அறுவைசிகிச்சையால் உருவாகும் உயிர்கொல்லி நோய்! (மருத்துவம்)
சிக்கலான பிரசவங்களின் போது மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தையை பெற்றெடுக்கின்றனர். இயற்கையான முறையில் பிரசவங்கள் நடக்கிறதா அல்லது அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெறுகிறதா என்பது பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நிலையும், மகப்பேறு காலத்தில் அவர்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்களையும் பொறுத்தே மாறுபடும். இந்தியாவில் மட்டுமே 19 சதவிகிதம் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் முன்பை விட 36 சதவீதம் அறுவை சிகிச்சையின் (சிசேரியன்) மூலம் குழந்தை பெறுவது அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் அறுவை சிகிச்சைகளின் போது பெண்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டு அது சிலரின் உயிருக்கும் ஆபத்தாக முடிந்துள்ளது.அதில் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது செப்சிஸ் (Sepsis) எனப்படும் நோய் தொற்றை பற்றிதான். இந்த நோய் சரியான முறையில் அறுவை சிகிச்சை செய்யாத போது ஏற்படும் தொற்றுகளால் வருகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த நோயை கண்டறிந்து ஆரம்பத்திலேயே இதற்கான சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் செப்டிக் ஷாக் என்கிற உயிர் கொல்லி நோயாகவும் மாறும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்கின்றனர். அப்படி செப்டிக் ஷாக் ஏற்பட்டால் தாய்-சேய் என இருவரின் உயிருக்கும் ஆபத்து எனவும் சொல்கிறது மருத்துவ உலகம். செப்டிக் ஷாக் என்றால் என்ன? அந்த நோய் வந்தால் எப்படி கண்டறிவது? அதற்கான சிகிச்சைகள் என்ன? என பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் மகப்பேறு மருத்துவர் மாரி.
‘‘செப்சிஸ் நோய் பொதுவாக அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமில்லாமல், ஒரு வயதிற்கும் குறைவாக இருக்கும் குழந்தைகள், சர்க்கரை நோய், இதய நோய், புற்று நோய் மேலும் போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு அதிகமாக இந்த தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நோய் தொற்று, பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் வரக்கூடியது. பெண்களுக்குதான் இந்த தொற்று அதிகம் பாதிக்கிறது. செப்சிஸ் பாதிப்பு ஏற்பட்டால் நம் ரத்தத்தில் தொற்று ஏற்பட்டு உள்ளது என அர்த்தம். அந்த தொற்று உடல் முழுக்க பரவும்.
நாளடைவில் இது செப்டிக் ஷாக் ஆக மாறும். இந்த செப்டிக் ஷாக் நோய்க்கு சரியான முறையில் சிகிச்சை பெறவில்லையெனில் பாதிக்கப்பட்டவரின் உடலில் ரத்த ஓட்டம் குறையும். ஒரே இடத்தில் ரத்தம் உறைந்து உடல் உறுப்புகள் செயல் இழக்கும். அது மட்டுமில்லாமல் இதன் மூலம் அவர்களின் கை கால்களை இழக்கவும் நேரிடும். சுவாசக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இந்த நோய்க்கு சிகிச்சை முறைகளும் உள்ளது. இந்த நோய் பேசுவது மூலமாகவோ தொடுதல் மூலமாகவோ பரவாது. அதனால் இந்த நோய் தொற்று அதிகமாக யாருக்கும் வருவதில்லை. தொடர்ந்து காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி, மன உளைச்சல் போன்றவைதான் இந்த நோயின் அறிகுறிகள். மேலும், அறுவை சிகிச்சைக்கும் பின்னர் தொடர்ந்து தங்களது உடல் நலத்தை பரிசோதித்து வர வேண்டும். பொதுவாக சிசேரியன் செய்யும்போதே அதற்கான மருந்துகளும், அதே சமயம் அந்த சிகிச்சையால் தொற்று ஏற்படாமல் இருக்கவும் மருந்து கொடுப்போம். அது அவர்களுக்கு இந்த செப்சிஸ் வராமல் தடுக்கும். ஏற்கனவே திட்டமிட்டபடி சிசேரியன் செய்யும் போது இந்த தொற்று ஏற்பட வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.
எனினும் திட்டமிடலுக்கு முன்பாக அவசரகால அறுவை சிகிச்சை (Emergency Cesarean) செய்தாலோ அல்லது கருக்கலைப்பு ஏற்பட்டாலோ அவர்களுக்கு இந்த செப்சிஸ் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அதே சமயம் அடிப்படையாக வேறு ஏதேனும் நோய் தொற்று அவர்களுக்கு இருந்தால் அதன் மூலமாகவும் இந்த செப்சிஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ரத்த அளவு சரியான முறையிலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாகவும் இருந்தால் இந்த தொற்று ஏற்படுவதை தடுக்கலாம். மேலும், உடம்பில் எந்த ஒரு தொற்று (அலர்ஜி) ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி அதற்கான சரியான சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லையெனில் தொற்று அதிகரித்து உடலில் ரத்த அழுத்தம் குறைந்து செப்டிக் ஷாக்காக மாற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. குழந்தை பெற்றவுடன் சிறிது காலம் போதுமான பரிசோதனைகளை செய்து தங்களது உடல்நிலை சீராக இருக்கிறதா என சோதித்துக் கொண்டாலே போதும் இந்த நோயின் பாதிப்பில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாரி.