வருமானத்திற்கு வழிவகுக்கும் கைத்தொழில்! (மகளிர் பக்கம்)
பல்வேறு திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், மணப்பெண்கள் என் அனைவரையும் தன்னுடைய அழகிய கைவண்ணத்தால் உருவான ஆடைகள் மூலம் அலங்கரித்து வருகிறார் புதுச்சேரியை சேர்ந்த வனஜா செல்வராஜ். புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதிரா பொட்டிக் நிறுவனத்தின் ஆடை வடிவமைப்பின் உரிமையாளரான வனஜா செல்வராஜ் நம்மிடையே பேசியதிலிருந்து…
ஆடை வடிவமைப்பு துறையில் உங்களுக்கு ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
நான் எனது சிறுவயதிலேயே துணிகளை கட்செய்வது, தைப்பது என தையல் கலையில் ஆர்வம் கொண்டிருந்தேன். அதை கண்ட எனது அம்மா என்னை தையல் பயிற்சியில் சேர்த்து விட்டார். எனது பதினோரு வயது முதல் அக்கம் பக்கமுள்ள பெண்களின் ஆடைகளை தைத்து வந்தேன். என் தையல் கலையை பெரிதும் விரும்பிய அப்பகுதி பெண்கள் பலருக்கும் சிபாரிசு செய்ய இப்படியாகவே வளர்ச்சி பெற்றது தான் என ஆடை வடிவமைப்பு கலை.
நீங்கள் அதை நிறுவனமாக தொடங்கியது எப்போது?
முதலில் வீட்டிலேயே பெண்களுக்கான உடைகளை வடிவமைத்து தந்து கொண்டிருந்தேன். எனது தொழில் நேர்த்தி கண்டு எனது வாடிக்கையாளர்கள் பலரும் பலரிடம் என்னை சிபாரிசு செய்தனர். எனது உடைகளின் தரம் மற்றும் நேர்த்தி வாய்மொழியாகவே பலருக்கும் சென்றடைய ஆர்டர்கள் வரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் என்னால் தனியாக தைத்து தர இயலாத அளவில் ஆர்டர்கள் குவிய தொடங்க எனது வீட்டினரின் ஆலோசனையில் ஆதிரா பொட்டிக் நிறுவனம் உருவாகியது. தற்போது பல்வேறு ஊழியர்களுடன் சிறப்பாக தனது பணியினை செய்து வருகிறது எங்கள் ஆடை வடிவமைப்பு நிறுவனம்.
எந்த மாதிரியான உடைகளை யாருக்கெல்லாம் நீங்கள் வடிவமைத்து தருகிறீர்கள்?
நாங்கள் திருமண பெண்களுக்கான அனைத்து விதமான நவீனரக உடைகளையும் புதுமையான வகையில் அழகியலுடன் தைத்து தருகிறோம். பார்ட்டி மற்றும் விளம்பர ஷூட்களுக்கும் நாங்கள் ஆடைகளை வடிவமைத்து தருகிறோம். அதனை தவிர சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கான பல்வேறு ரக உடைகளையும் தைத்து தருகிறோம். பல்வேறு முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான ஆர்டர்கள் எங்களுக்கு கிடைத்து வருகிறது. இதனை தவிர நடிகை ஓவியா, சின்னத்திரை நட்சத்திரங்களான பவித்ரா, காயத்ரி போன்ற பல்வேறு நடிகைகளுக்கும் பொருத்தமான உடைகளை தைத்து தந்திருக்கிறேன்.
வெளிநாட்டு வாடிக்கையாளர்களை எப்படி பெற்றீர்கள்?
