ஒரு பெண் நான்கு தொழில்! (மகளிர் பக்கம்)
அசத்தும் தொழில்முனைவர் பத்மபிரியா
வீட்டையே கடையாக மாற்றி வீட்டிலிருந்தபடியே ஜுவல்லரி, டெக்ஸ்டைல், கொலு பொம்மைகள், பரிசுப் பொருட்கள் செய்து கொடுப்பது என ரொம்ப பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார் பத்மபிரியா. ஒரு வேலைய செய்து கொண்டு வீட்டையும் குழந்தைகளையும் பார்ப்பதே கடினமாக இருக்கும் போது நான்கு விதமான தொழில்களை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார் இவர்.
‘‘நான் பணம் சம்பாதிக்கணும் என்பதற்காக எல்லாம் வேலை செய்யமாட்டேன். எனக்கென்று ஒரு தனித்த அடையாளம் கிடைக்கணும் மற்றும் பெயர் சொல்ற மாதிரி ஒரு தொழில் செய்யணும், நான் தனித்துவமாக தெரியணும்… இதற்காகத்தான் நான் தொழில் முனைவராகவே ஆனேன்’’ என்கிறார் பத்மபிரியா. என்ன தொழில் செய்யலாம் என்று சிந்திக்கும் இந்த காலத்தில் நான்கு தொழில்களிலும் வெற்றியினை சுவைத்து வரும் பத்மபிரியா அவர் கடந்த பாதையினைப் பற்றி விவரித்தார்.
‘‘நான் சென்னை பொண்ணு. எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்காங்க. நான் பி.காம் படிச்சிட்டு 10 வருஷம் ஒரு அலுவலகத்துல கணக்காளராக வேலை பார்த்து வந்தேன். கல்யாணத்திற்கு பிறகு குழந்தை பிறந்ததும், அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேலையை ராஜினாமா செய்தேன். குழந்தைகள் வளர்ந்த பிறகு எனக்கு நிறைய நேரம் இருப்பது போல் உணர்ந்தேன். தினமும் சமைச்சோம், சாப்பிட்டோம், சீரியல் பார்த்தோம்ன்னு எனக்கு இருக்க பிடிக்காது. வீட்டில் இருந்த படியே ஏதாவது செய்யணும்ன்னு என் மனசில் தோன்றிக் கொண்டே இருந்தது. குழந்தைகள் இருப்பதால், அவர்களைப் பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்தபடியே வருமானம் பார்ப்பது தான் சிறந்த வழின்னு முடிவு செய்தேன்.
அப்போது தான் நாமே ஏன் ஒரு தொழில் ஆரம்பிக்கக் கூடாதுன்னு யோசனை தோணுச்சு. இது சம்பந்தமா வீட்லயும் சொன்னேன். ஆரம்பத்துல எதிர்ப்பு அதிகமா இருந்தது. ஆனால் நானோ கண்டிப்பா ஒரு தொழில் செய்யணும் என்பதில் பிடிவாதமா இருந்தேன். ஒரு கட்டத்தில் எங்க வீட்டிலேயும் நான் உறுதியா இருப்பதால் ஒரு கண்டிஷனுடன் சம்மதம் சொன்னாங்க. உனக்கு பிடிச்ச தொழிலில் ஈடுபடும் போது, ரிஸ்க் என்பது உன்னை மட்டுமே சார்ந்தது தான். பிரச்னை வந்தா நீ தான் பார்த்துக்கணும். எங்கள கேட்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. விக்ரம் கமல் சார் பாணியில் பார்த்துக்கலாம்னு நானும் தொழில் தொடங்குறதுக்கான எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பிச்சேன்.
முதல்ல நான் தொடங்குனது டெக்ஸ்டைல் சம்பந்தமான வேலை. அது சம்பந்தமா எனக்கு கொஞ்சம் தெரியும் என்பதால், புடவைகள், சுடிதார் போன்ற ஆடைகளை வாங்கி விற்க ஆரம்பிச்சேன். அதில் நான் கொஞ்சம் டிசைன் எல்லாம் செய்தேன். அது வாடிக்கையாளர் மத்தியில் நல்ல ஹிட்டாச்சு. பலர் என்னிடம் வாங்க ஆரம்பிச்சாங்க. அதனால் முறையாக ஒரு உடையினை எப்படி அலங்கரிக்கலாம்ன்னு பயிற்சிக்கு சென்று கற்றுக் கொண்டேன்.
