கோழி வளர்க்கலாம்… கை நிறைய சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)
+2 படிச்சு முடிச்சதும் என்ன படிக்கப் போறீங்கன்னு மாணவர்களிடம் கேட்ட அடுத்த நிமிடம் பொறியியல், மருத்துவம், ஆசிரியர் பயிற்சி அல்லது ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பினை ஒப்பிப்பார்கள். ஆனால் இவை எல்லாம் தாண்டி கோழி வளர்ப்பு குறித்த பயிற்சிகள் இருப்பது பற்றி யாருக்கும் தெரிவதில்லை. மேலும் இந்த துறைக்கான வேலை வாய்ப்பு இந்தியாவில் மட்டுமில்லை வெளிநாட்டிலும் அதிகமாக இருக்கிறது. ஆனால் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப அந்த துறையை சார்ந்தவர்கள் இல்லை என்பது தான் இன்றைய நிலை என்கிறார் சுகுணா இன்ஸ்டியூட் ஆப் பவுல்டரி மேனேஜ்மென்டின் தலைமை மனிதவள அதிகாரி ஹரிஷ்.
‘‘சுகுணா நிறுவனம் 38 வருஷம் முன்பு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 2012ம் ஆண்டு தான் இந்த கல்வி நிறுவனத்தை துவங்கினோம். நாங்க கோழிப் பண்ணையை ஆரம்பித்த போது அந்த பண்ணை பராமரிப்பு மற்றும் கோழியின் வளர்ப்பு குறித்து தெரிந்தவர்கள் பலர் இருந்தனர். அந்த துறையில் உள்ள நெளிவு சுளிவுகளைப் பற்றி தெரிந்த திறமையானவர்கள் இருந்தாங்க. ஆனால் காலம் போக போக இது குறித்த விவரங்கள் பலருக்கு தெரியவில்லை.
கோழிப் பண்ணைப் பொறுத்தவரை அந்த தொழில் ஆரம்பிச்சா அதற்கு பெரிய அளவில் முதலீடு மற்றும் தொழில்நுட்பம் அவசியம். மேலும் அந்த சமயத்தில் கோழிப் பண்ணையை ஒரு தொழிலாகவோ அல்லது அது சார்ந்த வேலையில் இணைவது குறித்து ெபரிய அளவில் விழப்புணர்வு இல்லை. அப்பதான் இது குறித்து ஒரு பயிற்சி மையம் ஆரம்பிக்க திட்டமிட்டோம். கடந்த பத்து வருடமாக இந்த பயிற்சி மையம் இயங்கி வருகிறது.
இந்த பயிற்சி திட்டத்தில் இளங்கலை மற்றும் டிப்ளமா குறித்து இரண்டு விதமான படிப்புகள் உள்ளன. 20 வருஷம் முன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் குறித்த படிப்பு அறிமுகமாச்சு. ஆரம்பத்தில் சமைக்க கற்றுக் கொள்ள படிக்கணுன்னு கேட்டாங்க. ஆனால் இப்போது அந்த துறை சமையல் மட்டுமில்லாமல் பல துறைகளில் பரந்து விரிந்துள்ளது. கிட்டதட்ட கோழிபண்ணை சார்ந்த படிப்பும் அப்படித்தான். கோழி மேய்க்க படிக்கணுமான்னு தான் பலர் கேட்கிறாங்க. ஆனால் இந்த துறை சார்ந்த வேலை வாய்ப்பு குவிந்துள்ளது என்பதைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை.
காரணம் கோழி பண்ணை மட்டுமில்லாமல் அதையும் தாண்டி அதன் பராமரிப்பு, முட்டை பாதுகாப்பு, தீவினம், லைஃப் சயின்ஸ்… என பல துறைகளில் இதற்கான வேலை வாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்த துறையைப் பொறுத்தவரை அதைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் மட்டும் தான் நுழைய முடியும். அதனால் தான் இந்த பயிற்சி நிறுவனத்தையே ஆரம்பிச்சோம். ஒரு துறைக்குள் நுழையும் போது தான் அந்த துறை சார்ந்த விவரங்கள் நமக்க தெரியவரும்’’ என்றவர் பயிற்சி குறித்து விவரித்தார்.
‘‘இந்த பயிற்சி திட்டத்தில் சேர விரும்புபவர்கள், +2 முடித்திருக்க வேண்டும், அதில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இவர்கள் மூன்று வருட இளங்கலை பட்டப்படிப்பினை தேர்வு செய்து படிக்கலாம். சிலர் வேறு பிரிவில் பட்டப்படிப்பு பெற்றிருப்பார்கள். அவர்களுக்கு டிப்ளமா படிப்புள்ளது. டிப்ளா ஒரு வருட படிப்பு என்பதால் அதில் பாய்லர் மற்றும் பிரீடிங் மேனேஜ்மென்ட் குறித்த பயிற்சி அளிக்கிறோம். இளங்கலை பட்டப்படிப்பு மூன்று வருஷம் என்பதால் ஒரு வருட டிப்ளமா படிப்புகள் மட்டுமில்லாமல் இந்த துறை குறித்த முழு விவரங்களையும் அதில் படிக்கலாம். படிப்பு முடிச்சதும் 100% வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறோம். சிலர் வெளியூரில் இருந்து வருவாங்க.
இங்கு படிப்பு முடிச்சிட்டு அவங்க ஊரில் சொந்தமா பண்ணை வைக்க விரும்புவாங்க. சிலர் விவசாய குடும்பத்தில் இருந்தும் படிக்க வராங்க. அவர்களுக்கு ஏற்கனவே பண்ணை இருக்கும். அதை மேலும் மேம்படுத்த படிக்க வராங்க. மற்றவர்களை படிப்பு முடிஞ்சதுமே எங்க நிறுவனத்திலேயே வேலைக்கு நியமித்துவிடுகிறோம். இதுவரை 2800 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இதர வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களும் வேலைக்காக ஆட்களை நியமிக்க முன் வருகிறார்கள்.
ஆனால் வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும் துறை என்றாலும் அதை முறையாக பயிற்சி எடுப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று தான் சொல்லணும். அதாவது, 600 பேருக்கான வேலைவாய்ப்பு உள்ளது. ஆனால் 200 பேர் தான் இந்த பயிற்சியினை எடுக்கிறார்கள். மேலும் எங்களின் நிறுவனம் இந்தியா முழுக்க 18 மாநிலங்களில் இருப்பதால், இந்தியா முழுக்க வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர முடியும். தற்போது இந்த துறை குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் இல்லை என்பதால், பள்ளி மாணவர்களுக்கு இந்த துறை மற்றும் அதில் உள்ள வேலை வாய்ப்புப குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த துறையை தொழிலாக எடுக்க விரும்புபவர்களுக்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார் ஹரிஷ்.