டெம்பிள்செட் ஜுவல்லரி தயாரிப்பதில் அவர் ரொம்ப டாப்!! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 4 Second

பரத நாட்டியம் மற்றும் அரங்கேற்றம் இவற்றுக்குத் தேவையான ஸ்பெஷல் என்றாலே டெம்பிள் செட் ஜுவல்லரி நகைகள்தான். அதை கை வேலைப்பாட்டுடன், கிரியேட்டிவாகச் செய்வதில் என் கணவர் ராஜேஷ்க்கு தனி திறமை உண்டு. அவரின் கை வண்ணத்தில் நகைகளின் பினிஷிங் ரொம்பவே சிறப்பாக இருக்கும். இதற்காகவே இவரைத் தேடி வாடிக்கையாளர்கள் அதிகம் வரத் தொடங்கினர் என நம்மிடம் பேச ஆரம்பித்தார் பிரனவ் பீட்ஸ் ஜுவல்ஸ் உரிமையாளரான மகேஸ்வரி ராஜேஷ்.

இவரது கை வேலைப்பாட்டுக்காகவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரெகுலர் கஸ்டமர்கள் எங்களுக்கு இருக்கிறார்கள் என்றவர், கியர் வயர் இல்லாமலே, நைலான் வித் சில்க் த்ரெட் கொண்டு ரொம்பவே ஸ்ட்ராங்கான முறையில் நகைகளை தரத்துடன் செய்து கொடுப்பதில் இவருக்கென தனித்துவம் இருக்கிறது. புதுவிதமான நகைகளை தயாரிப்பது மட்டுமின்றி, பழைய நகைகளை புதுப் பொலிவில் பாலிஸ் செய்து பளபளப்பாக்கி வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது, பழுதான நகைகளை சரி செய்து மீண்டும் பயன்படும் விதத்தில் கொடுப்பது, தோரணங்கள் தயாரிப்பது போன்றவையும் அவருக்கு கை வந்த கலை. சில வசதியான வாடிக்கையாளர்களும், இவரின் வேலை பிடித்து, தேடி வந்து கொடுத்துச் செல்கிறார்கள்.

தேவைப்பட்டால் தயாரான நகைகளை வீட்டுக்கே சென்று டோர் ஸ்டெப் முறையில் டெலிவரியும் செய்கிறார் என்கிறார் மகேஸ்வரி.எங்கள் திருமணத்திற்கு முன்புவரை சென்னையில் சில நகைக் கடைகளுக்கு வரும் ஆர்டர்களை மட்டும் எடுத்து வீட்டில் வைத்தே கிரியேட்டிவாக செய்து கொடுப்பது அவர் வேலையாக இருந்தது. எத்னிக், சுக்ரா போன்ற பெரிய நகை கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் மூலமாக வரும் டெம்பிள் செட் ஜுவல்லரிகளை, வாடிக்கையாளர் விருப்பம் அறிந்து, கஸ்டமைஸ்டாக தயாரித்துக் கொடுப்பதையும் தனது தொழிலாகத் தொடர்ந்திருக்கிறார். இந்த நிலையில்தான் அவரோடு என் திருமணம் முடிவானது.

எனக்கு ஊர் காஞ்சிபுரம். என்னுடைய ஸ்கூல் படிப்பு எல்லாமே அங்குதான். ஹெச்.ஆர். தொடர்பான வேலை மட்டுமே பார்க்க வேண்டும் என பத்தாவது படிக்கும்போதே முடிவு செய்த நிலையில், அது தொடர்பாக ஆர்ட்ஸ் அண்ட் காமர்ஸ் குரூப் எடுத்து படித்தேன். +2ல் நான்தான் ஸ்கூல் செகண்ட் மாணவி. சென்னையில் இருக்கும் கல்லூரிகளில் படித்தால், கேம்பஸ் தேர்வில், சென்னையில் உள்ள நல்ல நிறுவனம் ஏதாவது ஒன்றில் வேலையில் சேர்ந்துவிடலாம். என் எதிர்காலத்திற்கு வளர்ச்சி இருக்கும் என நினைத்தே சென்னை குரோம்பேட்டையில் உள்ள தாகூர் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரியில் படித்தவாரே, டேட்டா என்ட்ரி வேலைகளை செய்து, அதில் வரும் வருமானத்தில், கல்லூரி படிப்புக்கான செலவுகளை, வீட்டை எதிர்பார்க்காமல் நானே பார்த்துக் கொண்டேன். கல்லூரியிலும் நான்தான் என் வகுப்பில் முதல் மாணவி.

