மணப்பெண்ணா நீங்கள்… இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்! (மகளிர் பக்கம்)
திருமணத்தில் மணப்பெண், மணமகன் எவ்வளவு முக்கியமோ, அதுபோல மணமகன், மணமகளின் உடையும் பார்க்கிறவர்களை கவர வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள். அதற்கு, நாம் சரியான பொருத்தமான உடைகளை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக நம் நிறத்திற்கு ஏற்ப. திருமணம் என்கிற நிகழ்வில் மணப்பெண்தான் கதாநாயகி. அத்தனை பேரின் பார்வையும் கவனமும் அவள் மீதுதான் இருக்கும். கொஞ்சம் அலட்சியமாக இருந்தாலும், அடுத்தவர் கண்களை உறுத்தும். அதற்காகத்தான் திருமணத்துக்கான புடவை முதல் மேக்கப் வரை பார்த்துப் பார்த்து செய்வார்கள். என்னதான் இன்றைய திருமணங்களில் நாகரீக மோகம் தலைநீட்டினாலும் இன்னமும் முகூர்த்தத்துக்கு மட்டும் பாரம்பரிய உடை மற்றும் நகைகளைதான் பலரும் விரும்புகிறார்கள். மேக்கப், ஹேர் ஸ்டைல் ட்ரையல் பார்ப்பது போல், புடைவைகளையும் எப்படி பார்க்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம். *திருமணச் சடங்குகளுக்கு ஏற்ற மேட்சிங் புடவைகளை தேர்வு செய்ய வேண்டும்.*திருமணத்துக்கான புடவைகள் வாங்கும்போது புதிய மாடல்களை தேர்வு செய்யலாம். *ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் எடை குறைவானதும், கற்கள் பதித்த புடவைகளை தேர்ந்தெடுக்கலாம். *டபுள் ஷேடு புடவைகள் பகல் வெளிச்சத்தில் ஒரு மாதிரியாகவும், இரவு வெளிச்சத்தில் வேறு மாதிரியும் தெரியும். அதனால், புடவையையும் நகையையும் பகல் நேரத்தில் பார்த்து வாங்க வேண்டும். *முகூர்த்தத்துக்கு பெரும்பாலும் மெரூன், பச்சை அல்லது மாம்பழம் போன்ற பாரம்பரிய நிறங்களைதான் தேர்வு செய்வார்கள். அவ்வாறு தேர்வு செய்யும் போது பழமையும், புதுமையும் கலந்த டிசைன்கள் இன்று நிறைய இருப்பதால் அதனை தேர்வு செய்யலாம். *அதிக வேலைப்பாடு கொண்ட புடவைகளாக இருந்தாலும், மணப்பெண்ணின் நிறம், உடல்வாகு அடிப்படையில் வாங்கினால் சரியாக இருக்கும்.*புடவைக்கான மேட்சிங் பிளவுஸ்களை தேர்வு செய்வது தான் மிகப் பெரிய வேலையாக உள்ளது. வேலைப்பாடுகள் அதிகம் நிறைந்த புடவைகளுக்கு பிளவுசின் ஓரங்களில் மட்டும் வேலைப்பாடு செய்யப்பட்டு இருந்தால் பொருத்தமாக இருக்கும். அதே போல் பிளைன் நிறங்களில் இருக்கும் பார்டர் புடவைகளுக்கு அதிக வேலைப்பாடு கொண்ட ப்ளவுஸ்கள் அணிந்தால் அழகான தோற்றத்தை தரும். *புடவைகளுக்கு ஏற்ற மேட்சிங் பிளவுஸ்களும் உள்ளன. அதையும் அவரவரின் அளவிற்கு ஏற்ப தேர்வு செய்யலாம். *மேட்சிங் நகைகளை பொறுத்தவரையில் பாரம்பரிய புடவைகளுக்கு டெம்பிள் ஜூவல்லரி நகைகளும் டிசைனர் மற்றும் ஃபேஷன் புடவைகளுக்கு டிசைனர் நகைளும் பொருத்தமாக இருக்கும்.*தலைக்கான பூ அலங்காரங்கள் கொண்டையோ அல்லது நீண்ட ஜடை அலங்காரத்திற்கோ தற்போது புடவைகளுக்கேற்ற வண்ணங்களில் இயற்கை மலர்கள் கிடைக்கிறது. பல வண்ணங்களில் கிடைக்கும் செயற்கை பூக்களை கொண்டும் அலங்காரம் செய்தால் பார்ப்பவர்கள் கண்ணைக் கவரும் என்பதில் ஐயமில்லை.