேர்வு செய்யவது மிகவும் அவசியமானது. அப்போதுதான், மேக்கப் சரியான முறையில் வெளிப்படும். ஃபவுண்டேஷன் சரியாக இல்லையெனில், மொத்த மேக்கப்பும் சொதப்பிவிட வாய்ப்புள்ளது. இப்படி, மேக்கப்பில் மிக முக்கிய அம்சமான ஃபவுண்டேஷனை சருமத்துக்கு ஏற்ப எப்படி தேர்ந்தெடுப்பது என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஃபவுண்டேஷன் பயன்படுத்தும் முன் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் சரும வகைதான். எண்ணெய்ப்பசை சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், காம்பினேஷன் சருமம் என இந்த அடிப்படை நான்கு சரும வகைகளில் என்ன மாதிரியான சருமத்தை கொண்டுள்ளோம் என்பதைக்கொண்டே ஃபவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.எண்ணெய்ப்பசை சருமம் என்றால் பவுடர் ஃபவுண்டேஷன் அல்லது எண்ணெய் இல்லாத திரவ வடிவிலான ஃபவுண்டேஷனை (Liquid Foundation) பயன்படுத்தவும்.
வறண்ட சருமம் என்றால் ஈரப்பதம் கொடுக்கவல்ல லிக்விட் ஃபவுண்டேஷன், க்ரீம் ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம்.காம்பினேஷன் சருமம் என்றால் லிக்விட் அல்லது ஃபவுடர் ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம். முகப்பரு உள்ள மற்றும் சென்சிட்டிவ் சருமம் என்றால், ஆல்கஹால் மற்றும் நறுமண பொருள்கள் கலந்த ஃபவுண்டேஷனைத் தவிர்ப்பது நல்லது.
சரும நிறத்தை முகத்தில் இல்லாமல் தாடைப் பகுதி அல்லது கழுத்துப்பகுதி நிறத்தைக் கொண்டே கணக்கிட வேண்டும். அப்படி செய்வதன் மூலமே ஃபவுண்டேஷனில் சரியான ஷேடை (shade) தேர்ந்தெடுக்க முடியும். மேலும் குளிர்காலம், கோடைக்காலம் என்று சருமத்தின் நிறம் மாறும் என்பதால் ஒவ்வொரு முறை ஃபவுண்டேஷன் வாங்கும் போது நிறத்தையும் பருவகாலத்தையும்
கவனிப்பது நல்லது.
சருமத்தின் அண்டர்டோன் (Undertone) பற்றிய அறிய வேண்டும். வார்ம் (Warm) அண்டர்டோன் உள்ளவர்களின் சருமம் பீச், மஞ்சள், அல்லது தங்க நிறத்தில் இருக்கும். இவர்கள் வார்ம் டோன்க்கு பொருந்தும் ஃபவுண்டேஷன் ஷேடை (shade) தேர்ந்தெடுக்க வேண்டும்.கூல் (Cool) அண்டர்டோன் உள்ளவர்களின் சருமம் பிங்க், ரெட் நிறத்தில் இருக்கும். இவர்கள் கூல் டோன்க்கான ஃபவுண்டேஷன் ஷேடை தேர்ந்தெடுக்க வேண்டும்.
நியூட்ரல் (Neutral) அண்டர்டோன் உள்ளவர்கள், மேலே சொன்ன இரண்டின் சீரான கலவைச் சருமத்தை கொண்டிருப்பார்கள். ஃபவுண்டேஷன் உங்கள் சருமத்தில் எந்த மாதிரியான இறுதிப் பொலிவை (Finish) ஏற்படுத்த விரும்புகிறீர்களோ, அதற்கேற்ப dewy, matte, semi-matte மற்றும் luminizing finish வகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.ஃபவுண்டேஷனை வாங்கும் முன், பெரும்பாலும் அதனை கைகளில் பரிசோதித்து வாங்குவோம். ஆனால் கையின் நிறமும், முகத்தின் நிறமும் ஒன்றுபோல் இருக்காது என்பதால் தாடையின் ஓரத்தில் பரிசோதனை செய்து வாங்குவது நல்லது. தாடையின் நிறம்தான் முகத்திற்கேற்ப இருக்கும். தற்போது விர்ச்சுவல் ட்ரை வசதி இருப்பதால் அதையும் பயன்படுத்தலாம்.
ஃபவுண்டேஷன் டிப்ஸ்
முகத்திற்கு மட்டுமல்ல, கழுத்துப் பகுதிக்கும் ஃபவுண்டேஷன் பூசுவதை மறக்காதீர்கள். ஏனென்றால், முகத்தின் நிறம் கூடும்போது, அது கழுத்துப் பகுதியை மேலும் நிறம் குறைந்ததாக காட்டும்.
ஃபவுண்டேஷனை முகத்தில் அப்ளை செய்ய வட்டமான ஃபவுண்டேஷன் பிரெஷ், மேக்கப் ஸ்பொஞ் என வசதிக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளவும். ஆனால் அது தரமானதாக இருந்தால்தான் சிறப்பான ரிசல்ட் கிடைக்கும். ஃபவுண்டேஷனுடன் ப்ரைமர் (Primer) பயன்படுத்துவது நல்ல, நீடித்த மேக்கப்புக்கு அவசியம்.
தேவைக்கும் அதிகமான ஃபவுண்டேஷனை பயன்படுத்த வேண்டாம். சிறிது சிறிதாக தேவையான இடங்களில் இட்டு, சீராக தடவும் போது இயற்கையான லுக் கிடைக்கும்.
ஃபவுண்டேஷன் வகைகளைப் போலவே கவரேஜ் லெவல் லைட், மீடியம், ஃபுல் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உங்கள் சருமத்தில் உள்ள துளைகளை எளிமையாக நீங்கள் கவர் செய்ய விரும்பினால், மிதமான கவரேஜ் கொண்ட ஃபவுண்டேஷனை வாங்குவது நல்லது. இந்த மாதிரியான ஃபவுண்டேஷன் தினசரி மேக் அப்பிற்கு பொருத்தமாக இருக்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனை முழுவதுமாக மறைக்க நினைத்தால், ஃபுல் கவரேஜ் ஃபவுண்டேஷன் தேர்வு செய்யுங்கள். இது நீண்ட நேரத்திற்கு அழியாமலும் இருக்கும்.