அடுத்து அஞ்சல்வழியாக எம்.பி.ஏ. இணைந்ததுடன், தனியார் நிறுவனம் ஒன்றில் ஹெச்.ஆர் டிரெயினியாகவும் வேலையிலும் சேர்ந்தேன். பணி சார்ந்த அடிப்படையான வேலைகளைக் கற்றுக்கொண்டபின் வேறொரு நிறுவனத்தில் ஹெச்.ஆர் டிரெயினராக வாய்ப்புக் கிடைக்கவே அங்கு பணி மாறினேன். இந்த நிலையில்தான் எனக்கு என் கணவர் ராஜேஷுடன்
திருமணம் முடிவானது.திருமணத்திற்கு பிறகு வேலைக்குச் செல்லாமல், இருவருமாக இணைந்து மணி பீட்ஸ் ஜுவல்ஸ் மேக்கிங் தொழிலில் இறங்கினால், மேலே வர முடியும் என்கிற அவர் விருப்பத்தை, திருமணத்திற்கு முன்பே என்னிடம் தெரிவித்தார். நானும் வீட்டில் வைத்து தொழிலைச் செய்யாமல், கடை ஒன்றை வைத்து ஆரம்பித்து, எல்லோர் பார்வைக்கும் அவர் திறமையை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற கண்டிஷனுடன், அவர் விருப்பத்திற்கு சம்மதித்து எனது ஹெச்.ஆர். கனவை மூட்டைகட்டினேன்.

துவக்கத்தில் எனக்கு இந்த ஜுவல்லரி மேக்கிங் தொழில் விருப்பம் இல்லைதான். கொஞ்சம் கொஞ்சமாக கவனிக்க ஆரம்பித்த இடைவெளியில், எங்கள் மகன் பிரனவ் பிறந்தான். அதுவரையிலும் வீட்டில் வைத்து செய்து வந்த தொழிலை, என் விருப்பம் போலவே கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் வைத்து தொடர முடிவு செய்தோம். கடையை ஆரம்பித்த புதிதில் பார்வையாளர்கள் போலவே தினமும் கடைக்கு சும்மா போய்வர ஆரம்பித்தேன். அப்போதும் அந்த தொழிலில் பெரிய விருப்பம் வராமலே மனதிற்குள் நெருடலாகவே வாழ்க்கை கடந்தது. நான் விரும்பிய ஹெச்.ஆர். ஃபீல்டைச் சுற்றியே என் மனம் மீண்டும் போனது. சரி கொஞ்சநாள் வீட்டிலேயே இருந்து குழந்தையை மட்டும் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து நான் வீட்டில் இருந்தபோது, வாடிக்கையார்களிடம் இருந்து எனக்கு தொடர்ந்து கைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தது.

“மேம், நீங்கள் கடையில் இல்லையா? நீங்கள் எப்போது கடைக்கு வருவீர்கள்? நீங்கள் கடையில் இருக்கும்போது சொல்லுங்கள் நான் வருகிறேன். நீங்கள் இருந்தால் வருகிறோம்” என்றெல்லாம் என்னிடம் வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக சொல்ல ஆரம்பித்தார்கள். தனியாக நாங்கள் கடை ஆரம்பித்த இந்த இரண்டு ஆண்டில் வாடிக்கையாளர்களிடம் எனக்கென ஏதோ ஒரு அடையாளத்தை நான் உருவாக்கி வைத்திருப்பதை அந்த அலைபேசிகளின் வாயிலாக நான் உணர ஆரம்பித்தேன். அது சார்ந்து கொஞ்சம் ஆழமாக யோசித்ததில், தொழிலுக்குத் தேவையான ஏதோ ஒன்று என்னிடத்தில் இருப்பது எனக்கு பிடிபட்டது.