இப்படித்தான் என்னுடைய தொழில் ஆரம்பமாச்சு. ஓரளவிற்கு தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட ஆரம்பிச்சது. மேலும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்ததால், வீட்டு வேலை, குழந்தைகள், பிசினஸ் என எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள முடிந்தது. என்னிடம் உடைகள் வாங்கியவர்கள் அதற்கான நகைகளையும் கேட்க ஆரம்பிச்சாங்க. அதனால ஒரு உடைக்கான செட் ஜுவல்லரிகளையும் நான் விற்பனை செய்ய துவங்கினேன். அதற்கான சிறப்பு பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். அதன் பிறகு ஒவ்வொரு உடைக்கு ஏற்ப நகைகளை வடிவமைக்க ஆரம்பிச்சேன். அதற்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. இப்படியாக இரண்டு தொழில் செய்தும் எனக்கு போதிய நேரம் இருந்தது.
அந்த நேரத்தை எப்படி நல்ல முறையில் செலவிடலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அந்த தேடல்தான் அடுத்த தொழிலுக்கான அடித்தளமாக அமைந்தது. எங்க வீட்டிலோ ஒரு தொழிலை நல்ல விதமா செய். எதற்கு இன்னொரு தொழில் பண்றேன்னு எல்லோரும் சொன்னாங்க. முதலில் என் கணவருக்கும் இதனால் எனக்கு பாதிப்பு ஏற்படுமோன்னு பயந்தார். ஆனால் அதன் பிறகு என்னுடைய தன்னம்பிக்கை மற்றும் கடுமையான உழைப்பை புரிந்து கொண்டு எனக்கு ஒரு பக்கபலமாக இருக்க ஆரம்பித்தார்’’ என்றவரின் அடுத்த வெற்றி கிஃப்ட் பொருட்கள்.
‘‘என்னிடம் வந்தால் உடை அதற்கான நகை மற்றும் பரிசுப் பொருட்கள் என மூன்றும் கிடைப்பதால், எனக்கான வாடிக்கையாளர்கள் அதிகமானார்கள். சென்னை மட்டுமில்லாமல் பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருந்தும் எனக்கான தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் உருவானாங்க. நான் ஒன்றைத் தொடர்ந்து அடுத்த தொழில் ஆரம்பிக்கக் காரணம் என்
வாடிக்கையாளர்கள்தான். அவர்கள்தான் என்னிடம் இது கொடுக்கலாமேன்னு யோசனை சொன்ன போது அதுவே என்னுடைய தொழிலாக மாறியது. அப்படித்தான் என்னுடைய நான்காவது தொழிலாக கொலு பொம்மையானது. கொலுவில் வைக்கும் பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள்ன்னு வாடிக்கையாளர்களில் விருப்பத்திற்கு ஏற்ப செய்துக் கொடுத்தேன்.
பொம்மைகளில் மண் பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள் என பல வகைகள் உண்டு. அதில் கொலு பொம்மைகள் தான் மக்கள் அதிகம் விரும்பினாங்க. இது குறித்தும் பயிற்சி எடுத்தேன். அந்த சமயத்தில்தான் உறவினர் ஒருவர் மரப்பாச்சி பொம்மை செய்து தரும்படி கேட்டார். அவர் கேட்ட மரப்பாச்சி பொம்மையில் கொஞ்சம் அலங்காரம் எல்லாம் செய்து கொடுத்தேன். இப்போது அதற்கான தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். முன்பு கொலு பண்டிகையின் ேபாது தான் இந்த பொம்மைகள் எல்லாம் விற்பனையில் இருக்கும். மற்ற நாட்களில் இருக்காது. ஆனால் இப்போது இவை வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகளாக மாறிவிட்டது.
கொலு பொம்மைகளையே வீட்டின் அலங்கார பொருட்களாக வாங்குகிறார்கள். கொலுவில் வைக்கப்படும் கிருஷ்ணர், ஆண்டாள், ராதாகிருஷ்ணர் பொம்மைகள் மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் பொம்மைகளை வடிவமைத்து தருகிறேன். இதுவரை என்னுடைய வேலைக்காக கடை வைத்ததில்லை. எல்லாமே வீட்டில் இருந்தபடிதான் செய்து வருகிறேன். இப்போ வரைக்கும் என் தொழிலின் வெற்றி ஒன்று கஸ்டமர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது.
இரண்டாவது தரத்தில் என்றும் காம்ப்ரமைஸ் செய்யாமல் இருப்பது. பல பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஏதாவது ஒரு தொழில் செய்யணும்னு விரும்பறாங்க. சிலர் அதில் மிளரவும் செய்கிறார்கள். ஒரு சிலர் குடும்ப சூழல் காரணமாக பின்தங்கி விடுகிறார்கள். பெண்கள் தனித்து முன்னேற நிறைய அலைக்கழிப்புகள், புறக்கணிப்புகள், கேள்விகள், விமர்சனங்கள் எல்லாமே வரும். அதையெல்லாம் தாண்டி பிடிவாதமாக ஒரு தொழிலை முழு மனதுடன் நம்பிக்கையாக செய்தால் நிச்சயமாக ஜொலிக்கலாம்’’ என்றார் பத்மபிரியா.