இங்கே நடக்கும் போட்டோஷூட்களுக்கு எங்கள் நிறுவனம் ஆடைகளை வடிவமைத்து தந்திருந்தது. அவர்கள் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த எங்கள் ஆடை வடிவமைப்பு திறனை பலருக்கும் சொல்ல இப்படியாகவே எங்களுக்கு வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைத்தது. அவர்களுக்கு ஆன்லைனிலேயே அளவெடுத்து கச்சிதமாக தைத்து தருகிறோம். எங்களின் தரம் மற்றும் நேர்த்தியே எங்களது வியாபாரத்தை உலகெங்கும் பரப்பியது.
தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து என எங்கும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
உங்கள் குடும்பம் எப்படி உங்களுக்கும் தொழிலுக்கும் உறுதுணையாக உள்ளது?
ஆரம்பத்தில் எனது இரு மகள்களும் இத்துறையில் எனக்கு உதவியாக இருந்து வந்தனர். எனது பெரிய மகள் எனது ஆடை வடிவமைப்பில் கலர்கள் மற்றும் டிசைன்களை நேர்த்தியாக தேர்ந்தெடுத்து தருவார். என் இரண்டாவது மகள் நான் தைத்த உடைகளை பல்வேறு சமூகவலைத்தளங்களில் அப்லோட் செய்யும் தொழில்நுட்ப உதவிகளை செய்து வந்தாள். அதன் பிறகு அவர்கள் தனது சொந்த துறைகளில் பிஸியாகிவிட நானே இவற்றை சேர்த்து செய்து வருகிறேன். தற்போது எனது கணவர் செல்வராஜ் எங்கள் நிறுவனத்தின் நிர்வாக வேலைகளை பார்த்துக் கொள்கிறார். என் கணவர் மற்றும் மகள்களின் ஆலோசனை இல்லாமல் என்னால் சிறப்பாக செயல்பட்டிருக்கவே முடியாது. எங்கள் நால்வரின் கடும் உழைப்பு மற்றும் தொழில் பக்தியே எங்கள் நிறுவனத்தை இன்றளவும் சிறப்பான முறையில் நடத்த ஏதுவாக இருக்கிறது.
இதனை தவிர உங்களது மற்றைய தொழில்கள் குறித்து சொல்லுங்களேன்?
நடுவில் தையல்கலை தவிர நான் பல்வேறு தொழில்களை செய்து வந்தேன். இருபது வருடங்கள் டியூஷன் சென்டர் நடத்தினேன். வீட்டிலேயே பதிமூன்று வருடங்கள் ப்யூட்டி பார்லர் நடத்தினேன். சிறுசேமிப்பு முகவராக இருந்தேன். மூன்று ஆண்டுகள் நர்ஸாக பணிபுரிந்தேன். ஆதிரா பொட்டிக் துவங்கிய பிறகு மற்ற தொழில்களை விட்டு விட்டேன்.
உங்களது பொழுதுபோக்கு?
கார்டனிங் மற்றும் கோலம் போடுதல் எனது முக்கிய ஹாபி எனலாம். புத்தகங்கள் வாசிப்பது, பயணங்கள் செய்வது அதனை குறித்து கட்டுரைகள் எழுதுவது எனது மற்றுமொரு பொழுது போக்கு. வீட்டு பராமரிப்பு சமையல் செய்வது மற்றும் சமையல் குறிப்புகள் எழுதுவதும் உண்டு. பெயிண்டிங் ஆர்வமும் உண்டு.
உங்களை போன்ற பெண்களுக்கு உங்களது ஆலோசனை?
பெண்கள் கல்வி கற்பதோடு தங்களுக்கு பிடித்த கைத்தொழிலையும், பொழுதுபோக்கு கலைகளையும் கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு வருமானத்திற்கு வழிவகுப்பதோடு மனமகிழ்ச்சி மற்றும் புத்துணர்ச்சியும் அளிக்கும். தங்களுக்கு எதுவும் வராது என்ற எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டு நம்மால் எதுவும் முடியும் என்ற நேர்மறை சிந்தனையுடன் முயல்வோம் வெற்றி பெறுவோம் என்கிறார் சாதனை பெண்மணி வனஜா செல்வராஜ்.