வாடிக்கையாளர்களை நான் சிரித்த முகத்தோடு வரவேற்பது, அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை, வாடிக்கையாளர்கள் விருப்பம் அறிந்து அலுப்புத் தட்டாமல் எடுத்துக் கொடுப்பது, வற்புறுத்தி வாங்க வைக்காமல் அவர்களின் விருப்பத்தை மதிப்பது என இதெல்லாம் அந்தத் தொழிலில் என்னுடைய ப்ளஸ் பாயிண்டாக எனக்குப் புரிய ஆரம்பித்தது. கடையில் வாடிக்கையாளர்கள் இருந்தால், கால் வலிப்பது தெரியாமல் அவர்களோடு நின்று பேசியதையெல்லாம் அப்போதுதான் நான் உணர ஆரம்பித்து.

அதுவரையிலும் பிடிப்பு ஏற்படாமல் இருந்த தொழிலின் மீது இப்போது கொஞ்சமாகப் பிடிப்பு வரத் தொடங்கியது. மறுபடியும் வாடிக்கையாளர்களை சந்திப்பதற்காகவே கடைக்கு போக ஆரம்பித்து, இப்போது நானும் அவரோடு இந்தத் தொழிலில் ஐக்கியமாகிவிட்டேன். எல்லாவற்றுக்கும் காரணம் நாங்கள் சேகரித்து வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் நம்பிகைதான். அவர்கள் விருப்பத்திற்கேற்ற விதவிதமான நகைகளை நான் அணிந்து காட்டுவது அவர்களுக்கு பிடித்திருக்கிறது.

சிரிக்க சிரிக்க புன்னகைத்து நான் பேசுவது அவர்களுக்கு பிடித்திருக்கிறது. அவர்கள் கேட்பதை சளைக்காமல் எடுத்து எடுத்து காட்டுவது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. இதுதானே தொழிலுக்கு முக்கியம். இதைத்தானே என் கணவரும் என்னிடத்தில் எதிர்பார்க்கிறார்.இப்போது எங்களுடைய பீட்ஸ் ஜுவல்லரி மேக்கிங் மற்றும் சர்வீஸ் வேலைகளை சென்னை முழுவதும் உள்ள மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதே என் கனவாக இருக்கிறது என்றவரைத் தொடர்ந்தார் அவரின் கணவர் ராஜேஷ்.

15 வயதில் இந்த தொழிலைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். கடந்த 22 வருடமாக விடாமல் இதில் இருக்கிறேன். யாரும் செய்யாத ஒன்றை, பார்க்க அழகாகவும், புதுமையுடன், நுணுக்கத்துடன், பினிஸிங் பிசகாமல் செய்து கொடுப்பதே என் தனித்துவம் என்றவர், ஆர்க்கிடெக் கனவில் இருந்த நான் கணக்கு பாடம் சரியாக வராததால் என் கனவை மாற்றி, குடும்பத் தொழிலான இதுவும் கிரியேட்டிவான ஒரு வேலையாக இருந்ததால், டெம்பிள் ஜுவல்லரி மேக்கிங் வேலைக்குள் நுழைந்து, என் மாமாவிடம் இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டேன். எட்டு ஆண்டுகள் என் மாமாவின் கீழ் வேலை செய்து இதில் இருக்கும் எல்லா நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டேன்.

நான் செய்து கொடுக்கும் ஆபரணங்கள் குவாலிட்டியாக பார்க்க அழகாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் என்னை பாராட்டும்போது, என் தொழிலுக்கான அங்கீகாரம் கிடைப்பதை நினைத்து என் மனசு ரொம்பவே திருப்தி அடையும். விதவிதமான ஜுவல்லரிகளை கலர் கலராக அணிய பெண்கள் ரொம்பவே மெனக்கெடுவது தொழிலை மேலும் விரிவுப்படுத்த என்னைத் தூண்டியது.
இருபது வருடத்திற்கு முன்பு நான் இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டு இறங்கியபோது, பெண்கள் இப்போது அணிகிற மாதிரியான கஸ்டமைஸ்ட் அணிகலன்களை அணியவில்லை. ஒரிஜினல் செட்டு நகைகளான முத்து மாலை, ஜிமிக்கி, தலை சாமான்கள் எனப்படும் ஹெட் செட் இவற்றைத்தான் விரும்பி அணிவார்கள். நகைக் கடைகளிலும் அப்போது அது மட்டுமே பெண்களுக்கான அணிகலன்களாக இருந்தது.

மைலாப்பூரைச்சுற்றி பரதம் கற்பவர்கள் எல்லாம் ஒரிஜினல் டெம்பிள் செட் ஜுவல்லரிகளைத்தான் அப்போது வாங்குவார்கள். இங்கிருந்து வெளிநாடுகளுக்கெல்லாம் இந்த ஆபரணங்கள்
ஏற்றுமதியாகிச் செல்லும். ஹெட் செட், மகரி மாலை, அன்னம் டாலர், பதக்கம், ராக்கொடி, ஜடை பில்லை என 25 விதமான அயிட்டங்கள் சேர்ந்ததே டெம்பிள் செட் எனப்படும். அந்த வகை ஆபரணங்களை நாங்கள் ரொம்பவே கிராண்டாகத் தயாரித்து கொடுப்போம்.

அதில் ஏற்படும் ரிப்பேர் மற்றும் பாலிஸ் வேலைகளையும் நாங்களே செய்து கொடுத்துவிடுவோம். ஒரு முழு பரதநாட்டிய ஒரிஜினல் டெம்பிள் செட் ஜுவல்லரி செய்து கொடுக்க ஒரு லட்சத்திற்கு மேல் தாண்டும் என்றவர், அந்த நகைகளின் அடிப்பாகம் வெள்ளியிலும், முன் பகுதி 24 கேரட் கோல்ட் ஷீட்டிலும் தயாராகும். அதற்கு இடையே இடம்பெற்றிருப்பது கெம்ப் (kemp) ஸ்டோன்கள் என்கிறார். அதேபோன்ற வடிவில் இமிடேஷன் நகைகள் 30 ஆயிரத்திற்கு கிடைக்கும் என்றவர், அவை ஈயத்தால் செய்யப்பட்டு பிளாஸ்டிக் மணிகள் பதிக்கப்பட்டு இருக்கும். ஆனால் அதன் லைஃப் நீண்ட நாட்கள் வராது.

சுக்ரா, சாந்தி டெய்லர், ராதா கோல்ட் ஜுவல்லரி என அனைத்து கடைகளுக்குமே நான் டெம்பிள் செட் ஜுவல்லரிகளை மேக் செய்து கொடுத்து வருகிறேன் என்றவர், பரத நாட்டிய உடைகளை தயாரிப்பதில் சாந்தி டெய்லர் ரொம்பவே ஃபேமஸ். உடையோடு சேர்த்து கொடுக்க டெம்பிள் செட் ஜுவல்லரிகளை எங்களிடம்தான் அவர்கள் ஆர்டர் செய்வார்கள். பெண்கள் நகைகளை லைட் வெயிட்டாக உடைகளுக்கு மேட்சாக அணிய ஆரம்பித்தபோது கிறிஸ்டல் மணிகளைத் தாண்டி.

செமி ப்ரீசியஸ் ஸ்டோன்களை வைத்தும் டிரண்டியாக கலர் கலரான ஆபரணங்களை பல மாடல்களில் செய்ய ஆரம்பித்தோம். செமி ப்ரீசியஸ் ஸ்டோன்களிலும் கஸ்டமைஸ்ட் ஆபரணங்களை செய்து தருகிறோம். இமிடேஷன் நகைகளும் அதிகம் வந்தபிறகு வாடிக்கையாளர் விருப்பத்திற்கு அதையும் குறைந்த விலையில் செய்து கொடுக்க ஆரம்பித்தோம். என்னுடைய தயாரிப்புக்காகவே வாடிக்கையாளர்கள் என்னை தேடி வருகின்றனர். ‘கஸ்டமர்கள் மூலம் கஸ்டமர்கள்’ என்பதே எங்கள் தொழிலின் தாரக மந்திரம் என விடைபெற்றனர் இருவரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post Stay Hydrated!! (மருத்துவம்)
Next post கல்லூரி மாணவிகள் முதல் மணப்பெண்கள் வரை விரும்பும் டெரக்கோட்டா நகைகள்! (மகளிர் பக்கம்)